Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .

யாழ். ரயில் நிலையம் மற்றும் பேரூந்து நிலையம்:

காலை 6.55 . 15.10.2017 

எங்கும் சிங்கள மொழிக் குரல்கள். சிங்கள மொழிபேசும் சகோதர சகோதரிகள் நாகரீக உடைகளின் தமது லேப்டாப் பைகளை அழகாகத் தம்  தோழ்களில் தொங்க விட்டபடி ஓட்டோ ரிக்ஸாகளில் ஏறி நகரின் பிரபல நட்சத்திர விடுதிகளுக் சொல்லுமாறு பணிகின்றனர். இவர்கள் அனைவரும் தெற்கின் புத்தி சீவிகளும் கலைஞ்யார்களுமாம். இவர்கள் திரைப்படம், கவிதை, அரசியல், சமூகவியல் , மனித உரிமைகள் போன்ற அனைத்து  வியங்களிலும் வித்தகர்களாம். அதைவிட அவர்களிற் பலர் இலங்கையின் பிரபலமான பத்திரிகை நிருபர்களும், பத்தி எழுத்தாளர்களுமாம் .  யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவுக்காக சில நாட்கள் யாழில் உள்ள நட்சத்திர விடுதிகளில் முகாமிடவுள்ளனராம். 

யாழ்.பஸ் நிலையம் :

காலை 8.00. 

மூன்று சிறுவாகனங்கள் யாழ். பஸ் நிலையத்தை சுற்றி  வருகின்றன. தாம் தேடியது காணக்கிடைக்காதவர்களாக, ஆட்டோ ஓட்டுநர்களிடம் புத்தூர் மயானதுக்கு எதிரான  போராட்டம் எங்கு நடக்கிறதென விசாரிக்கின்றனர். விசாரணையில் எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.   அவசர அவசரமாக யாழில். உள்ள தமக்கு தெரிந்தவர்களுடன் தொலைபேசி ஊடே தொடர்பு கொள்கின்றனர். இவர்களும் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், இவர்கள் பல்லினத்தவர்கள். இடதுசாரிக் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள். பூத்தூரில் உள்ள கலைமதி கிராமமக்கள் அவர்களில் ஊரின் நடுவில் இருக்கும் மயானத்தை அகற்ற போராடுகின்றனர். தமிழ் தலைமைகள், சமுக தலைவர்கள், மாகாண சபை அதிகார வர்க்கங்கள்   மக்களின்  கோரிக்கைகளை கண்டு கொள்ளாததனால், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றை யாழ் . மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண சபைக்கு முன்பாக நாடாத்த வந்துள்ளனர்.

 

யாழ். ஊடக நிறுவன அலுவலகங்கள் நேரம்.

காலை 8.00. 

 

யாழ்.ஊடகவியலாளர்கள் இன்றய நாள்  தமது பணிக்குத் தயாராகுகின்றனர். 

- "இண்டைக்கு நடக்கிற முக்கிய நிகழ்வுகள் என்ப்பா "   

-" இண்டைக்கு முக்கியமானது யாழ்ப்பாணம் பிலிம் பெஸ்டிவல் , அதைவிட ... வேற ஒன்றுமில்லை. “

- " எதோ சயிக்கிள்காரர் நினைவு தினம் கொண்டாடுறத கேள்விப்பட்டான்..... ???? "

-  " ஓம் ஓம் .... "

-"அப்ப, எல்லாரையும் மாஜிஸ்ட் சிட்டிக்கு போக சொல்லுங்கோ . அனோமாவுக்காக நாம் எது வேண்டுமோ அதெல்லாம் செய்ய வேணும். நானும் அவாவை இண்டைக்கு இரவுக்கு ஜேட்விங்கில சந்திக்க இருக்கிறன். இண்டைக்கு இரவுப்  பாட்டிக்கான உங்களுக்கான இன்விரேசன் என்ற காருக்க கிடக்கு. பிறகு தான் .  நியாபகப்படுத்து. " ...

மற்றது, நேரமிருந்தால் சைக்கிள் காரரையும் ஒருக்கா கவர் பண்ண பாருங்கோ. முக்கியமில்லை. "...

 

நல்லூர் பிரதேசம்.

காலை 9.00 

ஒரு தமிழ் தேசியக் கட்சியின் தொண்டர்கள் சிலர்  திலீபனின் நினைவைக் கொண்டாட ஆயத்த வேலைகளின் ஈடுபடுகின்றனர்.  

