Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 21

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 21

 

டிராட்ஸ்கிய சதியில் வெளிநாட்டு உளவாளிகளின் தொடர்புகள் குறித்து …

சோவியத்தில் டராட்ஸ்கிய சதி பற்றி சர்வதேச ரீதியாக பல தகவல்கள் அன்று வெளியாகியது. அதேநேரம் அன்று சோவியத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஏகாதிபத்திய மதிப்பீடுகள் என்னவாக இருந்தது என்பதை பார்ப்போம். டிராட்ஸ்கி 1920 களில் லெனினை எதிர்த்து பகிரங்கமாகவும் இரகசியமாகவும் தனக்கான கோஷ்டியை உருவாக்கி, பிளவு நடவடிக்கையில் ஈடுபட்டதை லெனின் குறிப்பில் இருந்து பார்த்தோம் அல்லவா. இதை குறிப்பிட்டு சோவியத்தில் உளவாளியாக செயற்பட்ட பிரிட்டீசின் இரகசிய இலாக்காவைச் சேர்ந்த புருஸ் லோக்கார்ட் தனது குறிப்பில் “லெனினுக்கும் டிராட்ஸ்கிக்கும் இடையில் கருத்து வேறுபாடு” என தனது இரகசிய பிரிவுக்கு செய்தி அனுப்பினான். அமெரிக்க நிருபர் ஜசக் இந்நிலை தொடர்பாக கொடுத்த அறிக்கையில் “லெனினுடைய ஆட்சி கவிழ்ந்து விடும். டிராட்ஸ்கியும் அவனுடைய இடதுசாரிக் கூட்டத்தினரும் ஆதிக்கத்துக்கு வந்து விடுவர் என்றும் கம்யூனிஸ்டு வாலிபர்களும், பல அதிகாரிகளும், செம்படை வீரர்களும் டிராட்ஸ்கிக்குப் பக்கபலமாகி விடுகிறார்கள்” என அறிவித்தான். இக்காலத்தில் டிராட்ஸ்கி நாடு முழுவதும் சுற்றித் திரிந்ததுடன் பல கூட்டங்களில் “பழைப போல்சுவிக்குகள் பிற்போக்குகளாகி விட்டனர் வாலிபர்களே! என்பக்கம் வாருங்கள்” என அறைகூவல் விடுத்தான். இந்த நிலையில் தான், லெனின் மிக கடுமையாக இந்த போக்கை அம்பலப்படுத்தி விவாதித்ததின் ஒரு பகுதியை நாம் முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இதில் டிராட்ஸ்கி தோற்றுப் போன போது, ஒரு நாளும் தன்னை சுயவிமர்சனம் செய்யவில்லை. தனது மார்க்சிமல்லாத போக்கை நிறுத்திவிடவும் இல்லை. மாறாக பலாத்காரமான முறையிலும், சதிகள் மூலம் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை தொடங்கினான். கோஷ்டிவாதம் கூர்மையாகியது. லெனின் கட்சிக்குள் கோஷ்டி கட்டுவதை தடை செய்தார். இருந்தும் டிராட்ஸ்கிய குழு இரகசிய மற்றும் சட்டபூர்வமான அனைத்து வழியிலும், தன்னை ஒரு இரகசிய சதிக் குழுவாக புனர்நிர்மாணம் செய்து கொண்டது.

 

இந்த நிலையில் 1924 ஜனவரி 21 இல் லெனின் மரணமடைந்தார். லெனின் மரண நிகழ்ச்சியில் கூட, டிராட்ஸ்கி பங்கு கொள்ளவில்லை. அவரின் குடும்பத்துக்கு ஒரு இரகங்கல் செய்தியைக் கூட டிராட்ஸ்கி அனுப்பவில்லை. 1924 மே மாதம் நடந்த கட்சிக் காங்கிரசில், லெனினுக்குப் பிறகு அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தான். தனது கோஷ்டியைச் சேர்ந்த பல டிராட்ஸ்கிவாதிகள் இதை தடுத்த நிலையிலும், ஸ்டாலினுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டான். இருந்த போதும் 748 உறுப்பினர் ஒரு முகமாகவே ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து டிராட்ஸ்கி சதிகள் மேலும் இரகசியமாக கையாள முயன்றான். இதற்காக வெளிநாட்டு சதிக்குழுக்களுடன் சேர்ந்தான்.

பிரிட்டீஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்த சார்ச்சிலுடன் தொடர்பு கொண்டான். சார்ச்சில் தனது நூலில் ஒன்றில் இது பற்றி “1924 ஜூலை மாதத்தில் காமனேவும், டிராட்ஸ்கியும் அவனை (சாவிங்கோவ்) திரும்பி வரும்படி அழைத்தார்கள்” இதைத் தொடர்ந்து சாவிங்கோவ் சோவியத்துக்குச் சென்றான். ஆனால் சோவியத் அரசு அவனைக் கைது செய்தது. இது தொடர்பாக இரு வெவ்வேறு நாட்டு உளவுப் பிரிவினருக்கு இடையே நடந்த கடிதத் தொடர்பை இங்கு ஆராய்ந்து பார்ப்போம்.

 

பிரியமுள்ள ரெயிலி, உங்கள் கடிதம் கிடைத்தது. தொடக்கத்தில் நான் எதிர்பார்த்ததே நிகழ்ந்து விட்டது. சாவிங்கோ மீது மிகுந்த கோபம் கொள்ள மாட்டிர்கள் என நினைக்கிறேன். அவன் தப்ப முடியாத நிலையில் சிக்கிக் கொண்டான். அத்தகைய நிலையை வெற்றிகரமாக சமாளித்தவர்களுக்குத் தான், அவனைக் கண்டிக்க உரிமை உண்டு. சவிங்கோவின் கதை முழுவதும் தெரிவதற்கு முன் அவனைப்பற்றி நான் கொண்டுள்ள கருத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. -சார்ச்சில்

 

டிராட்ஸ்கி தான் ஆட்சிக்கு வருவதற்கான சதிக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தினான். டிராட்ஸ்கி எல்லாவித இடது, வலது அமைப்புக்களையும் பயன்படுத்தினான். ஸ்டாலினின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்த்துவிடுவதே ஒரே நோக்கமாக கொண்டு செயலாற்றினான். இதேநேரம் உள்நாட்டில் நிலமைகள் மோசமாகிச் சென்றது. டிராட்ஸ்கி கட்சியை எதிர்த்து தீவிரமாகச் செயற்பட்டான். என் வாழ்க்கை வரலாறு என்ற தனது நூலில் இதையொட்டி டிராட்ஸ்கி எழுதுகின்றான் “கட்சிச் சண்டை வலுத்து 1926 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் எதிர்க்கட்சி, வெளிப்படையாக கட்சிக் கூட்டத்தில் கலவரம் செய்து எதிர்ப்பு பின்வாங்க நேரிட்டது.” என டிராட்ஸ்கி தனது சொந்த வாக்குமூலத்தில் தருகிறான். அதாவது எதிர்த்து நிற்க முடியாத நிலமை ஏற்பட்டதால், அதற்கான காலம் கனியும் வரை பின்வாங்கினான் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கி கூறும் எதிர்க்கட்சி எங்கிருந்தது, கட்சிக்குள் அல்லவா! லெனின் கோஷ்டிவாதத்தை தடை செய்து இருந்தார். ஆனால் டிராட்ஸ்கி இம்மியும் கூட அதைப் பின்பற்றவில்லை. ஆனால் தம்மை தாம் இன்று லெனினியவாரிசுகள் என்ற கூறுவதில் என்ன தார்மிக பலம் தான் உண்டு. மறுபக்கத்தில் ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு கலகம் செய்ய கூட ஜனநாயகம் இருந்துள்ளது. கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் கூட மிக கேவலமாக மார்க்சியத்துக்கு புறம்பாக துஸ்பிரயோகம் செய்தனர். இதையே மார்க்சியம் என்று இன்றும் பிதற்றுகின்றனர்.

 

