Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

அயோக்கியர்களினது தேசபக்தி

தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது.

இலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் என்பவை மட்டுமே இக்கொள்ளையர்களின் இலட்சியம். இதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்களை அழிப்பது என்பதே இக்கயவர்களின் கட்சிக் கொள்கை.

 

1915 இல் இலங்கையின் முதலாவது இனக்கலவரமான சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் போது நாடு, ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைப் பட்டுக் கிடந்தது. அநகாரிக தர்மபாலவினால், முஸ்லீம் மக்கள் குறித்த, அந்நியர்கள், சமமான கலாச்சாரம் அற்றவர்கள், வியாபாரத்தின் மூலம் இலங்கை மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் போன்ற இனவாதக் கருத்துக்கள் சிங்கள மக்களிடையே பரவியிருந்தன. தம்மை அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையர்களுடன் மோதாமல் தம்முடன் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை ஒடுக்குவதே தர்மபாலவின் சிங்கள பெளத்த தேசியவாதமாக இருந்தது.

பெளத்த சிங்கள தேசிய வாதத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள். தமது ஒரு பிரிவினரை சாதி என்ற பெயரில் ஒடுக்குகின்றனர். 1960கள் வரை யாழ்ப்பாணப் பாடசாலைகளில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனுமதி பெறுவதற்கு போராடி வந்தனர். யாழ்ப்பாண வாலிபர் சங்கம், இடதுசாரிக் கட்சிகள் தீண்டாமை ஒழிப்புச் சங்கங்கள் என்பவற்றின் இடையறாத போராட்டங்களின் பின்னரே தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதி பெறமுடிந்தது. எல்லா மணவர்களையும் சாதிபார்க்காமல் அனுமதிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப பட்ட பின்பும் சில ஆசிரியர்கள், மாணவர்களினது பெயர்களையும் ஊர்களையும் வைத்து அவர்களது சாதியைக் கண்டு பிடித்து அனுமதி அளிக்காமல் இருந்தார்கள் என, யாழ்ப்பாண வாலிபர் சங்க உறுப்பினரும், கந்தவரோதயா கல்லூரி அதிபருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இச்சாதி ஒழிப்புப் போராட்டங்களின் உச்சகட்டமாக தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். 1958இல் முதலாவது தமிழ்-சிங்கள கலவரத்தின் போது இன ஒடுக்குமுறையின் வன்முறைகளின் கீழ் தமிழ் மக்கள் பெருந்துயரங்களை பெற்ற போதிலும் தாழ்த்தப் பட்ட மக்கள் பாடசாலைகள், கோவில்கள், தேநீர்க்கடைகள் என்பவற்றில் உட்பிரவேசிப்பதற்கு 1960களின் போராட்டங்களின் பின்னரே இயலுமாக இருந்தது. தமிழனைத் தமிழன் ஒடுக்குவதே சைவத் தமிழ் தேசியவாதமாக இருந்தது.

எல்லா இனங்களிலும் காட்டிக் கொடுப்பவர்களும் சமூக விரோதிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து, யாழ்ப்பாண முஸ்லீம்கள் ஈழப் போராட்டத்தைக்  காட்டிக் கொடுக்கிறார்கள் என ஒரு முழு இனத்தின் மீதே புலிகளால் பழி சுமத்தப் பட்டது. அம்மக்களைத் தமது வீடுகளை விட்டு, தாம் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண மண்ணை விட்டு ஒரே நாளில் துரத்தியடிக்கப் பட்டனர். ஒரு கொடிய கனவு போல் அம்மக்களின் வாழ்வு மாறியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசியரும் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழி ஆய்விற்கும் பெரும் பங்கு ஆற்றியவருமான திரு நுஹ்மான் போன்றவர்களையும் இத்தமிழ் காவலர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் விட்டு வைக்கவில்லை. தம்மை விடச் சிறுபான்மையான இன்னொரு இனத்தை ஒடுக்குவதையே தமிழ்த் தேசியமாக நியாயப் படுத்தினர். முஸ்லீம்களை தமது சமூக கலாச்சார வாழ்விலிருந்து ஒதுக்கி வைத்திருந்த தமிழ் மக்கள், இதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாது மெளனமாக இருந்தனர்.

தமிழ் இயக்கங்களின் முஸ்லீம் விரோதப் போக்குகளினாலும், முஸ்லீம் மத அடிப்படைவாதிகளாலும் கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் குழுக்கள் தோன்றின. இவற்றை இலங்கையரசு, ஆயுதங்கள், பணம் என்பவற்றின் மூலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமிழ் மக்களைக் கொல்வதற்குப் பயன் படுத்தியது.கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களின் நிலங்கள் தொடர்ச்சியாக, சிங்கள குடியேற்றத் திட்டங்களிற்காக அபகரிக்கப் பட்டு வருகையில் அதற்கு எதிராகப் போராடாமல், முஸ்லீம் தலைமைகள் மாறி மாறி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பேரினவாதக் கட்சிகளிலும் அங்கம் வகித்து பதவி, பணம் என்பவற்றை மட்டுமே தமது குறிகோளாகக் கொண்டிருந்தன. இந்தத் தலைமைகளுக்கு எதிராகப் போராடாமல், அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வதே இம்மத அடிப்படை வாதிகளின் முஸ்லீம் தேசிய வாதமாக இருந்தது.

