Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் "இலக்கியவாதி"களுடன் கூடிக் குலாவும் முஸ்லீம் இனவாதம்

ஒடுக்கப்பட்ட தமிழ்-முஸ்லீம் மக்களை ஒடுக்குகின்ற முஸ்லீம் இன-மதவாதத்தை,  "இலக்கியவாதிகள் - முற்போக்குவாதிகள்" கண்டுகொள்ளாது மறைமுகமாக ஆதரிப்பதே பொது நடைமுறையாக இருக்கின்றது. இந்த வகையில் முஸ்லீம் இலக்கியவாதிகளுடன், தமிழ் இலக்கியவாதிகளும் கூட்டு அமைத்துள்ளனர். 

 

முஸ்லீம் இனமதவாதத்தை எதிர்க்கின்ற தமிழர்களை, "தமிழ் இனவாதியாக" முத்திரை குத்துவதன் மூலம், ஒடுக்கும் இனவாதத்தை ஆதரிக்கின்றவர்களாக தமிழ் "முற்போக்கு மற்றும் இலக்கியவாதிகள்" இருக்கின்றனர். இதன் மூலம் முஸ்லீம் இன-மதவாதிகளுடன் கூட்டமைத்துக் கொள்கின்றனர்.

 

முஸ்லீம் தலைமைத்துவம் இன-மத வாதம் மூலம் தான், தேர்தல்களில் வெற்றி பெறுகின்றது. வெற்றி பெறுவதைத் தொடர்ந்து பேரினவாத அரசுடன் கூட்டமைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கமாக மாறுகின்றனர். இதன் மூலம் முஸ்லீம் தலைமை முன்னெடுக்கும் இன-மதவாத செயற்பாடுகள் யாருக்கு எதிரானது!? 

பேரினவாத இனவாத அரசுடன் கூடிக் குலாவிக் கொண்டுள்ள இந்த முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவதன் மூலம் தான் நடைமுறையில் எதார்த்தமாகின்றது. இதன் மூலமே முஸ்லீம் இனவாதம் உயிர்ப்புள்ளதாக மாறுகின்றது. இந்த அடிப்படை உண்மையை தமிழ் "முற்போக்கு - இலக்கியவாதிகள்" கண்டு கொள்ளாது இருப்பதும், இதை முஸ்லீம் "முற்போக்கு" சக்திகள் "இலக்கிய" மூகமுடி போட்டுக் கொண்டு ஆதரிப்பதும் நடக்கின்றது.           

இந்தக் தமிழ் - முஸ்லீம் "முற்போக்குகளின்" கள்ளக் கூட்டின் பின் பரஸ்பரம் காணப்படுவது, சுய தற்புகழுக்கான முதுகு சொறிவுதான். முஸ்லீம் மக்களை இன-மத ரீதியாக அணிதிரட்டி ஒடுக்கும் முஸ்லீம் தலைமைகளை, முஸ்லீம் "இலக்கியவாதிகளும் - முற்போக்குவாதிகளும்" கண்டுகொள்வதில்லை. உண்மையில் ஒடுக்குகின்ற முஸ்லீம் தலைமைகளின் அனுசரணையுடனேயே, பெரும்பாலான முஸ்லீம் இலக்கியங்கள் செழித்து வளருகின்றது. 

ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான சுரண்டல், மத ரீதியான அடக்குமுறைகள், பெண்கள் மீதான ஆணாதிக்கம், சமூக ரீதியான மதக் கண்காணிப்புக்கள் - கட்டுப்பாடுகள்... போன்றவற்றை, முஸ்லீம் "இலக்கியவாதிகளும் - முற்போக்குவாதிகளும்" எதிர்த்து தங்கள் கருத்துக்களை முன்வைப்பதில்லை. மாறாக இதை அனுசரிக்கின்ற இஸ்லாமியவாதிகளாக பெரும்பாலும் இருக்கின்றனர்.

முன்வைக்கக்கூடிய விமர்சனங்கள், ஏகாதிபத்திய விமர்சன அளவுகோலைத் தாண்டுவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை முன்வைப்பதில்லை. இன-மதவாத முஸ்லீம் தலைமைகள் நவதாராளமயத்தை முன்னெடுக்கும் தரகுமுதலாளிகளையும், அரசையும் முண்டு கொடுத்து நிற்பது போல், முஸ்லீம் இலக்கியமும் முண்டு கொடுக்கின்றது. ஒடுக்கப்பட்ட இலக்கியத்தைக் காணமுடியாது. அரச அதிகாரம் மூலம் கட்டவிழ்த்து விடும் முஸ்லீம் இன-மதவாத வன்முறையானது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றது. இதை எதிர்த்துப் போராடும் முற்போக்கு இலக்கியத்தை, முஸ்லீம் இலக்கியத்தில் காண முடியாது.   

