Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

'ஏகாதிபத்திய நவலிபரல் வேலைத்திட்டத்திற்கு எதிராக சோசலிசத்துக்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி"

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு 2012 ஏப்ரலில் நடந்தது. அந்நேரத்தில் எமக்கு எதிரான அடக்குமுறை நடந்தவண்ணம் இருந்தது. அப்போது லலித், குகன் சகோதரர்கள் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்தனர். மாநாடு நடக்கும் ஓரிரு தினங்களுக்கு முன் சகோதரர் குமார் குணரத்தினம் மற்றும் சகோதரி திமுதுவும் கடத்தப்பட்டதன் காரணமாக மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருந்தது.

ஏனையோர் கட்சியை ஆரம்பிக்கும் வேலைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்கள் கட்சியினுள் பலகருத்தாடல்கள் இடம்பெற்றன. இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சித்தலைமை மட்டுமல்ல, உறுப்பினர்கள் எல்லோரும் போராடிப்பெற்ற வெற்றியின் மூலம் தான் இந்த இரண்டாவது மாநாடு மட்டும் நாங்கள் வந்திருக்கின்றோம்.

அப்படியானால் இந்த இரண்டாவது மாநாடு என்பது, கடந்த வருடங்களில் நாம் அடியெடுத்து வைத்த அரசியல் பாதையில், நாம் செய்த போராட்டங்களின் உச்ச நிலையே இந்த இரண்டாவது மாநாடு என மிக உறுதியாக கூறுகிறேன். ஒரு வெற்றியின் மைல் கல்லாக இது இருக்கின்றது.

இந்தக் கட்சியினை முன்னோக்கிக் கொண்டு செல்ல, கருத்து முரண்பாடுகளைக் களைவதற்கு, தேவையான அரசியல் தலையீடு தேவையாயிருந்தது. தத்துவம் தொடர்பாக, இடதுசாரிய இயக்க நடத்தை தொடர்பாக கருத்தாடல்கள் இருந்தது.

தேசியப் பிரச்சனை தொடர்பாக கருத்தாடல்கள் இருந்தது. நாங்கள் உண்மையான மகிழ்வுடன் கூறுகிறோம். முன்னிலை சோசலிசக் கட்சி அந்த உறுதிநிலையில் இருந்து நாட்டின் முன்னே கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்தான் இந்த மாநாடு.

ஆட்சியாளர்கள் குமார் குணரத்தினம் சகோதரரின் அரசியல் செய்யும் உரிமையை இரத்து செய்ய முயற்சித்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?. அவ்வாறு அவர்கள் செய்தது குமார் சகோதரரின் அரசியல் உரிமையை இரத்து செய்வது மட்டுமல்ல, புதிய இடதுசாரிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதை தடுத்து நிறுத்தவே.

அதற்கு எதிராக ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களாக முன்னெடுத்த போராட்டத்தினால் எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது. குமார் சகோதரரின் குடியுரிமைப் பிரச்சனையையும் நாம் தீர்த்துக்கொண்டுள்ளோம். முன்னிலை சோசலிசக்கட்சி மட்டும் தனித்து நின்றல்ல.

இன்னும் பல பேருடன் இணைந்தே நாம் இதனை அடைந்துள்ளோம். அவர்களுக்கு எமது கவுரவத்தை, மரியாதையை தெரிவித்துக் கொள்ளுகிறோம். இடதுசாரிய கட்சி இயக்கங்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், கலைஞர்கள், புத்திசீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பல்வேறு தரப்பினர் எம்மோடு கைகோர்த்து நின்றனர். அவர்கள் அனைவருக்கும் எமது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் அப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அட்டாளை (பரண்) அமைத்து அடையக்கூடிய வெற்றி என்ன என்று எம்மிடம் சிலர் கேட்டனர். நம்பிக்கையுடன் தைரியத்துடன் போராடினால் வெற்றி பெறலாம் என்பதையே நாங்கள் கூறுகிறோம். அதனை இன்று நாம் நிரூபித்துள்ளோம்.