புலித்தலைமைக்கும் கருணா குழுவிற்கும் ஏற்பட்ட மோதலின் போது, கிழக்கிலே யாழ் எதிர்ப்பு வாதம் கருணா கும்பலினால் முன்வைக்கப் பட்டது. கருணாவின் கீழ் பெரும்பான்மையான கிழக்கு மாகாணப் போராளிகள் இருந்தமையாலும், யாழ் மேலாதிக்க வாதம் என்ற கருத்து பலகாலமாகவே மற்றைய தமிழ் மாவட்டங்களில் இருந்ததையும் கருத்தில் கொள்ளாது புலித்தலைமை, ஒரு எதிரிப்படையை அழிப்பது போல் கருணா பிரிவினரை நோக்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் கிளறி விடப் பட்ட யாழ் எதிர்ப்பு வாதத்தினால் கருணா குழுவினரால் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் கொல்லப் பட்டனர். வடக்கு கிழக்கு என்ற பேதமில்லாமல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்யும் கொலைகார மகிந்த கும்பலை ஆதரித்துக் கொண்டு கிழக்கிலே வெள்ளி பார்க்கும் கருணா. பிள்ளையான் கும்பலின் பிரதேசவாதம் இதுவாகும்.

இனக்கலவரங்களின் போதும், புலிகளை அழித்தல் என்ற போர்வையில் முள்ளிவாய்க்கால் வரை ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், ஜேவிபியினர் எனக் குற்றம் சாட்டி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கொல்லப் பட்ட போது வாயே திறக்காமல் இருந்தது மட்டுமல்லாது, இக்கொலைகளைச் செய்தவர்களை நாட்டைக் காப்பாற்றிய தேசியவீரர்கள் எனப் பட்டம் சூட்டிப் பாராட்டிய மகாநாயக்க தேரர்கள், போதிசத்துவனின் அகிம்சா தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், பொன்சேகவின் கைது மட்டுமே இலங்கையில் நடந்த ஒரேயொரு அநீதியான செயல் எனபது போல் கூச்சல் போடுகின்றனர்.

ஆட்டைப் பங்கு போடுவதில் இரு நரிகளிற்குள் ஏற்படும் சண்டையைப் போல் அதிகாரத்தைப் பங்கு போடுவதற்காக மோதிக் கொண்ட மகிந்தவிற்கும் சரத் பொன்சேகவிற்கும் இடையிலான சண்டை பொன்சேகவின் கைதில் வந்து முடிந்திருக்கின்றது. இனக்கலவரங்களின் போதும், புலிகளை அழித்தல் என்ற போர்வையில் முள்ளிவாய்க்கால் வரை ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், ஜேவிபியினர் எனக் குற்றம் சாட்டி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கொல்லப் பட்ட போது வாயே திறக்காமல் இருந்தது மட்டுமல்லாது, இக்கொலைகளைச் செய்தவர்களை நாட்டைக் காப்பாற்றிய தேசியவீரர்கள் எனப் பட்டம் சூட்டிப் பாராட்டிய மகாநாயக்க தேரர்கள், போதிசத்துவனின் அகிம்சா தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், பொன்சேகவின் கைது மட்டுமே இலங்கையில் நடந்த ஒரேயொரு அநீதியான செயல் எனபது போல் கூச்சல் போடுகின்றனர். இவர்களின் பெளத்த மதவெறியே இலங்கையின் இனவொடுக்குதலின் தத்துவமாக, ஆட்சியாளர்களின் தத்துவமாக இருக்கிறது என்பதை இக்கூச்சல்களின் ஊடாக மறைத்துக் கொள்கிறார்கள்.

மலையகத்தின் குருதியை உறைய வைக்கும் குளிரில் தேயிலைத் தோட்டங்களில் உழைப்பவர்களும்; வடக்கிலும் கிழக்கிலும் கொழுத்தும் வெய்யிலில் வியர்வை சிந்துபவர்களும், தென்னிலங்கையில் அலையடிக்கும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் கடற் தொழிலாளர்களும் ஆற்றங்கரைச் சமவெளிகளில் பயிர் செய்யும் விவசாயிகளும் நாடெங்கும் தொழிற்சாலைகளில் தமது இரத்தத்தைப் பிழிந்து கொடுக்கும் தொழிலாளர்களும் இணைவதன் மூலமே இலங்கை மக்கள் தமக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரமுடியும். இந்த இணைவின் மூலமே நாட்டின் பொருளாதார, தேசிய இனப்பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இலங்கை மக்கள் எல்லோரிற்கும் ஒரு பொது எதிரி தான்; அது ஏழை உழைப்பாளர்களை ஒடுக்கும் இலங்கையில் ஆளும் வர்க்கம். அதனது அயோக்கியத் தனமான தேசிய, இன, மத பிரதேச வாதங்களில் மக்கள் சிக்கிக் கொள்ளாதவாறு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இலங்கையின் முற்போக்கு சக்திகளினது வரலாற்றுக் கடமையாகும்.

நன்றி    குரல்வெப்