Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கே.பி. சகலகலாவல்லவன்

செய்தியும் செய்திக்கண்ணேட்டமும்  29-06-2010

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ!

நெஞ்சில் நினைத்திலே நடந்ததுதான் எத்தனையோ!

கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ!

கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ!


கே.பி. சகலகலாவல்லவன்

 

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது  விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக அரசல் புரசலாக வெளிவந்திருந்த நிலையில், இவற்றை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில் கடந்த 20ஆம் நாளன்று சண்டே ஒப்சேவர் வார இதழில் வெளியாகிய முகப்புச் செய்து அமைந்துள்ளது.

இதே நேரத்தில் இது தொடர்பாக கடந்த 22ஆம் நாளன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடந்த வாரம் யாழ், பலாலி, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.பியிற்கு கிளிநொச்சியில் உள்ள படைத்தளம் ஒன்றில் சிறீலங்கா படையினரால் விருந்துபசாரம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் தொடர்ச்சியாக இது குறித்து 24ஆம் நாளன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசாங்கத்தின் சாட்சியாகவே தற்பொழுது கே.பி திகழ்வதாகவும், இந்த வகையில் கே.பி அவர்களை குற்றவாளியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“வட்டுக்கோட்டைகொட்டைப்பாக்கிற்குவழிகாட்டும்”

கடந்தண்டு காலப்பகுதியில் பல்வேறு தேர்தல் திருவிழாக்களுக்குள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திசை திருப்பி விடப்பட்டிருந்த நிலையில், இவையெல்லாவற்றையும் தமக்கு சாதகமாகக் கையாண்ட சிங்கள அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் “தமிழீழத் தனியரசுக்கு” ஆணை வழங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கள் அமைந்திருந்தன. இது தொடர்பாக தனது அதிருப்தியை சிங்கள அரசு பகிரங்கமாக வெளியிட்டிருந்த அதேவேளை, “வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொட்டைப்பாக்குக்கு வழிகாட்டும்” என்ற குரூரமான தொனியில் கே.பி குழுவினரால் இயக்கப்படும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதோடு வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்களின் முடிவுகளை சிறுமைப்படுத்தியும், இருட்டடிப்பு செய்யும் குழப்பகரமான செய்திகளையும் கே.பி குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

இவ்வாறாக சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தின்  நடுநாயகமாக மாற்றம் பெற்றிருந்த கே.பியின் நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் கனக்கச்சிதமான முறையில் அவரது குழுவினர் அரங்கேற்றி வந்தனர். தற்பொழுது கே.பி அவர்களின் உண்மை முகம் வெளிவந்திருக்கும் நிலையில் இப்பொழுதும் அவரையும் அவரது செய்கைகளையும் நியாயப்படுத்தும் வகையில் கே.பி குழுவினர் ஈடுபட்டிருப்பது மிகவும் நகைப்புக்கிடமானது.

புலிகளின் போராட்டம் தோற்றம் பெற்ற 1970களில்  போராட்டத்தின் முன்னோடிகளோடு வாழ்ந்து 1987ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  விடுதலைப் புலிகளின் அனைத்துலக வழங்கல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக விளங்கிய கே.பி, சிங்கள அரசைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியான சொத்தாகவே கருதப்படுகின்றார்.

இதனையே கோத்தபாய, ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல, ரோஹான் குணரட்ண போன்றோரால் அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உறுதிசெய்கின்றன. உண்மையில் கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றோரை விட தற்பொழுது சிங்கள அரசுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார்.  புலிகளின் எதிர்கால  தாக்குதல்களை தடுத்தல், மீண்டும்  புலிகள் வளர்ச்சியடைவதற்கான சூழலை இல்லாதொழித்தல், புலம்பெயர்வாழ்  மக்களிடையே நிலவக்கூடிய போர்க்குணத்தை மட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கான நடுநாயகமாகவே கே.பியை சிங்கள அரசு பொக்கிசப்படுத்திப் பயன்படுத்தி வருகின்றது.