போராட்டம், கைவிடாத போராட்டம், ஒற்றுமை இது தான் வெற்றி. அது எல்லா போராட்டங்களையும் முன்நகர்த்தக்கூடிய உயிர் நாடி. இப்பிரச்சனையில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் எவ்வாறு என்பதை கூறுவதும் முக்கியமானதே. ஒரு சமயம் சகோதரர் குமார் விசா வைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டார் என்றார்கள். இன்னும் ஒரு சமயம் விசா இன்றி நாட்டில் தங்கி இருந்தார் என்றனர். ஆனால் மிகவும் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் அரசியல் போராட்டத்தினுள் அவர்கள் கேள்வி கேட்கப்படும் போது, அவர்களாலேயே இப் பிரச்சனையை தீர்க்கும் மார்க்கத்துக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. எம் முன்னால் இருந்த ஒரு தடையை தகர்ப்பதற்கு எம்மால் முடிந்தமைக்காக நாம் மகிழ்வுறும் அதேவேளை அதனால் பிரச்சனை முடியவில்லை என்பதும் எமக்குத் தெரியும்.

நாம் அரசியல் இயக்கமாக இந்த மைல் கல்லை அடையும் போது, இந் நாட்டின் அரசியல் துடுப்பு எவ்வாறு திரும்புகிறது? நடைமுறை ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வுகள் எடுக்க முடியாது மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய நாளிதழ்களில், எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்னும் ஒரு மாதத்திற்கு பிற்போடப்படுவதாக சொல்லப் பட்டிருக்கிறது.

அப்படிச் சொல்லி உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடுகின்றனர். ஏன் இந்த தேர்தலை காலம் தாழ்த்துகின்றனர்? அவர்கள் முகம் கொடுக்கும் அரசியல் பிரச்சனை காரணமாகவே. இதுபுல்லுக்கட்டும், ஆடும், புலியும் போன்றது. இது அவிழ்க்க முடியாத இடியப்பச் சிக்கலாக இருக்கின்றது.

ரணிலுக்கு இந்த அரை அரசாங்கத்தைக் கொண்டு செல்ல மைத்திரி தேவை. மைத்திரிக்கு மகிந்த பலம் பெறுவதைத் தடுக்க ரணில் தேவை. மகிந்தவுக்கு தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. சர்வதேச ஏகாதிபத்தியங்களுக்கு இந்த அரசாங்கம் தேவைப்படுவது, மகிந்த மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியாத விடயங்களை, இவர்களைக் கொண்டு சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கே. இவர்களுக்கு எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. ஐக்கிய இராச்சிய ஏகாதிபத்தியங்களுக்கும், அவர்களது கூட்டு முகாம்களுக்கும் இந்தக் கூட்டு அரசாங்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தூதராலயங்களினால் அரசியல் தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் அவைகள் டொலர் அனுப்புவதில்லை. டொலர்கள் வருவது முதலீட்டாளர்கள் மூலம். நாடுகளைச் சுரண்டுவதற்கு உள்ளிட பார்த்துக்கொண்டிருக்கும், எப்போ நுழைவது என்று காத்திருக்கும் மூலதனக்காரர்கள் மூலமே.

அவைகளை கொண்டுவர முதலீட்டாளர்கள் வெறுமனே வருவதில்லை. அரசியல் தீர்மானங்கள் எடுப்பதற்காக வருவதில்லை. மூலதனம் இங்கு வருவது, முதலீடு செய்வது, கம்பனிகள் போடுவது அவர்களுக்கு இலாபம் இருந்தால் மட்டுமே. ரணில் விக்கிரசிங்காக்கள் இருப்பது ஐக்கிய இராசதானியோடவா அமேரிக்காவுடனா என்பது அவர்களுக்கு முக்கியம் இல்லை. முதலீட்டாளர்கள் வருகிறார்கள் என அரசாங்க தரப்பினர் பொய் கூறுகிறார்கள். கொண்டு வந்துவிட்டோம் என்றும் பொய் கூறுகிறார்கள். விக்கிரமசிங்கா ஐயா குளியாப்பிட்டியில் வொக்ஸ்வொகன் தொழிற்சாலை ஆரம்பிப்பதாக கூறினார். தற்போது என்ன நடந்துள்ளது?