இப்படி இருக்க ஸ்டாலினுக்கு எதிரான எதிர்ப்பை, எதிரி வர்க்கத்தில் இருந்தும் திரட்டினான். “1926 இல் 6 வீதமான குலாக்கள் (நிலப்பிரபுகள்) கோதுமை உற்பத்தியில் 50 சதவீதத்தை கட்டுப்படுத்தி சந்தையை நிர்வாகித்தனர்” இந்த வர்க்கத்தையும், இடைக்கால பொருளாதார திட்டத்தை சார்ந்து உருவான சுரண்டும் வர்க்கத்தையும் பிரதிபலித்த கட்சி உறுப்பினர்களின் ஆதாரவையும், தனது பக்கத்தில் டிராட்ஸ்கி திரட்டினான். 1927 இல் சோவியத் மீது  அன்னிய நாடுகளால் போர் தொடுக்கப்படும் என்ற நிலை நிலவிய காலத்தில், அதைப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை நிறுவ டிராட்ஸ்கி மீளவும் தனது தாக்குதலைத் தொடங்கினான். அதை டிராட்ஸ்கி “என் வாழ்க்கை” என்ற நூலில் அழகாகவே வாக்குமூலம் தந்திருக்கிறார். “மாஸ்கோ, லெனின்கிராட் ஆகிய இரு நகரங்களில் பல இடங்களில் இரகசியக் கூட்டங்கள் நடந்தன. தொழிலாளர்களும், மாணவர்களும், மாணவிகளும் இருபது முதல் இருநூறு நபர்கள் வரை, கூட்டங்களுக்கு வந்திருந்தார்கள். ஒரே நாளில் நான்கு கூட்டங்களுக்கு நான் போனதுண்டு” என தனது சதியை கூறுவதில் வெக்கப்படவில்லை. சதி நடந்தது என்பது வெட்டவெளிச்சமாகின்றது. கட்சிக்குள் இருந்தபடி செய்த இந்த சதியைத்தான் இவர்கள் மார்க்சியம் என்றனர். இந்தளவுக்கு கட்சியில் இருந்தபடி இதைச் செய்ததுடன், எந்தளவுக்கு சோவியத் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் என்பது சதிவரைக்கு கூட அனுமதியளித்திருந்தது என்பதையும் வெளிப்படுத்தினர். 1917 இல் புரட்சி நடந்த கொண்டாட்ட நாளான 1927 நவம்பர் 7 ஆம் நாள், எதிர்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த டிராட்ஸ்கி திட்டமிட்டான். சதிகளின் ஈடுபட்டு இன்று உயிருடன் இருப்பவர்கள் வழங்கிய வாக்கு மூலங்களில் இது சுட்டிக் காட்டப்படுகின்றது. இதை டிராட்ஸ்கிகள் இன்று பெருமையுடன் வெளியிடுகின்றனர். அதில் 1932 இல் “இடது எதிர்ப்பாளர்களின் அங்கத்தவர்கள் தனது தாயின் வீட்டில் ஒன்று கூடினர் என்பது தொடர்பாகக் கூறினார். இக்கூட்டத்தில் சினோவியேவ், கமனேவ் தாங்கள் ஸ்டாலினை அகற்ற வேண்டியதுடன் உடன் படுவதாகவும், டிராட்ஸ்கியுடன் தொடர்பேற்படுத்த வேண்டியதையும் ஏற்றுக் கொண்டனர். அவ்வேளை அவர்கள் தாம் 1917ல் விட்ட தவறை விட பெரிய தவறு 1927 இல் இடது எதிர்ப்பாளருடன் பிரிந்து போனது தான் என குறிப்பிட்டனர்.” 1927 இல் டிராட்ஸ்கி ஆட்சி கவிழ்ப்பை, தொழிலாளர் அணிவகுப்பின் முன் நின்று நடத்தும் சதியை திட்டமிட்டான். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் முன் நிற்க முடியாமல் டிராட்ஸ்கியவாதிகள் சிதறி பின்வாங்கினர்.

 

இந்த எதிர்புரட்சிக் கும்பல், கட்சியில் மிகச் சிறிய குழுவேயாகும். 1927.12.27 ம் தேதி கட்சி முடிவுகளை எற்று அங்கீகரிக்கும் தேர்தலில் ஸ்டாலின் நிலைக்கு ஆதாரவாக 7,25,000 கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 6000 ஆயிரம் வாக்குகள் போடப்பட்டது. எதிர்புரட்சிக் கும்பல் 0.82 சதவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியவில்லை. இதிலும் கூட மாற்றுக் கருத்து காணப்பட்டது. கட்சியில் ஆதாரவற்ற ஒரு சிறு கும்பலின் சதி தோல்வியுற்றது. அதேநேரம் அன்று டிராட்ஸ்கியின் நிறுவியிருந்த பல இரகசிய அச்சகங்களையும், ஆயுதங்களையும் பாட்டாளி வர்க்க அரசு கைப்பற்றியது. இரகசிய அறிக்கைகள், சதியை நடத்தக் கோரிய பல சதித் திட்டங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மாஸ்கோவில் எதிர்ப்புரட்சி நடக்கவிருந்த நேரம், லெனின் கிராட்டிலும் எதிர்புரட்சி நடத்தச் சென்றிருந்த சினோவ்க், ராடெக்கும் கைது செய்யப்பட்டனர். சோவியத்  தூதனாக ஐரோப்பாவுக்கு சென்றிருந்த டிராட்ஸ்கிய வாதியான ஜோபி, இந்த சதி தோல்வியில் முடிந்ததை அறிந்து அங்கேயே தற்கொலை செய்து கொண்டான். இது போன்று தற்கொலை செய்த மற்றொருவன் பற்றி, அவரின் மகள் எழுதிய நூல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்றதை பிரகடனம் செய்கின்றது. 1995 இல் வெளியாகி “சரியான நேரத்தில் மீண்டும்” என்ற தலைபில் “எனது வாழ்க்கை, எனது தலைவிதி, எனது சகாப்தம்” என்ற குறிப்புடன், ட்ரோட்ஸ்கிய சதிகளில் பங்கு கொண்ட ஜொவ்வேயின் பற்றி இந்த நூல் பல தரவுகளை தருகின்றது. ஜொவ்வே டிராட்ஸ்கியுடன் ஆரம்பகால அரசியல் சதிகளில் ஈடுபட்டதுடன், 1917 போல்ஸ்விக் புரட்சியின் போது போல்ஸ்விக்கில் இனைந்தவன். போல்ஸ்விக்கில் இணையும் போது தெஸ்ராஒஸ்டி என்ற குழுவில் இனைந்த பின், போல்ஸ்விக் கட்சியுடன் பேரம் பேசி இணைந்தவர். இந்த நூல் எப்படிப்பட்ட சதிகளில் தன் தந்தை ஈடுபட்டார் என்பதை மிகப் பெருமையுடன் பேசுகின்றது. 1927 இல் இடது எதிர்பாளர்களின் இரகசிய சதி, கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகி தோற்றபோது, தனது தந்தை தற்கொலை செய்த கொண்டதை சுட்டிக் காட்டுகின்றது. இவரின் மகளும், அவரின் கணவனும் தொடர்ந்த டிராட்ஸ்கி சதிகளில் எப்படி பங்கு பற்றினோம் என்பதை, இந்த நூல் சுய வரலாறாக விரிவாகப் பேசுகிறது. அன்று பழைய வெள்ளை இராணுவ அதிகாரிகள், சமூகப் புரட்சிக்காரர்கள், அன்னிய நாட்டு ஏஜன்டுகளும், டிராட்ஸ்கியவாதிகளும் பல இடங்களில் கைது செய்யப்பட்டனர். இந்த எதிர்புரட்சியைத் தொடர்ந்து டிராட்ஸ்கி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு இடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டான். இருந்தும் தனது தலைமையை நிறுவ தொடர்ந்து சதிகளையே ஆதாரமாக கொண்டு செயல்பட்டான்.

 

வேறு இடத்தில் சோவியத் அரசு டிராட்ஸ்கிக்கு அனைத்து வசதிகளையும் வழங்கியிருந்தது. இதைப் பயன்படுத்தி சோவியத்துக்குள் தொடர்ந்தும் சதி செய்தான். அதை “என் வாழ்க்கை” என்ற நூலில் ஒரு சோவியத் பிரதிநிதியை சந்தித்ததைப் பற்றி எழுதுகையில் “உங்கள் கூட்டாளிகள் நாடு முழுவதும் சோவியத்துக்கு எதிராக சதி வேலையை மீண்டும் தொடங்கிவிட்டனர். அல்மா அட்டாசில் உங்களைச் சில வசதிகளுடன் வைத்ததினால் அந்த வேலையை நடத்த, நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.” என ஒரு சோவியத் பிரதிநிதி குறிப்பிட்டதை டிராட்ஸ்கி தனது சுயசரிதை நூலில் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியான சதிகளை அடுத்து 1929 பெட்டவரி 13 இல் பாட்டாளி வாக்கத்துக்கு எதிரான சதிவேலை காரணமாக டிராட்ஸ்கி நாடுகடத்தப்பட்டான். ஆனால் டிராட்ஸ்கி தொடர்ந்து சதிவேலைகளை வெளிநாட்டில் இருந்து செய்தான். ஸ்டாலினை பலாத்காரமாக தனிமனித ரீதியாக அழிப்பதன் மூலம் ஆட்சி கைப்பற்றுவது என்ற புதிய வடிவத்தில் டிராட்ஸ்கியம் வளர்ச்சி பெற்றது. சோவியத்தை சோசலிச நாடு என்று கூறிய படி, ஸ்டாலின் தலைமைய அகற்றி தனது ஆட்சி நிறுவப்பட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றான். இதற்காக ஸ்டாலின் தலைமையை அதிகார வர்க்க ஆட்சி என்றான். அதனால் தனிநபர்களை பயங்கரவாத வழிகளில் அழித்துக் கொள்வது சரி என்றான். இது மார்க்சியம் என்றுகூறி, டிராட்ஸ்கிய சதிக் கோட்பாட்டை முன் தள்ளினான். இதற்காக தனிநபர்களாக ஸ்டாலின் தலைமையை அழிக்கும் சதிகள் முன் தள்ளப்பட்டது. வெளிநாட்டில் இருந்து டிராட்ஸ்கி தனது முதல் மெய்காவலன் மூலம் 1930 இல் சோவியத்யூனியனுக்குள் திருட்டுத்தனமாக ஆயுதங்களை கொண்டு வந்த போது டிராட்ஸ்கியின் மெய்க்காவலன் சுட்டுக் கொல்லப்பட்டான். டிராட்ஸ்கிக்கு சோவியத்யூனியனை தாக்கி அளிக்க விரும்பிய ஏகாதிபத்தியங்களின் ஆதாரவு கிடைத்தது. ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை அகற்றும் நோக்கத்தில் இருவரும் ஒன்றுபட்ட குறிக்கோளை கொண்டிருந்தனர். இதனால் டிராட்ஸ்கி தான் “மாபெரும் புரட்சிக்காரன்” என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டான். சதிகள் மற்றும் பயங்காரவாத வழிகளை தனது அரசியல் நோக்காக கொண்டு சோவியத்தில் சதித் திட்டங்களை திட்டிய அவன், அடிக்கடி “விதியா? அதைக் கேட்டு நான் சிரிக்கிறேன். மனிதர்களா? அவர்கள் அறிவிலிகள்” என அடிக்கடி கூறிக் கொண்டான்.