இதேநேரத்தில் புகலிட தேசங்களில்  புலிகளால் முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகளை முறியடிக்கும் கருவியாகவும் கே.பியை சிங்கள அரசு கனக்கச்சிதமாகக் கையாண்டு வருகின்றது. இறுதிப் போரில்   புலிகளின் உயர்பீடத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த ஒருவர் என்ற வகையில் இறுதிக் கட்டத்தில் சிங்கள அரசு அரங்கேற்றிய கொடூர போர்க்குற்றங்கள் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை நன்கு அறிந்துகொண்ட ஒருவராகவே கே.பி திகழ்கின்றார்.  அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் படுகொலை  புலிகளின் அரசியல் போராளிகளும் பொறுப்பாளர்களும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பூமியில் பல்லாயிரக்கணக்கான வன்னி மக்களுக்கு சிங்களப் படைகளால் சமாதி கட்டப்பட்டமை போன்ற பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை அறிந்த ஒருவராக அல்லது இவற்றுக்கு உடந்தையாக இருந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார்.

சிங்கள அரசை பன்னாட்டு அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தித் தண்டிப்பதற்கும் தமிழீ மக்கள் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகியமையை நிரூபிப்பதற்கும், இவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் ரொபேட் ஓ பிளேக், விஜய் நம்பியார், எரிக் சுல்கைம்,  பா.சிதம்பரம் போன்றோருடன் தொடர்புகளைப் பேணிய ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். இதன் மறுபக்கத்தை  புரட்டிப்பார்த்தால் சிங்கள அரசின் போர்க்குற்றங்களையும் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்கு கே.பி ஒருவரே போதும்! அதாவது வன்னிப் போரில் போர்க்குற்றங்கள் எவற்றையும் சிங்கள அரசு இழைக்கவில்லை என்று கே.பி கூறுவதே போர்க்குற்றங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கிவிடும்.

கே.பி.யை 2003-ற்கு முன்-பின் என கணிக்கின்றார்கள். முன்னையது பிரபாகரப் புலியினதும், பின்னையது மகிந்தப் புலியினதும் பொக்கிசமாக.

“இறுதிப் போரில் ஒரு பொது மகனைக் கூடத் தமது படையினர் கொல்லவில்லை. ஒரு பெண்ணைக் கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை. ஒரு கிராமத்தைக்கூட அழிக்கவில்லை” என்று ராஜபக்ச சகோதரர்கள் தற்பொழுது வெளியிடும் கூற்றுக்களுக்கு சான்று பகர்வர்தற்கு கே.பி என்கின்ற இந்தப் “மகிந்தப் பொக்கிசம்” தற்போதைக்கு சிங்கள அரசுக்குப் போதும். இந்த வகையில் இதுவரை காலமும் கே.பியால்    ஏற்பட்ட பாதிப்புக்களை விட இனிவரும் காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புக்களே மிகவும் ஆபத்தானவையாக அமையும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். இதுவும் தற்காலிகமானதே! விரைவில் இவரும் கருணா பிள்ளையான் தானே!


நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ கே.பி இலங்கை அரசியலின் சமகால சகலகலாவல்லவன்தான் ! நீண்டநாளில்….

 
கே.பி அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவிக்கும் ஒருவராக வலம்வருகின்றார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் நிதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் நான் அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றேன். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வழங்கப்படும் நிதி விழலுக்கிறைத்த நீர் போன்றது என சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக த லக்பிம வாரஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது தனது பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்க அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பணயம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளனர். பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையன சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர்.

கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களின் சில உறவினர்களும் அவர்களுடன் வந்திருந்தனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் நிதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் நான் அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றேன் என்றார்

கோத்தபாய மற்றும் கேபியை சந்தித்து திரும்பிய குழுவினர் பெயர் விபரம்

1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி –அவுஸ்திரேலியா 2. திருமதி சந்திரா மோகன் ராஜ்   – சுவிற்சலாந்து  3. சிறிபதி சிவனடியார் – யேர்மனி  4. பேரின்பநாயகம் – கனடா, 5. விமலதாஸ் – பிரித்தானியா  6. சார்ல்ஸ் – பிரித்தானியா  7. மருத்துவர் அருட்குமார் – பிரித்தானியா  8. கங்காதரன் – பிரான்ஸ்  9. சிவசக்தி – கனடா