 

யாழ்.மாவட்டச் செயலகம்  

காலை 10.00

 

தெற்கு, வடக்கு, மலையகம், கிழக்கு என நாட்டின் எல்லாத்திசையும் இருந்து வந்த கட்சிகளின் தலைவர்களும் மக்களும் இணைத்து கோஷங்களை எழுப்புகின்றனர். பெண்களின் குரலே விண்ணைமுட்டுகின்றது. 

-"மாகாண சபையே! குடியிருப்புக்கு மத்தியில் மாயனங்கள் வேண்டாம் " -" அகற்று ! அகற்று ! மயானங்களை அகற்று ! " 

-"உழைக்கும் மக்கள் மனிதர்கள் இல்லையா ? "  -" நாங்கள் தமிழர்கள் இல்லையா " -"ஆதிக்க சக்திக்கு அடிபணிகிறதா ? மாகாணசபை !" . 

நேரம் போகப் போக  கோசங்கள் போடும் வேகமும் குரல்களும் ஓங்குகின்றது. இடையில் சிங்களத்திலும் சிலர்  கோஷமிடத் தொடங்கினர்.

போராட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் பெருமிதமாக தெற்கில் இருந்த வந்த  ஒருவரை நோக்கி 

- "தோழர் . எவ்வளவு பேரிருக்கும் " ....... ?

-" ஆயிரத்துக்கு கூடத்தான் . நான் இங்க கண்ட மக்கள் போராடத்தில இது தான் பெரிசு. காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடந்த போராட்டங்களை விட இது பெரிசு .. கன  சனம் வந்திருக்கு தோழர் .... .   தோழர் ? .... இப்போ 11 மணிக்கு மேல ஆயிற்றுது. ஒரு மீடியா காரரையும் காணவில்லையே ? ஏன் ? " .    

போராட்டத்தில் பங்கு கொள்ளும் மக்கள் தொகையைப் பார்த்து  பெருமிதமாகவிருந்த ஏற்பாட்டாளர் -" தோழர், நாங்கள் ஏற்கனவே மூன்று நாளைக்கு முன்பே இப்போராட்டத்தைப் பற்றி அவங்களுக்கு அறிவித்து விட்டோம். அவங்களட்ட  இந்த மக்களின் கோரிக்கைக்கு எதிரான கருத்துக்களே நிலவுது. வந்தா வாறாங்கள் . அதுக்கு மேலே நாம ஒன்றும் செய்ய முடியாது. ...... " . 

 

யாழ். மாஜிஸ்ட் சிட்டி, கார்ல் ஹில்ஸ்  வளாகம் .

காலை 10.00 

 

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இயக்குனர் அனோமா ராயகருணா;  தன் சிங்கள  கலை இலக்கிய தொண்டரடிப்பொடிகள் ஒருபக்கம், தாமும் ஒரு பொருட்டு என காட்டிக்கொள்ளப்  போட்டிபோடும் ஈழத்து திரைப்பட உலகம் ஒருபக்கம் புடை சூழ வலம்  வருகிறார். விளக்கேற்றுகிறார் . விழா ஆரம்பித்ததை அறிவிக்கிறார்.  அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு தமது பிரசன்னத்தை அனோமாவுக்கு தெரிவிக்கின்றன. எல்லா கோணத்திலும் படங்கள் எடுக்கப்படுகிறது. அரைகுறை ஆங்கிலத்தில் சந்தோஷப்படுத்தும் விடையங்கள் கூறப்பட்டு, அதுபற்றிய கருத்துக்கள் கேட்கப்படுகிறது.  

-" யாழில். உங்கள் சர்வதேச விழா நடத்த தொடங்கிகிய பின்னர் தான், ஈழத்து திரைப்பட துறை முளைவிட தொடங்கியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து  என்ன ??  "

-"தமிழ்- சிங்கள மக்களிடையே சமாதான கருத்து உங்களால் தான் விதைக்கபடுக்குகிறது . இது பற்றிய உங்கள் உணர்வுகளைக் கூற முடியுமா ? " 

 

