Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பஸ்நிலையத்திலும், யாழ் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டம்

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்!

காணாமலாக்கப் பட்டவர்களை கடத்தப் பட்டவர்களை வெளிக்கொண்டு வா!

உடனடியாக தோழர் குமார் குணரத்தினத்தினதும் அவரைப் போன்றவர்களினதும் அரசியல் உரிமையை அங்கீகரி!

ஆகிய கோசங்களை முன்னிறுத்தி முன்னிலை சோஷலிஸக் கட்சி நாடு தழுவிய வகையில் முன்னெடுத்துவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை 13.02.2015 முற்பகல் 10 மணியளவில் யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக இக் கோசங்களைக் கொண்டிருந்த பதாகையில் பொதுமக்கள் கையெழுத்திடும் கையெழுத்துப் போராட்டம் நடாத்தப்பட்டது. பிற்பகல் 12.30 மணி வரைக்கும் பொதுமக்கள் பதாகையில் கையெழுத்து இட்டுச் சென்றனர்.

பெரும்பாலும் தாய்மார்களும், தங்கள் பிள்ளைகளையோ, உறவினர்களையோ காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் கொண்டிருந்த மக்களும் தாமாகவே முன்வந்து கையெழுத்து இட்டு தமது கதைகளை கூறிச் ஏக்கத்துடன் அளவளாவிச் சென்றனர். ஏழை, எளிய, வறிய மக்கள் பதாகையில் கண்ட வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்த அனுபவங்களை அனுபவித்திருந்தனரோ என்னவோ தயங்காது தமது கையெழுத்துக்களை இட்டுச் சென்றதை காணமுடிந்தது.

யாழ் பஸ் நிலையத்துக்கு முன்பாக இரண்டரை மணி நேரமாக நடைபெற்ற இப்போராட்டத்தின் பின்னர் பதாகை யாழ் பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக பல்கலைக்கழக மாணவர்களின் கையெழுத்துக்களையும் கவனயீர்ப்பையும் பெறும் வண்ணம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை கையெழுத்திடும் போராட்டம் இடம் பெற்றது. கையெழுத்துப் போராட்டத்தினை விளக்கும் துண்டுப்பிரசுரம் மற்றும் போராட்டம் பத்திரிகை விநியோகமும் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் சாரி சாரியாக வந்து கையெழுத்திட்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியதோடு துண்டுப்பிரசுரம் மற்றும் போராட்டம் பத்திரிகையினையும் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.