தமிழ் ஈழத் துடிப்பாளர்களே! உணர்வாளர்களே!  இவ் நவஜோதிகளை எப்படி இனி எப்படி அழைக்கப்போகின்றீர்கள்? துரோகிகள், காக்கை வன்னியன், எட்டப்பன் என்காதீர்கள்! இது கேட்டு அலுத்துப்போனவைகள். செம்மொழி மாநாட்டுச் சிவத்தம்பியை கேளுங்கள். அவர் ஆய்வில் துரோகத்திற்கு என்ன “செம் மொழிச் புதுச்சொற்கள்” கண்டு பிடிக்கப்பட்டுள்ளதென? துரோகிகள் விடயத்திலாவது பழையன கழிதலும்-புதியன புகுதலும் என்றொரு நிலை வரட்டும்.

கருணாநிதி  உலகத் தமிழருடைய மிகப் பெரும் தலைவர்!     -செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பி

கருணாநிதியும்-சிவத்தம்பியும் இன்றைய “இரட்டைக்குழல் துப்பாக்கிகள்”

முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்கள் இன்று உலக நிலையில்  அவர் இந்திய துணைக் கண்டத்தில் வகிக்கும் முக்கியத்துவத்தின் காரணமாகவும் தமிழரிடையே பெற்றுள்ள நல்லெண்ணம் காரணமாகவும் உலகத் தமிழருடைய மிகப்பெரிய தலைவராக விளங்குகிறார் என தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி செம்மொழி மகாநாட்டின் ஆய்வரங்கத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் அன்புள்ள ஐயா உலகத் தமிழத் தலைவர் என்ற வகையில் உலகத்தில் உள்ள தமிழ் மக்களுடைய வேண்டுதல்களை அவர்களுடைய ஆசைகள் அபிலாசைகளுடைய குரலாக விளங்கி உலகத் தமிழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.

இந்தியாவின் இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணணியுக சொல்லாட்சியையும் பெற்ற ஓரே மொழி தமிழ் மொழி மட்டுமே. இத்தகு தமிழ் மொழியின் பெருமை உலக மக்களுக்குத் தெரிய வேண்டும். உலகம் அறிய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்லா உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் கருணாநிதி செய்ய வேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே மொழி தமிழ். ஆதலால்இ இம்மொழியின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை செய்ய வேண்டும்.

உலக  மானுடவியல்  வரலாறு குற்றித்து கருத்து வெளியிட்ட அவர் உலக இனங்களில் அர்த்தம்  உள்ள தமிழ் இனம் மட்டுமே, தனக்குள் உறவு முறைகளை அதிகம் கொண்டு உள்ளது .இதன் முலம் திருமணங்களை தமிழன் முடிவு செய்கிறான். இதனால் சிக்கல் மற்றும் பிரச்சனைகள் ஏற்படாத  சமூக நடைமுறைகளை உருவாகி நடத்தி வருகிறான் என்றும் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிபிட்டார்.

தகைசார் ஓய்வு நிலையார் எதிலும்….செக்கென்ன சிலிங்கம் என்ன என்ற நிலையில் இருந்தே செயற்பட்டார். செயற்படுகின்றார். செயற்படுவார். அவருக்கு எப்போதும் “யாதும் நன்றே,! யாவரும் நண்பர்களே!” கடந்த வருடம் புலிகளின் “பீஸ்மாச்சாரியராக” இருந்தார். அப்போ கருணாநிதி “செக்கு’” இப்போ கலைஞர் “சிவலிங்கம்”. அதன்பாற்பட்டே, செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்கு “லிங்கபூசை” செய்துள்ளார். “பேர் ஆசிரியர்” சிவத்தம்பி அவர்கள் அரசியலில்-கலை இலக்கியத்தில் 60-ஆண்டு அனுபவம் உள்ளவர். ஆனால் எக்காலமும் மக்கள்-விரோத செயற்பாட்டாளரே!  50-ம் ஆண்டுகளில் முற்போக்கு இலக்கியம், பொதுவுடமைக் கொள்கை எனப் புறப்பட்டு, 60-ம் ஆண்டு தத்துவார்த்தப் போராட்டத்தில் (பீற்றர் கெனமனின் பீத்தல் கொள்கை) திரிபுவாத நிலை நோக்கி, 72-ம் ஆண்டுகளில் சமாதான சகஜீவனத்தில், பாராளுமன்றத்தின் மூலம் சோஸலிசம் கொணடு வரலாம் என அரசியல்-கலை இலக்கியப் படைப்புக்கள செய்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சாஷ்டாங்க நமஸ்கார “சஷ்டிக் கவசம்” பாடி, 80-களில் “தம்பி பிரபாகரனின்” பாட்டன் பீஸ்மராகி, “பிரபாகர பாரத யுத்தத்திற்கு” வியூகம் வகுத்து, நந்திக்கரைவரை கொண்டு சென்று சங்கமமாக்கினார்.