இதற்கு சமமான விசித்திரமான கதை ஒன்று உள்ளது. நஸ்ருதீனுக்கு நடந்த சம்பவம் ஒன்று. நஸ்ருதீனுக்கு தேவைப்பட்டது தனக்கு மேல் மட்ட உயர்ந்த நண்பர்கள் இருப்பதாக ஊருக்கு காட்டிக்கொள்வது. அவர் ஒரு நல்ல ஒரு சட்டையைக் கழுவி கொடியில் காயப்போட்டார். காலணிகள் வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச்= சென்றார். ஊர்மக்கள் இதுபற்றிக் கேட்டனர். நஸ்ருதீன் கூறுகிறார் குறிப்பிட்ட திகதியில் குறித்த இளவரசன் வீட்டில் விருந்துக்கு போக வேண்டும் அதனால் தான் அதற்கு ஆயத்தம் ஆகிறேன் என்று. குறித்த நாளும் வந்தது. நஸ்ருதீன் போகாமல் ஒளித்து இருக்கிறார். ஊரார் எல்லோரும் விழாவுக்கு சென்றனர். ஊரார் எல்லோரும் போகும்போது நஸ்ருதீன் நினைக்கிறார், தான் பொய் ஒன்று சொன்னதற்கு மாறாய், உண்மையில் இளவரசர் வீட்டில் விருந்தொன்று நடப்பதாக. இப்போ ரணிலுக்கும் இதே நிலைமை தான். தான் சொன்ன பொய்யைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்த அரசியல் நெருக்கடிக்கு முன்னால் இருப்பது எமது நாடும், உலகும் முகம் கொடுத்து நிற்கும் பொருளாதார நெருக்கடியே. பொருளாதார நெருக்கடி என்பது கடன் என்று இவர்கள் கூறுகிறார்கள். மகிந்த கடன் எடுத்தாராம். இவர்களும் கடன் வாங்குகிறார்கள். பிறகு சொல்கிறார்கள், வியாபார மிகுதி அதிகமாம், ஏற்றுமதி இறக்குமதி அதிகமாம்.

முதலாளித்துவம் பலம்பெறும் போது அது தான் விளைவாகக் கிடைக்கிறது. நுகர்வுவாத பொருளாதார மாதிரியின் தன்மை அப்படித்தான் இருக்கும். பிறகு கூறுகிறார்கள், வரவு செலவு துண்டுவிடும் தொகை அதிகம் என்று. வரவு செலவு துண்டு விழுவது ஏன்?. 1977 இல் இருந்து கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கைகள் என்ன? திறைசேரிக்கு இலாபம் ஈட்டித்தந்த நிறுவனங்கள் அனைத்தையும் விற்றனர். இல்லை இல்லை என்கிற விமர்சகர்களிடம் நாங்கள் கேட்கிறோம், 77 இலிருந்து இந்நாட்டின் அரச நிறுவனங்கள் 41 ஐ இல்லாதொழித்தது நீங்கள் தானே? சந்திரிக்காவின் 1994 அரசாங்கமும் 39 அரச நிறுவனங்களை விற்றுத் தின்றது. எல்லாவற்றையும் விற்று ஒழித்தபின் தற்போது மிகுதியாக இருக்கும் ஒன்றிரண்டையும் விற்க துடிக்கிறார்கள். அது தான் அவர்களின் கொள்கை. உலக வங்கி, நிதிக்கட்டளை சொல்கிறது காணிகளை விற்றுவிடு என்று. அதையும் செய்கிறார்கள்.

15000 ஏக்கர் அம்பாந்தோட்டையில் விற்க முயற்சிக்கின்றனர். ஒரு சிறிய வீட்டைக் கட்ட 10, 15 பேர்ச்சுக்களை வாங்க வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களிடம் நாம் கேட்கிறோம் சீனாவுக்கு 15000 ஏக்கர் கொடுப்பது சரியா என்று?. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது மேலும் மேலும் கூடுமேயொழிய வேறொன்றும் நடக்காது.

