Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்

பாலஸ்தீனத்தை 1948 இல் இஸ்ரேல் ஆக்கிரமித்ததுக்கு நிகரானதே, 1948 இல் காஸ்மீர் மீதான இந்திய ஆக்கிரமிப்பு. 1948 இல் இந்தியாவால் காஸ்மீர் ஆக்கிரமிக்கப்பட்ட நாளில் இருந்து, காஸ்மீர் மக்களின் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

காஸ்மீர் மக்கள் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக, தங்களது தேசத்தின் சுதந்திரத்துக்கான ஒரு விடுதலைப் போராட்டத்தையே அன்று முதல் இன்று வரை நடத்துகின்றனர். அதேநேரம் இந்தியாவும் – பாகிஸ்தானும் தமக்கிடையில் காஸ்மீரை பங்குபோட்டுக் கொண்டு, நாட்டை பிரித்து வைத்திருக்கின்றனர்.  இதன் மூலம் இந்து - முஸ்லீம் என்ற மத அடிப்படைவாதத்தை சொந்த நாட்டுக்குள் தூண்டி விடவும், மக்களிடையே பிரிவினைவாதத்தை திணிக்கவும், இந்தியா - பாகிஸ்தான் மக்களை பிரித்து வைத்திருக்கவும், காஸ்மீர் மக்கள் மேலான அரசின் காவிப் பயங்கரவாதமானது ஏவிவிடப்படுகின்றது.

இப்படி காஸ்மீர் மக்கள் மீதான தொடர்ச்சியான இந்திய ஆக்கிரமிப்பாளனின் இராணுவ வன்முறை மீதான எதிர்வினையே "புல்வாமா" நிகழ்வு. ஆக்கிரமிப்பாளனால் தினம் தினம் காஸ்மீரில் பலியாகும் மக்கள் குறித்து அக்கறையற்றுக் கிடக்கும், இந்திய பார்ப்பனிய பாசிசமயமாக்கலின் நிகழ்ச்சிநிரலுக்குள் நின்று மட்டும் தான், "புல்வாமா" வில் கொல்லப்பட்ட இராணுவத்தை முன்னிறுத்தி இந்திய தேசபக்தியை பேசமுடியும். தமிழ் தேசியம் பேசும் தமிழ் தேசிய பன்னாடைகள் வரை, இந்த இந்திய தேசபக்திக்குப் பின்னால் கும்மியடிக்கின்ற கேலிக்கூத்து அரங்கேறும் அரசியல் பின்னணியில்  - இந்துத்துவ பார்ப்பனியமே அடிப்படையாக இருக்கின்றது.

காஸ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்பதும், 1948 முதல் தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதனாலும்;, எதிர் வன்முறை என்பது இயல்பாக அங்கு தோற்றம் பெறுகின்றது. சுயநிர்ணய அடிப்படையில் காஸ்மீர் மக்களின் விடுதலைக்கான தீர்வாக முன்வைத்து, இந்திய மக்களின் ஆதரவுடன் போராட்டத்தை நடத்துவதே காஸ்மீர் பிரச்சனைக்குரிய தீர்வாக இருக்க முடியும்.

காஸ்மீர் மக்களின் சுயநிர்ணயத்தை இந்திய மக்கள் ஆதரிக்கும் வகையில் முன்னெடுக்கத் தவறுகின்ற போதே, அரசின் தொடர்ச்சியான காவிப் பாசிச பயங்கரவாதத்துக்கு நிகராக முஸ்லிம் அடிப்படைவாத தனிநபர் பயங்கரவாதமானது அரசியல்ரீதியாக வளர்ச்சி பெற்று வருகின்றது. முஸ்லிம் அடிப்படைவாதம் வளர்ச்சி பெற, காவிப் பாசிச அரச பயங்கரவாதமும், காஸ்மீரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்க மறுக்கும் இந்திய மக்களின் மௌனமுமே அடிப்படைக்  காரணமாகும்.

இதன் மூலமே இன்று இந்து பாசிச காவிப் பயங்கரவாதமானது, இந்திய மக்களை மதம் - இனம் - சாதி ரீதியாக பிரித்து மக்களை சுரண்ட முடிகின்றது. இந்தியாவை காவி மயமாக்கி வரும் பா.ஜ.க, இன்று தேர்தலைச் சந்திக்கவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல், அவர்களின் காவி மயமாக்கத்துக்கே வலுச் சேர்க்கின்றது.

காஸ்மீர் மக்கள் மீதான பாரிய பயங்கரவாத வன்முறையை ஏவிவிடவும், இந்தியா எங்கும் வாழும் முஸ்லீம் மக்களை ஒடுக்கியாளவும், பாகிஸ்தான் மீதான வலிந்த தாக்குதலை தொடுப்பதன் மூலம் தேர்தலை வெல்லுவதற்கே, இந்த தனிநபர் பயங்கரவாத தாக்குதலைப் பயன்படுத்தும்.

இலங்கையில் புலிகளின் தனிநபர் பயங்கரவாதம் எப்படி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க உதவியதோ, அதேபோல் காஸ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவே இந்தத் தாக்குதல் உதவுகின்றது. அதேநேரம் முழு இந்திய மக்களையும் ஓடுக்கியாளும் காவி பாசிச மயமாக்கலுக்கு உதவும் வண்ணமே,  எல்லா வகையான இன - மொழி – மத – தேச பக்திகளும் உதவுகின்றது.

இந்து பார்ப்பனிய பாசிச காவி அரச பயங்கரவாதமே, கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் மரணத்துக்கு காரணமாக இருப்பதை இனம் கண்டு போராடுவதே இன்றைய தேவை. காஸ்மீர் மக்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்து, இந்தியாவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே இந்தியக் குடிமகனின் வரலாற்றுக் கடமையாக இருக்க முடியும்.