தற்போது ஓய்வு நிலையாளருக்கு எதிலும் சற்று பற்றற்ற நிலை. ஆனால் முற்றும் துறந்த நிலையல்ல. இந்நிலையில் வந்ததே கருணாநிதியின் குடும்பச் செம்மொழி மாநடாட்டிற்கு அழைப்பொன்று, ஆரம்பத்தில் ஆர்ப்பரிப்பாளர்களுக்கு அஞ்சியது போல் சிற் சில சித்துக்கள். பின்னால் பின் நவீனத்துவ (அவர் எதிலும் எல்லாம் தெரிந்தாக காட்டுபவராச்சே) பாணியில் கடடுடைப்புக்கள். இதனால் ஆர்ப்பரிப்புகள் அடங்கிட, அதை தனதாக்கினார். சென்றும் வந்தாரே மாநாட்டிற்கு. பாடினாரே தன் தோழனுக்கு புகழ்மாலை. ஜயா என்றார். உலகத் தமிழ் தலைவன் என்றார்., முத்தமிழ் வித்தகர் என்றார். இதைச் சரியாகத்தான் சொன்னார். இவர் போல் அவரும் சகலதிலும் வித்தகரே! இதனால் இவர்களை உலகத் தமிழர்களின் “இரட்டைக்குழல் துப்பாக்கிகள்” எனலாம் தானே. (அரை நூற்றாண்டிற்கு முன்னான சரியான  அரசியல்-கலை இலக்கிய தடப்பதிப்பில் கைலாசபதியும் சிவத்தம்பியும்) எனவே உலகத் தமிழ் இனமே! யாவரும் கேளீர்! எம்மினத்தின் ‘வித்தகர்களான’ இவ்விருவரையும், (செம்மொழி மாநாடு விட்ட தவறை நிவர்த்தி செய்து) “தமிழின இன்றைய இரட்டைக்குழல் துப்பாக்கிகள்” என பட்டமளித்து கௌரவிப்போம். இதை செம் மொழித் தலைமையகத்திறகும் அறிவிப்போம்! வர்ழ்க  “இவ்விரட்டைகள்” வளர்க செம் மொழி!

ஜி-20 மாநாட்டை எதிர்த்து கனடாவில் போராட்டம்

கனடாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வங்கிகள், கடைகள் ஆகியவை கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. பொலிஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

கனடாவின் டொரண்டோ நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டொரண்டோவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.கறுப்பு சட்டை அணிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, மாநாட்டுக்கு எதிராகவும், அதில் பங்கேற்க வந்த தலைவர்களை கடுமையாக விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.அருகில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அருகில் இருந்த வங்கியின் ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸார் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.

இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிசார் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதல் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

மாநாடு நடக்கும் இடத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், “வேண்டும் என்றே வன்முறையில் ஈடுபட விரும்பும் சிறிய கூட்டம் தான் இச்செயலை செய்திருக்கிறது” என்றனர்.

