Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரஞ்சு தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!

உழைப்பை இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்கு பிரஞ்சு அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான தொழிலாளர்களின் தொடர் போராட்டங்கள், உலகெங்குமான பொதுக்கவனத்தை ஈர்த்திருக்கின்றது. உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான மனித நடத்தையை ஒரு நாளும் அடிமைப்படுத்த முடியாது என்ற உண்மையை இந்தப் போராட்டங்கள் பறைசாற்றி நிற்கின்றது.

பொருளாதார அமைச்சர் மைக்குரான் (Macron) "நல்ல கூலி தான் உழைப்பு" ("La meilleure façon de se payer un costard c'est de travailler" - "The best way to pay for a suit is to work") என்று, தொழிற்சங்க உறுப்பினருடனான நடந்த தர்க்கத்தில் கூறுமளவுக்கு, ஆளும் வர்க்கம் வக்கரித்து நிற்கின்றது. கூலி என்பது உழைப்பில் கிடைக்கின்றதே ஒழிய, கூலி கொடுப்பதால் உழைப்பு வருவதில்லை. முதலாளி தனது பணத்தில் கூலி கொடுப்பதில்லை. உழைப்பைச் சுரண்டி அதில் ஒரு பகுதியை கொடுப்பது தான் கூலி. இந்த அடிப்படை உண்மையை மறுக்கின்ற பிரஞ்சு அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றது.

உழைப்பை அதிகமாகச் சுரண்டுவதற்கான சுதந்திரத்தை சட்டமாக்க முனைகின்றது

பிரஞ்சு தொழிலாளி வர்க்கத்தை வரைமுறையின்றி சுரண்டும் புதிய சட்டத்தை அரசு முன் வைத்திருக்கின்றது. இதை அடுத்து பிரஞ்சு வீதிகளின் வீரம் செறிந்த போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

குறித்த சட்டமானது பிரஞ்சு மக்களின் எதிர்கால தலைவிதியையே தலைகீழாக்கக் கூடியது. குறிப்பாக முதலாளி விரும்பினால் ஒரு தொழிலாளியை உடனடியாக வேலைநீக்கம் செய்ய முடியும். மேலதிக வேலைக்கு வழங்கிய மேலதிக கொடுப்பனவை குறைத்து, மேலதிக வேலைக்கான கூலியை கிடைக்கும் கூலியின் அளவுக்கு கொண்டு வந்ததன் மூலம் வேலைநேரத்தை மறைமுகமாக அதிகரித்து இருக்கின்றது. வேலைநேரக் கட்டுப்பாட்டை நீக்கி அதை தொழில் ஓப்பந்தங்கள் மூலம் வந்தடையக் கோருகின்றது. 8 முதல் 12 மணித்தியாலம் வரை வேலை வாங்கும் சுதந்திரத்தை சட்டம் வழங்குகின்றது. இப்படி தொழிலாளர்கள் சட்டரீதியாக பெற்று இருந்த உரிமைகைள புதிய சட்ட சரத்துகள் மூலம் நீக்கும் வண்ணம், தொழிலாளருக்கு எதிரான 150 பக்கங்களுக்கு மேலாக கொண்டது இந்த புதிய சட்டம்.

இதற்கு எதிரான போராட்டம் நாடு தளுவியதாக மாறியதுடன், மாணவர்கள் - தொழிலாளர்கள் ஒருங்கிணைந்தது. அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிய பின்னணியில், போராட்டத்தை மழுங்கடித்து உடைக்கும் வண்ணம் இடைச்செருகலாக வழங்கிய அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் உள்ளடக்கியதே இந்த புதிய சட்ட மூலம்.

சட்டத்தை கொண்டுவர ஆளும் வர்க்கம் நடத்தும் விவாதங்களானது

1. அடிப்படை உரிமை மற்றும் சலுகையைக் காட்டி, சட்ட மூலத்தை தொழிலாளருக்கு சார்ப்பானதாக காட்டுவதும் நிறுவுவதும்

2. முந்தைய சட்ட ஓட்டைகள் மூலம் கொள்ளை அடித்ததைத் தடுக்கும் சட்ட திருத்தங்களை காட்டி சட்டமூலம் முதலாளிக்கு எதிரானதாகவும் காட்டுவதும் நிறுவுவதும் நடக்கின்றது.

