Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிசக் கட்சியும், இடதுசாரியப் பாரம்பரிய உடைப்பும்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் மாசி மாதம் முதலாந் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. 3500 க்கும் மேற்பட்ட பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த உலக இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதிகள், சகோதரக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் காங்கிரஸ் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகியது.

மாநாட்டு மண்டபவாசல் முழுவதும் உலக இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு தொடக்கம், முன்னிலை சோசலிசக் கட்சியின் வரலாறு வரை ஆவண நிழற்படக் கண்காட்சிப் பதாகைகளால் நிரம்பியிருந்தது. கார்ல் மார்க்சின், கேகேலிய விமர்சனம் தொடக்கம் கம்யூனிசக் கட்சி அறிக்கை, பிரஞ்சுப்புரட்சி, லெனினியத்தின் உருவாக்கம், மாபெரும் ருஸ்யப் புரட்சி, மாவோ தலைமையிலான சீனப்புரட்சி, லெனினின் இறப்புக்குப்பின்னால் ஸ்டாலின் - துரொட்ஸ்கியில் ஆரம்பித்து உலக இடதுசாரிய இயக்கத்துக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள், சிலோன் கம்யூனிஸட் கட்சியின் ஆரம்பம், ஜேவிபி யின் உருவாக்கம், ஜேவிபி தலைமையிலான இரு புரட்சிகர நடவடிக்கைகள், அவற்றின் போதான தோல்விகள், ஜேவிபி இன் சமரசவாதம் மற்றும் இனவாதம் தொடர்பான உட்கட்சி முரண்பாடுகள், இறுதியாக முன்னிலை சோலிஸக் கட்சியின் தோற்றம் அதன் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் புகைப்படங்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இக் கண்காட்சியில், பலரையும் கவர்ந்த அல்லது அதிசயிக்க அல்லது ஆத்திரப்பட வைத்த பகுதி, லெனினிக்குப் பின்னான உலக இடதுசாரிய இயக்கத்தில் ஏற்பபட்ட முரண்பாடுகள் பற்றிய காட்சிப்படுத்தலில் ஸ்ராலின், ட்ரொட்ஸ்கி மற்றும் மாவோ ஆகிய தலைவர்களின் படங்கள் ஒரே வரிசையில் இணைக்கப்பட்டு காட்சிப்படுத்தபட்டிருந்ததாகும்.

மேற்கூறிய மூன்று தலைவர்களின் காலத்தில், உலக இடதுசாரிய இயக்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாடுகளின் அடிப்படையிலேயேயே இன்றுவரை (2017) கட்சிகள் இயங்கி வருகின்றன. மார்க்சிஸ - லெனினியத்தைக் பின்பற்றுவதாக கூறினாலும், கட்சிகளுக்கிடையிலான தத்துவ முரண்பாடுகளும் கூட மேற்படி மூவரின் "தத்துவப்பாரம்பரியத்தின்" அடிப்படையிலேயேயே கையாளப்படுகிறது. இதனால், இம் மூவரின் பாரம்பரியத்தையும் பின்பற்றுவோருக்கு இடையிலான கருத்து வித்தியாசங்கள், பகை முரண்பாடுகளாகவே நடைமுறையில் இருந்து வருகிறன. சில கிறீஸ்தவக் குழுக்கள் தாம் மட்டுமே உண்மையான கிறீஸ்தவர்கள், புனிதர்கள் எனக் கூறுவது போல, துரொட்ஸ்கிய கட்சிகள் மற்றும் குழுக்கள் தாம் மட்டுமே உண்மையான மார்க்சிஸ கட்சிகள் எனப் பறைசாற்றி வருகின்றன. நடைமுறையில், பல நாடுகளில் இவை சமூக ஜனநாயகக் கட்சிகளின் தொங்கு தசைகளாகவே இயங்குகின்றன. இதேபோல, ஸ்ராலினிச- மாவோயிச கட்சிகள் இன்றும் "ஒருகட்சி - ஒரு நாட்டுக்குள்ளான புரட்சி என்ற தோற்றுப்போன தத்துவத்தையே பின்பற்றி வருகின்றன. இக்கட்சிகளினுள் "குறுங்குழுவாதம்" (sectarianism) கண்டிப்புடன் கூடிய தூய்மைவாதம் (puritanical), கட்சியை முன்னிறுத்திய சர்வாதிகாரப் போக்கு என்பன இன்றுவரை தொடர்கிறது.

அதேவேளை, மார்க்சிச - லெனினியம் அல்லது மார்க்சிசம் எந்தவிதத்திலும் முன்னணி வகிக்கும் தத்துவமாக- நடைமுறையாக இன்று உலகின் எந்த மூலையிலுமில்லை. இன்று இடதுசாரிய இயக்கம் தோல்வியுற்று, முதுகெலும்பு முறிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. ஸ்ராலின், ட்ரொட்ஸ்கி மற்றும் மாவோவின் கோட்பாடுகளை, அவர்களின் இறப்புக்குப்பின்னாடி 100 வீதம் முன்னிறுத்தி எங்கும் வெற்றி கண்ட வரலாறுகள் இல்லை.

ஆகவே, இந்நிலையை மாற்ற வேண்டிய கடமை உழைக்கும் மக்களின் அரசை உருவாக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சிகளுக்குமுண்டு. லெனினிக்குப் பின்னான, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், இன்று தேவையற்றவை, அல்லது நடைமுறையில் எந்த விதத்திலும் உதவாதவை. இந்நிலைப்பாட்டை முன்னிறுத்தி உலக இடதுசாரிய இயக்கம் இணைந்து செயற்படவேண்டிய காலமிது. இதன் அர்த்தம் கட்சிகள் தமது தனித்தன்மையை விட்டுக்கொடுப்பதல்ல. தேவையற்ற முரண்பாடுகளை முன்னிறுத்தி அடிபடுவதை விட, ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் அங்கீகரித்துக் கொண்டு, இடதுசாரியத்தின் பன்மைத்துவத்தைப் பலப்படுத்தியபடி, உலகளாவிய முதலாளித்துவப் பொது எதிரிக்கு எதிராக அணி திரள்வதே இன்றைய தேவையாகும்.

இதுவே முன்னிலை சோசலிசக் கட்சியின் 2.வது காங்கிரஸ் எம் அனைவருக்கும் கற்றுத்தர முனையும் முக்கிய அரசியற்பாடமும் ஆகும்!