Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பகுத்தறிவைத்தான் தவறவிட்டோம், பட்டறிவையாவது பயன்படுத்துவோம்.

தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தவர்கள் தமிழை முறையாகப் பேசத்தெரியாத- ஆங்கிலத்தில் நாடாளுமன்ற அரசியல் விவாதம் நடாத்திக் கொண்டிருந்த தமிழ் தலைவர்கள். அதனால் சிங்களம் கற்க மறுத்து உத்தியோகத்தையும்- உத்தியோக உயர்வையும் இழந்தவர்கள் சாதாரண மக்களே.

தமிழரசுக் கொடியைத் தூக்கியவர்கள் கொழும்பில் மூலதனங்களைக் கொண்டிருந்த மூத்த தமிழ் தலைவர்களே. அதனால் நிலங்கள் பறிபோயின-குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன- அபிவிருத்திகள் முடக்கப்பட்டன.

தமிழீழம் கோரியவர்கள் மேலை நாடுகளில் தங்களது இரண்டாந்தரப் பிரஜை உணர்வினால் உந்தப்பட்ட கோடீஸ்வரத் தமிழர்களே. அதனால் நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் அகதிகளானதும் யுத்தத்தில் மடிந்ததும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து இன்று வாழ்வதும் சாதாரண மக்களே.

இவைகள் தமிழ் பேசும் மக்களின் கடந்த 67வருடகால வரலாறு.

கடந்த இந்த வரலாற்றின் முடிவில் நாம் பெற்றுக்கொண்டது கைதடியில் ஒரு மாகாணசபையும் அதற்கொரு கொடியும் மட்டுமே! ஆனால் நீண்ட பெரும் பாரம்பரிய வரலாறு கொண்ட தமிழரசுக் கட்சியின் ஆட்சியில் அமைந்த வட மாகாண சபையின் இன்றைய முதலமைச்சர் கொழும்பைத் தளமாகக் கொண்டவர் என்பது ஒரு முரண்நகையே. மேலும் தமிழர் தாயகத்தின் மூளைப் பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையில் தீர்மானம் ஒன்றை ஆங்கில மொழியில் தயாரித்து நிறைவேற்றி விட்டு பின்னாடி வந்த சிங்கள ஜனாதிபதியிடம் தமிழில் பேச வேண்டும் என்று கேட்பதும் இலங்கையின் ஜனாதிபதி முன்னிலையில் யாழ்ப்பாணத்தின் முதலமைச்சர் ஆங்கிலத்தில் உரை ஆற்றுவதும் முன்னுக்குப் பின்னான பெரும் முரண்நகையாகும்.

மொழியும் இனமும் அல்ல பிரச்சனை. அதனைத் தூக்கிப் பிடிப்பவர்களால்தான் பிரச்சனை. அவர்களை நம்பி எமக்கான அரசியலை வழி நடத்த அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டு தங்கள் வீட்டு வேலிகளுக்குள் இருந்து கொண்டு கிணற்றுத் தவளைகளைப் போல் இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்தான் பிரச்சனை.

முன்பொரு காலம் படித்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றிருந்தோம். பின்பு ஆயுதம் பிடித்தவர்கள் ஆக்கி முடிப்பார்கள் என்று ஆரவாரப்பட்டோம். எப்போதும் பார்வையாளர்களாக இருந்தோமேயொழிய நாங்கள் எதிலும் பங்காளிகளாக இருக்கவில்லை. இருக்க விரும்பவும் இல்லை. பங்காளிகளாக இருந்திருப்போமேயானால் பல வரலாற்றுத் தவறுகளைத் தவிர்த்திருப்போம். பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருப்போம். பல கோடிப் பெறுமதியான உடைமைகளைப் பாதுகாத்திருந்திருப்போம்.

ஒரு மனிதன் தனது தாயின் வயிற்றில் உருவாகும் போதே அவனது அரசியலும் கூடவே பிறக்கிறது. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை அவனை அரசியல்தான் வழிநடத்துகிறது- வாழவைக்கிறது. இனிமேலாவது இதனை நாம் உணராவிட்டால்- உணர்ந்து செயற்படவிட்டால் எமக்கும் எமது சந்ததிகளுக்கும் விடுதலையே கிடையாது.

நாம் நாலு பக்கமும் வேலி போட்டு நம்ம வீடு- நமது குடும்பம் என வாழப் பழகியவர்கள். வீட்டுக்குள் நடக்கும் அடக்குமுறைகளை- அநியாயங்களை குடும்பம் என்ற போர்வைக்குள் போட்டு மூடிமறைத்து வைப்பவர்கள். கண்மூடித்தனமான- காலாவதியாகப் போன சம்பிரதாயங்களை சாதி-சமய-ஊர் என்ற கோதாவில் வைத்துக் கொண்டு நமக்குள்ளேயே முட்டிமோதிக் கொண்டு நிற்பவர்கள். ஊரில் ஒரு பிரச்சனை என்றால் உடனே ஆளுக்கொரு கண்ணாடி போட்டுக் கொண்டே நாம் அதனை அணுகுவோம். நீதி நியாயங்கள் அக் கண்ணாடிகள் ஊடாகவே அளவிடப்படும். நாம் சாதி அடிப்படையில் ஒன்றுபடுவோம். சமய வடிவில் ஒன்றுபடுவோம். ஆனால் ஒரு மனித சமூகமாக ஒன்றுபட்டு எமக்குப் பழக்கமில்லை. ஒரு சமூகமாக நின்று நாம் பிரச்சனைகளை அணுகவில்லை. அதற்குப் நாம் பழக்கப்படவில்லை.