அவர்கள் கூறும் இந்தப் பிரச்சனைகளுக்கும் முடிவு இருக்காது. கடந்தகாலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறினர், அந்தப் பிரச்சனைகள் இருப்பதோடு, ஊழல் துஸ்பிரயோகம் பிரச்சனைகளும் இருப்பதாக. திருட்டை நிறுத்த முடியாது. அவைகள் போராட்ட சுலோகங்களுக்கு நன்றாக இருக்கும். பழைய திருடர்களுக்கு பதிலாக புதிய திருடர்கள் மாற்றீடு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக இவர்கள் கூறுவது ஏழை, பணக்காரன் என்ற பிரச்சனை இருப்பதாக. அப்படி இருப்பது சிறந்தது சிறிய முதலாளித்துவ தோல் நோய்க்கு. எந்நாளும் சொறிந்து கொண்டு இருக்க முடியும். ஒருநாளும் அப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது. தீர்க்கவும் மாட்டார்கள். இவர்கள் அனைவரினதும் பட்டியலில் சமூகத்தின் உண்மைப் பிரச்சனை எரியும் பிரச்சனை இருப்பது கடைசிப் பக்கத்தில். அது தான் இந்தச் சமூகப் பொருளாதாரப் முறைமையின் முக்கியமான பிரச்சனை. அதைத் தீர்த்துக்கொள்ளாவிடில் எந்த ஒரு பிரச்சனைiயையும் தீர்த்துக்கொள்ள முடியாது.

கடன், வரவுசெலவு துண்டுவிழல், வியாபார மிகுதி என மந்திரம் சொல்கிறார்கள். தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு, பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்ட வேண்டும் என்கின்றனர்.

இப்படிச் சொல்வது கம்பனிக்காரர்களின் மடியை நிரப்புவதற்கே. இதற்கு எம்மிடம் கூறுகிறார்கள் சகித்துக்கொள என்று எமக்கு வரிகட்டச் சொல்கிறார்கள். இதுவே இவர்களிடம் இருக்கிறது.

நாங்கள் கேட்கிறோம் 1948 இல் இருந்து உங்களது பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கவில்லையா என்று. உங்களது பொருளாதாரம் எந்நாளும் நிறைந்திருக்கிறது. கஸ்டப்படும் மக்களின் பொருளாதாரம் மெலிவடைகிறது. அவர்களின் உரிமைகள் எந்நாளும் சுருக்கப்படுகிறது.

அது தான் உண்மை. அந்தக் கதையை மறைப்பதற்கு இந்தப் பொருளாதார வளர்ச்சி வேக பூச்சாண்டியை காட்டுகிறார்கள். கடந்தகாலங்களில் இந்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு தொற்றுநோய் பிடித்திருக்கிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து கொழும்பு (பெரிய ஆஸ்பத்திரியில்) வைத்தியசாலையில் இதய நோய்ப் பிரிவு மூடப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை நாளொன்றுக்கு நான்கு செய்ய முடியும்.

இருந்தாலும் அப்பிரிவு மூடப்பட்டுள்ளது. அது வைத்தியர்கள் இல்லாததனால் அல்ல. இதய நோய்ப்பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் இன்மையால், கட்டிடத்தில் பிரச்சனை காரணமாகவே மூடப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இன்மையால் தான் மூடப்பட்டுள்ளது. அது வைத்தியசாலையின் பிரச்சனை இல்லை. நாட்டை ஆளுபவர்களின் கொள்கையின் பிரச்சினை.

இதனால் கடந்த வருடம் 250 சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. ஒரு வருடத்துக்கு மேல் நோயாளர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சுகாதார சேவை இந்நாட்டு சாதாரண மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்றியா உள்ளது?

இல்லை. மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. யாருக்கு நீதி கிடைத்துள்ளது? சுகாதார அமைச்சர் நெஞ்சுவலிக்காக சிங்கப்பூர் செல்கிறார். இந்நாட்டில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பாடுபடும் உழைப்பாளிக்கு நெஞ்சுவலி வந்தால் சிகிக்சைக்காக ஒரு வருடம் ஒன்றரை வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது தான் கொள்கை.

