Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வரும், ஆனா வராது!

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரின் அளவை விட இரண்டு மடங்கு தோட்டாக்கள் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆயுத வன்முறைகளால் ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஜநூறிற்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள்.

சட்டங்களிற்கு உட்பட்ட உத்தியோகபூர்வமான ஆயுத விற்பனை ஒரு வருடத்திற்கு நாற்பது பில்லியன்கள்.

பிரித்தானிய அரசு ஆயுத தயாரிப்பு நிறுவனங்களிற்கு ஆராய்ச்சிகளிற்காக வருடாந்தம் எழுனூறு மில்லியன் பவுண்டுகள் வரிவிலக்கு அளிக்கிறது.

அல்லாவின் சட்டப்படி அறியாக்குழந்தை ரிசானாவைக் கொன்ற தலைவெட்டி சவுதி 2008 ஆம் ஆண்டிற்கு பின்பு மட்டும் நான்கு பில்லியன் பவுண்டுகளிற்கு மேல் ஆயுதங்கள் வாங்கி குவித்திருக்கிறது. எல்லாம் வல்ல அருளாளன் எல்லாம் ஏழைகளின் தலையை வெட்டுவதற்கு மட்டும் தான், நாட்டைக் காப்பாற்றுவதற்கு கிறீஸ்தவ நாடுகளிடம் ஆயுதம் வாங்கலாம்.

பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் நம்பிக்கை நட்சத்திரம், மண்டையை சுத்தி ஒளிவட்டம் வீசும் சமாதானதேவன் டேவிட் கமரோன் வெளிநாடுகளிற்கு பயணம் போவதன் பிரதான நோக்கம் ஆயுதவிற்பனை.

உலகின் முன்ணணி ஆயுத விற்பனையாளர்கள் அமெரிக்கா, ரஸ்சியா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி. இதில் ஜேர்மனி தவிர்ந்த மற்ற ஜந்து நாடுகளும் தான் ஜக்கிய நாடுகள் சங்கத்தின் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் பெற்ற நிரந்தர உறுப்பினர்கள்.

லோக்கலாக சொல்வதென்றால் ஊழல் அரசி ஜெயலலிதா முதலமைச்சர், கட்டைப்பஞ்சாயத்து கந்துவட்டி வெட்டரிவாள் கருந்தேள் கண்ணாயிரங்கள் மந்திரிகள் என்பது போல.

எண்பத்துமூன்று கலவரம், தமிழரின் குருதியில் கைகழுவியபடி ஜே.ஆர் சொல்கிறான் "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்". எந்த நாயும் ஏனென்று கேட்கவில்லை.

வன்னி மண்ணில் இருந்து உயிரோடு மீண்டவர்களை விட மாண்டவர்கள் தான் அதிகம். அந்தக் கொலைகளிற்காக மகிந்துவின் ஒரு மயிர் கூட புடுங்கப்படவில்லை.

ஆனாலும் சொல்கிறார்கள் சர்வதேசம் கேட்குமாம். விசாரணை நடக்குமாம். மன்னர்களையும், சர்வாதிகாரிகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு கியுகோ சாவேசை சர்வாதிகாரி என்று சொல்லும் அமெரிக்காவின் தலைமையில் தமிழர்களிற்கு நீதி கிடைக்குமாம். மகிந்து கூட ஒரு விசாரணை கமிசன் வைச்சிருக்கு. அதிலே இருந்து கூட தமிழர்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று கூட ஒரு அம்புலிமாமா கதை தமிழர்களின் காதுகளிலே வைக்கப்படலாம். எதற்கும் காதுகளை பொத்தி வைத்திருங்கள்.