Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சைட்டத்தைத் தோற்கடித்த சமூக அரசியல் விஞ்ஞானமும், அதன் எதிர்காலமும்

போராடினால் உலகையே புரட்ட முடியும். இதுதான் மக்கள் சக்தியின் வலிமை. நவதாராளவாத தனியார்மயம் பெத்துப் போட்ட சைட்டத்தை, மாணவர்களும் - மக்களும் ஒன்றுகூடி தூக்கில் போட்டு இருக்கின்றனர்.

நவம்பர் புரட்சியின் 100வது வருடம் கொண்டாடப்படும் நாட்களிலே, அதை மாணவர்களும் - மக்களும் நடைமுறையில் சாதித்துக் காட்டி இருக்கின்றனர். ஆம் 1917 நவம்பர் புரட்சி அனுபவங்களை, மீளவும் செயல் வடிவமாக்கி இருக்கின்றனர். கடந்த 8 வருடங்களாக, வீரமிக்க, எழுச்சிகரமான, விட்டுக்கொடுப்பற்ற தொடர் போராட்டங்களை நடத்தி, இன்று வென்று இருக்கின்றனர்.

மர்மக் கொலை, கொலை மிரட்டல்கள், வன்முறைகள், ஊடக அவதூறுகள்.. என்று எதற்கும் அஞ்சாது, 100 வருடங்களுக்கு முன் போல்சவிக்குகள் போராடியது போல் வரலாற்றை மீள எழுதிக் காட்டி இருக்கின்றனர். காலில் இருந்த செருப்புகளை கூட விட்டுவிடாத அளவுக்கு, அரச பயங்கரவாத வன்முறை தொடர்ந்து தலைவிரித்தாடிய சூழலில், இந்தப் போராட்டம் ரணகளமாகியுள்ளது. போராடியவர்கள் ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகளே. அரைப் பட்டினியாக வகுப்பறைக் கல்வியைத் துறந்து, சமூகமாகக் கூடி வாழ்வதற்கான வாழ்வியல் கல்வியை போராட்டக்களங்களில் சுயமாகக் கற்றுக் கொண்டார்கள். எதிர்கால தலைமுறைக்கு சமூகமாகக் கூடி வாழ்வது எப்படி என்ற புரட்சிகர நடைமுறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சமூகத்தின் வழிகாட்டியாக - முன்னோடிகளாக தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

தேர்தல் ஜனநாயக ஆட்சி மாற்றங்கள் மூலம் சைட்டம் போராட்டம் தீர்வு காண முடியாது இருந்த போது, மக்கள் தங்கள் சொந்த நடைமுறைகள் மூலம் இன்று தீர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். தனியுடமை முறைமையைப் பாதுகாக்கும் அரச இயந்திரத்தின் புரட்டு  பிரச்சாரங்கள் மூலம், போராட்டத்தை தோற்கடிக்க முடியவில்லை. முதலாளித்துவ புல்லுருவிகளான அறிவுஜீவிகளின் புலமை சார்ந்த அறிவு மூலம், மக்களைத் திசைதிருப்ப முடியவில்லை. இந்தப் போராட்டத்தின் இறுதியில், முதலாளித்துவம் தோற்றுப் போய் தன்னை நிர்வாணமாக்கிக் கொண்டு நிற்கின்றது.  

அதிகாரத்தையும், பணப் பலத்தையும் கொண்ட பலமான முதலாளித்துவத்தை "போராடினாலும் வெல்ல முடியாது" என்ற முதலாளித்துவச் சிந்தனைமுறையை, மாணவர்களும் - மக்களும் போராடியே தகர்த்துக் காட்டி இருக்கின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரி மூடுவிழா என்பது, தனியார் கல்வி முறைமைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கப் புள்ளி. உலகளவிலான தனியார் கல்வி முறைமைக்கு எதிரான, தீக்குச்சியாக இலங்கை மாணவர்கள் மாறி நிற்கின்றனர்.

கல்வியை வியாபாhரப் பொருளாக்கி மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் முதலாளித்துவ நவதாராளவாத உலகமயமாக்கல் நடைமுறைக்கு எதிரான வெற்றியே இது. விடாப்பிடியான நீண்ட பல போராட்டம், முகமாற்ற ஆட்சிமாற்றம் மூலம் உருவான நவதாராளவாத  "நல்லாட்சின்" முகமூடியைக் கிழித்தெறிந்து இருக்கின்றது. அனைவருக்குமான இலவசக் கல்வி என்ற அடிப்படை மனித உரிமைக்கான போராட்டமாக, இந்தப் போராட்டத்தின் வெற்றி இன்று பரிணாமம் அடைந்திருக்கின்றது.

மாணவர்கள் என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து, பொதுமக்களை தன்னுடன் ஒன்றிணைத்துக் கொண்டு போராடுவதன் மூலமே, எதையும் வெற்றிபெற முடியும் என்பதை நிறுவிக்காட்டி இருக்கின்றது. எப்படிப் போராட வேண்டும் என்பதை, உலகுக்கு முன்மாதிரியாக்கி இருக்கின்றது.

இடதுசாரிய குறுங்குழுவாதங்களை தகர்க்கும் வண்ணம், போராட்டம் அனைவரையும்  உள்வாங்கிக் கொண்டது. ஒன்றிணைந்த புரட்சிகர நடைமுறைகள் மூலம், புதிய புரட்சிகர நடத்தைக்கு இந்தப் போராட்டத்தின் வெற்றி வித்திட்டு இருக்கின்றது. நடைமுறையில் முன்னின்று போராடும் சக்திகளை அனைவரையும் உள்வாங்கிக் கொண்ட போராட்டம், எதிர்காலத்தில் மக்களுக்கு தலைமை தாங்கும் இடதுசாரி முன்னணிக்கு, அரசியல்ரீதியாக வித்திட்டு இருக்கின்றது.

உலக முதலாளித்துவ நவதாராளவாதம் எவ்வளவு தான் பலமானதாக இருந்தாலும், மக்கள் போராடும் போது தூள்தூளாகும் என்ற வரலாற்றுப் பாடத்தை, இந்தப் போராட்டம் மீள பறை சாற்றி நிற்கின்றது.

போராட்டத்தை வாழ்வாகக் கொண்ட மனித வரலாற்றின் அடிப்படை வாழ்வியலை மீள எதார்த்தமாக்கியது. இதன் மூலம் போராடும் வாழ்வியல் முறையை மனித வாழ்வியலாக கொள்ளுமாறு, சைட்டம் முன்னிறுத்திய அரசியல் அறைகூவல் விடுத்திருக்கின்றது.