 

சோவியத்தில் எற்படக் கூடிய எந்த நெருக்கடியையும் டிராட்ஸ்கி தனது தலைமைக்கான ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்காக பயன்படுத்த முனைந்தான். நெருக்கடியை எற்படுத்துவதும் அதன் அங்கமாகியது. ஜெர்மன் எழுத்தாளர் எமில் லட்லிக்கை சந்தித்த போது டிராட்ஸ்கி கூறினான் “ரஷ்யா மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது, ஐந்தாண்டுத் திட்டம் வெற்றிபெறவில்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்படும். கூட்டு விவசாயம் படுதோல்வி, ஸ்டாலின் நாட்டைப் பாழ்படுத்துகிறார். எதிர்ப்பு பெருகி வருகிறது” எனக் கூறினான். ரஷ்யாவில் உங்களைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் என அவர் கேட்ட போது “அதை மதிப்பிட முடியாது பலர் தலைமறைவாக வேலை செய்கின்றனர்” என பதிலளித்தான். நீங்கள் எப்போது வெளிப்படையாக வேலை செய்ய முடியும்? என்று கேட்ட போது “வெளியில் இருந்து வாய்ப்புக் கிடைக்கும் போது, போர் ஏற்பட வேண்டும் அல்லது அரசாங்கத்தின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் புதிய தாக்குதலைத் தொடுக்க வேண்டும்.” என்று டிராட்ஸ்கி கூறினான். அமெரிக்க நிருபர் ஜன்குந்தர் டிராட்ஸ்கியையும் அவருடன் இருந்தவர்களையும் சந்தித்த பின் கூறினார் “அவர் நாடுகடத்தப் பட்டவரைப் போல் நடந்து கொள்ளவில்லை. மணிமுடி தரித்த மன்னன் அல்லது சர்வாதிகாரி என்றே அவரைச் சொல்லலாம்” எனக் குறிப்பிட்டார்.  தொடர்ந்து அவர் நான்காவது அகிலத்தின் குறிக்கோளையும், அது செய்த வேலையையும் கேட்ட போது டிராட்ஸ்கி பதில் ஒன்றும் கூறவில்லை மாறாக இரகசிய ஏடுகளைக் காட்டினான். பின் ஜன்குந்தர் மேலும் எழுதினார் “டிராட்ஸ்கி ரஷ்யாவை இழந்து விட்டான். அல்லது சிறிது காலத்திற்காவது அவன் அதை இழந்து விட்டான் என்றே சொல்லலாம். பத்து அல்லது இருபது ஆண்டுகளிலாவது அவன் அதை திரும்ப பெறமுடியுமா என்று எவராலும் சொல்ல முடியாது. ஸ்டாலின் வீழ்ச்சியுறுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. …ஒன்றே ஒன்றுதான் டிராட்ஸ்கியை ரஷ்யாவிற்கு உடனே செல்ல வைக்க முடியும். அது ஸ்டாலினின் மறைவு.” எனறு குந்தர் குறிப்பிட்டார். அந்தளவுக்கு டிராட்ஸ்கி இரகசிய சதி அமைப்புக்களை கம்யூனிச எதிர்ப்பு அணிகளை சோவியத்தினுள் உருவாக்கினான். இந்நிலையில் டிராட்ஸ்கி சர்வதேச ரீதியாக அன்னிய நாடுகளுடன் கூட்டுகளை உருவாக்கினான், சதிகள் தீட்டினான். டிராட்ஸ்கியம் தனது சதியை நியாயப்படுத்தும் போது “முல்லா கூற்றுப்படி தங்களது அரசியல் காரணங்களுக்காக ஆளும் கட்சியினர் டிராட்ஸ்கிய பத்திரிக்கைகள் கூறுவது போல் ‘மார்ச் 5 1933 அன்று ஜேர்மன் தேர்தலின் போது கூடிய கூட்டத்தை’ டிரொட்ஸ்கிச எதிர்ப்பாளர்களின் ஒரு சதிக் கூட்டம் என்று கூறுவது சரியல்ல. ஜெர்மன் தொழிலாளர் இயக்கம் தோல்வியடைந்ததால் ஏமாற்றமடைந்ததன் காரணமாக மேலும் இராணுவ நிபுணர்கள் பற்றிய பிரேமையும் கிளர்ச்சி எழுச்சியின் மூலோபாயங்கள் தொலை தூரத்தில் மாஸ்கோவில் இருந்தன் காரணமாக… பெர்லினில் இருந்த கட்சி தலைமை பற்றியும் கொள்கைகளைகள் பற்றியும் சில விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அவர் விளக்கவில்லை” என்று கூறி சதியின் அடிப்படையை மூடிமறைக்கின்றனர். சோவியத்தில் இராணுவச் சதி ஜெர்மானிய டிராட்ஸ்கியவாதிகளினது வேலை திட்டமாக இருந்ததை இது நிறுவுகிறது. அத்துடன் ஜெர்மன் கம்யூனிச கட்சியை நாசிகளின் குடையின் கீழ் நின்று கடுமையாக தூற்றியதை ஒப்புக் கொள்கின்றனர்.

 

டிராட்ஸ்கி சதிக் குழுவில் இருந்த சிரஸ்டின்ஸ்கி 1930இல் சோவியத் வெளிநாட்டு மந்திரியாக இருந்தவன். இவன் 1930 கள் வரை ஜேர்மனிய அரசிடம் இருந்து உள்நாட்டு சதிக்காக 20,00,000 தங்க மார்க்குகளை பெற்றிருந்தான். இந்த உதவி 1930இல் நிறுத்தப்படுமளவுக்கு நாசிய நெருக்கடிகள் உருவாகியது. இதைத் தொடர்ந்து டிராட்ஸ்கி ஜேர்மனிய வேவு இலாகாவுடன் புதிய ஒப்பந்தம் செய்தான். இந்த உதவிக்காக சோவியத் இராணுவ இரகசியங்கள் கையளிக்கப்பட்டன. 1931 இல் டிராட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் பெர்லினுக்குப் போனான். அவன் ஒரு மாணவன் என பிரயாணச் சீட்டில் ஜெர்மன் விஞ்ஞான கழகத்தில் சேரப் போவதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவன் தலைநகரில் சதிவேலைகளில் ஈடுபட்டிருந்தான். சோவியத் வர்த்தக கமிட்டியில் டிராட்ஸ்கிய சதியாளர்களும் பெர்லினுக்கு வந்திருந்தனர். அவர்கள் சுமிர்நோவ், பயாட்டக்கோவ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுமிர்நோவ் 1931இல் டிராட்ஸ்கிக்கு சாதகமாக சதிசெய்ததையும், அவன் பெர்லினில் டிராட்ஸ்கியின் மகனைச் சந்தித்ததையும் டிராட்ஸ்கிய பத்திரிகை ஒத்துக் கொண்டுள்ளதை கவனமாக நாம் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும். டிராட்ஸ்கியின் மகன் செடோவ் அவர்களுடன் சந்தித்து, சதியை எப்படி நடத்துவது என ஆராய்ந்தனர்.

 

பயாட்டக்கோவின் தனது குறிப்பில் இதுபற்றி குறிப்பிடுகையில் “செடோவை நான் ஒரு விடுதியில் சந்தித்தேன். நீண்டகாலமாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கறிவோம். டிராட்ஸ்கியின் பிரதிநிதியாக அவன் பேசுவதாகச் சொன்னான். ஸ்டாலின் தலைமையை எதிர்க்கும் போராட்டம் முடியவில்லை டிராட்ஸ்கி ஒவ்வொரு நாடாக நாடு கடத்தப்படுவதால், போராட்டம் தற்காலிகமாகத் தடைப்படுகின்றது மீண்டும் அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டிருப்பதாயும், செடோவ் என்னிடம் சொன்னான். இந்தப் போரில் கலந்து கொள்ள முடியுமா என்று ஒளிவு மறைவின்றி என்னைக் கேட்டான். நான் சம்மதித்தேன்” இதன்படி முதலில் ஜெர்மனில் இருந்த போர்சிக், டெமாக் என்ற இரு ஜெர்மன் கம்பனிகளில் கூடிய சாமான்களை கூடுதல் விலைகொடுத்து வாங்குவதன் மூலம், அதில் கிடைக்கும் பணத்தை சோவியத் எதிர்ப்புக்கு பயன்படுத்தக் கோரினான் செடோவ்.