தொழிலாளர் விரோத சட்டமூலத்தை ஆதரிப்பவர்களின் தர்க்கம் இது தான். தொழிலாள விரோதத்தை முதன்மையாகவும் அடிப்படையாகவும் கொண்ட சரத்து இரண்டை நீக்க கோரி போராட்டங்கள் நடக்கின்றது. இந்த நிலையில் இந்த சட்டமூலத்தில் "தத்துவமே", சரத்து இரண்டு தான் என்று அறிவித்துள்ள பிரதமர், இதை விவாதிப்பதற்கோ, திருத்துவதற்கோ இடமில்லை என்று தினாவெட்டாக அறிவித்து இருக்கின்றார்.

குறித்த சட்டமானது ஆளும் சோசலிசக் கட்சிக்குள் எதிர்ப்பை உருவாக்கியது. இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் நிலை காணப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்ற விவாதமோ வாக்களிப்போ இன்றி, சட்டத்தை அமுல்படுத்த போவதாக அறிவித்து சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது அரசு. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சட்டங்களை அமுல் செய்யவென்று ஜனநாயக விரோதமான முடிவுகளை மக்கள் மேல் திணிக்கும் சட்ட ஏற்பாட்டை அரசியல் அமைப்பு கொண்டு இருக்கின்றது. இதனைக் கொண்டு இந்தச் சட்டத்தை அரசு நிறைவேற்றி இருக்கின்றது. இருந்தபோதும் சட்டப் பிரகாரம் இந்த சட்டம் மேலவையின் (செனட்டின்) அங்கீகாரத்தைப் பெற்ற பின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு யூலை மாதம் வரவுள்ளது.

இந்த பின்னணியில் இந்த ஜனநாயக விரோத சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் கூர்மை அடைந்து இருக்கின்றது. நாட்டை முடக்கும் வண்ணம் எரிபொருள் குதங்கில் வேலை செய்பவர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளன. அணுமின் நிலையங்களில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின்வெட்டு குறித்து (பிரான்ஸ் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையான) எச்சரிக்கை விடப்பட்டு இருக்கின்றது. பொதுப் போக்குவரத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை நடத்தவதற்கான திகதியை அறிவித்து இருக்கின்றது. யூரோ 2016 உதைபந்தாட்ட போட்டி நடக்கவுள்ள இக்காலப்பகுதி உல்லாசப் பயணிகள் அதிகம் வரும் காலகட்டமுமாகும். தொடரவுள்ள பலமுனைப் போராட்டங்களை அரச வன்முறை மூலம் முறியடிக்க அரசு முனைகின்றது.

பயங்கரவாதத்தின் பெயரில் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு ஓடுக்க முனைகின்றது. இந்தச் சட்டம் மூலம் பொலிஸ் கொண்டிருக்கும் வரைமுறையற்ற அதிகாரங்கள் போராட்டங்கள் மீதான தன்னிச்சையான வன்முறைகளைக் கொண்டதாக மாறிவரும் நிலையில் பரவலாக எதிர் வன்முறையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அரச வன்முறையை சார்ந்து சட்டம் குறித்து எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை; என்ன நடந்தாலும் கடைசிவரை சட்டத்தை அமுல் செய்வோம் என்று அரசு அறிவித்திருக்கின்றது.

அரசின் ஓட்டுமொத்த செயற்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானதாக மாறியுள்ளது. அரசு ஜனநாயகத்துக்கு விரோதமாக நடக்கின்றது என்ற கருத்து பெரும்பான்மை மக்களின் உணர்வாக மாறி இருக்கின்றது. தொழிலாள விரோத சட்டம் குறித்து தொழிற்சங்கத்துடன் பேச மறுப்பது, பாராளுமன்றத்தில் விவாதம் செய்ய மறுப்பது, பாராளுமன்ற பெரும்பான்மைக்கு உட்பட மறுப்பது முதல் அதிகார வெறியுடன் பிரதமர் உட்பட தினாவெட்டாக பேசுவது வரை, அரசுக்கு எதிரான மக்களின் பொது எதிர்ப்பை அவை உருவாக்கி இருக்கின்றன. ஏற்கனவே செல்வாக்கு இழந்திருந்த அரசின் கடந்தகாலச் செயல்கள் அனைத்தும், அரசு என்ற வகையில் மக்களில் இருந்து தனிமைப்பட்டு அம்பலமாகியிருக்கும் பின்னணியில் போராட்டம் கூர்மை அடைகின்றது.

