Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆட்சி மாற்றம் ஒரு தீர்வா?

ஆட்சியாளர்கள் பரந்துபட்ட மக்களிடம் அம்பலப்படும் போது, ஆளும் வர்க்கங்கள் ஆட்சி மாற்றத்தை தீர்வாக முன்வைக்கின்றனர். அதாவது தேர்தல் மூலம் நாட்டை ஆளுகின்ற தனி நபர்களை மாற்றுவதன் மூலம், "ஜனநாயக" மாற்றம் நிகழும் என்கின்றனர். இதுவொரு அரசியல் பித்தலாட்டமல்லவா ? ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போராடும் மக்கள், அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதே, "ஆட்சி மாற்றம்" மூலம் முன்வைக்கின்ற அரசியலாகும்.

இந்த வகையில் மீண்டும் மக்களை ஏமாற்றுகின்ற திரிபு இன்று மக்கள் முன் வைக்கப்படுகின்றது. மகிந்தாவை தேர்தலில் தோற்கடித்து ஆட்சியை மாற்றுவதன் மூலம், நிலவும் ஜனநாயக விரோத சூழலை மாற்ற முடியும் என்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியால், அரசியல் ரீதியாகவே இன்று "ஆட்சி மாற்றமே" ஒரு தீர்வு என்ற கோசம் முன்தள்ளப்படுகின்றது.

இந்த வகையில் மகிந்தாவுக்கு மாற்றான பொதுவான கவர்ச்சிகரமான எதிர் வேட்பாளரை முன்னிறுத்துகின்ற, ஆளும் வர்க்க அரசியல் முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினரின் இந்த அரசியல் முயற்சியை ஆதரிக்குமாறு, அரசுக்கு எதிராக போராடும் மக்களிடம் கோரப்படுகின்றது. அதாவது அரசின் மக்கள் விரோதச் செயற்பாட்டை எதிர்த்து, மக்கள் போராடுவதை மறுக்கின்ற மற்றொரு மக்கள்விரோத அரசியல் செயற்பாடே இந்த அரசியல்.

இந்த வகையில்

1. அரசுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவதை அரசியல் ரீதியாக முன்னெடுக்க மறுக்கின்றவர்களின் பொது அரசியல் செயற்பாடாக "ஆட்சி மாற்றக்" கோசம் முன்வைக்கப்படுகின்றது.

2. அரசுக்கு எதிராக மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டி போராடுகின்ற அரசியல் இயக்கங்களின் செயற்பாடுகளை முடக்குகின்ற, பிளக்கின்ற அரசியல் செயற்பாடாக "ஆட்சி மாற்றக்" கோசம் முன்வைக்கப்படுகின்றது.

இந்த வகையில் பொது வேட்பாளர் மூலம், "ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும்" கொண்டு வர முடியும் என்ற கூறுகின்ற இந்த அரசியல் செயற்பாடு என்பது, வரலாற்றில் முதல் தடவையல்ல. இலங்கை முதல் உலகம் வரை பல நாடுகளில் முன்வைக்கப்பட்டு, இறுதியில் ஆட்சி மாற்றம் மக்களுக்கு எதிரான வன்முறையற்ற ஜனநாயக சமூகத்தை படைக்கவில்லை.

இதன் அர்த்தம், ஆட்சி மாற்றம் என்பது ஜனநாயகத்தை தருவதுமில்லை, வன்முறையை ஒழிப்பதுமில்லை. அரசு என்பது வர்க்கத்தின் கருவி என்பதால், வன்முறை இன்றி ஆட்சிகள் உருவாவதில்லை. அரசு என்பது, வன்முறையை அடிப்படையாகக் கொண்டது.

மகிந்த அரசின் குடும்ப சர்வாதிகார இராணுவ கும்பல் ஆட்சியை தேர்தல் மூலமான ஆட்சி மாற்றம் மூலம் தூக்கி எறிவதன் மூலம், வன்முறையற்ற ஜனநாயகத்தை படைக்க முடியும் என்பது அரசியல் மோசடி. மக்களை தேர்தல் முறைக்கு வெளியில் அணிதிரட்டாது, தேர்தல் அரசியல் மூலம் அணிதிரட்டுகின்ற அரசியல் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும். காலாகாலமாக தேர்தல் மூலமான தீர்வாக, ஆளும் வர்க்கங்கள் முன்வைத்து வருகின்ற மக்கள் விரோத அரசியலாகும்.