ஏதோ ஜி.20 மாநாடு, ஏகப் பெரும்பான்மையான உலக மக்களின் பிரச்சினைகளையும், அவர்தம் அபிலாசைகளையும், கணக்கில் கொண்டு, அவற்றிற்கு தீர்வுகாண  கூட்டப்பட்டது  போலவும். அதை வேண்டுமென்றே ஓர் சிறிய கூட்டம் வன்முறை கொண்டு குழப்புவது போலவும் கனடியப் பொலிசார் கதை சொல்கின்றார்கள். ஜி.20-ன் கூட்டமும், அதன் தலைவர்களும் கூட முற்பட்டது, அவர் தம் மக்கள் விரோத அரசியல் பொருளாதார கட்டுமானத்தை எப்படி தக்கவைப்தும்-தொடர்வது என்பதற்காகவுமே! இவர்களின் இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டுக்கள் பெரும்பான்மை மக்ககளுக்கு விளங்காது என தப்புக் கணக்குப் போடுகின்றார்கள். மக்கள் இவர்களின் பம்மாத்தை இனம் கண்டு அதற்கு எதிராக போராட முற்படும்போது, அது இவர்கள் அகராதியல் வன்முறையும் பலாத்காரமுமே. ஆனால் மக்கள் அகராதியில் புரட்சிகர வெகுஜனப் போராட்டம் ஆகும்!

இலங்கை அரசாங்கத்துடனான எந்த உறவும் தொடர்பும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தூடாகவே இடம்பெறும் ‐

ஐ.நா செயலாளரின் ஆலோசனைத் சபைத் தலைவர் மர்ஸுக் டாருஷ்மன்

ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் மர்ஸுக் டாருஷ்மன் ஒஸ்ரேலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணல் இது.

இலங்கை அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா செயலாளர்நாயகத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு இது. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இது விசாரணை நடாத்தும். எனினும் இந்த நடவடிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு கோபமூட்டியுள்ளது. இந்த ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வர விஸா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசு வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறது.

டாருஷ்மன்: இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி தனக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த ஒரு குழு இது.

லியாம்: இந்தக்குழு பெரும்பாலும் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையையே மேற்கொள்ளும் என்று ஐநாவின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். ஆக இந்தக்குழு இலங்கை அரசின் விசாரணைகளுக்கு உதவி வழங்குமா? அல்லது சுதந்திரமாக விசாரணையை மேற்கொள்ளுமா?

டாருஷ்மன்: இது ஐநாவின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடனான எந்த உறவும் தொடர்பும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தூடாகவே இடம்பெறும்.

லியாம்: ஆக நீங்கள் சொல்கிறீர்கள் இது இலங்கை அரசாங்கத்துடைய விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதென்பதல்ல சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று?

டாருஷ்மன்: நாங்கள் ஒரு போதும் எந்த அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வழிமுறைகளிலேயே தங்கி நிற்கிறோம்.

லியாம்: இந்த ஆலோசனைக்குழுவின் விசாரணைகளுக்கு தாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தெரிவித்திருக்கின்றனரே? இது உங்களுடைய பணிகளை எவ்வாறு பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

டாருஷ்மன்: இதற்கு நான் அபிப்பிராயம் எதனையும் சொல்லப் போவதில்லை. நாங்கள் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பின்னரே எங்களுடைய பணி என்ன என்பது எங்களுக்குச் சரியாகத் தெரிய வரும்.

லியாம்: விசாரணைகளில் எவ்வாறான சவால்கள் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

டாருஷ்மன்: விடயங்களைச் சேகரிப்பதும் முன்வைப்பதுமான ஆலோசனைக்குழுவின் பணிகள் சவாலானவை தான். அது நாட்டுக்கு உள்ளே என்றாலென்ன. அல்லது நாட்டுக்கு வெளியே என்றாலென்ன? ஆனால் இதில் உள்ள துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த ஆலோசனைக்குழு தனக்குக் கிடைக்கும் விடயங்களை இலங்கை அரசாங்கத்துடன்   சரிபார்க்க வாய்ப்பில்லாது போய்விடுவது தான்.

லியாம்: எனக்குத் தெரியும் இந்தக் கேள்வி இவ்வளவு விரைவாகக் கேட்கப்படக் கூடியதன்று. ஆனாலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா கள நிலைமைகளை அவதானிப்பதற்கு இலங்கை செல்வதற்கு உங்களுக்கு விசா கிடைக்குமென்று.

