Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்துத்துவமாகும் "கலாச்சாரம்" சாதியாக அறுவடையாகின்றது!

C.V. Wigneswaran at World Hindu Conference

C.V. Wigneswaran at World Hindu Conference

1980களில் ஒடுக்கப்பட்ட இனத்தின் தேசிய விடுதலை போராட்டமானது, 1985களில் இனவாதமாக குறுகியது. 2009 இல் இனவாத ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின், எஞ்சிய இனவாதம் இந்துத்துவமாக சீரழிந்ததன் மூலம் சாதியமாக வெளிப்படத் தொடங்கி இருக்கின்றது. சாதிக்கொரு கோயில்கள் ஊருக்கு ஊர் கட்டப்படுவது முதல் சாதி இந்துக்கள் கோரும் புனிதம் வரை, வாழ்க்கையில் சாதியே முதன்மையான சிந்தனையாகவும், செயலாகவும் மாறிவருகின்றது.

யாழ் மையவாதமாக இருக்கும் இந்துத்துவ சாதியமானது, வீரியம் பெற்ற சமூக கூறாக வெளிப்படத் தொடங்கி இருக்கின்றது. தேசியம், இனம், தமிழ் என்று கடந்தகாலத்தில் பொது அடையாளங்களை கொண்டு இயங்கிய சமூக அமைப்பு முறை, இந்துத்துவமாக மாறி சாதியத்தினை முன் உயர்த்தி வருகின்றது. சாதிய முரண்பாடுகள் சமூக முரண்பாடாக மாறி, முதன்மையாகி வருகின்றது.

கடந்த காலத்தில் தமிழ் தேசியமானது சாதி இந்துக்களின் இந்துத்துவ வாழ்க்கை முறையை முதன்மையானதாக முன்னிறுத்த அனுமதிக்கவில்லை. சாதி இந்துத்துவத்தின் வாழ்க்கை முறையானது, தமிழ் தேசிய ஓன்றிணைவுக்கு தடையாக இருந்ததால், இந்துத்துவம் தமிழ் மக்களின் பொது வாழ்க்கை முறையாக முதன்மை பெறுவது கடந்த காலத்தில் தடுக்கப்பட்டது.

இதன் மூலம் கிறிஸ்துவ மக்களினதும், இந்து மதத்தை பின்பற்றிய பிற ஒடுக்கப்பட்ட சாதிகளினதும் கலாச்சார சமூக வாழ்வியலை முரணாக்குவதை தடுத்தது. அக்கம்பக்கமாக எல்லாப் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளும் இயங்கும் வண்ணம், சாதி இந்துக்களின் சாதிய இந்துத்துவத்தினை உறைநிலைக்குள் வைத்திருக்கும் வகையினை யாழ் மேலாதிக்கம் தக்கவமைத்திருந்தது.

யுத்தத்தின் பின், உறைநிலையில் இருந்த சாதியம் விடுபட்டு சாதி இந்துக்களின் இந்துத்துவமானது, "கலாச்சாரம்" அடையாளம் தாங்கி சாதியாக மேலெழுந்து வருகின்றது.

"கலாச்சராம்" என்பது என்ன?

அண்மைக் காலமாக வடக்கில் "கலாச்சாரம்" குறித்து அதிகம் பேசப்படுகின்றது. "கலாச்சாரத்தைப்" பேணுதலும், பாதுகாத்தலுமே தமிழனின் வாழ்வியலாக முன்வைக்கப்படுகின்றது. தமிழனின் சாதிக் கலாச்சாரத்தை மீள வீரியமாக்குவதே, தமிழனின் அரசியலாக மாறி வருகின்றது.

இதுவரை காலமும் தமிழ் இனவாதத்தை முன்வைத்த அரசியல் தலைமைகள் தான், இன்று "கலாச்சாரதத்தை" முனைப்புடன் முன்னிறுத்தத் தொடங்கியுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், முன்வைத்துள்ள மூன்று பிரேரணைகளில் ஒன்று, "கலாச்சாரத்தை" வீரியமாக்குவதைப் பற்றியது.

