Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கற்பனையில் கனவு காண்பதை விடுத்து எதார்த்தத்துடன் இணையுங்கள்

அதிரும் வாள் வெட்டுகள், பெரியவர்கள் என்போர் குழந்தைகளைக் குதறும் பாலியல் வக்கிரங்கள். இவைகள் அண்மைய செய்திகளில் முதன்மையானதாக வெளிவருகின்றன. இக் குற்றங்களை இழைப்போரைத் தண்டிப்பதன் மூலம் குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம் என்பது, புலிகளின் வழி வந்த தமிழ்த்தேசிய சிந்தனை முறையாகும். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அரசு, நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனைகளால் இக்குற்றங்களை இல்லாது போக்குவதற்கான தீர்வைக் காண முடியும் என்று கூறுகின்றது. குற்றவாளிகள் தண்டனைகள் மூலம் தண்டிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கலாம். ஆனால் சமூகத்தில் புரையோடிவிட்ட இவ்வாறான போக்குகளை, தண்டனை மூலம் களைந்துவிட முடியாது என்பதே உண்மை. குற்றங்கள் உருவாகுவதற்காக அடிப்படைக் காரணிகள் களையப்பட வேண்டும்.

சமூக விரோதக் குற்றங்கள் தோன்றுவதற்கான சமூகக் காரணம் என்ன? காரணத்தை இனம் காண்பதன் மூலம், எதிரான விழிப்புணர்வுக்கு சமூகத்தைக் கொண்டு வருவதன் மூலமே, மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இந்த மாற்றங்கள் மூலம் தான், குற்றங்கள் இல்லாது போவதற்கான தீர்வினைக் காண முடியும்.

குற்றப் பின்புலத்தின் காரணத்தைக் கண்டறியும் சமூக நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்டதான சமூக நடத்தை சமூகத்தில் காணப்படுகின்றதா? இச் சமூகக் காரியங்களை யார் செய்வது?

மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தமிழ் தேசிய தலைமைகள், தேசிய பிரச்சனைகள் தொடங்கி இது போன்ற சமூகப் பிரச்சனைகள் வரை எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருப்பதில்லை. சமூக நோக்கம் கொண்ட அர்ப்பணிப்பும், தியாகமும் கொண்டு, மக்களுடன் மக்களாக போராடுபவர்களல்ல தமிழ் தேசியத் தலைமைகள்.

சமூகத்தை வழிநடத்தக் கூடிய அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் கொண்ட புதிய தலைமை சமூகத்துக்கு தேவைப்படுகின்றது. சமூகத்தை நேசிக்கின்ற, மக்களுடன் மக்களாக சமூக உணர்வோடு வாழக்கூடியவர்களால் தான் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இந்த வகையில் இன்று மக்களுடன் மக்களாக நின்று போராடுகின்றவர்களை இனம் கண்டு ஆதரியுங்கள். அவர்களுடன் இணைந்து பிரச்சனைகளை தீர்க்க முனையுங்கள்.

சமூக குற்றங்கள் வக்கிரமடையவும், அதிகரிக்கவும் காரணமென்ன?

உழைத்து வாழ்ந்த சமூகத்தின் பண்பாட்டு வழி வந்த நேர்மை, உண்மை சார்ந்த சமூக விழுமியங்களை, சமூகத்தில் தன்னை உரசிப் பார்த்தறியும் தனிமனிதத் தன்மான உணர்வை சமூகம் இழந்து நிற்கின்றது. உழைத்து வாழாது மற்றவர்களில் தங்கி வாழும் பண்பாட்டுக்குள் மாறி இருக்கின்றது. உழைத்து வாழாத பண்பாடு, வாழ்வதற்கான சமூக விழுமியங்களை மட்டுமல்ல சட்டரீதியான வாழ்க்கை முறையையும் அழித்துதான், நுகர்வைக் கையாளுகின்றது. இந்த நிலைமை தோன்ற

1. யுத்தமானது உழைத்து வாழும் சமூக விழுமியங்களையும், பொருளாதார சமூகக் கூறுகளையும் சிதைத்ததும்,

2. இக்காலத்தில் அக்கம்பக்கமாக உள்நுழைந்த உலகமயமாக்கம் திணித்த சந்தையானது, வாழ்க்கை முறையை லும்பன்தனமான தனிநபர் நுகர்வு முறையாக்கியதும்,

3. யுத்தத்தை சந்தித்த சமூகத்துக்கான உதவிகள், புனர்வாழ்வுகள், மீள்கட்டுமானம் என்ற அனைத்தும், சமூகம் சார்ந்ததாக அல்லாமல் தன்(சுய)னலம் சார்ந்ததாக - லும்பன் வாழ்க்கை முறையை நீடிக்குமாறு தொடருகின்றதும்.

