Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கைதிகளின் விடுதலையைக் கோரி மீண்டும்...

சமவுரிமை இயக்கம் இன்று (14.10.2015) கொழும்பு கோட்டையில் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தையும் - அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் வண்ணம் ஊர்வலத்தையும் நடத்தியது. சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் முதல், கைதிகளின் உறவினர்கள் வரை - பலதரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர். அதேநேரம் நாடு தழுவிய அளவில், கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் போஸ்டர்கள் சமவுரிமை இயக்கத்தால் ஒட்டப்பட்டன.

கைதிகளை விடுதலை செய்யக் கோரிய ஆர்ப்பாட்டமானது இவ்வருடத்தில் இது இரண்டாவது தடவையாகும். தேர்தலுக்கு முன்பாக கொழும்பு - பிரான்ஸ் - இங்கிலாந்து - இத்தாலி - அவுஸ்திரேலியா.. என பல நாடுகளில் சமவுரிமை இயக்கம் போராட்டத்தை நடத்தி இருந்தது.

தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தைத் முன்னெடுத்த நிலையில் - தொடரவிடாது தடுக்க கூட்டமைப்பு அவசர அவசரமாக கைதிகள் விடையத்தில் தலையிட்டது. கூட்டமைப்பு கைதிகள் தொடர்பாக அரசுடன் பேசியதாகக் கூறி - கைதிகளின் விடுதலை உடன் நடக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம் கைதிகளின் உறவினர்கள் இனி போராட வேண்டியது அவசியமில்லை என்று மறைமுகமாக கூறியதன் மூலம் - கைதிகளையும், கைதிகளின் உறவினரையும் ஏமாற்றி சமவுரிமை இயக்கத்துடன் இணைந்து முன்னெடுக்க இருந்த போராட்டத்தை முடக்கியது. இதன் பின்னணியில்

1. தேர்தல் காலத்தில் கைதிகள் சார்பான போராட்டம் தொடர்ந்து நடப்பதன் மூலம் தங்கள் போலித்தனம் அம்பலமாவதைத் தடுக்கும் சதியை அரங்கேற்றியது. இதற்காக அரசுடன் பேசி சுய அறிக்கையையும் - அரசும் தனி அறிக்கையையும் வெளியிட்டதன் மூலம், மக்களை ஏமாற்றி வாக்கு வேட்டையை நடத்தியது.

2. "தமிழீழம்" கோரிய அரசியல் கைதிகளுக்காக சிங்கள மொழி பேசும் மக்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் தொடர்வதன் மூலம் - சிங்கள மக்களை தமிழ் மக்களின் எதிரியாக காட்டுகின்ற கூட்டமைப்பின் அரசியல் கேள்விக்குள்ளாவதை தடுக்க, கூட்டடைப்பு - அரசு தேர்தலுக்காக கூட்டுப் பொய்யை தனித்தனியாக முன்வைத்தன.

இப்படி இவர்கள் தங்கள் "நல்லாட்சி" பற்றி அரசும் - கூட்டமைப்பும் இணைந்து மக்களை ஏமாற்றுகின்ற பின்னணியில் - அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று இன்று அரசு அறிக்கை விட்டு இருக்கின்றது. முந்தைய அரசு 12000 மேற்பட்ட புலிகளை புனர்வாழ்வின் பின் விடுவித்துள்ளதாக கூறுகின்ற பின்னணியில் - "நல்லாட்சி" அரசு குற்றச்சாட்டின்றி பல வருடங்களாக சிறையில் உள்ள கைதிகளைக் கூட விட மறுக்கின்றது.

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக அங்கீகரிக்க மறுப்பது என்பது- இலங்கையில் இன முரண்பாடு என்ற ஒன்று இருக்கவில்லை என்று மறுப்பதாகும். இதன் மூலம் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக மாற்றுவது - கைதிகளின் குடும்பங்களின் நியாயமான போராட்டத்தை மறுப்பதாகும்.

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து நடத்துகின்ற அமெரிக்க சார்பு இணக்க அரசியல் என்பது - மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கல்ல. மாறாக அவர்களை ஏமாற்றி வாக்கு பெறுவதும் - தம்மால் மட்டும் தான் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கூறி, மக்களைத் தமது சொந்த விடுதலைக்கான போராட்டத்தில் இருந்து விலக்கி வைப்பது தான்.

கூட்டமைப்பை நம்பி ஏமாறது மீண்டும் கைதிகளுக்கான- கைதிகளின் உறவினர்களின் போராட்டமானது- இந்த உண்மையைத் தான் மீண்டும் அனைவர் முன்னும் பறைசாற்றி நிற்கின்றது.