அனோமா சிரித்தபடி, பெருமையாகக்  கூத்தலை தான்   வலது கரத்தாற்  கோதியபடி  சிங்கிலீசில் பதிலளிக்கிறார். அடிக்கடி சிரிக்கிறார். எல்லா ஊடக நிருபர்களிடமும் குசலம் விசாரிக்கிறார். ஊடக தலைமை ஆசிரியர்களை கேட்டதாகக்  கூறுபடி, அங்கு பிரசன்னமாகியுள்ள ஒவ்வொரு நிருபரிடமும் கூறுகிறார். தெற்கில் இருந்து வந்த  சிங்கள மற்றும் ஆங்கில ஊடக வியலாளர்களிடம் அவர்களின் பயணத்தைக் பற்றியும் , நட்சத்திர விடுதிகளில் உள்ள தங்கு  வசதிகள் பற்றியும்  விசாரிக்கிறார். அதற்கு மேலால் இரவு நடக்கவுள்ள விருந்துபச்சாரத்தை நினைவு படுத்துகிறார். வீணிவடிய நிருபர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.        

வடமாகாண சபை முதலமைச்சர் அரண்மனை.

மதியம் 12.30 மணி.

மயானத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள்  யாழ்.மாவட்டச் செயலகத்திலிருந்து புறப்பட்டு  முதலமைச்சரின் வாசஸ்தலத்தை. மதியம் 12.30 மணிக்கு முறுக்கை இடுகின்றனர்.  மனுக்கொடுக்க முனைகின்றனர். 30 நிமிடங்களுக்குமேலே சென்றும் வாசஸ்த்தலத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை. கோஷங்கள் எழுப்படுகிறது. காவலர் ஒருவர் முதலமைச்சர் கைதடி தலைமை அலுவலகத்தில் என அறிவிக்கிறார். இப்போதும் எந்த ஊடகமும் வரவில்லை. மக்கள் தமக்கு கிடைத்த வாகனங்களில் ஏறி கைதடி  வடமாகாண சபைத் தேடிப் பயணிக்கின்றனர். 

 

வடமாகாண சபை தலைமையகம், கைதடி.

மதியம் 13.00. 

 

வடமாகாண சபை தலைமையக வாசல் மக்களால் முற்றுகை இடப்பட்டு கோஷங்கள் எழுப்பப்படுகிறது. தனது பாதுகாவலர்களுடன் வாகனத்தில் அமர்ந்தபடி வடமாகாண சபை வளாகத்திலிருந்து வெளியேற வந்த எதிர்கட்சித் தலைவர் தவராசா, வாசலில் நிற்பது புத்தூர் போராட்டக்கரார்கள்  என அறிந்ததும், பின்வாங்கி வேறு கதவால் வெளியேருகிறார். இதேவேளை போராட்டக் களத்துக்கு  போலீஸ் வரவழைப்படுகிறது. தவராசாவை பாதுகாக்க போலீஸ் வந்ததாக மக்கள் குசுகுத்தனர். தவராசாவும்   வடமாகாணசபை  தலைவர் சிவஞானமும் சில வாரங்களுக்கு முன்பே தான்  சுடலையைப் பாதுகாக்க, தேவை என்றால்  கலைமதி   கிராமத்தையே அகற்றவும் தாம் தயங்க மாட்டோமென அறிவித்திருந்தனர். 

எதிர்கட்சித் தலைவர் தவராசா வெளியேறிய சில நிமிடங்களில் போராட்டக்கார்களின் பிரதிநிதிகளை உள்ளே வருமாறு அழைப்பு வருகிறது. பிரதிநிதிகள் உள்ளே போகின்றனர். 

-"மச்சான், எங்கயாட இந்த பேப்பர் காரரும் டிவி-காரரும். இவங்கள் சரியான ஆக்களெண்டால் , தவராசா தப்பி ஓடினத்தையும், நாங்கள் வடமாகாணசபை வாசல முற்றுக்கை இட்டதையும், விக்கினேஸ்வரன் எங்களை 2 மணித்தியாலம் வெயிலுக்க காய வைத்ததையும் உலகத்துக்கு  காட்ட வேணும். " ... . 

 

ஜெட்விங் நான்கு நட்சத்திர விடுதி

13.00

23 வகை உணவுப் பாதார்தங்களை  உள்ளடக்கிய     " பூபெ" யுடன்   வைன், வோட்கா, லயன் பியர் உட்பட்ட மதுபானங்களுடன் யாழ்ப்பாண சர்வதேச சினிமா பேசிடிவால் vip-க்களுக்கும், மீடியா பெர்சென்-களுக்கும் லஞ்ச் பரிமாறப்படுகிறது. அனோமாவும் அவரின் அணியும், அவ்விடுதியின்  மொட்டை மாடி பாறில் ( Top roof bar )  இரவுக்கு நடக்கவிருக்கும் பாட்டியை எல்லோருக்கும் நினைவுபடுத்துகின்றனர்.   "எல்லாம் இலவசம் . உங்கள் தொழில் தர்மத்தை விற்க நீங்கள் தயாரானால் " . 

