Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிழ்ச்சியை வாழ்வாக்கிய சர்வதேசவாதியே பிடல் காஸ்ரோ

கியூபாப் புரட்சியை தங்கள் வாழ்க்கையாகக் கொண்டாடிய பல பத்து லட்சக்கணக்கான மக்கள், தங்களை வழிநடத்திய தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலக மக்களோ, உலகெங்கும் புரட்சியை எடுத்து வந்த சர்வதேசியவாதிக்கு புரட்சிகர வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர். பிடல் காஸ்ரோவின் மரணம் கூட, ஏகாதிபத்தியத்துக்கு சவால் விடுமளவுக்கு வலிமை வாய்ந்ததாக சர்வதேசியத்துக்கான அறைகூவலாக மாறியிருக்கின்றது.

உலகெங்கும் உள்ள கோடானுகோடி மக்கள் கஸ்ரோவை நேசிப்பதென்பது சுரண்டுவதற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் மீதான விருப்பமும் தெரிவும் தான். கஸ்ரோவை வெறுப்பவர்களோ செல்வத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை விரும்பாதவர்களும், கியூப மக்களை சுரண்ட விரும்புகின்றவர்களும் தான்.

பிடல் காஸ்ரோவின் மரணம் உலகத்தை வர்க்க ரீதியாக பிளபுபட வைத்திருக்கின்றது. சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியதிகார தேர்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு, ஏகாதிபத்தியங்கள் "சர்வாதிகாரியின்" மரணமாக ஊடகங்கள் மூலம் ஊளையிட்டு வருகின்றது. சுரண்டும் வர்க்க ஊடகங்களின் பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்ளாத உழைக்கும் மக்கள் தங்கள் புரட்சிகரமான அஞ்சலிகள் மூலம் பதிலளித்து வருகின்றனர்.

இன்று கியூபாவை தலைமை ஏற்றிருக்கும் காஸ்ரோவின் சகோதரன் ரவுல் கம்யூனிஸ்ட்டாக இருந்த காலத்தில் காஸ்ரோ தத்துவங்கள் மூலம் புரட்சியை கற்றுக்கொண்டவனல்ல. அவர் தனது சிறை வாழ்க்கைக் காலத்தில் கம்யூனிச நூல்களை கற்றபோதும், மக்களுக்கு என்ன தேவை என்பதில் இருந்தும், நடைமுறை மூலமுமே கம்யூனிசத்தை தேர்ந்தெடுத்த நடைமுறைவாதியாக இருந்தார். 1962 களில் அமெரிக்காவின் கூலிப்படைகளைத் தோற்கடித்த பின் ஆற்றிய உரையில் தான், இன்று முதல் மார்க்சிய லெனினியமே கியூபாவை வழி நடத்தும் என்று பிரகடனப்படுத்தியவன்.   

இப்படி காஸ்ரோ புரட்சியாளனாக, சர்வதேசவாதியாக, மக்களுடன் மக்களாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண முனைந்தவன். அமெரிக்கா நூற்றுக்கணக்கான வழிகளில் காஸ்ரோவைக் கொல்ல முயன்ற போதும், மக்களைச் சந்திப்பதையும் அவர்களின் வாழ்க்கையுடன் தன்னை இணைத்துக் கொண்டாடுவதையும் நிறுத்தவேயில்லை. மக்கள் தான் காஸ்ரோவின் உயிர் மூச்சாக மாறி இருந்தனர். இதுதான் சோசலிசப் பொருளாதாரத்தை தற்காக்கவும், நடைமுறைப்படுத்தவும் வைத்தது. 

மக்களுக்கு செல்வத்தை பகிர்ந்தளிக்க, நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து நிலத்தை பறித்தெடுத்து கியூபா புரட்சியானது, உழுபவனுக்கு நிலத்தை பகிர்ந்தளித்தது. அமெரிக்க முதலாளிகளின் பெரும் நிலப் பண்ணைகளும், தொழிற்சாலைகளும், சேவைத் துறைகளும் தேசியமயமாக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த செல்வதைக் கொண்டு மக்களின் வாழ்க்கை வளப்படுத்தப்பட்டது.       