காரணங்கள் ஆகும்.

சமூகம் சார்ந்த உழைத்து வாழும் வாழ்க்கைமுறைக்கு பதில், தன்(சுய)நலம் கொண்ட வாழ்க்கை முறையிலான நுகர்வு, சமூக அறங்களையும் சட்ட அமைப்பையும் மீறுகின்றது. நுகர்வு, பாலியல், அதிகாரம் என அனைத்தையும் பெறும் வழிமுறையானது, உழைப்பு சார்ந்த வழிமுறையை கொண்டிருப்பதில்லை. மாறாக ஏமாற்றிப் பெறுவது, அனுதாபத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெற்று அனுபவிப்பது, அதிகாரத்தைக் கொண்டு பெறுவது, வன்முறை மூலம் சூறையாடி அனுபவிப்பது என்ற எல்லாவிதமான சமூகவிரோத முறையையும் கைக்கொள்ள வைக்கின்றது. சமூக அறங்களும், அடிப்படைகளும் இப்படித்தான் இன்று செயற்படுகின்றது.

மற்றவனை வெட்டி வேட்டு வைக்கின்றது. தான் விரும்பும் பெண்ணை பாலியல்ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்க முடிகின்றது. பெரியவர்கள் என்போர் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக குதறுவதைக் கூட, குற்ற உணர்வாக உணர்வதில்லை. இவைகளை குற்றங்களாக கண்டுகொள்ளாமல் இருக்குமளவுக்கு சமூகத்தன்மை இழந்த சமூகமாகியிருக்கின்றது. மறுபக்கத்தில் தண்டனைகள் தனிப்பட்ட குற்றவாளியை தண்டிக்குமே ஒழிய, குற்றவாளியை உருவாக்கித்தருகின்ற சமூகத்தை மாற்றத்துக்கு உள்ளாக்குவதில்லை.

மாற்றம் ஒன்று தான் தீர்வு

சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், சமூகத்துக்காக வாழ்பவர்களால் சமூக மாற்றத்தை முன்னெடுத்து தீர்வுகாண முடியும். சமூக அக்கறை என்பது, அந்த மக்களின் வாழ்க்கையுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். வெறும் கட்டுரைகள், செய்திகள், தத்துவங்கள் தீர்வைத் தராது.

உதாரணமாக வெறும் ஏட்டுக் கல்வியால், வாழ்க்கையில் எதையும் புரிந்து கொள்ள முடியாது. இதுபோல் வெறும் தத்துவம் எதுக்கும் உதவாது. சமூகத்தில் இருந்து, இயற்கையுடன் இணையாத வெறும் சிந்தனைகளால் என்ன இலாபம்? சமூகத்தின் பாலுள்ள அக்கறை வெறும் சிந்தனையாக இருந்து மட்டும் எந்த பலன்? எதுவும் கிடையாது.

மக்களுடனான வாழ்க்கையுடன் விலகிய நடத்தைகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மக்களின் அன்றாட வாழ்க்கையுடன், அவர்களின் பிரச்சனைகளுடன் இணைந்து செயற்படுவது தான் மாற்றம்.

மக்களுடன் மக்களாக இணைந்து செயற்படுவதை முன்னோக்காகக் கொள்ளுங்கள். மக்கள் சார்ந்த செயற்பாடுகளை இனம் கண்டு கொண்டு, அதை ஆதரியுங்கள். அதை ஊக்குவியுங்கள். இவைகள் எல்லாம் காலத்தின் தேவை மட்டுமல்ல, உங்களது சமூகக் கடமையும் கூட.