Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

"ஹர்த்தாலை" நடத்துபவர்களின் நோக்கமென்ன?

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான போராட்டத்துக்கு என்ன நடந்தது? திடீரென போராட்டங்கள் கைவிடப்பட்டது ஏன்? இதன் பின்னான அரசியல் என்ன? 

2009 இல் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நடந்தது என்னவோ, அதுதான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடந்தது. இந்த பின்னணியை விளங்கிக் கொள்வதும், எதிர்வினையாற்றுவதுமே மக்கள் அரசியல். 

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் உணர்ச்சியற்ற "ஹர்த்தால்கள்",மீளவும் போராட்ட வடிவமாக அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றது. "எழுக தமிழ்" என்ற பெயரில் தமிழினவாதக் ஹர்த்தாலையும்,அதைத் தொடர்ந்த பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தன்னெழுச்சியான போராட்டங்களை முடக்க ஹர்த்தாலையும் நடத்தி இருக்கின்றனர்.

இப்படி ஹர்த்தாலை நடத்தும் பின்னணியானது மனித விரோதத்தன்மை கொண்டது. மக்கள் தங்கள் கடந்தகால அச்ச உணர்வுடன் வீடுகளில் அடங்கிப் போகும் பொது மனநிலையையும், "துரோகம்" என்ற முத்திரைக்கும் வன்முறைக்கும் அஞ்சிய வியாபாரிகளின் மனநிலையை மூலதனமாகக் கொண்டும், ஹர்த்தாலை நடத்தி இருக்கின்றனர். இப்படி நடந்த ஹர்த்தாலானது "தமிழ் தேசியத்தின்" பொது மனநிலையாகவும், தங்கள் தனிப்பட்ட  அரசியல் வெற்றியாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். மக்களின் உணர்ச்சி வடிய, மாணவர் போராட்டங்கள் காணாமல் போனது. 

ஹர்த்தாலை அறிவித்தவர்களின் அரசியல் மற்றும் நடைமுறையானது, தமிழ் மக்களை ஏமாற்ற "தமிழ் தேசியத்தை" உணர்ச்சிகரமாக உச்சரிக்கின்றவர்கள் என ஆகியிருக்கின்றது. அரசியல்ரீதியாக, அரசியல் அனாதைகள். உட்கட்சி ஜனநாயகமற்ற கூட்டமைப்பினால்; கழித்துக் கட்டப்பட்டவர்கள் இவர்கள். உணர்ச்சி அரசியல் மூலம் கூட்டமைப்பில் தமக்கொரு இடத்தைக் கோருபவர்கள். கூட்டமைப்பில் இருக்கின்ற அதேநேரம், தமக்கான இடத்தைக் கோரி அதிருப்தியுற்றவர்கள். 

இப்படிப்பட்டவர்கள் கூட்டமைப்பின் முந்தைய அரசியல் பித்தலாட்டங்களை கொப்பி அடித்துக் கொண்டு, தமக்கான இடத்தை கூட்டமைப்பில் பெறுவதவற்காகவே ஹர்த்தாலை நடத்தினர். இப்படித்தங்கள் தனிப்பட்ட சுயநலனை அடைவதற்காக, கூட்டமைப்புக்கு எதிரான பொது அதிருப்;தியை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம் மக்களில் இருந்து எழும் சுயமான செயற்பாடுகளை நலமடித்து விடுகின்றனர்.  

ஹர்த்தால், ஆயுதப் போராட்டம், அகிம்சை வழிகள், பாராளுமன்ற அரசியல் என்று எது போராட்ட வடிவமாக இருந்தாலும்,அது ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுகின்ற வரை தான் சரியானது. இல்லாதவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான "போராட்ட" வடிவமாகிவிடும். உயிர்த்தியாகங்களுடன் கூடிய 25 வருட ஆயுதப் போராட்டமானது, எப்படி மக்களுக்கு எதிரானதாக இருந்ததோ அதேபோன்ற ஒன்றுதான் ஹர்த்தால்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்காகத் தாம் போராடுவதற்கே, போராட்டங்களும் போராட்ட வடிவங்களும் என்பதை மறுக்கும் எல்லா போராட்டங்களும்அடிப்படையில் மக்களுக்கு எதிரானது. இந்த வகையில் அண்மைய ஹர்த்தால்களும் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்பட்டது.  

இந்தவகையில் தமிழ் அரசியல் தலைமைகளின் "போராட்ட" வடிவங்கள்; என்பது, தேர்தலில் மக்களை வாக்குப் போட வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டது. அதாவது தங்களது தேர்தல் அரசியலுக்காக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கானது. இதற்காகவே மீண்டும் ஹர்த்தாலை மக்கள் மேல் திணித்து வருகின்றனர். 