 

பயாட்டக்கோவ் நாடு திரும்பியவுடன் டிராட்ஸ்கியிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதன்படி ஸ்டாலினையும் அவருடைய கூட்டாளிகளையும் பயங்கரவாத வழிகளில் ஒழிப்பதை சுட்டிக் காட்டியது. அத்துடன் அனைத்து எதிர்ப்பு சக்திகளையும் ஒன்றிணைப்பதை கோரியது. இதை இன்று டிராட்ஸ்கிய பத்திரிகை எற்றுக் கொள்கின்றது. டிராட்ஸ்கியின் புதிய திட்டத்திற்கு பயாட்டக்கோவ் தலைவனாக இயங்கியதும், எல்லா இரகசிய இலாக்காவுடனும், சகல எதிர்ப்பு குழுக்களை ஒன்றிணைப்பதை டிராட்ஸ்கிய சதியாளர்களான கார்ல், ராடெக் போன்றோரையே திடுக்கிட வைத்தது. டிராட்ஸ்கி ராடெக்கு எழுதிய இரகசிய கடிதத்தில் “கடந்த காலத் திட்டத்தை நாம் இனிக் கையாள்வதில் பயனில்லை என்பது நாம் பெற்ற அனுபவம். எனவே, இனி நாம் புதிய முறையைக் கையாள வேண்டும். ஒன்று, சோவியத் யூனியனும் நாமும் அழிய வேண்டும் அல்லது தலைமைப் பதவி ஒழிய வேண்டும்.” எனக் குறிப்பிட்டான். இக்கடிதம், மற்றும் பயாட்டக்கோவ்வின் வற்புறுத்தலால் ராடெக் இயங்க ஒத்துக் கொண்டான். இந்தவகையில் சுமிர்னோவ், மிராக்கோவ்ஸ்கி, டிரீட்சர் போன்றோர் இரகசிய தனிநபர் பயங்கரவாத அமைப்பாளராக செயல்பட ஒத்துக்கொண்டனர். ஆனால் டிராட்ஸ்கிய பயங்கரவாத சதிகளை மூடிமறைக்கவும், அதை அரசியல் வடிவமாக சித்தரிக்கவும், ஸ்டாலினிசத்தினது பயங்கரவாதமும் தத்துவமற்ற தன்னிச்சைப் போக்கும் அதிகார இயக்கத்தின் அங்கமுமே, சோவியத்தில் காணப்பட்டதாக புளுகின்றனர். அன்று டிராட்ஸ்கி சோவித்தை தொழிலாளர் ஆட்சி என்ற கூறிக் கொண்டு, தலைமையை மட்டும் அகற்ற வேண்டும் என்ற கோரிய போது, பயங்கரவாதமும் சதியும் தத்துவத்திலும் சரி தன்னிச்சைப் போக்கிலும் சரி எங்கிருந்தது என்பதை, உள்ளடகத்தில் யாரும் ஒளிவுமறைவின்றி தெரிந்து கொள்ள முடியும்.

 

1932ம் ஆண்டு டிராட்ஸ்கிகள் தமது அணிகள் மத்தியில் “ஸ்டாலின் கட்சியின் திட்டம் முறிந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அதில் நாம் தோல்வியடைந்து விட்டோம். நாம் இதுவரை பின்பற்றிய போராட்டத் துறைகளினால் பயன் ஏதுவும் கிட்டவில்லை. இனி ஒரே ஒரு போராட்டப் பாதைதான் இருக்கிறது. பலாத்காரத்தினால் கட்சியின் தலைமையை அகற்றுவது ஸ்டாலினையும் மற்ற தலைவர்களையும் ஒழித்துவிடவேண்டும். அதுவே முதல் வேலை.” என்று சதிகளின் வடிவத்தை மாற்றி அமைத்தனர். இதைத் தொடர்ந்து சோவியத் எதிர்ப்புக் குழுக்களுக்கு இடையில் ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டது. இதை டிராட்ஸ்கிய பத்திரிகைகள் இன்று பெருமையுடன் ஒத்துக் கொள்கின்றன. பின் நிகழ்வான கைதுகளின் அலை, டிராட்ஸ்கிய – சினோவியேவிச் மையத்துக்கு எதிராக திட்டமிடப்பட்ட வழக்கு நடந்தாக கூறுகின்றது.

 

இந்த ஐக்கிய முன்னணிக்கான அமைப்பின் பெயர் “வலதுசாரிகள், டிராட்ஸ்கியவாதிகள் ஆகியோரின் குழு” என வரையறுத்தனர். மூன்று செயல்முறைக் கமிட்டி அமைக்கப்பட்டன. சினோவீவ், பயாட்டக்கோவ் ஆகிய இருவரும் இரு குழுக்களாகவும், புகாரினும், கிரிஸ்டின்ஸ்கியும் மூன்றாவது கமிட்டிக்கும் தலைவர்கள் ஆனார்கள். 1933 செப்டம்பர் மாதம் ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்தான். அதைத் தொடர்ந்து ஒரு யுத்தம் நடைபெறும் என்பதையும், அதேநேரம் ஜெர்மனிக்கு சில சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்த யுத்தத்தைப் பயன்படுத்த டிராட்ஸ்கி முயன்றான். இதன் தொடர்ச்சியில் சோவியத் வெளிநாட்டு உதவி மந்திரியாக இருந்த டிராட்ஸ்கியின் சதிகாரனான நிக்கோலாய் கிரஸ்டின்ஸ்கி, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்து எட்டு மாதம் கழித்து ஜெர்மனியில் ஒய்வுக்காக வந்திருந்தான். இவனை டிராட்ஸ்கியவாதியான பெஸ்ஸாநோவ் சந்தித்தான். இதன் போது அவன் “ஜெர்மன் நாஜிக்கட்சியின் அன்னிய இலாகாத் தலைவனான ரோசன் பெர்க், ரஷ்ய டிராட்ஸ்கியவாதிகளுக்கும் ஜெர்மன் நேஷனல் சோசலிஸ்டுகளுக்கும் கூட்டுறவு எற்படுத்த விரும்புகிறான்.” எனக் கூறினான். இதனால் டிராட்ஸ்கி வெளிநாட்டு உதவி அமைச்சரான நிக்கோலாய் கிரஸ்டின்ஸ்கி சந்திக்க விரும்புவதாக கூறினான். இதையடுத்து மெரானோ நகரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இது எப்படி உள் நாட்டில் சதியை நடத்துவது என்பதை அடிப்படையாக கொண்டே நடைபெற்றது. வெளிநாட்டு அரசு வரையிலும் இந்தச் சதி வலை ஒன்றாக பின்னப்பட்டது.

 

இது தொடர்பாக நடந்த ஒரு சம்பவத்தை குறித்து ராடக் சுட்டிக் காட்டினான். உதவி அமைச்சர் செக்கோல் நிக்கோவ், அலுவலகத்திற்கு வந்ததும் “இதைக் கேளுங்கள் நான் வெளிநாட்டு இலாகா அலுவலகத்தில் பேசி முடித்ததும், டிராட்ஸ்கி தன் அரசாங்கத்துக்கு அனுப்பிய திட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா?” என ஜப்பான் தூதுவன் கேட்டான். அதற்கு செக்கோல் நிக்கோவ் “சோவியத் உதவி மந்திரியாக நான் இதை எப்படிச் செய்வது இது முடியாத செயல்” என்று கூறினானான். ராடக் “ஆத்திரப்பட வேண்டாம். இங்குள்ள நிலமை டிராட்ஸ்கிக்குத் தெரியாது. இனி இம்மாதிரி நேரிடாது. ஒற்றர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஜெர்மனி அல்லது ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்று, நான் டிராட்ஸ்கிக்கு முன்னமே எழுதுகிறேன்.” எனக் கூறினான். நிலைமை ஒருபுறம் வெளிநாட்டு சதிவரை நீள, மறுதளத்தில் சிலரை இரகசியமாக கொன்று விட திட்டம் இடப்பட்டது. அது மறைமுகமான வழிகளில் முதன்மையானவர்களான ஸ்டாலின், வாரோலோவ், மாலட்டோவ், ஜடானோவ், சிரோவ், மாக்ஸிம் கார்க்கி ஆகியோர் கொல்லப்பட வேண்டும் என டிராட்ஸ்கிகள் திர்மானித்தனர். இதைத் தொடர்ந்து மாலட்டோவைக் கொல்ல அவரது கார் ஓட்டுனரான டிராட்ஸ்கியவாதி வாலண்டைன் அர்னால்டு முயன்றான். சோவியத் மந்திரிசபைத் தலைவரான மாலட்டோவைக் கொல்லும் நோக்கில் தனது காரை திடீர் என பள்ளத்துக்கு திருப்பி ஓடிய போதும், கடைசி நேரத்தில் தனது மனோத்திடத்தை இழந்து அதை அவன் கைவிட்டான். இதனால் அவர் தப்பிக் கொண்டார்.

 

இக்காலத்தில் டிராட்ஸ்கி தனது மெய்காவலனாக இருந்த டிரீட்செர்க்கு 1934 இல் கண்ணுக்கு புலப்படாத மையினால் எழுதிய கடிதம் ஒன்றில்

 

பிரியமுள்ள நண்பனே!

இப்போது நாம் நிறைவேற்ற வேண்டிய அவசர – அவசிய வேலைகளாவன:

1) ஸ்டாலின் – வரோலோவ் ஆகிய இருவரையும் அகற்றுவது.

2) இராணுவத்தில் ஒரு குழுவை அமைப்பது.

