Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதிய - ஆணாதிக்க கலாச்சாரமே "தமிழனின்" கலாச்சாரம்

"தமிழன்" என்ற இனமாக தமிழன் தன்னை அடையாளப்படுத்தும் போது சாதி கடந்து அல்ல, சாதியைப் பாதுகாத்துக் கொள்ளவே "தமிழன்" என்ற இன அடையாளம் என்பது எமது கடந்தகால வரலாறாக இருக்கின்றது. இந்த உண்மையின் பின்னால் தமிழனின் கலாச்சாரம், தமிழனின் சிந்தனை அனைத்தும் சாதியமே. சாதிய சமூகம், சாதியப் பண்பாடு கடந்து , கலாச்சாரம் குறித்து "தமிழன்" பேசுவதில்லை.

இந்த பின்னணியில் தமிழ் கலாச்சாரம் குறித்துப் பேசுகின்றவர்கள் எதை முன்னிறுத்துகின்றனர் என்றால், சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் பற்றியுமாகும். இதற்கு மாறாக உழைக்கும் மக்களின் கலாச்சாரம் குறித்தல்ல. மாறாக சமூக ஆதிக்கம் பெற்ற கலாச்சாரம் குறித்துப் பேசுகின்றனர்.

இந்த அடிப்படையில் தமிழனின் கலாச்சாரம் குறித்தும், அதைப் பாதுகாப்பது குறித்தும் பேசுகின்ற இனவாதத்தமிழன்; இன்று அதை அரசியலாக்க முனைகின்றான். தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு இதற்கு கடிவாளம் கட்டி களத்தில் இறங்கி இருக்கின்றது. தமிழனின் "கலாச்சாரத்தைப்" பாதுகாக்கவும், "கலைகளை" பயன்படுத்துவது பற்றியும் பேசுகின்றது.

முதலில் இவர்கள் யார் எனில் தமிழனின் பெயரில் இயங்கும் யாழ் மேலாதிக்கவாதிகள். வெள்ளாள மேலாதிக்க சாதிய சமூக வாழ்க்கை முறையை தமிழனின் பொது வாழ்வாக முன்னிறுத்துகின்ற ஆணாதிக்கவாதிகளே இவர்கள். சாதிய "தமிழீழம்" கேட்டு தோற்ற இந்த தமிழினவாதக் கும்பல், பாராளுமன்றக் கதிரை சுற்றி நடந்த போது கவிழ்ந்து விழுந்த நிலையில், தீர்வு பொதி தயாரித்து அரசுக்கு கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறிக் கொண்டு கோவணத்துடன் களமிறங்கியுள்ளார்கள். தாங்கள் கோவணத்துடன் நிற்பது தானே தமிழனின் பண்பாடு என்று அடையாளம் கண்டவுடன் கலாச்சாரத்தைக் கொண்டு "தமிழனை" அடக்கிவிடலாம் என்று களமிறங்கி இருக்கின்றனர்.

இந்த சமூகப் பின்னணி

தேசியத்தின் பெயரில் இயங்கிய புலிகளின் இனவாத ஆயுதப் போராட்டம் தோற்றதன் பின், வடகிழக்கில் அமிழ்ந்து கிடந்த சாதியம் இன்று மேலெழுந்து வருகின்றது. ஊருக்கு ஒரு கோயில் என்ற பழைய சாதிய மரபுக்கு பதில், சாதிக்கு ஒரு கோயில், அந்தஸ்துக்கு ஒரு கோயில் என்று, பணமும் சாதியும் சேர்ந்து புளுக்கத் தொடங்கி இருக்கின்றது.

கடந்த காலத்தில் இனவாத ஆயுதப் போராட்டத்தை பயன்படுத்தி காசு பார்த்தவர்கள், இன்று பணம் சம்பாதிக்க கோயில்கள் கட்டுவதும், சாதி கொழுவேறுவதும் அங்குமிங்குமாக அரங்கேறி வருகின்றது. இந்த பின்னணியில் பணம் சம்பாதிக்கும் இந்த சாதிய கூத்துக்கு கலாச்சார வடிவம் கொடுக்க முனைகின்றனர்.

சாதிய உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளும், அதையொட்டிய பழைய சாதிய நடைமுறைகளும் இன்று இல்லை. கடந்தகால பொருளாதார மாற்றங்கள், சாதிய போராட்டங்கள், நீடித்த இன யுத்தமும் இடப்பெயர்வும், சாதியின் பழைய வடிவங்கள் சிதைந்து போக காரணமாகியது. இதனால் மக்கள் சாதியை உணராது, ஆனால் சாதிய பண்பாட்டுக்குள் வாழ்பவராக மாறினர்.

திருமணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று, பண்பாட்டு கலாச்சார வடிவத்தில் சாதியம் நீடித்த அதேநேரம், பொது இடத்தில் சாதியை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சமூகம் மாறி இருக்கின்றது. பழைய சாதிய ஊர்கள் அழிந்து, அங்குமிங்குமாக மக்கள் கலந்து விடுகின்றதும், எல்லா உற்பத்தி உறவுகளுக்குள் கலப்பதும், சாதிய பண்பாட்டு சமூக அடிப்படையை இன்று அசைத்து வருகின்றது.

கடந்த சாதிய சமூகப் பின்னணியில் சமூகப் பொருளாதாரம் மீது தொடர்ந்து ஆதிக்கம் செய்யும் சாதிய சமூக அமைப்பில், சாதியத்தின் ஆதிக்கம் தக்க வைக்கப்பட்டிருக்கின்ற இன்றைய சூழலில், அதை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் மற்றும் சிந்தனைத் தளத்தில் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்துகின்றது. "தேசியம்", "தமிழன்", "சுயநிர்ணயம்". என்று எல்லா அடையாள வடிவத்திலும், யாழ் மேலாதிக்க சிந்தனையே கோலோச்சி இருக்கின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான் கலாச்சாரம் குறித்தான அங்கலாய்ப்பு வெளிவருகின்றது.

இந்தக் கலாச்சாரம் கோருவது என்ன?

கோயில்கள் கலாச்சார மையமாக இருப்பதால், இனி கோயில்களில் சாதிய நடைமுறையை இறுக்கமாகக் கோருகின்றது. அவர் அவர் இடத்தில் நிற்கவும், வாழவும், சாதிய "தமிழர் பண்பாட்டை" முன்னிறுத்தும் அதேநேரம் அதைக் கடைப்பிடிக்கக் கோருகின்றது.

"தமிழன்" கலாச்சாரப் படி ஊர்கள் சாதிய அடிப்படையில் கலக்கப்படக் கூடாது. ஊருக்குள் வந்த மற்றைய சாதிகளை விரட்ட வேண்டும். வெள்ளாளர் அல்லாதவருக்கு காணிகள் விற்கப்படக் கூடாது. இதை "தமிழன்" கலாச்சாரமாக கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழனின் கலாச்சாரம் முன்வைக்கும் சாதிய திருமணங்களை முன்னிறுத்தி, கலப்புத் திருமணங்களை தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானதாக அணுக வேண்டும். இதன் அடிப்படையில் தமிழனின் கலாச்சார திருமணமான பேசிச் செய்யும் சாதிய திருமணங்களை முன்வைத்து, "காதல்" திருமணத்தைத் தடுக்க வேண்டும்.

சாதிய சமூக உரிமைகளை முன்னிறுத்தி தனிமனித உரிமைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழனின் ஆணாதிக்க கலாச்சாரத்தை உயர்த்தி பெண்களின் உரிமைகளை மறுக்க வேண்டும்.

இப்படி பற்பல. இன்று கலாச்சாரம் குறித்து பேசுகின்றவர்கள் ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சார கூறுகளை முன்னெடுக்கின்ற, பாதுகாக்கின்ற அதேநேரம் பெண்கள் சார்ந்த ஏகாதிபத்திய கலாச்சார கூறுகளை எதிர்ப்பதும் நிலப்பிரபுத்துவ பெண்ணாக முன்னிறுத்துவதுமே இவர்கள் முன்வைக்கும் "தமிழன் கலாச்சாரம்".

ஆணாதிக்க மற்றும் சாதிய அடிப்படையில் சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்வதை தமிழன் பண்பாடாகவும், இதன் அடிப்படையில் ஒழுக மறுக்கின்றதன் மேல் வன்முறை. இதைத்தான் தமிழ் மக்கள் பேரவை கோரியிருக்கின்றது.

பெண்கள் "அடக்க ஓடுக்கமாக" ஆணுக்கு கட்டுப்பட்டு வாழ்தல், குழந்தை வளர்ப்பு, சமையல், ஆணுக்கு சேவை செய்தல் இதையே பெண் தன் கடமையாக வாழ்க்கையாக கொண்டு வாழ்தல் இதைத்தான் "தமிழன் கலாச்சாரம்" கோருகின்றது.

ஒடுக்கப்பட்ட சாதிகள் அவரவர் சாதிய எல்லைக்குள், அவரவர் சாதியக் கடமையைச் செய்து வாழ்வதை உறுதி செய்து வாழ்வது தான் "தமிழன் கலாச்சாரம்" முன்வைக்கின்றது.

நிலப்பிரபுத்துவ சாதிய கலாச்சாரத்தையும், ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, சாதிய ஆணாதிக்க கலாச்சாரத்தையே "தமிழன் கலாச்சாரம்" கோருகின்றது. அதாவது ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரத்துக்கு எதிராக, தமிழனின் கலாச்சாரம் என்பதே இதன் பின்னுள்ள உண்மையும் வக்கிரமுமாகும்.