இந்த நாட்டில் அரிசி மாபியா எப்படி இருக்கிறது? அரிசி விலையைப் பாருங்கள். சம்பா கிலோ நூறு ரூபாய், நாட்டரிசி கிலோ 90 ரூபாய். கடந்த போகத்தில் அறுவடை செய்த அரிசி இன்னும் களஞ்சியங்களில் இருக்கின்றது. இன்னும் 3 மாதத்திற்கு, மே மாதம் வரை உண்பதற்கு அரிசி களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாடு இல்லை. 32 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்தால் உற்பத்திச் செலவோடு 58 ரூபாய்க்கு விற்க முடியும். 60 ரூபாய் என்போம். 60 ரூபாய்க்கு விற்றால் ஆலை உரிமையாளனுக்கு இலாபம் உண்டு. அப்படி இருந்தும் தற்போது விற்கும் விலை எவ்வளவு? அரிசி கிலோ 90, 100 ரூபாய்கு விலை போகிறது. 30 ரூபா கொள்ளை அடிக்கிறார்கள். நிபுன ஆலையில் நாளொன்றுக்கு 10 இலட்சம் கிலோ அரிசி எடுக்கப்படுகிறது. அரலிய ஆலையில் ஏழரை இலட்சம் கிலோ அரிசி அரைக்கப்படுகிறது. 3 கோடி ரூபாய் நாளொன்றுக்கு கொள்ளை இடுகிறார்கள். விவசாயியின் மகன் நாட்டை ஆளும்போது மக்கள் 100 ரூபாய்க்கு அரிசி வாங்கும் நிலை காணப்படுகின்றது. இது தான் நிலமை.

சிலர் நினைக்கிறார்கள் விவசாயி தான் இந்த அரிசி விலையை ஏற்றியுள்ளான் என்று. இல்லை விவசாயிக்கு விலையேற்றத்தால் எந்த இலாபமும் இல்லை. இது தான் உண்மை.

இந்த இலாபம் விவசாயிக்கு கிடைக்கிறதா? இல்லை. நாட்டிற்கு சோற்றைக் கொடுக்கும் விவசாய பிரதேசங்களில் தான் குறையூட்டம் அதிகமாக காணப்படுகிறது. விவசாயியின் நெல்லை இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். விவசாயியின் பிள்ளை குறையூட்டம் கொண்டதாக உள்ளது. இது தான் இவர்களின் பொருளாதாரக் கொள்கை. இது தான் முதலாளித்துவக் கொள்கை. இதனிடையில் அரசாங்கம் கூறிய விடையம் ஒன்று ஜனவரி மாத பத்திரிகையில் காணப்பட்டது. 2017 இல் ஏழைகள் இல்லாத வருடமாக மாற்றுவார்களாம். ஏழைகள் என்போர், மாதத்துக்கு 3000 ற்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள். அதாவது நாளொன்றுக்கு 100 ரூபாவுக்கும் குறைவான வருமானத்தில் அரிசி ஒரு கிலோவும் தேங்காய் ஒன்றும் வாங்க முடியுமா? வறுமையை இல்லாது செய்வார்களா? அதாவது ஏழைகளைக் கொன்றொழிப்பது தான் செய்யமுடியும்.

உங்களுக்குத் தெரியும் இந்த பொருளாதாரவாதத்தின் உள்ளே தமது குடும்பத்தை வாழ வைக்க, வீடு வாசல் கட்டிக்கொள்ள மக்கள் படும் கஸ்டம். நாகரீகத்தில் இலட்சக்கணக்கான வருடங்கள் மக்கள் போராடியது இருக்க இடம் ஒன்றை தேடிக் கொள்ளவே. இன்று அப்பிரச்சனை எவ்வாறு பாவிக்கப்படுகிறது?

வங்கிகளில் இலாபவீதத்தை உயர்த்த இப்பிரச்சனையைப் பாவிக்கின்றனர். கடன் பெற சென்றால், கடன் பெற்ற மனிதன் அதைச் செலுத்த முடியாது கஸ்டத்தில் வாழுகிறான். அதை நினைத்து நினைத்தே பகுதியாகக் கட்டப்பட்ட வீட்டை எப்போது முடிக்கப்போகிறோம் என்று நோயாளி ஆகின்றான். இது தான் இன்று மக்களின் உரிமையாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆட்சியாளருக்கு, ஆட்சிக்குழுவுக்கு அங்கு ஒரு வீடு, இங்கு ஒரு வீடு என பல வசதிகள் இருக்கின்றன. சாதாரண மனிதன் வீடு ஒன்று கட்டிக்கொள்ள ஆயுள் முழுதும் கடன் செலுத்துகின்றான். இலங்கையில் இலாபமீட்டும் நிறுவனங்கள் 25 இல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 12 உள்ளன. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நாட்டு மக்களைக் கசக்கிப் பிழிகிறார்கள். இவை அனைத்துக்கும் மத்தியில் இன்னும் எமக்கு என்ன நடந்துள்ளது? எமது சமூக வாழ்வியல் புதைக்கப்பட்டிருக்கின்றது. யாரோ ஒருவரின் இலாபத்திற்காக நாம் நசுக்கப்படுகிறோம்.

