Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொடைவள்ளல் எம்.ஜி.ஆரின் இலங்கை அவதாரம் அண்ணன் சுமந்திரன்

இலங்கையின் பொதுத் தேர்தலின் போது ஒரு அரிய உண்மை வெளிப்பட்டது. அண்ணன் சுமந்திரன் துரோகி என்று சிலர் சொன்ன போது அவர் ஒரு நல்லவர், வல்லவர், நீதிக்காக இலவசமாக போராடுபவர் என்று வேறு சிலர் சொன்னார்கள். நடிகைகள் எனக்கு பிடித்தது லக்ஸ் சவர்க்காரமே என்று தமிழர்களிற்கு நற்செய்தி சொல்வது போல் மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் எங்களிற்கு பிடித்தவர் சுமந்திரனே என்றார்கள். படித்தவன் பொய் சொல்ல மாட்டான் ஆகவே உங்கள் பொன்னான வாக்கை அவருக்கே அள்ளி வழங்குங்கள் என்றார்கள்.

தமிழ்நாட்டில் சினிமாவில் சேர்த்த கறுப்புப்பணத்திலும்; சாராய உடையார், எத்திராஜ் முதலியார், ஜேப்பியார் போன்ற சமுக விரோதிகளை வைத்து சேர்த்த ஊழல் பணத்திலும் எம்.ஜி.ஆர் கொடைவள்ளல் வேடம் போட்டார். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத கோமாளி தமிழின் உச்ச நட்சத்திரமாக இருந்ததிற்கும், பொறுக்கி அரசியலை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக சாகும் வரை இருந்ததற்கும் கொடைவள்ளல் வேடம் உதவியது. மூன்றாம்தர தமிழ்ப்படங்களை எடுத்து மக்களின் ரசனையை கெடுத்ததும்; ரெளடிகளையும், தெருப்பொறுக்கிகளையும் வைத்து சாக்கடை அரசியல் செய்ததும் தான் இந்த கோமாளி கொடுத்த உண்மையான கொடை.

தெருச் சண்டித்தனம் பண்ணி அரசியலிற்கு வந்த பிரேமதாசாவும் ஒரு கொடைவள்ளல் தான் என்று சிலர் சொல்கிறார்கள். பதவியில் இருந்த போது ஏழைகளிற்கு வீடுகள் கட்டிக் கொடுத்த ஏழைபங்காளன் என்று சிலர் சொல்கிறார்கள். இலங்கையின் நதிகள் எங்கும் மக்களின் பிணங்கள் இந்த கொடைவள்ளலின் காலத்தில் தான் மிதந்து வந்தன. தமிழ்நிலம் எங்கும் ஒப்பாரி இந்த ஏழைபங்காளனின் காலத்தில் தான் ஒலித்தது.

காமராஜர், எம்.ஜி.ஆர் மாதிரியான பொறுக்கி அரசியல்வாதி அல்ல. பிரேமதாசா மாதிரியான கொலைகாரன் அல்ல. நேர்மையானவர், மக்களிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். ஏழைக்குழந்தைகள் படிக்க வேண்டுமாயின் முதலில் அவர்களின் பசியைப் போக்கிட வேண்டும் என்று மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். ஆனால் அவரின் அரசியல் காங்கிரசின் அரசியல். தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்த போதும் அவர் காங்கிரசின் பிற்போக்குத்தனங்களுடன் உடன் இருந்தார். தெலுங்கானாவில் ஏழை விவசாயிகள் நேருவின் காங்கிரசால் கொல்லப்பட்ட போதும் அவர் காங்கிரசில் இருந்தார். தமிழ்நாட்டில் மொழி உணர்வாளர்கள் இந்தித்திணிப்பை எதிர்த்த போது கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். அப்போதும் அவர் காங்கிரசில் தான் இருந்தார்.

உண்மையான மனிதரான காமராஜரே தனது பிழையான அரசியல் காரணமாக மக்களைக் கொன்றவர்களுடன், மக்களை கொள்ளையடித்தவர்களுடன் சேர்ந்திருந்தார் என்னும் போது அடிப்படையே பிழையான சுமந்திரனின் அரசியல் என்ன? தமிழ் மக்களின் வாழ்வை தலை கீழாகப் புரட்டிப் போட்ட இத்தனை வருடங்களில் இவர் போன்றவர்கள் எங்கிருந்தனர்? ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் நம் மக்களின் அவலம் கண்டு ஆவி துடித்து அலை அலையாக எழுந்து போரிட்ட போது இந்த கறுவாக்காட்டு கனவான்கள் எங்கே பதுங்கியிருந்தனர்? மரணம் சூழ்ந்த வேளையிலும் மண்டியிடாது மண்ணில் சரிந்த நம் மைந்தர்களின் தியாகங்களை வைத்து இவர் போன்றவர்கள் நடத்தும் சந்தர்ப்பவாத சதி அரசியல் என்ன?.

இலங்கைத் தமிழ்மக்களை கொல்லும் சுதந்திரக்கட்சியுடனும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களிற்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்று பொன்னம்பலமும், செல்வநாயகமும் செய்த எமாற்று அரசியலின் தொடர்ச்சி தான் இந்தக் கொடைவள்ளலின் உள்ளூர் அரசியல். இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மக்களைக் கொன்று குவித்த இந்தியா, அமெரிக்கா, மேற்குநாடுகள் என்னும் கயவர்கள் தமிழ்மக்களிற்கு நீதி பெற்றுத் தருவார்கள் என்னும் சதிகார அரசியல் தான் இவரின் உலக அரசியல்.

சுமந்திரன் சிலரிற்கு சில உதவிகள் செய்தார், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்லை அதனால் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நமது அரசியல் ஆய்வாளர்கள் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுக்கும் போது பெரியார் நினைவுக்கு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால், அவனை தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அன்று சொன்னார் பெரியார். தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் அவனை தேர்ந்தெடுக்க சொல்பவர்கள் அவனை மிஞ்சிய அயோக்கியர்கள் என்று இன்றிருந்தால் சொல்லியிருப்பார்.