 

வடமாகாண சபை தலைமையகம், கைதடி.

மதியம் 13.30 .

 

 

 

கொழும்பில் உள்ள  பலமான  டிவி மற்றும் வானொலி நிருபர் வேர்க்க விறுவிறுக்க போராட்டகளத்துக்கு  வருகிறார். போராட்டத்தில் பங்கு கொள்ளும் இடதுசாரிக் கட்சித் தலைவர் ஒருவர்  எரிச்சல் அடைந்து, மகாராஜா மீடியா நிறுவனத்துக்கு தொலைபேசியில் சிங்களத்தில் அர்ச்சனை பண்ண - அதன் விளைவு தான் மேற்படி நிருபரின் வரவு என விபரமறிந்த வட்டாரங்கள் முணுமுனுத்தன. 

 

என்ன இருந்தாலும் வந்த நிருபர் தன்  தொழிலை நேர்மையாக செய்ய முயன்றார். போராடும் மக்கள் தலைவர் ஒருவரை பேட்டி கண்டார். 

அதேவேளை, களத்தில்  நின்ற சிலருக்கு யாழ்ப்பாண ஊடகங்ளிலிருந்து   தொலைபேசி அழைப்புகள் வருகின்றன .

- " நாங்கள் திலீபன்ர  நினைவு நாள் நிகழ்வுகளை கவர் பண்ணுறம் . போட்டொ எடுத்து அனுப்புங்கோ நாங்க நாளைக்கு  செய்தி போடுறம்" ............ .

 

வடமாகாண சபை தலைமையகம், கைதடி.

மதியம் 2.30. 

 

இப்போது கூட மக்களின் கோசத்தில் உக்கிரம் குறையவில்லை. உள்ளே அழைத்துச்செல்லப்பட்ட  மக்கள் பிரதிநிதிகள் பிரதான வாசலுக்கு வருகின்றனர். வடமாகாணசபை பிரதமர் விக்கினேஸ்வரன் வரும் ஞாயிற்றுக்கிழமை கலைமதி கிராமத்துக்கு வருவதாக- நேரம் ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. 

தண்ணீர்தாகமும், பசியும் மேலோங்க மக்கள் தமது போராட்த்தைத் தொடர புத்தூருக்கு புறப்படுகின்றனர்.

 

ஜெட்விங் நான்கு நட்சத்திர விடுதி.

முன்னிரவு, நேரம் 7.00. 

ஆடம்பர ஆடைகள் அணிந்த " இலங்கையில் முற்போக்கு - இலக்கிய " புத்திசீவிகள் கையில் கிளாசுகளுடம்    மொட்டை மாடி பாறில்  ( Toproof bar )  வலம்  வருகின்றனர். இன , மத, பிரதேச வித்தியாசமின்றி ஊடகவிலையாளர்கள் யாழின். அழகை  ரசிக்கின்றனர். மது கிண்ணங்கள் அவ் இரவின்  சிறு துளி நேரம் வரை நிரப்பப்படுகிறது. 

 

யாழ்ப்பாண நகரம்

அதிகாலை . 4.00 மணி .

 

I am barbie girl- in the barbie world என்ற உலக கீதங்களுடன் தமிழ் சின்ஹல குத்துபாடல்கள் இசைக்கப்படுகிறது. சோடி சோடியாக இனங்களுக்குள்   உறவை மென்மேலும் இறுக்கிக் கொள்கின்றனர். What a wonderful world என்ற சர்வதேச கீதத்துடன் ஆரத்தழுவிய அசைவுகளுடன் பாட்டி  நிறைவுக்கு வருகிறது...... . 

 

புத்தூர் கலைமதிக் கிராமம் -

காலை 5 மணி. 

 

போராட்ட பந்தலில் இரவுக்கு நேர சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டோர் தமது தொழில்களுக்கு போக தயாராகின்றனர். அவர்களை வழியனுப்பி போராடத்தைத் தொடர பெண்களும் சிறுவர்களும் சில ஆண்களும் போராட்டப்  பந்தலை நிரப்புகின்றனர். 

கிழக்கில் வெள்ளாப்பூ கீறுகின்றது. இன்னும் சிறு துளி நேரத்தில் விடிந்து விடும்.