3) போர் மூண்டால், அதிகாரத்தைக் கைப்பற்ற அந்த நிலைமையைப் பயன்படுத்துவது.” என எழுதினான். தொடர்ச்சியான சதியில் 1934 டிசம்பர் 1ம் திகதி லெனின்கிராட் கட்சிக்காரிய தரிசியும் ஸ்டாலிலின் நெருங்கியவருமான கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். கிரோவ் படுகொலை பற்றி 2.3.1938 இல் டிராட்ஸ்கி கூறினான் “கிரோவ் ஸ்டாலினின் கையாள் என்றான். அவனை கொலை செய்தவன் நன்றாகத் தெரிந்த இளம் கம்யூனிஸ்ட்டான நிக்கோலயேவ்யாவன். இவன் கிரோவ்வைக் கொன்றது தனிப்பட்ட காரணமே ஒழிய அரசியல் காரணமல்ல என்றான்.” சதியாளாகளால் கொல்லப்பட்ட கிரோவ் 1934 இல் நடந்த 16 வது காங்கிரஸ்சில் மாபெரும் தனித்துவமிக்க தலைவராக விளங்கினார். இது டிராட்ஸ்கிய சதியாளருக்கு மற்றொரு தலையிடியாக மாறியது. இதனால் இவரை ஒழித்துக் காட்டுவதன் மூலம், ஸ்டாலின் வலது கரத்தை துண்டிக்க விரும்பினர். இதன் அடிப்படையில் படுகொலை செய்த பின்பு, இதை தனிப்பட்ட பிரச்சனையினால் எற்பட்ட கொலை என்று சதி தொடர்பான விசாரனைகள் நடந்த காலத்தில் டிராட்ஸ்கி அதாவது 1938 இல் அறிவித்தான். மே 1934 கிரோவ் படுகொலைக்கு 6 மதத்துக்கு முன், சோவியத் இரகசிய இலாக்கத் தலைவனான மென்ஸ்கி மாரடைப்பால் மரணம் அடைந்தான். அப்போது துணைத் தலைவனாக இருந்த எக்கோடா தலைவனானான். எக்கோடா 1929 இல் டிராட்ஸ்கிய சதிக் கூட்டத்தில் சேர்ந்து இருந்தன். இவன் டிராட்ஸ்கிய குழு ஆட்சிக்கு வரும் என்று நம்பியதன் அடிப்படையால் மட்டும் அதில் இணைந்திருந்தான். 1934 இல் கிரோவ் கொலையாவதற்கு முன், கொலைகாரனான நிக்கோலயேவ், சோவியத் இரகசியப் போலிசாரால் லெனின்கிராட்டில் கைது செய்யப்பட்டான். கிரோவ் ஒவ்வொரு நாளும் போய் வருகின்ற நடைபாதையைக் காட்டக் கூடிய படமும், துப்பாக்கியும் அவனிடம் இருந்தது. லெனின்கிராட் உதவித் தலைவனாக இருந்த சர்ப்பரோ செட்ஸ் எகோடாவுக்கு வேண்டியவன். எனவே நிக்கோலயேவ் விடுதலையானான். இந்த கொலையை மறைமுகமாக எகோடா செய்வித்ததுடன், தாங்கள் ஆட்சிக்கு வரும் போது அதில் எப்படியான அரசு அமைய வேண்டும் எனக்கூட திட்டமிட்டான். இதற்கு என விசேட இரகசிய இராசாயண சாலை ஒன்றை நிறுவினான். இதில் பல விஞ்ஞானிகளை உருவாக்கினான். இதுவும் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. வேறு நூதன வழிகளைச் சிந்தித்தான். இதற்கு டாக்டர்களைப் பயன்படுத்த திட்டமிட்டான்.

 

இதன் அங்கமாகவே துணைத் தலைவராக இரகசிய இலாக்காவில் இருந்த போது, அதன் தலைவராக இருந்த மென்ஸ்கியை கொல்லும் வழியில் டாக்டர் லேவினை அனுகினான். மென்ஸ்கிக்கு வைத்தியம் செய்து வந்த லேவின் தனது திட்டத்துக்கு மிரட்டியும், பவ்வியமாகக் கதைத்தும் சம்மதிக்க வைத்தான். அவன் அவரிடம் “சோவியத் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இரகசிய இயக்கம் வளர்ச்சியுறுகிறது. அந்தத் தலைவர்களில் நானும் ஒருவன். அந்த எதிர்ப்பு இயக்கத்தவர்கள் தான் சோவியத் யூனியனின் ஆதிக்கம் வகிக்கப் போகிறவர்கள். நீங்கள் வைத்தியம் செய்து வருகிற தலைவர்கள் சிலரை, எங்கள் பாதையில் இருந்து விலக்கியாக வேண்டும்.” என்று எகோடா டாக்டர் லேவினிடம் கூறினார். இதை செய்ய மறுத்த போதும் தற்காலிக தலைவர் முன் எதுவும் பலிக்காது எனக் கருதி அதற்கு சம்மதித்தான். மென்ஸ்கிக்கு வைத்தியம் பார்த்த இன்னுமொரு டாக்டர் கசாக்கோவையும் பயன்படுத்தினான். இதன் தொடர்ச்சியில் லெவின்க்கும் கசாக்கோக்கும்  இடையிலான உரையாடலைப் பார்ப்போம்.

 

லேவின்:- மென்ஸ்கி நடைப்பிணம். உண்மையில் நீங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.  ஒரு விசயத்தைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்.

கசாக்கோவ்:- எதைப்பற்றி?

லெவின்:- மென்ஸ்கியின் உடல் நலத்தைக் குறித்து …. நீங்கள் மிகத் திறமையுள்ளவர்கள் என எண்ணினேன். நீங்கள் இன்னும் என்னை அறிந்து கொள்ளவில்லை. மென்ஸ்கியை சற்றுக் குணப்படுத்தி இருக்கிறீர்கள். அவர் மீண்டும் வேலைக்குப் போகாமலிருக்கும் படி செய்யவேண்டும். மென்ஸ்கி உண்மையில் ஒரு பிணம். அவரைக் குணப்படுத்தி திரும்பவும் வேலை பார்க்கத் தகுதியுள்ளவராகச் செய்தால், எகோடாவின் கோபத்திற்கு ஆளாவீர். மென்ஸ்கி எகோடாவின் பாதையில் தடைக் கல்லாக இருக்கிறான். … இது பற்றி ஒரு வார்த்தை கூட மென்ஸ்கியிடம் செல்லக்கூடாது. சொன்னால், எகோடா உங்களை அழித்து விடுவார். எங்கே போய் ஒழித்தாலும் அவரிடம் இருந்து தப்ப முடியாது. தலைமறைவாக இருந்தாலும் கூட அவர் உங்களை விடப் போவதில்லை.

 

நவம்பர் 6 1933 இல் டாக்டர் கசாக்கோவை சந்திக்க எகோடா கார் அனுப்பினான். எகோடா தனது அலுவலகத்தில்

 

எகோடா:- மென்ஸ்கி எப்படி இருக்கிறார்

கசாக்கோவ்:-கவலைக்கிடமான நிலைமை

எகோடா:- லெவினைச் சந்தித்து பேசினீர்களா?

கசாக்கோவ்:- ஆம்

எகோடா:- அப்படியானால் ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள். ஏன் வேலையை முடிக்கக் கூடாது? பிறர் காரியத்தில் நீர் தலையிடுகிறீர்?

கசாக்கோவ்:- நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?

எகோடா:- மென்ஸ்கிக்கு உம்மை யார் வைத்தியம் செய்யச் சொன்னது.? அவன் உயிர் வாழ்ந்தால் யாருக்காவது பலன் உண்டா? இல்லை. அவன் எல்லோருக்கும் இடையூறாக இருக்கிறான்…”

 

1934 மே 10இல் மென்ஸ்கியின் இதயத்தைப் பலவீனப்படுத்திக் கொன்றனர். இதே போன்று 1935 ஜனவரி 25 இல் பொலிட் பீரோ உறுப்பினர் குயுபிவ் அலுவலகத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. உடன் ஓய்வுக்கு அனுப்புவதற்கு பதில் அவரின் காரியதரிசியான மாக்ஸிமோவ் என்ற புகாரியவாதி, நடந்து வீடு செல்லும்படி கூறினான். குயுபிவ் நடந்து விடுபோய் சேர்ந்ததும் இறந்தார். இந்த சதியில்  இரகசிய சதிக் குழுவைச் சோந்த எனுகிட்ஸ் இணைந்தே திட்டமிட்டு கொன்றனர். “1936 வசந்த காலத்தில் சோவியத் உளவுத் துறை கடைசியாக ஒரு “டிராட்ஸ்கிய சதியை” கண்டபிடிப்பதில் வெற்றி கொண்டது” என்று டிராட்ஸ்கிய பத்திரிகை இன்று ஒத்துக் கொள்கின்றது. ஆனால் அதற்கு எதிரான நடவடிக்கையை தூற்றுகின்றனர்.

 

உண்மையில் சோவியத் 1936-1937 களில் விழித்துக் கொண்டது. உள்நாட்டு சதி மற்றும் 5ம் படையாகச் செயற்பட்ட இந்த சதியாளர்கள் ஜப்பானுடனும், ஜேர்மனியுடனும் உள்ள கூட்டு மெதுவாக தெரிய வந்தது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உதவுவதன் மூலம் சோவியத்தை சிதைத்து நாசமாக்கி அழித்துவிடவும், தமது அதிகாரத்தை நிறுவவும் கனவு கண்ட சதிகள் மெதுவாக கசிந்த நிலையில் விசாரணை முடுக்கி விடப்பட்டன. சோவியத் விசாரணையைக் கட்டுப்படுத்த எகோடா எடுத்த முயற்சி அனைத்தும் வீணாயிற்று. எகோடாவின் கையாளான போரிசோவ் விசாரணைக்காக லெனின்கிராட்டுக்கு வரவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவன் விசாரணைக்காக போகும் வழியில் கார் விபத்தில் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து “மாஸ்கோ விசாரனை“கள் நடத்தப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் 27 இல் எகோடா பதவியில் இருந்து நீக்கப்பட்டான். அவனுக்குப் பதில் எவ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரை தன் வழிப்படுத்த எகோடா முயன்று தோற்றான். சிலர் கைது செய்யப்படுமுன் தமக்குள் கூடி கதைத்தனர். உடனடியாக சதியை ஆரம்பிப்பது பற்றி யோசித்த போதும் ஆபத்தானது என்பதால் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து வெளியில் தெரியாத கிரஸ்டின்கியிடம் சதிப் பொறுப்புக்களை ஒப்படைத்தனர். இவன் ரோசென்கோட்ஸ் என்பவனை துணைத் தலைவனாக்கினான். மார்ச்சில் துக்காசெவ்ஸ்கி சோவியத் பாதுகாப்பு இலாகா உதவிக் கமிசன் உறுப்பினரானான். அவன் தலைமையில் இராணுவத் தாக்குதல் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த இராணுவச் சதியை டிராட்ஸ்கிய பத்திரிகைகள் இன்று ஒத்துக் கொள்கின்றன. (பார்க்க தொழிலாளர் பாதையை)