1980 முன்பான 30 வருடங்களாக தேர்தல் அரசியலைச் செய்த தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் பிரச்சனையை தீர்க்க அகிம்சை வழியில் போராடுவதாக கூறிக் கொண்டனர். காலத்துக்கு காலம் முன்வைத்த ஹர்த்தால்கள், சத்தியாக்கிரகங்கள் என்று அனைத்தும், மக்களை தமக்கு வாக்களிக்க வைப்பதாகவே இருந்தது. 2009 பின்பாக இதை மீள ஆரம்பித்து இருக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் தாங்கள் வெல்வதன் மூலம், "அகிம்சை"வடிவ தீர்வு என்று தமிழ் மக்களை காலாகாலமாக ஏமாற்றி வந்த ஓரு பின்னணியில் தான் அதை நிராகரித்து ஆயுதப் போராட்டம் தோன்றியது. 1970 களின் பின்னானதும், 1980 கள் முதல் இளைஞர்கள் தம்மை ஏமாற்றிய தேர்தல் முறையிலான அகிம்சை வடிவத்தை நிராகரித்தனர். மாறாக ஆயுதப் போராட்டத்தை தீர்வாக முன்வைத்ததுடன், அடுத்த 30 வருட காலமாக ஆயுதப் போராட்டத்தை நடத்தினர். போராட்ட வடிவம் மாறி வந்த காலமான 1980க்கு முன்னும் பின்னுமாக, ஆயுதங்கள் மூலம் ஹர்த்தால்களை நடத்தினர். 

ஆயுதப் போராட்டத்தை நடத்தத் தொடங்கிய இயக்கங்கள், தொடர்ந்து மக்களை தம் பின் மந்தையாக வைத்திருக்கவே தொடர்ந்து ஹர்த்தாலை தேர்ந்தெடுத்தனர். இந்த வகையில் 1970, 1980 களில் ஹர்த்தாலை அறிவித்து, அரசு பஸ்களுக்கு கல் எறிவது, கொழுத்தி விடுவதன் மூலம் ஹர்த்தாலை நடத்தத் தொடங்கினர். இதுதான் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக பரிணமித்து. இவை ஒரு நீட்சியின் வெவ்வேறான பக்கங்கள்.

போராட்டம் என்பது மக்களை அணிதிரட்டுவதும், மக்களின் பங்களிப்புடன் கூடியதே போராட்டம். மக்களின் நடைமுறை தான் அரசியல் என்பதை, அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்ட வடிவங்கள் நிராகரித்தது. மக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வதையும், திரட்டுவதையும் தடுக்கும் வண்ணம், போராட்ட வடிவங்கள் திரிபுபடுத்தப்பட்டது. 

மக்களை தமக்கு பின் மந்தைகளாக மாற்றுவதற்கும், வைத்திருப்பதற்கும் ஹர்த்தாலை போராட்ட வடிவமாக தேர்ந்தெடுத்தனர், தேர்தெடுக்கின்றனர்.மக்கள் போராடுவதற்கு பதில் வீடுகளில் முடக்கி பொழுதுபோக்குவதையே, போராட்டமாக முன்வைக்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னனியில் தன்னியல்பாக எழுந்த மாணவர் போராட்டங்களும்,பொது மக்கள் மத்தியிலான கோப உணர்ச்சியும், திடீரென காணாமல் போகவைக்கப்பட்டது.  

மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டமும், மக்களின் உணர்ச்சியும் தமிழ் தலைமைகளுக்கு வெளியிலான போராட்டமாக பரிணமித்தது. போராட்டங்கள் மூலம் புதிய போராட்ட தலைமைகள் உருவாகுவதற்கான நிலைமை உருவானது. இந்தச் சூழலைத் தடுத்து நிறுத்த, ஹர்த்தாலும், பல்கலைக்கழகத்தை "முற்றாக முடக்கும "போராட்டம் அறிவிக்கப்பட்டு, போராட்டமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

குறிப்பாக யாழ் பல்கலைக்கழக் மாணவர்கள் போராட்டமானது பிற பல்கலைக்கழக மாணவர்கள் உடன் இணைந்த போராட்டமாக மாறிவந்த நிலைமையைத் தடுக்க தமிழ் தலைமைகள் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக ரீதியானதும் அரசியல் சார்ந்த அனைத்துச் செயற்பாட்டையும் முடக்கும் போராட்டத்தை அறிவித்தன. இதன் மூலம் போராட்டத்தை முடக்கினர்.  வீறு கொண்டு எழுந்த போராட்ட உணர்வுகள், 2009 போல் திடீரென காணாமல் போனது. காணாமல் போக வைக்கப்பட்டது. 

சமூகம் தனக்காகத் தான் போராடக் கூடாது என்பதே, தமிழ் இனவாதத்தை முன்வைக்கும் தமிழ் தலைமைகளின் கொள்கை. மக்கள் புதிய போராட்ட வடிவங்களையும், புதிய தலைமைகளையும், தங்கள் அனுபவங்கள் மூலம் வந்தடையக் கூடாது என்பதும், பிற மொழி மாணவர்களுடன் இணைந்து விடக் கூடாது என்பதுமே தமிழ் தலைமைகளின் தேர்தல் அரசியலாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மக்கள் விரோத அரசியலை முறியடிக்காமல், இன ரீதியான ஒடுக்குமுறையை வெல்ல முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் தோற்றுப் போகும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றது.