Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"மகிந்த அரசியல்" பல விசித்திரங்கள்!!

"பிளஸ்" என்றால் அனைத்து மக்களுக்கும் தீர்வாம்!

மைனஸ் என்றால் அனைத்து மக்களுக்கும் அழிவோ?.....

உலக அரசியலில் இலங்கையின் "மகிந்த அரசியல்" பல விசித்திரங்கள் கொண்டது. பிளஸ் என்றால் அனைத்து மக்களுக்கும் தீர்வாம். மைனஸ் என்றால் அனைத்து மக்களுக்கும் (அரசியல் - பொருளதாரம் உட்பட்ட அனைத்து சிவில் சமூக வாழ்விற்கும், கட்டமைப்பிற்கும்) அழிவோ? உண்மையில் இந்நிலை கொண்டே எம்நாட்டு அரசியலை அனுமானிக்க வேண்டியுள்ளது.

"இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையே 13 - பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது".

கடந்த ஓரிரு மாதங்கள் வடமகாணசபைத் தேர்தல் 13-வது திருத்தம் போன்றவை சில சிங்களப் பேரினவாத குரங்கினங்களின் கையில் அகப்பட்ட பூமாலையாகவே உள்ளது. இக்குரங்கினங்களின் கோமாளித்தனத்தை, அரசியல் அறிவற்ற சாதாரண மக்களே எள்ளி நகையாடுகின்றார்கள். வெறுக்கின்றார்கள்.

இப்பேரினவாதக் கோமாளிகள் எதைதான் செய்தாலும், இதுகளின் கூத்தை மகிந்த-கோத்தபாயர்கள் கண்டு களித்து உசுப்பேத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். பல விடயங்களுக்கு பின்னாலான இவர்களின் உசுப்பேத்தல்கள் என்னவென எம்நாடறியும்.

2009-முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிற்பாடு, இப்போ இந்நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அரசியல் தீர்வுதான். இதை 13-ன் பிளசாகவும் கொடுப்பேன் எனச் சொன்னவர்தான், இக்கோமாளிகளுக்குப் பின்னால் இருந்து அசல் கோமாளியாக அரசியல் செய்யும் எம்நாட்டு ஜனாதிபதி. இப்போ 13-வதிற்கு பண்ணாடை விளக்கம் கொடுகின்றார்.

அண்மையில் சொன்னார் எம்நாட்டிற்கு அரசியல் தீர்வை இறக்குமதி செய்ய முடியாது என…. நல்ல விடயம்தானே. யார் சொன்னது வேண்டாமென்று…

உங்கள் அகராதி கொண்ட 13-ன் பிளஸ் "அனைத்து மக்களுக்குமான" தீர்வென்றால், மகிந்த சிந்தனை கொண்டு அதைச் செய்யலாமே?

எம்நாட்டு மக்களின் அபிலாசைகளை கணக்கில் கொண்டு அம்மக்களுக்கான தீர்வை அர்த்தபுஸ்டி கொண்டு, அந்தரங்க சுத்தியுடன் செய்தால் எம்நாட்டு மக்கள் இறக்குமதி அரசியலை ஏற்கமாட்டார்கள். தாங்களும் அர்த்த புஸ்டியுள்ள அரசியல்வாதியாக போற்றப்படுவீர்கள?....

இதைச் செய்ய உங்களால் முடியாது. காரணம் உலகமயமாதலின் நிகழ்சிநிரல் கொண்ட நவதாராளவாதத்திலான சகலதிலும் எம்நாட்டையும், மக்களையும் பின்னிப் பிணைத்துள்ளீர்கள். இதில் எல்லாமே இறக்குமதியுடன் கூடிய அந்நிய அரசியலும், அவலமும் தானே?

அதனால்தான் உங்களின் சிறைச்சாலைகளில் மிளாகாய்த்தூள் கொண்டு சித்திவதை செய்ய, பல அந்நியங்களுக்கு வலிக்கின்றது. இதற்குள் இருக்கும் ஏற்றுமதி-இறக்குமதி வலி அரசியலை என்னவென்பது?...

இந்த அந்நியங்களையும், அதனூடான ஏற்றுமதி-இறக்குமதி வலி அரசியலையும் பாதுகாக்க உங்களுக்கோர் உள்நாட்டு அரசியல் தேவை. அதற்கான நிகழ்ச்சி நிரலும் தேவை.

அதுவே எம்நாட்டின் சகல இன மக்களையும் பிளந்தெறிதல். இனசுத்திகரிப்பு நோக்கிலான பல பேரினவாதச் செயல்களைத் தொடர்ந்தெய்தல். இதற்குத்தானே சிற்சில பேரினவாத குரங்கினங்களும் அதன் சேட்டைகளும் உங்கள் குடும்ப அரசியலுக்கு தேவைப்படுகின்றது.

உங்களின் தேவை இதுவென்றால் மக்களின் தேவை, அதுவல்ல. "தாங்கள் சொல்லுகின்ற அனைத்தும் மக்களுக்கு ஆனது" என்பதை நீங்கள் செய்ய மாட்டீர்கள். அதை மக்களே செய்வார்கள். அதற்கான உங்களின் சகல "சேட்டைகளையும்" தடைகளையும் இல்லாதாக்குவார்கள்.