Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

உலகை மாற்றக் கூடிய உதாரணமும் - அதன் பலவீனங்களும்

ஐரோப்பா நோக்கிய அலை அலையான அகதிகளின் வருகையும் - அதை தடுத்து நிறுத்த முன்னெடுத்த ஏகாதிபத்திய கெடுபிடிகளையும் தகர்த்தது எது? ஏகாதிபத்திய தலைவர்களும் - ஏகாதிபத்திய ஊடகங்களும் அகதிகளின் பரிதாப நிலை பற்றியும் - அவர்களின் அவலங்கள் பற்றியும், கதைகதையாக கூற வைத்தது எது?

மறுபக்கம் அகதிகளின் அவலக் காட்சிகளைக் காட்டி தங்களை மனிநேயம் கொண்டவர்களாக - மானிட அக்கறை கொண்டவராக முன்னிறுத்தும் அதேநேரம், அதுவே தான் ஏகாதிபத்திய அரசியல் கொள்கை என்ற விம்பத்தை தோற்றுவிக்க ஊடகங்கள் படாதபாடுபடுகின்றது.

இதன் பின்னான உண்மைகள் என்ன? அகதிகளுக்கு எதிரான கெடுபிடி கொண்ட துருக்கிக் கடற்கரையில் ஒரு அகதிக் குழந்தையின் பிணம் ஒதுங்கிய காட்சியானது - ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தது. அதேநேரம் ஐரோப்பிய மக்கள் இந்த நிகழ்வை முன்னிறுத்தி அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பொதுக் கருத்தையும் - தன்னெழுச்சியான போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

ஏற்கனவே அகதிகள் விவகாரங்களால் தனிமைப்பட்டு கிடந்த ஐரோப்பிய அரசுகள் - ஐரோப்பிய மக்களில் இருந்து தனிமைப்படுவதைத் தடுக்க, அவசர அவசரமாக அகதிகள் மீதான அக்கறை இருப்பதான மனிதாபிமான வேசத்தைப் போட்டுக் கொண்டு ஊடகங்கள் மூலம் வெளிவந்தனர்.

இங்கு துருக்கிக் கடற்கரையில் குழந்தையின் மரணம் என்பது தற்செயலானதல்ல. மாறாக ஏகாதிபத்திய கொள்கைகளின் பொது அரசியல் விளைவாகும். அகதிகளின் வெளியேற்றத்தை தடுக்க கையாளும் கெடுபிடிகளும் - அகதிகளைக் கடல் வழியாக ஏற்றிவரும் வள்ளங்களின் ஓட்டுனர்களை தண்டிக்கும் முறைமையும் - அகதிகளை நடுக்கடலில் வள்ளத்துடன் கைவிட்டு தப்பிச்செல்லும் போக்கும் - அகதிகளின் அதிகரித்த மரணங்களுக்கு காரணமாகும். இதுபோன்று தான் அகதிகள் உள்ளே வரும் போது அங்குமிங்குமாக பலவருடங்களாக மரணங்கள் நடக்கின்றது.

இந்தச் சூழலில் அகதிகளைச் சடங்குக்காக ஏற்றுக் கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் கொள்கை முடிவுகள் - அகதிகளுக்கு எதிரான இந்தக் பொதுக் கெடுபிடியை மாற்றவில்லை.

இந்த பின்னணியில் இங்கு இரண்டு விடையங்கள் நடந்தேறுகின்றது.

1. இன்னுமொரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காக, மற்றைய மக்கள் கூட்டம் எழுச்சி பெறும் போது - எப்படி உண்மையான ஒரு மாற்றத்தைக் கொண்ட வர முடியும் என்பதையும் - இந்தச் சமூக அமைப்பின் பொதுப் புத்தியில் பலமானதை மாற்றவும் முடியாது - மாறாது என்று நம்பும் எதையும் - சமூகத்தின் எழுச்சி எப்படி மாற்றும் என்பதையும் - இந்த அகதிகள் விவகாரம் எடுத்துக் காட்டுகின்றது.

2. அரசியல் ரீதியாக அணிதிரட்டப்படாத மக்கள் உணர்ச்சியையும், எழுச்சியையும் - அந்தக் கணமே எப்படி ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றுகின்றது என்பதையும் - சடங்குக்காக அகதிகளை ஏற்றதன் மூலம் மக்களை அரசியல் ரீதியாக செயலற்றவராக மாற்றும் என்பதையும் - எம்மைக் கற்றுக் கொள்ளக் கோருகின்றது.

இங்கு அகதிகளை ஏற்பது போன்ற ஏகாதிபத்திய பாசாங்குகள் மூலம் சிலருக்கு சலுகையை கொடுத்தபடி - மறுபக்கத்தில் அகதிகள் வரும் பாதையை மூடும் செயல்திட்டத்தை கடுமையான ஒடுக்குமுறைகள் மூலம் முடுக்கி விட்டு இருக்கின்றது.

ஐரோப்பியா தனது எல்லை நாடுகள் மூலம் கெடுபிடிகளையும் - கடல் கண்காணிப்பையும் - அகதி நாட்டு எல்லைகளில் அகதி முகாம்களை நிறுவும் திட்டங்களையும் - அமுல்படுத்தத் தொடங்கி இருக்கின்றது.

ஜரோப்பிய மக்களை அகதிகளில் இருந்து தனிமைப்படுத்த அகதிகளுக்குள் "இஸ்லாமிய பயங்கரவாதிகள்" என்ற பிரச்சாரத்தையும் - அதேநேரம் அகதியாக வந்தவர் மத்தியில் இருந்து பயங்கரவாதத் தாக்குதல் மூலமும் அகதிகளை அன்னியப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தி வெளியேற்றும் பொதுத் திட்டத்தையும் ஒருங்கே கொண்ட - ஏகாதிபத்திய அகதிக் கொள்கை தான் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேநேரம் இஸ்லாமியத்தின் பெயரில் ஆட்சி புரியும் அரபுப் பகுதிகள் மீதான இராணுவ ரீதியான தாக்குதலைத் தீவிரமாக்கி - ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை அடுத்த மட்டத்துக்கு முன்னெடுக்கின்றது. இஸ்லாமியத்தின் பெயரிலான ஆட்சி என்பது தற்செயலானதல்ல. மாறாக ஏகாதிபத்திய ஆதரவுடன், தங்கள் நலனுக்கு ஏற்ப தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ கொள்கையைக் கொண்ட பாசிசக் கூலிக்கும்பல் தான், இன்று இஸ்லாமியத்தின் பெயரிலான ஆட்சியை அமைத்து இருக்கின்றனர். அரபு நாடுகளின் ஏகாதிபத்திய தலையீடும் ஆக்கிரமிப்பும் - அதற்கு எதிராக இஸ்லாமியத்தின் பெயரிலான முதலாளித்துவ பயங்கரவாத அமைப்புமாக தோற்றம் பெற்றதும் - இன்று அகதிகளாக மக்கள் வெளியேறுவதற்கு ஏகாதிபத்தியம் தான் காரணம் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். இந்த வகையில் ஏகாதிபத்தியத்தையும்- இஸ்லாமியத்தின் பெயரிலான பயங்கரவாதத்தையும்- ஏகாதிபத்திய அகதிகள் கொள்கைகளையும் விளங்கிக் கொண்டு- அணிதிரள்வதே எமது சமூக கடமையாகும்.