அது தான் இந்த பொருளாதாரத்தின் தன்மை. இதற்கு தீர்வு ஒன்று அவசியம். அந்தத் தீர்வு வேறொன்றும் இல்லை. சோஷலிசம், (பொதுவுடமை) அது தான் தீர்வு. நாங்கள் மட்டும் கூறவில்லை.

உலக சுகாதார இயக்கம் கூறுகிறது. சுகாதார நிலைமையை உயர்த்த வேண்டும் என்றால் நடைமுறையில் உள்ள சமூக நிலைமைகளை மாற்ற வேண்டும் என சொல்கிறது.

சமூக நிபந்தனைகளை மாற்ற வேண்டும் என சொல்லப்படுவது என்ன? வேறொன்றும் இல்லை. சோசலிசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதையே வேறுவிதமாதக் கூறுகிறார்கள். அவர்களுக்கு அதை வேறுவிதமாகக் கூறவேண்டியுள்ளது.

தற்போது இந்நாட்டு ஆட்சியாளருக்கு தேர்தல் காலத்தில் கூறியவைகள் கணக்கில் இல்லை. லலித், குகன் காணாமலாக்கப்பட்டது கணக்கில் இல்லை. லசந்த கொலை, பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டது கணக்கில் இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதாக கூறியது என்னவாயிற்று? அந்நேரத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்தனர். இப்போது சொல்கிறார்கள் இல்லாது செய்வது தேவை இல்லை என்று.

தற்போது லகிரு வீரசேகர சிறையில். தனியார் பட்டநிறுவனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்று தீர்ப்புக் கூறுகிறது. அப்படியானால் ஜனநாயகம் தொடர்பான பிரச்சனை தற்போது தோன்றியுள்ளது.

தற்போது இனவாத, தேசியவாதக் குழுக்கள் காணப்படுகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு அவர்களை ஆட்சிக்கு கொண்டுவருமாறு அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் இறந்து பிறக்கவில்லை.

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னான வரலாறு எமக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அவர்களால் கொடுக்கக்கூடிய தீர்வொன்றும் இல்லை. ஜே.வி.பி தற்போது முயற்சிக்கின்றது இந்தப் போராட்டத்தில் முன்னுக்கு வருவதற்கு.

எதிர்ப்புக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர் ஏன் இது? முன்னால் ஒரு தேர்தல் இருப்பதனால் தான். இரண்டு வருடங்களாக விக்கிரமசிங்காக்களுடன் ஒட்டி உறவாடினர். தனியார் பல்கலைக்கழகப் பிரச்சனை இந்த இரண்டு வருடங்களாக ஜே.வி.பிக்கு முக்கியமாகப்படவில்லை. கைவிரல் அடையாளச் சட்டம் கணக்கில் இல்லை. கைது செய்து 24 மணி நேரத்துக்குப் பதிலாக 48 மணி நேரம் அடைத்து வைத்தல் கணக்கில் இல்லை. இவை ஒன்றுக்கும் கதைக்காது இருந்து தற்போது துள்ளுகின்றனர்.

எமது மாநாட்டின் கருப்பொருளானது சோசலிசத்துக்காக வர்க்கத்துக்கொரு கட்சி! தீர்வு இருப்பது அவ்விடத்திலேயே. நாம் இருட்டில் இருந்தாலும் ஒரு ஒளிக்கீற்று எப்போதும் இருந்தது. என்ன அந்த ஒளிக்கீற்று? இன்னும் வளர்ச்சியடையாவிட்டாலும் உலக செயற்பாட்டில் முதலாளித்துவத்துக்கெதிராக மக்கள் போராடினார்கள்.

