Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க "ஜனநாயகம்"

வெனிசுலாவில் ஏழை எளிய மக்களுக்கு செல்வம் பகிரப்படுவதற்கு எதிரான,   ஏகாதிபத்தியங்களின் கூச்சல் தான் "ஜனநாயகமாக" காட்டப்படுகின்றது. பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாக கொழுப்பதற்கு தடையான வெனிசுலாவின் பொருளாதாரக் கொள்கை என்பது, ஜனநாயகத்துக்கு முரணானது என்பதே மூலதனக் கொள்கை. மக்களால் தேர்ந்தெடுத்த தேர்தல் கட்சி ஆட்சி மூலம் தேசியமயமாக்கல் என்பது, ஏகாதிபத்தியங்களால் சகித்துக் கொள்ளப்படுவதில்லை. இதுதான் வெனிசுலா நெருக்கடியாகும்.

ஹியூகோ சாவேஸ் அரசு, 1999 முதல் 2013 வரையான ஆட்சிக் காலத்தில்,  அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தியது. இப்படி வெனிசுலாவின் நெருக்கடி ஆரம்பமானது.

கிடைத்த புதிய செல்வத்தில், 66 சதவீதத்தை சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினர். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு முரணாக வெனிசுலா பயணம் தொடங்கியது. பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை, கியூப ஆசிரியர்களின் உதவியுடன் வழங்கிய து. உலகில் மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழகியது.

பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக கியூபா மருத்துவர்கள் வெனிசுலா வந்தனர். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைத்தது. உருகுவேயிடமிருந்து, எண்ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெறப்பட்டது.

இந்த அரசியல் பின்னணியில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. ஹியூகோ சாவேஸ் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான பணத்தை  “ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு வழங்கியது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி, புதிய அதிபராக்கப்பட்டார்.

மூலதனத்தின் ஜனநாயகத்தை மீட்ட அமெரிக்காவின் கனவுகளும், மகிழ்ச்சியும், ஆரவாரமும் இருநாட்கள் கூட நீடிக்கவில்லை. நகர்ப்புற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்க, சாவேசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. அமெரிக்காவையும் அதன் எடுபிடியான கொலம்பியாவைத் தவிர, தென்னமெரிக்க நாடுகள் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்க மறுத்ததாலும், திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவேஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபரானார். இப்படி இன்று போல் அன்று அமெரிக்காவின் மூலதனத்தின் போலி ஜனநாயகம் கூச்சல் இட்டு, இறுதியில்  ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியால் தோற்றுப்போனது.

வெனிசுலாவை குறிவைத்து ஏகாதிபத்தியங்களின் இன்றைய போலி ஜனநாயகக் கூச்சல் என்பது, நவதாராளவாத பொருளாதாரத்துக்கு முரணாக, அரசுடமையாக்கப்பட்ட உற்பத்திகள் நீடிப்பது தான் காரணம். திட்டமிட்ட பொருளாதார தடைகள் மூலம், தேவைகளின் பற்றாக்குறையை வெனிசுலாவில் உருவாக்கியதன் மூலம், மனிதாபிமான உதவி என்ற பெயரில் ஆட்சிக் கவிழ்ப்பையோ அல்லது ஆக்கிரமிப்பையோ அமெரிக்கா நடத்த முனைகின்றது.

வெனிசுலாவின் ஆட்சிமுறையென்பது சோசலிசமல்ல. மாறாக முதலாளித்துவம் தான். தேசிய முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடித்துள்ள ஆட்சிமுறைமை, தனியார் உற்பத்தி முறைமையை சார்ந்தே இயங்குகின்றது. தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியானது, தான் விரும்பியவாறு தேசிய முதலாளித்துவத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு முடியாத வண்ணம் ஏகாதிபத்திய நவதாராளவாத முதலாளித்துவமானது அரசின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றது.

தேர்தல் மூலம் தெரிவாகும் ஆட்சியும், தேர்தல் ஜனநாயகமும் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர ஏகாதிபத்தியம் அனுமதிக்காது என்பதற்கு, வெனிசுலா மற்றொரு உதாரணமாகி இருக்கின்றது.

கியூபா மற்றும் அமெரிக்காவுடன் முரண்பட்ட பிற ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் ஆட்சியை இன்று வரை தொடர முடிந்தது. எண்ணை வயல்களை தேசியமயமாக்க முடிந்தது.   இரு பத்தாண்டுகள் வெற்றிகரமாக தேர்தல் மூலம் ஆட்சியை தக்கவைக்கவும் முடிந்தது.

தொடர்ந்து அதிகாரத்தில் உள்ள நிகோலஸ் மதுரோ, தனியுடமையிலான தேசியவாதக் கொள்கையை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சி சவாலுக்கு உள்ளாகி வருகின்றது. சுற்றி வளைத்த ஏகாதிபத்தியங்களின் பொருளாதார ரீதியான சர்வதேச தடைகள் மூலம், உள்நாட்டில் தேவைகளுக்கான பற்றாக்குறை மூலம் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொள்ளும் அளவுக்கு தேசிய முதலாளித்துவம் வலுவற்றதாக காணப்படுகின்றது. அமெரிக்காவுடன் முரண்பட்ட ஏகாபத்தியங்கள் கூட போதுமான உதவியை செய்ய முடியாத அளவுக்கு, சர்வதேச நெருக்கடிக்குள் வெனிசுலாவின் தேசிய முதலாளித்துவ ஆட்சி திணறுகின்றது.

வெனிசுலாவில் முதலாளித்துவ தேர்தல் ஆட்சி அமைப்புமுறைக்கு பதில், மக்கள் அதிகாரத்திற்கான வர்க்கப் புரட்சியை நடத்துவதன் மூலம் தான், மக்களுக்கான ஆட்சியைத் தக்கவைக்கவும் - நீடிக்கவும் முடியும். இதற்கு மாறான தேசிய முதலாளித்துவமானது நவதாராளவாத மூலதனம் கொடுக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது ஏற்படும் பின்னடைவுகள், சர்வதேசியப் புரட்சிக்கு பின்னடைவைக் கொடுக்க கூடிய ஆபத்தை கொண்டுள்ளது. மக்களுக்கு அதிகாரத்தை முன்வைத்து, புரட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதன் மூலம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதே, வெனிசுலாவின் இன்றைய தெரிவாக இருக்க முடியும்.