போராட்டத்தில் தோற்றுப்போன ஆனால் அரசியல் ரீதியாக தோற்காத தமிழ் இனவாத அரசியல் "கலாச்சார" வடிவம் பெற்று வருகின்றது. சமூக ஆதிக்கம் பெற்ற இந்த "கலாச்சார" அரசியலின் சாரமென்ன? "கலாச்சாரம்" என்பது வாழ்க்கை முறை. வாழ்க்கை என்கின்ற போது சடங்குகள், சம்பிரதாயங்கள்.. தொடங்கி சமூக விழுமியங்கள் வரை அதற்குள் அடங்கும். சடங்குகள் சம்பிரதாயங்கள்.. சாதியை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றது. அதாவது "தமிழர்" சாதிய சமூகமாக இருப்பதுடன், பிறப்பிலேயே "தமிழன்" சாதியில் தான் பிறக்கின்றான். சாதிய அடிப்படையில் வழிபாட்டு முறையைக் கொண்டவர்கள். தமிழர் அனைவருக்குமான சாதி கடந்த பொது வழிபாட்டு முறையையோ, வாழ்க்கையையோ கொண்டு இருப்பது கிடையாது. சாதிக்கொரு வழிபாடும், வாழ்க்கை முறையும் தான் இருக்கின்றது. திருமணங்கள் சாதியத்துக்குள் நடக்கின்றது. ஆக இப்படி வேறுபட்ட வாழ்க்கை முறையும், அதன்படி ஒழுகுவதுமே தமிழன் முன்வைக்கும் "கலாச்சாரம்". இங்கு கலாச்சாரம் சாதிக்கொரு கலாச்சாரமும், சாதி இந்துகள் முன்வைக்கும் சாதியக் கலாச்சார வாழ்வியல் ஒழுங்கை பேணுவதையே தமிழ் கலாச்சாரம் என்கின்றனர். இந்த வகையில் இதை முன்னிறுத்தும் இந்து மதமே, சாதிய மதமாக இயங்குகின்றது.

இந்து மதமே சாதியம் தான். இந்து மதத்தில் பிறக்கும் போது, சாதி அடையாளத்தை இட்டு விடுகின்றது. வளர்ப்பு முறை தொடங்கி வாழ்க்கை முறை வரை, அனைத்தும் சாதியாக இருக்கின்றது.

இந்த வகையில் இந்து சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட, யாழ் மேலாதிக்கச் சமூகமாக தமிழ் சமூகம் இருக்கின்றது. சாதியத்தின் இறுக்கமான அமைப்பு முறையை பேணுகின்ற தரப்பு, மேலாதிக்கம் கொண்ட சமூக அடுக்காக இருக்கின்றது. இங்கு சாதிய யாழ் மேலாதிக்கச் சமூகம் என்கின்ற போது, வெள்ளாளிய சிந்தனை முறையாகவும், அதை பிரதிநிதித்துவப்படுத்தும் வெள்ளாளிய சாதிய இந்துக்களையும் குறிக்கின்றது. சாதிய வெள்ளாளியமும், இந்துத்துவமும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றது. இதில் ஒன்றைக் கைவிடுவதன் மூலம், மற்றதை துறப்பதில்லை.

இந்துகளாக இருக்கக் கூடிய மீனவர்கள், கூலி விவசாயிகள், சலவை தொழிலைச் செய்கின்றவர்கள், முடி திருத்தும் கலைஞர்கள், பறையடிக்கும் தொழிலை செய்பவர்கள், குயவர்கள், கள் இறக்கும் தொழிலாளர்கள்… என்று சமூகத்தில் வெவ்வேறு தொழிலைச் செய்கின்ற, சாதிகளின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகங்களை தமக்கு கீழானவர்களாக சாதிய இந்துத்துவம் வைத்திருக்கின்றது. இந்துக்கள் எல்லாம் சமமான இந்துக்கள் அல்ல. மாறாக சமமற்றதாக, சாதியம் வரையறுக்கின்றது. இதில் சாதி "வெள்ளாளியம்", பெரும்பான்மை வெள்ளாளியத்தையும் தனக்கு கீழ் வைத்திருக்கின்றது.

மாட்டை உண்ணுகின்ற இந்துக்களையும், மாமிசம் உண்ணுகின்ற பெரும்பான்மையான தமிழர்களையும், தனக்கு கீழாக இழிவான சமூகமாக சாதிய வெள்ளாளியம் தாழ்த்தி வைத்திருக்கின்றது. "தீட்டு", "புனிதம்".. போன்ற சாதி இந்துக்களின் வாழ்க்கை நடைமுறைகளை இந்துத்துவமாக முன்னிறுத்தி, இதன்படி ஒழுகும் தம்மை சாதி இந்துக்களாக புனிதப்படுத்தி, இப்படி ஒழுகுவதை தமிழன் "கலாச்சாரமாகவும்" வரையறுத்துக் காட்டுகின்றனர்.

பெண்களின் மாதவிடாயைத் "தீட்டாகவும்", இந்து சடங்குளை செய்ய முடியாத வகையில் பிறப்பிலேயே பெண் குறைபாடு கொண்டவளாக இந்துமதம் கருதுவதுடன், ஆணுக்கு அடிமையாக பெண்ணை வைத்திருக்கின்றது. இது தான் தமிழனின் இந்துத்துவக் கலாச்சாரம். இதைத்தான் வெளியில் இருந்து வந்த கிறிஸ்துவ மதமும் உள்வாங்கி, அதுவும் சாதிய மதமாக தன்னைத் தகவமைத்து இருக்கின்றது.