உலகில் 100 சதவீத கல்வியை வழங்கிய நாடாக மாறியது. உலகில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடாகியது. குடியிருப்பு, விளையாட்டுத் துறை என்று, சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைந்தது. பெண்களின் சமவுரிமையையும் சமத்துவத்தையும் நடைமுறையாக்கியது. மக்களின் பொது மகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மனித வாழ்வுக்கு புரட்சி வித்திட்டது. அதே வாழ்க்கை உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக உலகெங்கும் மருத்துவர்களை அனுப்பியும் முதல் மருத்துவரை உருவாக்கியது. அங்கோலாவில் நடந்த புரட்சியின் போது, பல ஆயிரம் புரட்சியாளர்களை அனுப்பியது. இப்படி சர்வதேசவாதியாக காஸ்ரோ நடைமுறையில் இருந்தார். கியூபா ஏழை நாடாக இருந்த போதும் தன்னிடத்தில் இருப்பதை உலகெங்கும் உள்ள மக்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பதே அவரின் சிறப்பு.

அமெரிக்கா கெடுபிடியான பொருளாதாரத் தடை உருவாக்கியது. காஸ்ரோவை பல நூறு முறை கொன்று போட முனைந்தது. நவீன ஆயுதங்களுடன் கைக்கூலிகளை கியூபாவில் தரை இறக்கிய அமெரிக்கா, விமானங்கள் மூலம் குண்டு வீசியது. இப்படி எத்தனையோ தடைகள். இவை அனைத்தும் கியூபாவை சுரண்டுவதற்கான அமெரிக்காவின் நலன்களுடன் பின்னிப் பிணைந்தாக இருந்தது. 

அமெரிக்கா தலைமையிலான ஏகாபத்திய நாடுகளின்; சுற்றிவளைப்பில் இருந்து தப்பிப் பிழைக்கும் சர்வதேசக் கொள்கையே, சோவியத்துடனான உறவுக்கு கியூபாவை வழிநடத்தியது. முதலாளித்துவத்துக்கு மீண்டு கொண்டிருந்த சோவியத்தின் ஆதரவை பெற்றுக் கொண்டு கியூபா சோவியத் போல் அல்லாது சோசலிச பொருளாதாரம் மூலம் புரட்சியை ஆழப்படுத்தியது. 

பொருளாதார உதவிகள் அனைத்தையும் மக்களின் மகிழ்ச்சிக்காக சோசலிச  பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே பயன்படுத்தியது. முக்கிய கியூபா ஏற்றுமதியான சீனி உற்பத்தியை சோவியத் முழுமையாக வாங்கி கொண்ட பொருளாதார வடிவமானது, சோவியத்தின் வீழ்ச்சியுடன் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. அத்துடன் தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் இன்றி இயங்க முடியாது போனது. 

உலக ஜனநாயகவாதிகளாக கூறிக் கொள்ளும் ஏகாதிபத்தியங்களின் சுற்றிவளைப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இவை. கியூபாவின் சோசலிச பொருளாதார கொள்கையின் விளைவுகள் அல்ல அவை. இந்த நெருக்கடியில் இருந்து மீளும் தன்னிறைவை அடையும் விவசாய கொள்கைகள் முதல் சர்வதேச முரண்பாடுகளைக் கையாளும் புதிய கொள்கை மூலம், தொடர்ந்து சோசலிச பொருளாதாரத்தை தக்கவைக்க முடிந்துள்ளது. 

இப்படி மாறி வந்த முரண்பட்ட சர்வதேச சூழலுக்குள் கியூபா மக்களுக்காக புரட்சியை காட்டிக்கொடுக்கவில்லை. சோசலிச புரட்சியை ஆழப்படுத்த முடியாத சர்வதேச நிலைமைகள் காஸ்ரோவுக்கு விலங்கிட்ட போதும், மக்களை நேசித்து வாழ்ந்த வாழ்கின்ற தனது  கொள்கை மற்றம் நடைமுறையில் இருந்து பின்வாங்கியவனல்ல. 

புதிய அதிபராக பதவியேற்றுள்ள அவரின் சகோதரர் ராவுல், பிடல் காஸ்ரோவுக்கு முன்பே கம்யூனிஸ்டாக இருந்தவர் தான். சேகுவோராவை காஸ்ரோவுடன் இணைத்தவரும் அவர் தான். கியூபாப் புரட்சியின் போது தலைமை தாங்கிய தலைவர்களில் ஓருவரும் கூட. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியத்தையும் கியூபாவின் சோசலிசப் பொருளாதார சமூக கட்டமைப்பையும் பாதுகாத்து, ஆழப்படுத்தும் போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராட்டத்தை தொடர்வது தான் காஸ்ரோ அவருக்கு விட்டுச் சென்றுள்ள வரலாற்றுக் கடமையாகும். 

இந்த வகையில் நாமும் அதற்கு உதவும் சர்வதேசவாதியாக இருக்க, எமது சொந்த புரட்சியை நடத்துவதுமே, அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.