அத்தகைய கல்வி எமக்கு கற்றுத்தரப்படவில்லை. குதிரைக்கு முன்னால் கொள்ளைக் கட்டித் தொங்க விட்டு குதிரையை நடக்க வைப்பதுபோல்- பொய் முயலைக் காட்டி நாய்களைப் போட்டியில் ஓட வைப்பதுபோல் பணத்தை மட்டும் குறியாகக் கொண்டதே எமது கல்வி முறையாகும். நாம் பெற்ற கல்வியால் நமது சமூகம் பயன் பெறவில்லை. நமது நாடும் முன்னேறவில்லை.

ஊரில் காரில் அடிபட்டு நடு றோட்டில் செத்தும் கிடக்கும் நாய் நாள் பூரா கிடந்து நாறும் வரை அதை எடுத்துப் புதைப்பது என் வேலையில்லை என்று மூக்கைப் பிடித்தபடி பார்த்துக் கொண்டு செல்லும் மனேபாவம் படைத்தவர்கள் நாம். எமது பலவீனங்களை மற்றவர்களின் தவறாகவும்- மற்றவர்களின் பலவீனங்களை எமது பலமாகவும் கருதிச் செயற்பட்டு மாண்டு மடிந்து போனவர்கள் நாம்.

எமது வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் தோல்வியடைவில்லை. சுயநலம் கொண்ட எமது மனப்பாங்கினால்-பணத்தைக் குறியாகக் கொண்ட எமது முதலாளித்துவத் தலைமைகளால் விலை பேசி அது விற்கப்பட்டுள்ளது. உலகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக முப்படைகளையும் உருவாக்கிப் போராடியது எனப் புகழ் பெற்ற ஒரு விடுதலை அமைப்பை கொண்டிருந்த நாம் எமது தாகமான தாயக இலக்கை அடைய முடியாமற் போனதற்கான காரணங்கள் யாவை? அதேவேளை இந்தப் போராட்டம் பல லட்சம் மக்களை ஒட்டாண்டியாக்கி சில பத்துப் பேர்வழிகளைக் கோடீஸ்வரர்கள் ஆக்கியது எப்படி? உலகில் அதிகமான வீரம் படைத்த பெண் போராளிகளை பெற்றெடுத்துத் தந்த எமது சமூகத்தில் இன்று காணப்படும் பெண்களின் பாதுகாப்பற்ற வாழ்வுக்கான காரணங்கள் யாது?

எமது தமிழ்த் தேசிய அடையாளம் மலையகத் தமிழ் மக்களைப் புறந்தள்ளி வைத்துக் கதையாடல் செய்யப்பட்டது ஏன்? காலப்போக்கில் அது முஸ்லீம் தமிழர்களை அதிலிருந்து அப்புறப்படுத்தியது எதனால்? இன்றைய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளில் கிழக்கு ஓரங்கட்டப்படுவது ஏன்? மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிக்காட்டும் முகமாகத் தங்கள் வாக்குகளைப் போட்டு வென்றெடுத்துக் கொடுத்த வட மாகாண சபையின் உறுப்பினர்கள் தங்களுக்குள் பிளவுபட்டு எட்டுத்திசையில் mநின்று அரச விசுவாசப் பிரமாணம் செய்ததன் தாற்பரியம் என்ன? இவற்றிற்கான விடைகளை நாம் கண்டுபிடிக்காவிட்டால் நமக்கு விடிவு இல்லை.

இதுவரை எமக்குத் தலைமை தாங்கியவர்கள் எமது பகுத்தறிவின் பயன்பாட்டைத் தடைசெய்து வைத்திருந்த காரணத்தினால் இன்று நாம் எமது உயிருக்குயிரான உறவுகளை- உடைமைகளை- உரிமைகளை இழந்து எல்லோரிடமும் கையேந்தி நிற்கிறோம்.

இன்று எமது பட்டறிவைப் பயன்படுத்தி நமது உரிமைகளை நாமே மீட்டெடுக்கும் காலம் கனிந்துள்ளது. அதற்காக தோழமைக் கரங்கள் நீட்டப்படுகின்றன. அவற்றுடன் நமது கரங்களும் இணையட்டும். அதன் மூலம் எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழும் உரிமையைப் பாதுகாப்போம்.