இந்த சாதிய சமூகம் தன் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, தமிழ் தேசியத்தை முதன்மையான அரசியல் கூறாகக் கொண்டு இயங்கியது. ஒடுக்கப்பட்ட இனமாக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்ட சமூகம், தனக்குள் ஒடுக்கும் சாதியத்தை கொண்டு இருந்தது.

இந்த அரசியல் பின்புலத்தில் இருந்த சாதியமும், அதை அடிப்படையாக கொண்ட இந்துமதமும், இன்று இந்துத்துவமாக மேலெழுந்து வீரியம் பெற்று வருகின்றது. இன்று இந்துத்துவம் அரசியல் கூறாக மேலோங்கி, சாதியமே முதன்மையான வடிவம் பெறுகின்றது. அது வெளிப்படும் வடிவம் தான் சாதிமான்கள் சொல்லும் "கலாச்சாரம்".

இங்கு "கலாச்சாரம்" என்பது இந்துத்துவமாகவும், இந்துத்துவம் என்பது இயல்பிலேயே சாதியமாகவும், சாதியமென்பது சாதி இந்துக்களின் அதிகாரமாகவும், அதன் பழக்கவழக்கமாகவும் இருக்கின்றது.

மீன்பிடியென்பது "இந்து புனிதத்துக்கு" முரணானது என்று இந்துத்துவம் அண்மையில் முன்வைத்த பின்னணியும் இதுதான். மீன்பிடிக் கலாச்சாரமும், வாழ்க்கை முறையும், இந்து கலாச்சாரத்துக்கு முரணானதாக, இவை தீட்டுக்குரிய இந்து புனிதத்துக்கு விரோதமாக சாதி இந்துக்கள் முன்வைத்ததைக் காண முடியும்.

இந்தியாவில் மாடு புனிதமானது என்று கூறி, மாடு உண்பதை தடை செய்து மனிதனைக் கொல்லும் அதே சாதி வெறி இந்துத்துவமே யாழ்ப்பாணத்தில் ஆட்டம் போடுகின்றது. இந்தியாவின் இந்துத்துவம் இலங்கையில் புகுத்தப்படுகின்ற பொதுவான சர்வதேச அரசியல் பின்னணியில், இதைக் காணமுடியும்.

"மீன்பிடி" இந்து சாதிய வாழ்க்கை முறைக்கு முரணானதாக முன்வைத்த முதலமைச்சர், இந்தியாவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை இலங்கையில் முன்நகர்த்தும் முக்கியமான நபர். 2014ம் நவம்பர் மாதம் இந்தியாவில் நடந்த உலக இந்துக்களின் காங்கிரஸ்சில் கலந்து கொண்டு, இந்துத்துவத்தை இலங்கையில் கொண்டு வருவதற்கான உறுதியை ஏற்றுக்கொண்டவர்.

வடக்கின் முதலமைச்சராக விக்கினேஸ்வரன் கொண்டு வரப்பட்டது, இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுடன் தொடர்புபட்டது. மேற்கு சார்பான இன்றைய உலகமயமாதலில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாடு, அதற்கு ஒத்தியங்கும் கூட்டமைப்பு (இது தான் இணக்க அரசியல்) நடைமுறையானது, இனரீதியாக தமிழ் மக்களை பிரித்து வைத்திருக்க முடியாது.

மக்களை பிரித்து வைத்திருக்க இந்துத்துவம் முன்வைக்கப்படுகின்றது. இந்துத்துவம் என்பது சாதியை முதன்மையாக கொண்டு, சமூகத்தை பிரித்து விடுவதே. சாதிக்கு கோயில்களைக் கட்டுவதன் மூலம் அடையாளத்தை தேடும் புலம்பெயர் சாதியவாதிகளின் இந்துத்துவ நடவடிக்கைகள், சாதி இந்துவத்துவதின் பொது நிகழ்ச்சிப் போக்கில் ஒரு அங்கமாக இயங்குகின்றது.

இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் சாதியாகவும், சாதிய நிகழ்ச்சி நிரல் இந்துத்துவமாக இருப்பதுடன், மக்களைப் பிளக்கின்றது. இந்த அடிப்படையில் கிறிஸ்துவ மதத்திலும் சாதியம் இயங்குகின்றது. சாதிய-மத முரண்பாட்டைக் கொண்டு மக்களை பிரித்தாளும் நிகழ்ச்சி நிரல் தான், தமிழர்களின் மேலான இன்றைய அரசியலாகி வருகின்றது. இதற்கு எதிரான ஒருங்கிணைந்த நடைமுறைப் போராட்டம் தான், இன்று எமது அரசியல் தெரிவாக இருக்க முடியும்.