இன்று இலங்கையின் ஆட்சி மாற்றத்தை செய்ய முனைகின்ற மேற்கு ஏகாதிபத்தியங்கள் முதல் குறுந் தமிழ் தேசியவாதிகள் வரை ஒருங்கிணைந்த கோரிக்கை தான் ஆட்சி மாற்றம். அதற்கான பொது வேட்பாளர் கோரிக்கையும், அதையொட்டி முன்தள்ளுகின்ற அரசியலே "ஆட்சி மாற்றம்" பற்றிய மோசடிகள். இந்த வலதுசாரிய ஆளும் வர்க்க நிகழ்ச்சிநிரலை அரசியல் ரீதியாக மூடிமறைத்து வெல்லவே, இதைச் சுற்றி இடதுசாரிய அரசியல் பித்தலாட்டங்கள் அரங்கேறுகின்றது.

இந்த வகையில் இடதுசாரியத்தின் பெயரில் "ஒரு ஆட்சி மாற்றம் மக்கள் போராடுவதற்கு ஒரு ஜனநாயக இடைவெளியைப் பெற்றுத் தரும்" என்று கூறுகின்றனர். இப்படிக் கூறுகின்றவர்கள் மக்கள் அதிகாரத்தைக் கீழ் இருந்து பெறும் வர்க்கப் போராட்ட அரசியலை நடைமுறையில் முன்னெடுப்பவராக இருக்காத வரை, "ஜனநாயக இடைவெளி" பற்றிய அவர்களின் கூற்றுகள் சுயநலம் சார்ந்த மக்கள் விரோத அரசியலாகும்.

வர்க்கப் போராட்ட அரசியலை நடைமுறையில் முன்னெடுக்காதவர்கள், அந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான "ஜனநாயக இடைவெளி" பற்றி பேசி, அதற்காக பொது வேட்பாளரை ஆதரிக்கக் கோருவது அரசியல் பித்தலாட்டமல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

இதைக் கடந்து

1. ஒரு தேர்தல் மாற்றம் ஏற்படுத்தும் "ஜனநாயக இடைவெளி" தற்காலிமானது. ஆளும் வர்க்கங்கள், தங்கள் வர்க்கத்தின் ஆட்சிக்காகவே மக்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர். மக்களை அடக்கி ஒடுக்கும் வர்க்க சர்வாதிகார அரசுக்கு தலைமை தாங்குகின்றவர்களின், தனிப்பட்ட விருப்பமல்ல வன்முறை. தனிநபரை மாற்றுவதன் மூலம் தீர்வு காணமுடியும் என்ற அரசியல், வன்முறையை தனிப்பட்ட நபரின் அரசியல் விவகாரமாக்கி விடுகின்றது. அரசின் வர்க்க வடிவமல்ல, தனிநபர்கள் தான் வன்முறைக்கு காரணம் என்று கூறி "ஆட்சி மாற்ற" அரசியலை முன்தள்ளுகின்றனர். அரசு என்பது வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதும், பிற வர்க்கங்களை ஒடுக்குகின்ற செயல்தான் அரசின் செயற்பாடு என்பதை மறுக்கின்ற ஆளும் வர்க்க அரசியல் பித்தலாட்டமே இது. வர்க்க சர்வாதிகார ஆட்சியில் ஆளும் வர்க்கமாக வரும் எவரும், மக்களுக்கு எதிரான வன்முறை இன்றி மக்களை அடக்கியாள முடியாது. "ஆட்சி மாற்றம்" என்பது வன்முறையற்ற ஆட்சியை தரும் என்பது அரசியல் மோசடியாகும். ஆட்சி மாற்றங்கள் வன்முறையை ஒழித்துவிடுவதில்லை.

2. "ஆட்சி மாற்றம் தரும் இடைவெளி என்பது" கூட, ஆட்சிக்கு வருபவரின் தனிப்பட்ட தேர்வும் விருப்பமுமல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் எந்த நிலையில் அணிதிரண்டு ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போராடுகின்றது என்பது மட்டுமே அதைத் தீர்மானிக்கின்றது. ஆக வர்க்கங்களின் செயற்பாடுதான், "ஆட்சி மாற்றம்" எதைத் தரும் என்பதை தீர்மானிக்கின்றது. "ஆட்சி மாற்றம்" பற்றிய திரிபு, போராடும் வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் ஊசலாட்டங்களுக்கு ஏற்பவே, வன்முறையின் அளவு குறைய முடியும். இதற்கு வெளியில் அல்ல. அதாவது ஆட்சி மாற்றத்தை அடுத்து வர்க்கப் போராட்டத்தில் ஏற்படுகின்ற வர்க்கங்களினது நெகிழ்சி தான், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதாக கூறும் "ஜனநாயக இடைவெளி" க்கான அடிப்படை.

வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற வர்க்கங்களின் ஊசலாட்டத்தை அரசியல்ரீதியாக உருவாக்குவதே "ஆட்சி மாற்றக்" கோசமாகும். வர்க்க போராட்டத்திலுள்ள சக்திகள் ஊசலாட்டமின்றி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பின், ஆட்சி மாற்றம் எந்த "ஜனநாயக இடைவெளி" யையும் கொடுப்பதில்லை. அதே வன்முறையையும் அல்லது அதைவிட அதிகமான வன்முறையை பிரயோகிக்கும்.

3. வன்முறையை கையாளுகின்ற அதிகார உறுப்புகளில் இருக்கின்ற சில நபர்களை, புதிய ஆட்சியாளர்கள் விரும்பாது மாற்றும் போது (இது நடந்தால்), வன்முறை வடிவம் பண்பு ரீதியாக மட்டும் மாற்றம் பெறும். ஆனால் அது குறையும் என்றோ, "ஜனநாயக இடைவெளியை" கட்டாயம் தரும் என்பதோ மோசடி. மாறாக முன்னையதை விட வன்முறை மோசமானதாகவும் அல்லது அளவு குறைந்தாகவும், இறுதியில் சீர்பெற்று ஓரு முன்னைய வன்முறை நிலைக்கே வந்தடையும். வர்க்க ஒடுக்குமுறை தான் வன்முறையே ஒழிய, தனிப்பட்ட நபர்களின் விரும்பு வெறுப்பல்ல.

"ஆட்சி மாற்றம் ஜனநாயக இடைவெளியைத் தரும்" என்ற பிரச்சாரம் மூலம், இன்றைய அரசை மாற்றும் பொது வேட்பாளரை முன்னிறுத்தி செய்யும் பிரச்சாரம் என்பது, வர்க்கப் போராட்டச் சக்திகளின் இடையே அரசியல் ஊசலாட்டத்தை கொண்டு வருவது தான்.

ஆளும் வர்க்கத்தின் இந்த அரசியல் செயற்பாடு என்பது, ஏகாதிபத்திய நவதராளமயமாக்கலை புதிய ஆட்சியாளர் மூலம் முன்னெடுக்கின்ற அதே அரசியல் நிகழ்ச்சியின் மற்றொரு மூடிமறைக்கப்பட்ட பித்தலாட்டம். ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் அளவை குறைக்கும் நவதாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலே, "ஆட்சி மாற்றம்" மூலமாக தீர்வு காணும் கனவுகளை மக்கள் மேல் திணிப்பதாகும்.

அதாவது "ஆட்சி மாற்றம் தரும் ஜனநாயக இடைவெளி" என்பது, ஆளும் வர்க்க நோக்கில் வர்க்க ரீதியான போராட்டத்தின் கூர்மையைக் குறைத்து நவதாராளமயமாக்கல் மூலமான சுரண்டலை இலகுபடுத்துவது தான். இதையே இடதுசாரியத்தின் பெயரில் "போராடுவதற்கான ஜனநாயகச் சூழலை" தரும் என்று அரசியல் ரீதியாக திரித்து விடுகின்றனர். போராடும் வர்க்க சக்திகளை பிரித்து, ஊசலாட வைக்கும் அரசியல் தான் "ஆட்சி மாற்றம் தரும் ஜனநாயக இடைவெளி" பற்றிய அரசியல் பிரமைகள், நம்பிக்கைகள்.

யார் எல்லாம் வர்க்கப் போராட்டத்துக்காக போராடாது "ஆட்சி மாற்றம்" பற்றி பேசுகின்றனரோ, அவர்களை வர்க்க ரீதியாக இனம் காட்டி அம்பலப்படுத்தி போராடுவது அவசியமாகும். இந்த அரசியல் பித்தலாட்டத்தை முறியடித்து, "ஆட்சி மாற்றத்துக்காக அல்ல" மக்களின் அதிகாரத்துக்காக போராடுவதே இன்றுள்ள வரலாற்றுக் கடமையாகும்.