சோசலிசம் மரணித்துவிட்டதாக வரலாறு தற்போது இல்லை. இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகு உழைக்கும் மக்கள் போராட்டம் மேடைக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 2ம் திகதி நடந்தேறிய வேலைநிறுத்தப் போராட்டம், உலக வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் ஆகும். இந்த அணிவகுப்புக்குள் இருக்கும் நிலைமையை கண்டு நாம் சரியாக கணித்து கூறுகிறோம். ஒடுக்கப்பட்ட வர்க்க மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

பிரான்ஸ் தொழிலாளர்கள், கொரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அமெரிக்காவின் பல மாநிலங்களில் வேலைநிறுத்தங்கள், பிரித்தானியாவில் வேலைநிறுத்தங்கள், இடம்பெற்றது. உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழுந்து கொண்டிருக்கின்றனர். முதலாளித்துவ ஆட்சியாளர்களே, உங்கள் முடிவு வெகுதொலைவில் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

கலைஞர்களுக்கு, சூழலியலாளர்களுக்கு, புத்திசீவிகளுக்கு நாங்கள் கூறுகிறோம். உழைக்கும் மக்கள் பக்கம் திரும்புங்கள். அந்த வர்க்கத்தினருக்கு தனித்து நின்று ஜெயிக்க முடியாது. அந்த வர்க்கத்தினருக்கு கட்சி ஒன்று அவசியம். நாங்கள் கூறவில்லை, வர்க்கத்தின் கட்சி நாங்கள் என்று. நாங்கள் வர்க்கத்தின் கட்சியாவதற்கு முயற்சிக்கின்றோம். இன்று வர்க்கத்தின் இயக்கம் ஒன்று தேவைப்படுகின்றது.

அந்த மட்டத்திலாவது இயக்கமாவது முக்கியம். வேலைத்தள, தொழிற்சங்க மட்டத்தில் இயக்கமாதல் வேண்டும். இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. அரசியல் கட்சி என்ற ரீதியில் இயக்கமாதல் வேண்டும்.

சுயாதீன தொழிலாளர் இயக்கம், சுயாதீன மாணவர் இயக்கம் என்பது தவழும் காலக் கதை. எந்நாளும் தவழ முடியாது. தவழ்வது அல்ல தொழிலாளர் இயக்கத்தின் உரிமை. அதை தாண்டி வெளியே வரவேண்டும். நாம் அரசியல் கட்சி, விடுதலைக்கட்சி, சமூக முறைமையை மாற்றுவதற்காக போராடும் கட்சி என்ற இடத்திற்கு வரவேண்டும்.

அதனால், 2 வது தேசிய மாநாட்டை முன்னெடுக்கும் இவ்வேளையில், எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் முகம் கொடுத்திருக்கும் பிரச்சனை விசாலமானது.

அவர்கள் இப்பிரச்சனைகள் காரணமாக நாள்தோறும் வேதனைப்படுகிறார்கள். இடதுசாரியம் தொடர்பாக நம்பிக்கை கொள்ளமுடியுமா? சோசலிசம் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியுமா? கட்சித்தலைவர்கள் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியுமா? என்று எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்தகால வரலாறு முழுக்க அதைக் கேட்டனர். அந்ந நம்பிக்கையை வைக்க முடியும். முன்மாதிரியாக குறுகிய காலமானாலும் நாம் அதனைக் காத்து வந்துள்ளோம்.

அதனால் நம்பிக்கை மீது கேள்வி எழுப்பாமல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புபவர்களாக மாறுவோம். இம் மாநாடு அந்த உண்மையான நோக்கத்திற்காக செய்யப்பட்டதொன்றாக நீங்கள் கட்டியெழுப்புபவர்களாக இடம் பிடிப்பீர்கள்.

உழைக்கும் மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பதில் தேவைப்படுகிறது. அந்தப் பதில் தான் சோசலிசம். அந்த சோசலிசத்தைக் கட்டியெழுப்ப போராடும் கட்சி ஒன்று தேவை. அந்த கட்சியை கட்டியெழுப்ப நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் முன்வாருங்கள்.

உங்களுக்கு சக்தியும் தைரியமும் உண்டாவதாகட்டும்.