Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"மகிந்தவா - மைத்திரிபால சிரிசேனவா வெற்றி பெறுவர்"?

"தேர்தலில் வெல்லப் போவது மகிந்தாவா அல்லது மைத்திரியா" எனக் கேள்வியை கேட்பதும், விவாதிப்பதுமே இன்று பெருபான்மையினரது அரசியலாகக் காண முடிகின்றது.

மகிந்த - மைத்திரிபால சிரிசேன என்ற எல்லைக்குள், அரசியலைக் குறுகிக் கொண்டு "வெற்றி" குறித்து ஆரூடங்கள், அனுமானங்களுடன் கூடிய அங்கலாய்பை வெளிப்படுத்துவதன் மூலம் தேர்தல் அரசியலையும், சமூக அறிவையும் குறுக்கி விடுகின்றனர்.

இதன் மூலம் செயலற்ற தன்மையை உருவாக்கி, அரசியலை தர்க்கமாக, குதர்க்கமாக, வெற்று விவாதமாக, பொழுது போக்காகவும் மாற்றி விடுகின்றனர். இதுதான் இன்று தமிழ் மக்களை ஆளுமை செலுத்துகின்ற, சிந்தனை முறையும் வாழ்வியலும் கூட.

இவர்களின் சமூக பார்வையையும், சிந்தனை முறையையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இது தீர்க்கமான எதிர்புரட்சிகர அரசியலில் கூறாக செயற்படுவதால், இதை தனியாக பின்னால் ஆராய்வோம்.

இன்று இடதுசாரியம் மற்றும் முற்போக்காக பேசுகின்ற பெரும்பாலனவர்கள், "மகிந்தவா - மைத்திரிபால சிரிசேனவா வெற்றி பெறுவர்" என்பதை தாண்டி தேர்தலையும் சமூகத்தையும் அணுகவில்லை என்ற உண்மையும், அவர்களின் அறிவு எந்த வகையான வர்க்க கண்ணோட்டத்தைக் கொண்டது என்பதும் இங்கு கேள்விக்குள்ளாக்கின்றது.

இதே போல் மகிந்தாவை தோற்கடித்தல் என்ற ஒற்றைப் பரிணாம அரசியல், தீவிர இடதுசாரியம் பேசுகின்றவர்களை கூட விட்டு வைக்கவில்லை. கடந்த காலத்தில் "புலிகளைத்" தோற்கடித்தால் அல்லது பயங்கரவாதத்தை தோற்கடித்தால், "ஜனநாயகமும் - தீர்வும்" வரும் என்று கூறியது போல், பொது வேட்பாளரை வெல்ல வைக்கின்ற சிந்தனை முறையாக இடதுசாரியத்தை குறுக்கி விடுகின்றனர். புலியை தோற்கடித்தால் ஜனநாயகமும் - தீர்வும் வரும் என்றார்கள், ஆனால் வந்ததா? கிடைத்ததா?. இப்படித்தான் மகிந்தாவை தோற்கடித்தல் கூட அரசியலாக அரங்கேறுகின்றது.

புலிகள் தோற்று கிடைக்கும் "ஜனநாயக" இடைவெளியில் - வெற்றிடத்தில் செயற்பட முடியும் என்றவர்கள், மக்களுக்காக செயற்பட்டது கிடையாது, இதேபோல் மகிந்தாவை தோற்கடித்தல் மூலம் கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றவர்களின் பிதற்றல்களை இன்று காண்கின்றோம். இந்த குதர்க்கமான தர்க்கத்தை அரசியலில் முன்தள்ளுகின்றவர்கள், இன்று அரசபாசிசத்தை தோற்கடிக்க எப்படி போராடுகின்றனார் என்பதை வைத்தே, அவர்களின் வெற்றுக் கூற்றை அளவிட முடியும். வெறுமனே பொது வேட்பாளரை வெல்ல வைக்கும் தர்க்கத்தைத் தாண்டி, இவர்கள் உண்மையான அரசியல் நடைமுறையினை எதனையும் கொண்டு இருப்பது கிடையாது. மக்கள் சார்ந்த அரசியல் நடைமுறைகளைக் கொண்டவர்கள் ஒரு நாளும் இப்படி குறுக்குவழி அரசியலை முன்வைப்பதில்லை.

