Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அவர்கள் தேர்தல் சலங்கை கட்டிக்கொண்டு வருகிறார்கள்...

பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்

டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

சந்திரிகா - புலிகள் பேச்சுவார்த்தை

புலிகள் - இலங்கை அரசு - சர்வதேசநாடுகளின் ஒப்பந்தம்

என்று எத்தனை ஒப்பந்தங்கள், கட்டுக்கட்டாய் காகிதங்களில் எத்தனை வெறும் சொற்கள். இவை எதுவும் தமிழ்மக்களின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவில்லை. தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை, வன்முறைக்கு உள்ளாகாத பெண்களின் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தை தடுத்து நிறுத்தவில்லை. உழைத்து வாழ்ந்த மக்கள் அகதிகளாக, அநாதைகளாக முகாம்களில் இலங்கையிலும், இந்தியாவிலும் கையேந்தி நிற்கும் அவலத்தை தடுத்து நிறுத்தவில்லை. காணிநிலங்களும் கட்டிய வீடுகளும் களவு போவதை தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டுக்கணக்காக இருட்டுச்சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் கைதிகளை சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்ய முடியவில்லை. காகிதங்களையும், கறுப்பு மையையும் வீணாக்கியதை தவிர வேறென்ன மசிர் புடுங்கின இந்த ஒப்பந்தங்கள்.

ஆனாலும் அவர்கள் மீண்டும் வருகிறார்கள். இம்முறை பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் என்று, மாகாணசபை தேர்தல்கள் என்று வருகிறார்கள். தமிழ் மக்களிற்கு இருக்கின்ற பெயரளவினான உரிமைகளை கூட இல்லாமல் செய்யும் சிங்களத்தேசிய வீரர்கள் நாங்களென சிங்கள பொதுமக்களிற்கு படம் காட்டி நாடு முழுவதும் இருக்கின்ற மாகாணசபைகளின் சொற்ப அதிகாரங்களைக் கூட பறித்து ஜனாதிபதியின் கைகளிற்கு கொண்டு வந்து கொள்ளையடிக்கவே மகிந்து அன்ட் பிரதர்ஸ் கம்பனி இச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருகிறது. இலங்கை மக்களின் வறுமை, பசி காரணமாக எழுகின்ற அரசிற்கு எதிரான போராட்டங்களை இனவாதத்தைக் காட்டி திசை திருப்பிவிட ஊழலில் கொளுத்துப் போயிருக்கும் மகிந்து கும்பல் எடுக்கும் முயற்சி தான் இந்த மாகாணசபை தேர்தல்கள்.

இந்தியா என்னும் பரமார்த்த குருவின் சீடர்களான கூட்டமைப்பினர் அடைந்தால் ஈழம், இல்லாவிட்டாலும் ஈயென்று காட்ட இளிச்சவாய் இருக்கென்று அரசியல் நடத்துபவர்கள், இந்தியா தமிழ் மக்களிற்கென்று கொண்டு வந்த வராது வந்த மாமணி இந்த திருத்தச்சட்டம் என்று குருபூசை செய்கிறார்கள். அவர்களின் அடியொற்றி புலம்பெயர் சமுகத்திலும் குருவினைப் போற்றிப் பாடுகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்தியாவில் அரசு அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட்டது. கூவத்தில் தேனும், பாலும் கரைகளை உடைத்துக் கொண்டு ஓடுகிறது. இந்திய அரசின் முயற்சிகளால் இந்தியா எங்கும் பொருளாதாரம் பெருகி பொன்மழை பொழிகிறது. இந்தியப்பெண்கள் அரிசி புடைக்கும் போது அரிசி தின்ன வரும் கோழிகளை கனகக்குழை கழட்டி கலைக்கிறார்கள். அது தாங்க காதிலே இருந்த தங்கத்தோட்டை கழட்டி கோழிகளை கலைப்பார்கள் என்று ஒரு பழந்தமிழ் பாட்டிலே வருமே அது தான்.

ஏனுங்கோ, இந்திய பக்தகேடிகளே இது உங்களிற்கே ரொம்ப ஓவரா தெரியவில்லையா? உழைத்துக் களைத்தவன் உடம்பை சாய்க்க ஓரிடம் இல்லாமல் தெருவிலே படுக்கிறான், உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். இன்று கடன் மட்டும் மிஞ்சி கழுத்தை நெரிக்க வேறுவழி இன்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள். அசாம், மணிப்பூர், நாகலாந்து, காஷ்மீர் எங்கும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. தங்களை பாலியல் வன்முறை செய்யும் இந்திய இராணுவத்தை காறி உமிழ்ந்து "எங்களை பாலியல் வன்முறை செய்" என்று உடைகளை உதறி எறிந்து விட்டு பெண்கள் போராடுகிறார்கள். இதையெல்லாம் தீர்த்து விட்டுட்டாங்க. இனி இலங்கை தமிழரின் முறை. இவங்களை ஒரு வழி பண்ணாமல் இந்தியா ஓயாது என்கிறீங்களே. இலங்கை முழுக்க இருக்கிற பனைமரங்களை வெட்டி பச்சைமட்டை எடுத்தாலும் உங்களை சாத்த பத்தாது.

எழுபத்தேழில் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று சொல்லி தேர்தலில் வென்றவர்கள் நாடாளுமன்றத்தின் நாற்காலிகளை தேய்த்ததை தவிர பிரச்சனைகள் குறித்து எதுவுமே செய்ததில்லை. எழுபத்தேழின் இனக்கலவரத்திற்குப் பிறகு கூட வேதனையில் துடித்த தமிழ் மக்களிடம் வந்து வெட்கம் எதுவும் இன்றி மாவட்டசபை தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சனையையும் தீர்க்கும் என்று மறுபடியும் வாக்கு கேட்டார்கள். நடராசா என்பவர் மாவட்டசபை தலைவர் ஆனார். இன்று விக்கினேஸ்வரன் வந்து வினைகளைத் தீர்த்து வைப்பார் என்கிறார்கள்.

நீங்கள் இன்னும் பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியிருக்கின்ற கோவணமும் களவாடப்படும் என்றான் கவிஞன். தேர்தல்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. எந்தப் பிரச்சனையும் தீர்த்து வைக்கப் போவதில்லை. இலங்கையின் உழைக்கும் மக்கள், பசியிலும் பட்டினியிலும் வாழும் ஏழைமக்கள், இனத்தாலும், மதத்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலமே பட்டு வேட்டிக்காரர்களின் பகல் கொள்ளைகளை, ஏழை மக்கள் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடத் துடிக்கும் கள்ளர் கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியும்.