டாருஷ்மன்: நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். இந்த ஆலோசனைக்குழு தனது பணிகளைச் செய்வதற்கான வாய்ப்பு பெருமளவில் இருக்கும் என்று. ஆனாலும் மீண்டும் நான் இங்கே வலியுறுத்த விரும்புவது இலங்கைக்குப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்பதைப் பொறுத்தல்ல இவ்விடயத்தை நாங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தது. நாங்கள் போவதா இல்லையா என்பதை செயலாளர் நாயகம் தீர்மானிப்பார்.

லியாம்: எப்போது இந்தக்குழுவினரின் விசாரணைகள் ஆரம்பமாகும். அது  முடிவடைய எவ்வளவு காலம் எடுக்கும்?

டாருஷ்மன்: நாம் இப்போதே பணிகளை ஆரம்பிக்கலாம். நான்கு மாதங்களுக்குள் இவ்வாலோசனைக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். எனவே நாம் உடனடியாகப் பணிகளை ஆரம்பித்தாக வேண்டும். ஐநா செயலாளர் நாயகத்தினதோ அல்லது அவருடைய அலுவலகத்தினதோ மேலதிக ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதன்பிறகு ஆலோசனைக்குழுவின் முழுக்காலத்திற்குமான திட்டம் வரையப்படும் எந்தவிதமான அறிக்கைகளையும் நாம் வெளியிட முதல் ஆலோசனைக்குழுவின் பணிகள் திட்டமிடப்பட வேண்டும்.

லியாம்: இவ்வாலோசனைக்குழு பாரியளவிலான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதென கண்டடையுமானால் போர்க்குற்ற நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செயலாளர் நாயகத்திற்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?

டாருஷ்மன்: அதனைப் பின்னர் பார்ப்போம். ஒரேயடியாக நாங்கள் இப்போது குதித்துப் பாயத் தேவையில்லை.  ஆனால் சரியான வழிமுறைகள் மூலம் உண்மை நிலவரத்தை உலகின் முன் வைப்போம்

நன்றி: அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்தனர் –     நோர்வேயின் சுற்றாடல் அமைச்சர்: எரக்சொல்கெய்ம்

இறுதிக் கட்ட யுத்த்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாக நோர்வேயின் சுற்றாடல் அமைச்சர் எரக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன் மற்றும் புலித்தேவன் போன்ற முக்கிய தலைவர்களுடன் நோர்வே தொடர்புகளைப் பேணி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒஸ்லோவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடிகளை அசைப்பதன் மூலம் மட்டுமே சரணடைய முடியும் என அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் யார் யார் பங்கு பற்றினார்கள் என்பது தொடர்பில் அவர் தகவல்களை எதனையும் வெளியிடவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி வரையிலும் சரணடைவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால யுத்தத்தை எதிர்நோக்கிய இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிற்கு தாம் ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ எமக்கொரு உண்மை தெரிந்தாகணும். சென்ற வருடம் இந்திய-மகிந்தக் கொலைஞர்கள் செய்த படுகொலைகளுக்கு, சிலேடைப்பதில், இரட்டைவேடம், மௌனம், மதில்மேல் பூனைப் போக்குப் போன்றவற்றால் (மனிதகுலம் வெட்கித் தலை குனியும் வண்ணம்) மாபெரும் கறைபடிந்த குற்றச் செயலை செய்த ஜ.நா.வும், நீங்களும் ஏன் இப்போ இந்த ஓட்டம் ஓடுகின்றீர்கள். இதை இடம்–பொருள்–ஏவல், தேச-கால-வர்ததமானம் என்பதா? காலம் கனிந்த வரலாற்றுச்சூழல் என்பதா?  அல்லது மகிந்தாவின் அமெரிக்க-ஜரோப்பிய விரோதத்திற்கு பாடம் கற்பிக்கும் முயற்சியா? இருபகுதியினரும் உங்கள் கூட்டாளிகள் முகாம் கொண்டு மோதுகின்றீர்கள். குழு விசாரணையும் ஆரம்பித்துள்ளீர்கள். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம், மகிந்தாவா? ஜ.நா.சபையா? என.