ஒரு சமூகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டிய ஜனநாயகத்தை மறுத்து, மத-இன எல்லைக்கு கட்டுப்பட்டதாக இருக்கும் வண்ணம், தங்கள் இலக்கியத்தைப் படைக்கின்றனர்.  குறிப்பாக இன-மத எல்லை கடந்த மனிதனாக முன்னிறுத்திய இலக்கிய படைப்பையோ, கருத்தையோ.. இலங்கை முஸ்லீம் சமூகத்தில் பெரும்பாலும் காண முடிவதில்லை. முஸ்லீம் இலக்கியம், தங்கள் மக்கள் மத்தியில் இருக்க கூடிய சுரண்டல், இனவாதம், மதவாதம், ஆணாதிக்கவாதம், போன்ற விடையங்களை எதிர்த்து செயற்படுவதில்லை. மதக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, இஸ்லாமிய வரம்பைத் தாண்டுவதில்லை. நாத்திகவாத இலக்கியத்தை முஸ்லீம் எழுத்தில் காண முடியாது.  

தமிழ் இலக்கியம் எப்படி யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான இலக்கியமாக இருக்கிறதோ, அதேபோன்று, முஸ்லீம் இலக்கியம் இஸ்லாமிய சிந்தனையிலான இலக்கியமாக இருக்கின்றது.      

இந்தவகையில் மத-இன அளவுகோலை அனுசரிக்கின்ற முஸ்லீம் சந்தர்ப்பவாதத்துடன் தான், தமிழ் இலக்கியவாதிகள் கூடிக் குலாவுகின்றனர். கூடிக் குலாவவும், தங்களை நியாயப்படுத்தவும், முஸ்லீம் "இலக்கியவாதிகள்" முன் தங்களை முதன்மையானவராக முன்னிறுத்தவும், புலிகளின் முஸ்லீம் விரோத நடத்தைகளே இவர்களுக்கு தொடர்ந்து கை கொடுக்கின்றது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான புலிகளின் கடந்தகாலத்தை விமர்ச்சிப்பதன் மூலம், இன-மதவாத முஸ்லீம் இலக்கியவாதிகளுடன் கூட்டு அமைத்துக் கொள்கின்றனர்.

வடகிழக்கில் புலிகள் ஆதிக்கம் நிலவிய காலத்தில், முஸ்லீம் மக்கள் மேலான தொடர் ஒடுக்குமுறைகளைக் கையாண்டார்கள். யாழ் மண்ணில் இருந்து முஸ்லீம் மக்களின் சொத்துக்களை பறித்ததுடன், அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விட்டுத் துரத்தினர். இப்படி வடகிழக்கு எங்கும் நடந்தேறியது. முஸ்லீம் கிராமங்கள் மீதான தாக்குதல்கள், பள்ளிவாசல்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் மூலம், திட்டமிட்ட படுகொலைகளை நடத்தினர். இறுதி யுத்தத்தைத் தொடங்கிய புலிகள், திட்டமிட்ட வகையில் மூதூர் முஸ்லீம் மக்கள் மீதான முதலாவது பாரிய தாக்குதல் மூலம் வன்முறையை அரங்கேற்றினர். 

இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் "தேசிய விடுதலையின்" பெயரில், பிற ஒடுக்கப்பட்ட இனங்கள் மேல் புலிகள் நடத்திய ஒடுக்குமுறையாகும். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை புலிகள் ஒடுக்கியதால், இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேலான வன்முறையை அரங்கேற்றினர். 

ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் புலிகள் மற்றும் இயக்கங்கள் நடத்திய தொடர் வன்முறையை, "தமிழ்" இடதுசாரிகள் கண்டித்தும் எதிர்த்தும் வந்தனர். இந்த இடதுசாரிய அரசியலைக் கைவிட்டு புலியெதிர்ப்பு அரசியலாக மாறிய போது, "முற்போக்கு - இலக்கியம்" ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக மாறி நிற்கின்றது.  

தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, முஸ்லீம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மாறி, ஒடுக்கும் இன-மதவாத முஸ்லீம் இலக்கியங்களுக்கு இசைந்து பயணிக்கின்றது.  

முஸ்லீம் தலைமைகள் பேரினவாத அதிகாரத்;தின் துணையுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் கூலிப்படையாக செயற்படுகின்ற ஒரு பின்னணியில், இவை அரங்கேறுகின்றது. புலியெதிர்ப்பு அரசியலை இலக்கிய அளவுகோலாகக் கொண்ட தமிழ் "இலக்கியவாதிகள்", ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்குகின்ற முஸ்லீம் தலைமைகளுக்கு துணையாக நிற்கின்றனர். 

யுத்தம் நடந்த காலத்தில் புலிகளை ஒடுக்கிய அரசுக்கு கொடுத்த நேரடி மற்றும் மறைமுக  ஆதரவு என்பது, யுத்தத்தின் பின் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை இட்டு அக்கறையற்ற செயற்பாடுகளாக இருப்பதை எதார்த்தத்தில் காணமுடியும். இதுபோன்று தான் இன்று முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகளால் ஒடுக்கப்படும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு உதவும் வண்ணம், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை. மாறாக இதற்கு உதவும் முஸ்லீம் இலக்கியத்துக்கு ஆதரவாக நின்று, தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர். 

அனைத்து இனவாதத்தையும் எதிர்த்து நிற்றல் என்பது, புலிகளால் பாதிக்கப்பட்ட "முஸ்லீம்களுக்கும்", இலக்கியவாதிகளுக்கும் விதிவிலக்கல்ல. நாசிசத்தை மட்டுமல்ல, யூத சியோனிசத்தை எதிர்த்து போராடுவதே, சரியான இலக்கிய – முற்போக்கு அளவுகோலாக இருக்க முடியும்.