Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளும், நம்மவர் போராட்டங்களும்...

புங்குடுதீவு பாடசாலை மாணவி சகோதரி வித்தியா சிவலோகநாதன் கொடூரமான முறையில், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வானது ஒட்டு மொத்த தமிழ் சமூதாயத்தையும் நிலை குலைந்த - அதி உச்ச ஆத்திர உணர்வு நிலைக்குள்த் தள்ளியுள்ளது.

கொலை சார்ந்து கைது செய்யப்பட்டோரின் வீடுகளுக்கு தீவைத்தல், குற்றவாளிகள் எனத் தாம் நினைப்போர் மீது தாக்குதல் நடத்துதல், கைது செய்யப்பட்டோரை தம்மிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் நிலையத்தின் முன்பு போராடுதல், கைது செய்யப்பட்டோர் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது; அவர்கள் மீது தாக்குதல் நடாத்துதால் போன்ற பல விரும்பத்தகாத, சட்ட மற்றும் சமுதாய விழுமியங்களுக்குப் புறம்பான நிகழ்வுகள் புங்குடுதீவிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றுள்ளது.

இன் நிகழ்வுகள் "விரும்பத்தகாத, சட்ட மற்றும் சமுதாய விழுமியங்களுக்குப் புறம்பானவை" என்றாலும், 30 வருட யுத்த வடுவையும், ஆற்றுப்படுத்தப்படாத காயங்களையும் தன்னகத்தே கொண்ட சமூகம், இவ்வாறு நடந்து கொள்வது புரிந்து கொள்ளக் கூடியதே!

ஒடுக்குமுறையின் காரணமாக அமுக்கப்பட்டிருந்த ஒரு சமூகம், தனக்குக் கிடைத்த ஒரு சிறு இடைவெளியில், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விடும் பெருமூச்சாகவே மேற்படி நிகழ்வுகளை நாம் கருத வேண்டும். சகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளை தனக்குள் வாங்கி,அவருக்கு நடந்த கொடுமைகளை முன்னிறுத்தி, இதுவரை தான் பட்ட காயங்களுக்காவும் தீர்வு கோருகிறது தமிழ் சமூகம். இது ஒரு வகையில் இயல்பானதும், தன்னைத் தானே சுதாகரித்துக் கொள்வதற்குமான நியாயமான சமூக முயற்சியுமாகும்.

இதேவேளை, நம் தமிழ் சமூகத்தைத் தலைமை தங்கி நடத்துபவர்களாக கூறிக் கொள்வோருக்கும், சமூக வழிகாட்டிகளாக இயங்குவோருக்கும், சகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகள் சார்ந்து நடைபெறும் போராட்டங்களைச் சரியான முறையில் தலைமை தாங்கி நடத்த வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது. போர் முடிந்து 6 வருடங்களுக்கு பின், இன்று வடக்கில் எழுச்சி பெற்றுள்ள சமூக அக்கறையை- கோபத்தை சரியான முறையில் வழிநடத்தி, வெற்றியைத் தேடிச் செல்லும் வலுப்பெற்ற சமூகமாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு செயலூக்கமுள்ள தமிழ் மகளின் -மகனின் கடைமையாகும்.

ஆனால், இப்பொறுப்பை புத்திசீவிகளும், கல்விமான்களும், தமிழ்தேசிய அரசியல்வாதிகளும், சமூக விடுதலைப் போராட்டகாரர்களும் சரியாகக் கையாளுகிறோமா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது. காரணம் மேற்படி சக்திகளால் முன்வைக்கப்படும் கீழ்வரும் கருத்துகளே .

- கைது செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.

-வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவோர் மீது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அளிக்கும் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

- எந்த தமிழ் சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டோருக்காக வாதாடக் கூடாது.

- இக் கொலையும், வன்கொடுமையும் சிங்கள இனவாத அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பின் புதிய வடிவம்.

- மக்கள் வீடுகளைக் கொளுத்துவதையும், வீதிகளை மறித்து போராடுவதையும் தடுக்கும் அரசியல்வாதிகள், அவர்கள் யாராக இருந்தாலும், இலங்கை அரசின் கைக்கூலிகளாகச் செயற்பட்டு கொலைகாரர்களைக் காப்பாற்ற முயல்பவர்களே.

- பெண்கள் மீதான வன்கொடுமையும், பெண் ஒடுக்குமுறையும், பாலியல் வல்லுறவும், கொலையும் யாழ்ப்பாண தமிழரின் கலாசாரம் அல்ல. முன்பு எப்போதும் இப்படி வரலாறில் நடக்கவில்லை. இது இலங்கை அரசின் திட்டமிட்ட முறையிலான தமிழ் மக்களின் கலாச்சார அழிப்பு .

