Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தலைவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் போராட்டங்களை முடக்க முனையும் அரசு

2009 இல் புலிகளை அழித்தன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டதாக நம்பும் அரசு தான் இந்த "நல்லாட்சி" அரசு. இன்று நாட்டில் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களை தண்டிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக பழி வாங்க முனைகின்றது. அரசின் நவதாரளமயக் கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வழி நடத்தும் முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்களில் ஓருவராக தோழர் குமார் இருப்பதால் அவரின் பிரஜாவுரிமை மறுத்து சிறையில் தள்ளியிருக்கின்றது.

இந்த அரச இயந்திரம் தான், 1948 இல் இந்த நாட்டில் பிறந்த லட்சக்கணக்கான மலையக மக்களின் பிரஜாவுரிமை ஒரே நாளில் பறிந்ததுடன் 1960 இல் அதில் ஒரு பகுதி மக்களை வலுக்கட்டயமாக நாடு கடத்தியது. இன்றுள்ள அரச அமைப்பின் சட்டங்கள் மற்றும் நீதி என்பவை போலியானவை, பொய்யானவை மட்டுமின்றி அவை உழைக்கும் மக்களுக்கு எதிரானவையும் கூட.

ஒரு நாளில் தன் வர்க்க பிரதிநிதியான சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரனுக்கு (மத்திய வங்கி தலைவர்) பிரஜாவுரிமையை வழங்கிய அரசு, பாட்டாளி வர்க்க தலைவருக்கு அதை மறுத்து சிறையில் அடைத்திருகின்றது. தன் வர்க்க பிரதிநிதிக்கு பதவிகள் பட்டங்கள் தன் வர்க்கமல்லாத எதிரி வர்க்க தலைவருக்கு சிறையும் வதையும். இதுதான் சட்டமும் நீதியும் மட்டுமல்ல, ஜனநாயகம் கூட.

ஆளுகின்ற சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனை பாதுகாக்க அதை எதிர்க்கும் தலைவர்களை சிறையில் தள்ளுவதும், சிறைக்கூடங்களை கொடூரமானதாக்கி வதைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என்று இந்த "நல்லாட்சி" அரசு கருதுகின்றது.

தோழர் குமாரை கைது செய்தது முதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை நிறுத்துமாறு அழுத்தத்தைக் கொடுத்தனர். அதில் அவர்கள் தோல்வி பெற்றவுடன் சிறையில் தள்ளியவர்கள் அடுத்த கட்டமாக நோயாளிக்குரிய எந்த வசதிகளுமற்ற கொடூரமான அனுதாரபுர சிறைக்கு கொண்டு சென்று அடைத்து இருக்கின்றனர். வெலிக்கடை சிறையில் அடைக்க வேண்டிய பொது நடைமுறையை மீறி வர்க்க ரீதியான பழிவாங்கலை அரசு தொடருகின்றது. பிரஜாவுரிமை மீறிய குற்றத்துக்கு கொடூரமாக தண்டிக்க முனையும் அரசு இதன் மூலம் நடைபெறும் போராட்டங்களையும் எதிர்காலத்தில் நடைபெறக் கூடிய போராட்டங்களையும் தடுத்து நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்றது.

இதன் மூலம் தங்கள் நவதாரள கொள்கையை போராட்டங்களற்ற சூழலில் நடைமுறைப்படுத்த முனைகின்றது. கல்வியை தனியார் மயமாக்கிவிட முடியும் என்று நம்புகின்றது. வேலையில்லாத பட்டதாரிகளின் போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று நினைக்கின்றது. சமவுரிமைக்கான போராட்டத்தை இல்லாதாக்கிவிடலாம் என்று நப்பாசைக் கொள்கின்றது.

இது போன்று இன்று நாட்டில் நடைபெறும் வர்க்க ரீதியான உழைக்கும் மக்கள் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் அரசு, போராட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் குமாரை தண்டித்து வதைக்கின்ற அதே நேரம் வர்க்க ரீதியாக பழிவாங்கி அழிக்கவும் (உடல் ரீதியாகவும் - உணர்வு ரீதியாகவும்) முனைகின்றது.

இன்று நோய்யுடன் வதைபடுகின்ற தோழர் குமார் யாரலும் ஒரு நாளும் தோற்கடிக்க முடியாத மானிட விடுதலையை தளுவி நிற்கின்றார். இந்த உண்மை தான் அவரை தன் பிறபுரிமையான பிரஜாவுரிமையைக் கோர வைத்ததுடன்; அதற்காக சிறையில் வதைபட வைக்கின்றது. எதிரிகளால் மானிட விடுதலையை தடுக்க முடியாது.

சுரண்டும் வர்க்க நலனை பாதுகாக்க முனையும் அரசு, பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்குவதன் மூலமும் அது முடியாத போது சலுகைகளை வழங்குவதன் மூலமும், பாட்டாளி வர்க்கத்தை அரசியலை செயலற்றதாக்க முனைகின்றது.

ஆனால் பாட்டாளி வர்க்கம் யாராலும் தோற்கடிக்க முடியாத மனிட விடுதலை உயர்த்தி நிற்கின்றது. மார்க்ஸ் கூறியது போல் "போராட்டம் தான் மகிழ்ச்சி தலை வணங்குவது வெறுக்கத்தக்கது". இதைத்தான் சுரண்டும் வர்க்கத்துக்கும், அதன் அரசுக்கும் நாம் கொடுக்கும் நடைமுறை ரீதியான பதிலாக இருக்கும்.

யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாத எமது போராட்டத்தை அடக்குமுறைகள் வலுப்படுத்தி உறுதிப்படுத்தும். நாளை வரலாற்றுக்கு தலைமை தாங்கும் மக்கள் தலைவர்களை உருவாக்கும் போர்க்களத்தைத் தான் இன்றைய ஒடுக்குமுறைகள் ஏற்படுத்தி தருகின்றன என்பதை எதிரிகள் உணர்வதில்லை என்பதே, மற்றொரு உண்மையும் கூட.