தொழிலாளிகள் தங்களை உழைக்கும் வர்க்கமாக உணர்ந்து வர்க்க உணர்வு பெறுவதும் எப்படி அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது வரை நடந்தேறுகின்றது. புதிய புரட்சிகர போராட்ட மரபை பிரஞ்சுக்கு மட்டுமல்ல உலகுக்கும் வழிகாட்டும் வண்ணம், புதிய வரலாற்றைத் தொடங்கி இருக்கின்றது.

போராட்டங்கள் தொடங்கி ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், புதிய புரட்சிகர வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளும் வண்ணம், இரவுநேர விவாத ஒன்று கூடல்கள் (Nuit debout - Night stand) பொது இடங்களில் ஓவ்வொரு நாளும் நடக்கத் தொடங்கி இருக்கின்றது. நூறு முதல் ஆயிரக் கணக்கில் கூடும் மக்கள், இடதுசாரிய விவாதங்களை நடத்துகின்றனர். இது நாடு தளுவிய அளவில் நடக்கின்றது. இதில் வெவ்வேறு நாடுகளில் இருந்த வந்து கலந்து கொள்வதுடன், தேவைக்கு ஏற்ப பிரஞ்சு - ஆங்கில மொழிகளில் நடக்கின்றது.

ஒரு அடிப்படை மாற்றம் நடந்து வருகின்றது. உழைக்கும் வர்க்கம் போராடக் கற்றுக் கொள்கின்றது.

"உழைப்பைச் சுரண்டும் சுதந்திரமே வேலைவாய்ப்பு"

சுரண்டுவதில் உள்ள தடைகளை நீக்கினால் வேலை பெருகும். இதுதான் அரசுகளின் பொதுக் கொள்கை. அதாவது மூலதனம் சுரண்டுவதற்காக முதலிடும் அது தான் வேலைவாய்ப்பு. N;வலைவாய்ப்புகள் தொடர்பான அரசுகளின் பொதுக் கொள்கை இது தான்.

அபிவிருத்தி - வளர்ச்சி.. என்ற அரசுகள் முன்வைக்கும் செயற்பாடுகள் அனைத்தும், சுரண்டுதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும். அதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதும் தான்.

இந்த அடிப்படையில் சுரண்டுவதில் உள்ள சட்டத் தடைகளை அகற்றுவது, நாடுகளின் எல்லைகளையும், பண்பாடுகளையும் அழிப்பது இன்று உலகெங்கும் நடந்தேறுகின்றது.

செல்வத்தைக் குவிக்கும் சுரண்டும் செயற்பாடு எவ்வளவுக்கு வளர்ச்சி பெறுகின்றதோ அதுவே நாட்டின் வளர்ச்சியாகவும், மக்களுக்கு வேலையையும் பெற்றுத் தரும்; என்கின்றனர். ஒவ்வொரு மனிதனையும் சுரண்டுவதற்குரிய ஏற்பாட்டினைச் செய்வதே அரசின் கடமையாகவும், இதைத்தான் மக்கள் வேலைவாய்ப்பாக கருதுவதாக அரசுகள் கூறுகின்றது. மக்களைச் சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் கூலியினை, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சமூக அடிப்படையாக முன்வைக்கின்றது. இப்படி சுரண்டும் வர்க்கத்தின் கொள்கையை மானிட கொள்கையாக்க அரசு முனைகின்றது. முதலாளித்துவத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக உழை என நிர்ப்பந்திக்கும் வாழ்க்;கை முறையை மானிட மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் முதலாளித்துவம் முன்வைக்கின்றது. செல்வத்தினைக் குவிப்பதற்காக நடக்கும் உழைப்பு அந்த உழைப்பை உருவாக்குவதே அரசாக இருக்கின்றது.

பிரஞ்சு அரசு முன்வைக்கும் புதிய சட்டம் இதைத்தான் முன்வைக்கின்றது. N;வலையற்று இருக்கும் 50 இலட்சம் பிரஞ்சு மக்களின் வேலையின்மைக்கு காரணம் சுதந்திரமாக முதலாளிகள் சுரண்ட முடியாத சட்டங்களே காரணமெனக் கூறி அதை நீக்க முனைகின்றது. இந்த பின்னணியில் பிரஞ்சு உழைக்கும் வர்க்கம் தன் போராட்டங்கள் மூலம் சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக போராடினால் தான் மனித வாழ்வுண்டு என்ற புதிய பாடத்தை உலகுக்கு புகட்டுகின்றனர்.