இதைப் போல் தான் யார் வெல்வார் என்ற கேள்வி மற்றும் சிந்தனை சார்ந்த அரசியல், மகிந்தா - மைத்திரிபால சிரிசேன சிந்திப்பதில் இருந்து அரசியல் ரீதியாக வேறுபட்டதல்ல. மகிந்தா - மைத்திரிபால சிரிசேனவில் ஒருவர் வென்று அதில் ஒருவர் தோற்பது பற்றி பேசுவது அரசியலா? இவர்களில் யார் வென்றாலும், மக்கள் தோற்கடிக்கப்படுவது மட்டும் தான் உண்மை.

மக்கள் தோற்கடிக்கப்படுவதையிட்டு எந்தவிதமான சமூக - அரசியல் அக்கறையற்றும், வெற்றி பற்றி பேசுகின்றதும், மகிந்தவை தோற்கடிப்பது பற்றியுமான அரசியல் தான் மக்களைத் தோற்கடிக்கின்றது.

ஆளும் வர்க்கங்கள் தன் வேட்பளாரை வெல்ல வைக்கும் அரசியலில், "யார் வெல்வர்" என்று மக்களை பற்றி அக்கறையற்று பேசுகின்றவர்கள், மக்களை தோற்கடிப்பதில் முதன்மையான அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றனர்.

மக்களை தோற்கடிக்கின்ற ஆளும் வர்க்க அரசியலை தோற்கடிக்க மறுக்கின்ற அரசியல் தான், மகிந்தாவை தோற்கடிக்கும் வாக்கைப் பிரிப்பதாக கூட குற்றம் சாட்டுகின்றது. உண்மையில் மக்களின் வாக்கை யார் பிரிக்கின்றனர் என்றால், மகிந்தாவையும் அரசையும் தோற்கடிக்க மறுக்கின்றவர்கள் தான்.

இலங்கையின் முழு மக்கள் மேலான பொருளாதார ஒடுக்குமுறையும், சிறுபான்மை சமூகங்கள் மீதான இன-மத ஒடுக்குமுறையையும் எதிர் கொண்டே மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அரசுக்கு எதிராக போராடுகின்றனரே ஒழிய, மகிந்தாவுக்கு எதிராக போராட்டவில்லை. மக்களின் அன்றாட வாழ்கைக்கான போராட்டம், கட்சி ரீதியாக பிரிந்து இருப்பதில்லை. அரசு இயந்திரம் (அதிகாரிகள் - பொலிஸ் - நீதிமன்றம்) ஒடுக்கின்றதே ஒழிய, தனிப்பட்ட மகிந்தா மக்களை ஒடுக்கவில்லை.

முன்பு சிறிமா, ஜே.ஆர், பிரேமேதாச, சந்திரிக்கா... என அனைவரும் ஒடுக்குமுறையாளராக இருந்தனர் என்றால், அரசு தான் ஒடுக்கும் இயந்திரம். அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை, வெறும் மகிந்தாவுக்கு எதிரானதாக காட்டி, வாக்கைப் பிரிக்கின்ற அரசியல் தான் "மகிந்தாவை" தோற்கடிக்கும் பொது வேட்பாளரின் அரசியல்.

முதலாளித்துவம் என்பது எமக்கு வெளியில் மட்டும் இருப்பதில்லை, மாறாக எமக்குள்ளும் முதலாளித்துவம் இருக்கின்றது.

இது எங்கும் எதிலும் செல்வாக்கு செலுத்துவது போல், தேர்தலிலும் இயங்குகின்றது. மகிந்தாவை மட்டும் தோற்கடிப்பதற்கு பதில் இந்த அரசை தோற்கடிக்க மறுபவர்கள் தான், இன்று வாக்கை பிரித்து மக்களை தோற்கடிக்கின்றனர். தோற்கின்ற மக்களை பற்றி சமூக அக்கறையின்றி, "யார் வெல்வார்கள்" என்று அங்கலாய்புடன் ஆளும்வர்க்க அரசியலை முன் தள்ளுகின்றனர். இதை புரிந்து கொள்வதும், இதை இனம் கண்டு முறியடிப்பதுமே, தேர்தல் அரசிலில் தீர்க்கமானதாகி வருகின்றது.