இவ்வாறான கருத்துகள், கருத்துக் கூறுவோரின் உண்மையான நிலைப்பாடாகக் கூடக் கிடையாது. இன்று சமூக நீதிக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடும் சக்திகள் எவையும் மரண தண்டனை போன்ற தீர்ப்புகளை எதிர்கின்றனர். அதேபோலவே தான், "தமிழ் மக்கள் மத்தியில் பெண்ணொடுக்குமுறை கிடையாது" என்ற கருத்தும் கூட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

மேலும், இப்படியான கருத்துகளில் தொடர்ச்சியாக, சில போராட்டங்கள் கூட யாழில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, "நேற்று கிருசாந்தி, இன்று வித்தியா... நாளை?" என்ற தலைப்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஒடுக்குமுறை அரசுக்கு - அதன் அதிகாரத்துக்கு எதிராகவே இப் போராட்டம் நடாத்தப்படப் போவாதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இப்போராட்டத்தை ஒழுங்கு செய்பவர்கள், வழிகாட்டுபவர்கள் மேற்படி தமிழ் மக்களின் தலைமைச் சக்திகளாகவே தம்மைக் காட்டிக் கொள்கின்றனர்.

புங்குடுதீவில் நிகழ்த்த கொடுமைக்கு நியாயம் கேட்டுப் போராடுவது இன்றைய தேவை. ஆனால், எந்த அடிபடையில் நின்று போராடுகிறோம் என்பது முக்கியம்.

இங்கு தவறு எங்கு எனில்; கிருசாந்தி கொலையை புங்குடுதீவில் நடந்த கொலைக்கு இணையாகப் பார்க்க முனைவது, மேற்படி இரண்டு பெண்களுக்கும் செய்யப்படும் தவறு என்பது ஒருபுறமிருக்க, அரசியல் அடிப்படையில் மிக மிக தவறு ஆகும். இனவாத அடிப்படையில் நடந்த போர்க்காலத்தில், சிவிலியனான ஒரு பெண் திட்டமிட்ட முறையில் இனவெறி கொண்ட அரச படைகளால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் சகோதரி கிருசாந்தி.

புங்குடுதீவுச் சகோதரி, தமிழ் கிருமினால் லும்பன்காளால் கொலை செய்யப்பட்டார். இது வேறு ஒரு சமூக -அரசியல் அடிப்படை. எல்லாமே கொலைகள் தானே என யாரவது கேட்டால் - ஆம் எல்லாம் கொலைகள் தான், ஆனால் அரசியல் காரணிகளும் - அடிப்படைகளும் வேறு வேறு. சகோதரி கிருசாந்தி கொலையின் அடிப்படையானது அரசியலில்- தமிழ் தேசிய - மற்றும் தமிழ் சமூகம் சார்ந்து மிகவும் முக்கியமானது. அதேவேளை, புங்குடுதீவுக் கொடுமை தமிழ் சமூகம் சார்ந்து உள்ளக வாயிலாக முக்கியமானது. இந்த அடிபடையில், எல்லாக் கொலைகளையும் ஒரே அரசியல் - சமூகத் தட்டில் போடுதல் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் தராது .

சகோதரி கிருசாந்தி கொலையில் எதிரி - இனவாத அரசும், அதன் அரசியலும், அதன் ராணுவமும்.

சகோதரி வித்தியா கொலையில் எதிரி - கொலை செய்தவர்களும், தமிழ் சமூகத்தின் உள்ளக பெண்ணொடுக்கு முறையும், பெண்கள் பற்றிய அதன் சமூகப்பொருளாதார கருத்தியலும்-காலாச்சாரமும்.

இதன் அடிபடையில்: எவ்வாறு, எப்படி, எந்த அரசியலை முன்னிறுத்தி நாம் இவ் வன்கொடுமைகளுக்கும்- பாலியல் கொலைகளுக்கும் எதிராகப் போராடவேண்டுமென்ற முறைகளும் மாறுபடும்.

கிருசாந்தி கொலை சார்ந்து: இனவாத அரசுக்கு எதிராக, அதன் இராணுவ அதிகாரத்துக்கு எதிராக, இன அடிபடையில் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராட வேண்டும். இது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில்- நேரடியான போராட்டத்தில் மிக முக்கியமான பகுதி.

சகோதரி வித்தியாகொலை சார்ந்து: தமிழ் மக்களுக்குள் / தமிழ் தேசியத்துக்குள் இருக்கும் பிற்போக்குத் தனங்களுக்கும், "உள் வீட்டு" ஒடுக்குமுறைக்கும் எதிராக, பெண்ணொடுக்கு முறைக்கு எதிராக, பெண் விடுதலையை முன்னிறுத்திப் போராட வேண்டும். அத்துடன், கொலை செய்யப்பட்டவருக்கு சரியான நியாயம் கிடைக்கப் போராடவேண்டும். எதிர்காலத்தில் இனியும் இப்படி நடக்காமல் இருக்க பிரன்ஞ்சயை உருவாக்கப் போராட வேண்டும்.

இந்த தெளிவு இல்லை என்றால், மறுபடியும் குளத்தைக் கலைக்கி பருந்துக்கு இரை கொடுத்தது போலாகும் .