Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"மே" நாளின் ஆச்சரியம்..!?

"மே" மாத தொழிலாளர் தினத்திலும்
எங்கள் நாட்டில் ஆச்சரியம்..!?

மானிட உரிமையின் அதி.., உச்ச
"ஜனநாயக சோசலிசக் குடியரசு" - என்ற
தத்துவப் பெயரினை
வித்தகமாய்ப் பொறித்திருக்கும்
சிறிலங்காத் தீவுத் தேசத்தில்..!

ஒரு வேளை உணவுக்கே  
வக்கில்லா வாழ்வெரியும்
எங்களுர் மனிதர்களை..!?

சிங்க வாளேந்தி
செத்த புலி தேடும் படலமென..!?
தெருப் பொறுக்கிப் படையணியும்
அதனை அண்டி அடிசுவைக்கும்
தறுதலைத் தமிழ்க்குழு சிலதும்   
ஆணியத்தின் ஆணவத் திமிர்கொண்டு    
ஆயுதமாய் அலைந்துவந்து...

அந்தரித்த மக்களினை
அடித்து உதைத்து அடக்கி ஒடுக்கி
அவ்வூர்களையே பாசிசப் பேயறைந்த நிலையாக்கி
பெண்மையைப் பிய்த்தழித்து
மக்களின் வாழ்வினைக் கொலை செய்யும்..!?
அத்தனை சமூக விரோத.., குரோதத்தின்  
அதிபதியான அரசு..? - தாம்  
குரல்வளை அறுத்த மக்களின் குருதியில் - அவர்
உறவுகள் புதைந்த மண்ணினில்
அத்தனை நினைவையும் தகர்த்துவிட்டு..,

உலகத் தொழிலாளர் வென்றெடுத்த
உரிமையின் நினைவு நாளை.., விழாவெடுக்க
இந்தப் பாசிஸ்ட்டுகள் சாகடித்த.., மக்களிடம்
உரிமை தந்தோமென..!?
அழைப்பு விடுகிறார்கள்..!??

இப்படியாக..!?
பேய்க்கும்பல் ஆட்சிசெய்யும்
சிறிலங்காப் பாசிஸ நாட்டின்
பிணந் தின்னும் காட்டேறிகளால்
எங்கள் தீவுத் தேசமே     
இடுகாடாய்.., சுடுகாடாய்.., ஆனதில்
ஆச்சரியம் தானென்ன..?

ஆகவே..,
இனங்களை இணைத்து
பிரிவினை தவிர்த்து
சாதியம் உடைத்து
மத மூடங்கள் தகர்த்து
இலங்கையில் நாமும்
மனிதராய் வாழ..,

உழைக்கும் மக்களின்
மனிதங்கள் போற்றும்
வர்க்கப் புரட்சியை
கருத்தாழச் செயலொடு ஏற்போம்.

-    மாணிக்கம் (01/05/2012)