 

ஜனவரி 23 1937இல் பயாட்டக்கோவ், ராடேக், செக்கோல், நிக்கோவ், ஸ்டோவ், முரலோவ், மற்றும் பன்னிரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவர்கள் ஒரே விதமாக ஒரே விடயத்தை தனித்தனியாக கதைத்தனர். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இவர்கள் தமது நிலையைச் சரியெனக் கூறி பிடிவாதமாக மீள மீள விவாதித்தனர். இந்த விசாரனை என்பது அவர்கள் மீது பொய்யாக திணித்தாக கூறிய டிராட்ஸ்கிய வாதிகளின் அவதூறுக்கு பதில், அவர்கள் சோவியத் அமைப்பை எதிர்த்து வாதிட்டதுடன் தமது சதிகளையே மார்க்சியம் என நியாயப்படுத்தினர். இன்று டிராட்ஸ்கிய பத்திரிகைகள் அவற்றை தமது கொள்கைப் பிரகடனம் எனப் பீற்றிக் கொள்கின்றனர். அன்று விசாரணையைப் பார்க்க வந்த எந்தப் பத்திரிகையாளரும் (உள்நாட்டு, வெளிநாட்டு) இதை பொய்யாக சோடிக்கப்பட்டது என்று கூறியதை நம்பமறுத்தனர். அவர்கள் சதிகளை நியாயப்படுத்திக் கொள்ளும் பிரகடனங்களையே செய்தனர். (உ-ம்) பயாட்டக்கோவின் வாக்கு மூலத்தைப் பார்ப்போம்.

 

ஆம். பல ஆண்டுகளாக டிராட்ஸ்கிய வாதியாக இருந்து வருகிறேன். ஆனால் ஹெஸ் ஒப்பந்தத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் குருட்டுத்தனமாக நேச உடன்படிக்கை செய்து கொண்டோம். அதிலிருந்து விடுபட வழிதேடிக் கொண்டிருந்தேன். ….” (இங்கு ஹெஸ் ஒப்பந்தம் என்பது நாசிக் கட்சிக்கும், டிராட்ஸ்கிய வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்) இன்னுமொரு டிராட்ஸ்கிய வாதியான கார்ல் ராடெக்கு தான் குற்றவாளி என்று ஒப்புக் கொண்டான். அவன் நாஜி ஜெர்மனியோடும், ஜப்பான் அரசோடும் டிராட்ஸ்கி செய்த ஒப்பந்தம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அந்த சதியை வெளிப்படுத்த தான் உறுதி கொண்டிருந்ததாகவும், அவன் கூறினான்.

 

அரசாங்க வக்கீல்:- என்ன முடிவுக்கு வந்தீர்

ராடெக்:- கட்சியின் மத்தியக் கமிட்டிக்குப் போய் எல்லோருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, ஒரு அறிக்கை கொடுக்கலாமென என முதலாவதாக எண்ணினேன். அதை நான் செய்யவில்லை. நான் இரகசிய இலாகாவிடம் போகவில்லை. ஆனால் அது என்னிடம் வந்தது.

அரசாங்க வக்கீல்:- திறமையான பதில்

ராடெக்:- துக்கமாக பதில்

 

ஜெர்மனிய நாசிகளுடன் கூட சதியாளாகளின் கூட்டாக செயல்பட்டனர். இந்த வகையில் டிராட்ஸ்கிவாதிகள் தமது தரப்பு நபர் என்று பெருமையுடன் கூறி ஒப்புக் கொள்ளும் ஒருவர், சோவியத்தில் இருந்த ஜெர்மனிய தூதரகத்தில் ஒளித்துக் கொண்ட ஒருவரை இன்று நியாயப்படுத்துகின்றனர். ஸ்டாலினுக்கு எதிராக கட்சி வட்டரங்களில் ராபின் ஹூட் என்று அழைக்கப்பட்ட ர்ழநடண சோவியத் ஒன்றியத்திற்கு வந்தவுடனேயே (ஜெர்மனியில் இருந்து) கட்சி அமைப்புடன் மோதலில் ஈடுபட்டார். அவர் தனித் தன்மை வாய்ந்தவர். ஸ்டாலினிச ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். சோவியத் ஒன்றியத்தை விட்டு வெளியே செல்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர் மாஸ்கோவில் உள்ள ஜேர்மன் தூரகத்தை அணுகினார். பாட்டாளி வர்க்கத்தை கவிழ்க்க சதியில் ஈடுபட்டவர்கள் நாசிகளிடமே புகலிடம் பெற்றனர். இப்படியான சதியாளர்கள், ஜந்தாம்படை கைக்கூலிகள் மேலான விசாரணை பற்றி, ஏகாதிபத்தியத் தூதரகங்கள் தமது அரசங்கத்துக்கு என்ன அறிவித்தன என்பதைப் பார்ப்போம். அமெரிக்க தூதர் டேவிஸ் அரசாங்க செயலாளருக்கு 1937 பிப்ரவரி 17 இல் எழுதிய கடிதத்தில் இந்த சதி உண்மையானது என்று அறிவித்தார். அவர் தனது டையரிக் குறிப்பில் மற்றொரு இராஜ தந்திரி, மந்திரி ……… நேற்று மிகத் தெளிவான செய்தியைச் சொன்னார். விசாரணையைப் பற்றி விவாதிக்கையில் பிரதிவாதிகள் குற்றவாளிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. விசாரணையைக் கவனித்த எல்லோரும் அதே முடிவுக்குத் தான் வந்தோம். வழக்கு சோடிக்கப்பட்டதென, பத்திரிகைச் செய்திகளிலிருந்து வெளியுலகம் எண்ணுகிறது. அது அப்படி அல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆனால், வெளியுலகம் அப்படி நினைப்பது ஒருவகையில் நல்லது தான்.” என்று குறிபிட்டுள்ளார். அவரின் கருத்து கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அவதூறுகளைப் பாதுகாக்கும் நோக்கிலானது. அத்துடன் டிராட்ஸ்கிய அவதூறுகளைக் கொண்டு கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவை பாதுகாக்கப்பட்டது.

 

விசாரணை பொய்யாக சோடிக்கப்பட்டு திணிக்கப்பட்டது என்றால், டிராட்ஸ்கியம் வெற்றுவேட்டாகிவிடும். விசாரனையில் கைதானவர்கள் டிராட்ஸ்கிய மற்றும் பல்வேறு குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் அங்கிகாரிக்கின்றனர். அப்படி அவர்கள் தத்தம் கோஷ்டிகளுடன் இருந்தபடி, ஆட்சிக்கவிழ்ப்புக்காக செயல்பட்டவர்கள். அரசியல் ரீதியாக டிராட்ஸ்கியம், புக்காரியம் என அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட இரகசிய கோஷ்டிகளாக மேல் இருந்து செயல்பட்டவர்கள். உள்ளடக்கம் இன்றி விசாரனை நடை பெறவில்லை. உதாரணமாக 1927 இல் சோவியத் விவசாயத்தை எடுத்தால் 12 கோடி விவசாயிகள் இருந்தனர். இதில் ஒரு கோடி பேர் நிலப்பிரபுகளாகவும், 11 கோடி பேர் எழை விவசாயிகளாகவும் இருந்தனர். இந்த ஒரு கோடி பேர் எழை விவசாயிகளை சுரண்டிக் கொழுத்ததுடன், மிக உயர்ந்த வாழ்கைத் தரத்தைக் கொhண்டிருந்தனர். எழை விவசாயிகளின் வாழ்வை உயர்த்த ஒரு தொடர் புரட்சியின் அவசியத்தை கோரியது. இந்த நிலப்பிரபு வர்க்கம் சோவியத் அரசுக்கு எதிராக பொருட்களை விற்பதைக் கூட தடுத்து சந்தையை நெருக்கடிக்குள்ளாக்கி அரசியல் ரீதியாக ஆட்சியை கவிழ்க்கும் நிர்பந்தங்களைக் கூட தொடர்ச்சியாக செய்து வந்தது. தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதை எதிர்த்து வந்த டிராட்ஸ்கி அவர்களின் தற்காப்பை உறுதி செய்யும் கோட்பாட்டை வழங்கி, அவர்களின் ஆதாரவையும் திரட்டிக் கொண்டார். 1929 இல் புதிய பொருளாதார கொள்கை கைவிடப்பட்ட போது, அதை எதிபுத்த புக்காரின் சதியை செய்வதற்கு முன்வந்தான். 1929 இல் புதிய பொருளாதார திட்டம் கைவிடப்படவும், கூட்டுப்பண்ணையாக்கல் உருவாக்கவும் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் எடுத்த முடிவை அடுத்து, புக்காரின் ஸ்டாலினுக்கு எதிரான சதிக்காக 1928 இல் இடதுசாரி எதிர்பாளனராக கமனேவைச் சந்தித்தார். கமனேவ் விட்டுச் சென்ற தனது நாட்குறிப்பில் இது பற்றிய குறிப்பு அடங்கியுள்ளது. புக்காரின் கூறியதாக கூறும் அந்த குறிப்பு அவன் ஒன்றையும் விட்டுவைக்கமாட்டான்…. அவன் நம்மை அழித்துவிடுவான். அவன் தான் புதிய செங்கிஸ்கான்” என்று கூறி, ஸ்டாலின் வர்க்க போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதை எதிர்த்தான். 1928 புக்காரின் பிராவ்தாவில் எழுதிய கட்டரையிலும், 1929 இல் மத்திய குழுவுக்கு வழங்கிய அறிக்கையிலும் கூட்டுப் பண்ணையாக்களை எதிர்த்து நின்றார். வர்க்கப் போராட்டங்கள் தொடர்ந்து இடைவிடாது நடத்தப்படுவதே சோசலிசம் என்பதை மறுத்தார். சோவியத்தின் ஆரம்ப காலத்தில் விவசாயிகளை சலுகை வழங்கி அரவனைத்துச் செல்வது அவசியமாக இருந்தது. இந்த நிலையில் புக்காரின் நிலைப்பாடு சோவியத்துக்கு சார்பானதாக இருந்தது. அந்த வகையில் புக்காரின் 1924 இல் நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும்” என்றார். 1925 இல் புகாரின் நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறு சிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம்” என்றான். அதே நேரம் புகாரின் விவசாயிகளை நோக்கி நீங்கள் உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றுகூறிய போது சரியாக இருந்தது. ஆனால் இது சோசலிசத்தின் இறுதிக் கொள்கையல்ல. புதிய வர்க்க முரண்பாடு அரங்கு வருகின்றது. புகாரின் இதை எதிர்த்து நிற்கின்றார். இதற்காக சோவியத் அமைப்பையே அழித்துவிட முனைகிறார். சோசலிச கட்டுமானத்தில் அவசியமான கூட்டுபண்ணையாக்கலை ஆதாரித்து, அதை எப்படி மெதுவாக விரைவாகவும் அலை அலையாக இணங்கிய வடிவில் நடைமுறைப்படுத்துவது என்ற நடைமுறைக் கொள்கையை ஸ்டாலினுடன் இணைந்து எடுத்து இருப்பின், ஸ்டாலின் விட்ட சில இடது தவறுகளை (ஸ்டாலின் இந்த தவறை பின்னால் ஒப்புக் கொள்கின்றார்) தவிர்த்து இருக்கமுடியும். ஆனால் புக்காரின் இதை எதிர்த்து இரகசிய சதிகளில் ஈடுபட்டார். சோவியத் எதிர்ப்பாளர் அணியுடன் தன்னை இரகசியமாக இணைத்துக் கொண்டார். சதியின் மூலங்கள் சோசலிச சமுதாயத்தில் தொடரும் வர்க்கப் போராட்டத்துடன் இணைந்தே வளர்ச்சி பெற்றது.

 

சதிகள் இணங்காணப்பட்ட நிலையில், விசாரணையையும் கைதுகளையும் கண்டு பயந்த எஞ்சிய சதியாளர்கள் இறுதித் தாக்குதலை நடத்தத் தவறுவது தற்கொலை சமமானது எனக்கருதினர். கிரஸ்டின்ஸ்கி, ரோசென்கோலிட்ஸ், துக்கா செவ்ஸகி, கமார்னின் ஆகியோர் இரகசியமாக கூடினர். 1937 மே 1ம் திகதிக்கு முன் இராணுவ நடவடிக்கையில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டது. எப்படிக் கைப்பற்றுவது என்பது தொடர்பாக பல விவாதங்கள் நடந்தது. அவற்றில் துக்காசெவ்ஸ்கி வகுத்தது தான் சிறந்தது என பிற்காலத்தில் ரோசன்கோல்ட்ஸ் குறிப்பிட்டான். இச் சதி தொடங்கு முன்பே சோவியத் இவர்களை கைது செய்தது. பலர் தண்டனைக்கு உள்ளானர். உலகில் பல புதிய வதந்திகள் பரவின. செஞ்சேனை சோவியத் அரசிற்கு விரோதமாக கிளம்பிவிட்டது”, வரோஷிலோவ் மாஸ்கோ மீது படை எடுத்துச் செல்கிறார்”, சோவியத் ரஷ்யா முழுவதிலும் மக்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்”, சிறந்த தளகர்த்தர்களைச் செஞ்சேனை இழந்துவிட்டதால் அது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.” எனப் பல வதந்திகள் பரவின. இதே நேரம் சோவியத் அமெரிக்கத் தூதர் டேசிஸ் 1937 ஜூலை 4இல் சோவியத் வெளிநாட்டு அமைச்சர் மாக்சிம் விட்வினோவ் சந்தித்தார். அப்போது டேலிஸ் கூறினார். மாஸ்கோ விசாரனை டிராட்ஸ்கிய வாதிகளுக்கும், சில சேனைத் தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.” எனத் தெரிவித்தார். அதற்கு சோவியத் வெளிநாட்டு அமைச்சர் மாக்சிம் விட்வினோவ், துரோகச் செயலிலிருந்து, சோவியத் அரசை நாங்கள் பாதுகாத்தோம் என்ற உண்மையை என்றாவது ஒரு நாள் உலகம் அறியும். நாஜி ஹிட்லரிர் ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, சோவியத் யூனியனை மாபெரும் கோட்டை ஆக்கியிருகிறோம். அதன் மூலம் எங்களுக்குள்ள ஆபத்தைத் தவிர்ப்பது மட்டுமல்ல, நாஜியின் உலக ஆதிக்க வெறியை எதிர்த்துத் தாக்குவதின் மூலம், உலகத்திற்கே சிறந்த தொண்டாற்றுகிறோம்” என்று பதிலளித்தார். டிராட்ஸ்கிய மற்றும் சதியாளர்கள் மீதான நடவடிக்கை, பாசிசத்திற்கு துணைபோன பாசிசத்தை பலப்படுத்தியவர்கள் மீதான தாக்குதலாகவே இருந்தது.

 

ஆனால் முட்டாள் தனமான உணர்வற்ற ஸ்டாலின் மனநோய் தான் களையெடுப்பாகியது” என்று டிராட்ஸ்கிய பத்திரிகை தூற்றுகிறது. இரகசிய சதிக் குழுக்களைக் கட்டியது, இரகசிய பத்திரிகை கூட்டங்களை நடத்தியது, சதிகளை செய்தது, இராணுவம் மூலமான ஆட்சிக் கவிழ்ப்பு வரை திட்டமிடப்பட்டதை டிராட்ஸ்கியமாக காட்டி பெருமை கொள்ளும் இப் பத்திரிகை, அந்த சதியை எதிர்த்து நின்ற ஸ்டாலினுக்கு முட்டாள் தனமான மனநோய் உண்டு என்று தூற்றுகின்றது. சதிக்கு கம்பளம் விரித்து வரவேற்று இருக்க வேண்டும் என்ற சதிகார டிராட்ஸ்கிய கோட்பாடே, தூற்றுலுக்கு அடிப்படையாக உள்ளது.

 

ஸ்டாலின் ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவத்தை பேனுவதில் மிக உயாந்த கட்டம் வரைச் சென்றார். கட்சியில் இருந்தபடி டிராட்ஸ்கியே ஒப்புக் கொள்ளும் 1926, 1927 ஆட்சிக் கவிழ்ப்புகளின் பின் 1927 இல் கட்சியை விட்டே டிராட்ஸ்கி வெளியேற்றப்பட்டாரே ஒழிய கொல்லப்படவில்லை. அவர் வேறு ஒரு இடத்தில் தங்கவிடப்பட்டார். அங்கிருந்து அவர் சதிகளை திட்டிய நிலையில் 1928 இல் இதை நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டார். இதை பெருமையாக டிராட்ஸ்கி தனது நூலில் ஒப்புக் கொள்கின்றார். ஆனால் டிராட்ஸ்கி தொடர்ந்தும் சதியில் ஈடுபட்டார். இதையடுத்து 1929 இல் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் கைது செய்யவில்லை. வெளிநாட்டில் இருந்து அவர் தொடர்ந்தும் சதியில் ஈடுபட்ட நிலையில், 1932 இல் சோவியத் குடியுரிமை பறிக்கப்பட்டது. உண்மையில் கட்சி விரோத நடவடிக்கை, தண்டைக்குரிய குற்றங்களை செய்த போதும் திருந்துவதற்காக இயன்றவரை சலுகை வழங்கப்பட்டது. காமெனவ்வை எடுத்தால் 1927 இல் கட்சி விரோத செயலுக்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் தவறை உணர்ந்த நிலையில், கட்சியில் சேர்க்கப்பட்டார். பின் மீண்டும் கட்சி விரோத செயலுக்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீளவும் சேர்க்கப்பட்டார். தொடர்ந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு விரோதமான சக்திகளுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் கூறும் போது வாழ விரும்பம் ஒரு கட்சி, தன்னுடைய வாழ்வு பற்றிய கேள்வியில் எள்ளளவும் ஊசாலாட்டத்தையோ, தன்னைக் குழி தோண்டிப் புதைக்க நினைப்பவர்களுடன் சமரசம் செய்த கொள்வதையோ அனுமதிக்க கூடாது” என்றார். இறுதியாகவே கட்சி விரோத நடவடிக்கைக்காக 1936 இல் தண்டனைக்குள்ளானார்கள். இப்படி பல தலைவர்கள் கட்சி விரோத நடவடிக்கைகாக வெளியேற்றப்பட்டு மீள இணைத்தும், பின் மீள வெளியேற்றப்பட்டு மீள இணைத்த பின், கட்சி விரோத சதிக்காக 1936 இல்  தண்டிக்கப்ட்டவர்களின் முந்திய வரலாற்றில் நாம் காணமுடியும். திருந்தியவர்கள் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர். இன்று சதிகளை தாம் செய்ததை பெருமையாக ஒப்புக் கொள்ளும் டிராட்ஸ்கியம், இதற்காக பலமுறை பாட்டாளி வர்க்கம் வழங்கிய சலுகைகளை துஷ்பிரயோகம் செய்தது. ஸ்டாலின் தலைமையிலான கட்சி திடீரென தண்டைகளை வழங்கிவிடவில்லை. கட்சி விரோதச் செயலில் ஈடுபட்டவர்கள் திருந்தவும், சரியான பாதைக்கு வரவும், சதிகளை கைவிட்ட ஜனநாயக மத்தியத்துவதை பேணவும் தொடர்ச்சியாக சந்தர்ப்பத்தை கட்சி வழங்கியது. ஆனால் இந்த சதியாளர்கள் இதை மீள மீள துஸ்பிரயோகம் செய்தனர். ஒரு சதிக் கும்பலாக வளர்ந்ததுடன், ஆட்சியை கவிழ்கவே திட்டமிட்டது. அது ஒரு எகாதிபத்திய ஆக்கிரமிப்புடன் ஒருங்கினைந்த போதே, கடும் தண்டனை வழங்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறியவும் முயன்ற நிலையில், நாடு கடத்தப்பட்ட சதியாளரான டிராட்ஸ்கி மற்றும் பலருடன் தொடர்புகளை பேனி சதிகளை தீட்டினர்.

 

பாட்டாளி வர்க்கம் திருந்த வழங்கிய சந்தர்ப்பத்தை தூற்றும் டிராட்ஸ்கியம்; “… கீழ் மட்ட அணிக்குள் விமர்சனம் செய்பவர்கள் வர்க்க எதிரியின் புறநிலையான எஜண்டுகள் என வெளியேற்றப்பட்டனர். மற்றும் சிலர் பிராயச்சித்த சடங்குகளில் ஒழுங்கு படுத்தப்பட்டனர்…. அல்லது பல நாள் விவாதத்தின் போக்கில் தண்டனை அளிக்கப்பட்டு மீண்டும் சரியான வழிக்கு கொண்டு வரப்பட்டனர்” என்று கூறி, இதை தவறானது என்கின்றனர். தமது சதிகள், திட்டமிட்ட பயங்கரவாத நடடிவக்கைகள் சரியானவை என்கின்றனர். கீழ்மட்ட அணிகள் திருந்த சந்தர்ப்பம் வழங்குவது மார்க்சியமல்ல என்கின்றனர். ஸ்டாலினிசத்தின் அடிப்படை சிறப்பியல்பு என்னவென்றால் அந்த அடக்குமுறை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், அதிகாரிகள் முதலியவர்களுக்கு எதிராக வழிநடத்தப்பட்டது.” என்று கூறி, இதை அவதூறாக்கி தூற்ற முனைகின்றனர். வர்க்கப் போராட்டம் இடைவிடாது தொடரும் வரை, இது என்றைக்கும் அப்படித்தான் இருக்கும். லெனினும் அப்படித்தான் வரையறுக்கின்றார். லெனின் நவீன திரிபுவாதம் பற்றி குறிப்பிடும் போது தொழிலாளர் இயக்கத்தின் தலைமையிலுள்ள மிகச் சிறிய ஒரு பகுதி தான்” பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக தன்னை புனராமைக்கின்றது. புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் இதை எதிர்த்து போராடுவதையே, டிராட்ஸ்கியம் தனிநாட்டு சோசலிசம் என்கின்றது. மாவோ பாட்டாளி வர்க்க அமைப்பில் எதிரி எங்கே உள்ளான் என்ற கேள்விக்கு, தற்போதைய இயக்கத்தின் பிரதான தாக்குதல் இலக்கு முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் அதிகாரத்திலுள்ள கட்சி நபர்களாகும்” என்றார். இதைத் தான் ஸ்டாலினும் செய்தார். மாவோ 1962 இல் சொன்னார் நாம் சோசலிசக் கல்வியை நடத்த வேண்டும். வர்க்க முரண்பாடுகளையும் வர்க்கப் போராட்டத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு கையாள வேண்டும். நமக்கும் எதிரிக்கும் இடையிலான முரண்பாட்டை மக்கள் மத்தியிலான முரண்பாட்டிலிருந்து வேறுபடுத்தி அவற்றைச் சரியாகக் கையாள வேண்டும். இல்லையானல் நம்முடையயதைப் போன்ற ஒரு சோசலிச நாடு அதன் எதிரிடையானதாக மாறும், சீராழியும், ஒரு முதலாளித்துவ மீட்சி நடந்தேறிவிடும். இப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இதை மனதில் இருத்திக் கொண்டு இந்தப் பிரச்சனையை மேலோட்டமாகக் கருதாது மார்க்சிய-லெனினியப் பாதையைப் பற்றி நிற்க வேண்டும்” என்றார். ஒரு முதலாளித்துவ மீட்சியின் போக்கில் இரண்டு வெவ்வேறு கூறுகளை சரியாக அடையாளம் காண வேண்டியதை சுட்டிக் காட்டுகின்றார். அதில் இருந்தே எதிரியை பிரித்தறிந்து தண்டனைக்குள்ளாக்க வேண்டியதைச் சுட்டிக் காட்டுகின்றார். சோவியத்தில் எதிரி மக்களாகவோ, மக்கள் மத்தியிலான முரண்பாட்டில் இருந்து அடையாளம் காணப்படவில்லை. இரகசிய குழுக்களையும் அதன் தலைவர்களையுமே குறிவைக்கப்பட்டது.

 

சோவியத்தில் இரகசிமான சதிக் கும்பலின் வலைப் பின்னால் அம்பலமான நிலையைலேயே ஒரு விசாரனைக்கு சோவியத்தை உந்தித் தள்ளியது. இந்த களையெடுப்பில் எல்லையற்ற இரகசிய சதிக் குழுக்களாக இருந்தால், இந்த சதி மேல் இருந்து திட்மிடப்பட்டதால் இந்த விசாரனை எதிரி நன்பர்களை பிரித்தறிவது கடுமையாகியது. சதிக் குழுக்கள் அம்பலமாகி வந்த நிலையில் சதியை வேறுபடுத்தி பார்க்கும் ஒரு  நடைமுறை சார்ந்த கீழ் இருந்து பிரிதறியும் முறை கண்டறியப்படவில்லை. மேல் இருந்து நடந்த களையெடுப்பாக இருந்தால், தவறுகள் இழைக்கப்பட்டன. நட்பு ரீதியான கருத்து முரண்பாட்டுக்கும் சதிக் கும்பலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இனம் காணும், அரசியல் வழிமுறை இன்றிய நிலை உருவானது. அத்துடன் திருந்தக் கூடிய, மற்றும் மேல் மட்ட கீழ்மட்ட உறுப்பினர்களை வேறுபடுத்தி அறியும் வழிவகையை எப்படிக் கையாள்வது என்ற வழிமுறை இன்றி விசாரனைகள் பொதுவாக நடந்தன. இதனாலும் முன் அனுபவமற்ற ஒரு சமூக வடிவமாக இருந்தாலும் பல தவறுகள் இழைக்கப்பட்டன. மாவோ சொந்த நாட்டில் இதை எதிர் கொண்ட போது கடந்த காலத்தில் கிராமப்புறப் பகுதிகளில், தொழிற்சாலைகளில், கலாச்சார அரங்குகளில் போராட்டங்களைத் தொடுத்தோம், சோசலிசக் கல்வி இயக்கத்தை நடத்தினோம். ஆனால் இவையனைத்தும் பிரச்சனைகளை தீர்க்கத் தவறின ஏனெனில் இருண்ட அம்சத்தை வெளிப்படையாகவும், அணைத்து தழுவிய வகையிலும் கீழிலிருந்து அம்பலப்படுத்தி பரந்துபட்ட மக்களைத் தட்டியெழுப்புவதற்கான ஒரு வடிவத்தை, ஒரு வழிமுறையை நாம் காணவில்லை” என்றார். மாவோ இதை கீழ் இருந்து முதலாளித்துவ மீட்சியை தடுக்கும் வழிவகையையும், எதிரியை தனிமைப்படுத்தி அழிக்கும் யுத்த தந்திரத்தை கண்டறிந்தார். மக்கள் கீழ் இருந்து நடத்தும் இடைவிடாத (கலாச்சாரப்) புரட்சி, எதிரிக்கு பலமான அடி கொடுத்தது. ஆனால் சோவியத்தில் முக்கியமான சதியாளர்கள் மீதான விசாரனை, சோவியத் சட்ட திட்டத்துக்கு இணங்க பகிரங்கமாக நடந்தது. மறுதளத்தில் சதியாளர்களை வேறுபடுத்தி அறியும் வழிமுறை இன்மையால், சோவியத் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டவகையில் ஒரு பகுதி தண்டனை வழங்கப்படவில்லை. இதனால் தவறுகள் இயல்பாகி சிலர் தவறுதலாக தண்டனைக்குள்ளானர்கள். இதை 1939 இல் ஸ்டாலின் ஒப்புக் கொண்டார். அதற்கு முன்பே தொடர்ச்சியாக இந்த விசாரனைப் போக்கை தடுத்து நிறுத்தியிருந்தார். தவறு இழைத்தவர்களை திருந்துவதற்கான அனைத்து முயற்சியையும், கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்தியே இந்த சதி நடந்தது. இது எந்த நாட்டிலும் இந்தளவு விரிவாக அனுமதிக்கப்படவில்லை. அரசிலும் கட்சியிலும் இருந்தபடி வெளிநாடுகள் வரை சென்று சதி செய்யும் உரிமையை சோவித்துக்கு வெளியில் யாரும் அனுமதித்ததில்லை. உண்மையில் முன் அனுபவமற்ற நிலையில் இதை எதிர்கொண்ட போது, எதிரியின் மூர்க்கத்தனமான சதிகளின் பின்னனியில் உருவான சில தவறுகளே இவை. ஸ்டாலின் தவறுகள் வரலாற்றுப் படிப்பினையாக மட்டுமே எடுக்கப்படவேண்டும். 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20