Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்ப்பாணிய சுயநலம் சிங்களத்தைக் "கற்க" கோருகின்றது!

வடக்கில் சொந்த இன மக்களை சாதி ரீதியாக கூர்மையாகப் பிளக்கின்ற இன்றைய இந்து மதவாத அரசியல் பின்னணியில், சிங்கள மொழியைக் கற்பது பற்றி முதலமைச்சருக்கு திடீர் ஞானம் பிறந்திருக்கின்றது. பிற மொழியையும், மக்களையும் நேசிப்பதை துரோகமாகக் காட்டி தமக்கு வேண்டாத அரசியல்வாதிகளை கொன்றவர்கள், பிற மொழி பேசும் மக்களை கொன்று குவிப்பதையே விடுதலைப் போராட்டம் என்றவர்கள், இன்று எதற்காக சிங்கள மொழியினை கற்கும் படி கோருகின்றனர்?

தனது சொந்த சாதிய மத அடிப்படையிலான தமிழ் இனவாதத்தில் இருந்தபடி, இனரீதியான இனவாத வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் பதவியில் இருந்தபடி, சிங்கள மொழியை கற்பது பற்றி விக்கினேஸ்வரன் பிதற்றுகின்றார்.

இலங்கை மக்களின் மொழியான தமிழையும், சிங்களத்தையும்; அனைத்து இலங்கை வாழ் மக்களும் பரஸ்பரம் கற்பதற்கான, கடந்தகால தமிழ் இனவாத அரசியலை நிராகரிக்கும் அரசியலை முன்வைக்கவில்லை. மாறாக சிங்கள மொழியை பொருளாதார நலன் சார்ந்து கற்குமாறு கோருகின்றார். சுயநலமாக வாழும் தமிழனின் இழிநிலைக்கு வழிகாட்டுகின்றார்.

இனவாதத்தையே முழுமூச்சாகக் கொண்டு மக்களை இனரீதியாக பிளந்து வாக்கு கேட்கும் யாழ் சைவ வேளாள சாதிய மேட்டுக்குடிப் பொறுக்கிகள் தங்கள் தனிப்பட்ட சுயநலத்துக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள்.

போராட்டத்தையும், புலித் தலைமையினையும் காட்டிக் கொடுத்து பொருளாதார நலனை அடைந்த யாழ் மையவாதம் இன்று சிங்களத்தையும்; கற்குமாறு கோருகின்றது.

ஒரு நாட்டு மக்கள் பரஸ்பரம் மொழியைக் கற்றுக் கொள்வதை எதிர்த்து இனவாதம் பேசிய கடந்தகால நிகழ்கால அரசியல் போக்கில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராதவர்கள் தான் வெள்ளை வேட்டிக்காரர்கள். ஜனாதிபதியைக் கூப்பிட்டு தமது பிள்ளைகளின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடும் கயவர்கள் இவர்கள்.

இப்படியாக ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கு இடையில் ஜக்கியத்துடன், மக்களை இனரீதியாக பிளந்து நிற்கின்றவர்களின் சுயநலக் கண்ணோட்டம் தான் மொழி பற்றிய பிதற்றலாகும்.

விக்கினேஸ்வரனின் இந்தப் பிதற்றலை முற்போக்காக பார்க்கவும் அணுகவும் முடியாது. கடந்தகால நிகழ்கால இனவாத அரசியல் போக்கில் ஏற்பட்ட மாற்றமாக இதனை அணுக முடியாது. அண்மையில் இனங்களுக்கு இடையிலான சமவுரிமைக்கான அரசியல் போராட்டத்தை மறுதலித்த முதலமைச்சர், அனைத்தையும் யாழ் மையவாத மேட்டுக்குடி வெள்ளாள சாதிகளின் நலன்களில் இருந்துதான் முன்வைக்கின்றனர்.

இனம் கடந்த மக்களின் ஒன்றிணைந்த பொது சமூகச் செயற்பாட்டை மறுதளிக்கின்றவர்கள், மகாவலி கங்கை நீரை வடக்கு நோக்கி கொண்டு வருவதை மறுதளிக்கின்ற இந்த இனவாதக் கூட்டம் தான் சிங்களத்தைக் கற்கக் கோருகின்றது. மனிதனுக்குரிய சமூகத் தன்மை எதையும் இக் கூட்டம் கொண்டிருப்பதில்லை.

யாழ் வெள்ளாள சாதிய மையவாத அரசியல் தலைமையின் கீழ் வடக்கில் இன்று சாதியம் மீளக் கொலுவேறுகின்ற பின்னணியில், இந்த கேலிக் கூத்துகள் எல்லாம் அரங்கேறுகின்றன. யுத்த காலத்தில் புலம் பெயர்ந்தவனிடம் ஒட்டிக் கொண்டிருந்த சாதியக் கூறுகள் எந்த மாற்றமும் பெறாது அப்படியே இன்று சாதிக்கொரு கோயில்களாக யுத்தம் நடந்த இடத்தை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றது. சாதியம் கோயில்கள் மூலம் புத்துயுயிர்ப்பு பெற்று யாழ்ப்பாணம் மீண்டும் 1980க்கு முந்தைய சாதிய சமூகமாக வீரியம் பெறுகின்றது.

சமூகத்தை நஞ்சூட்டும் சாதியத்தை முதலமைச்சரும், தமிழ் இனவாத அரசியலும் வளர்த்தெடுக்கும் இன்றைய அரசியல் பின்னணியில், சுயநலமாக மொழியைக் கற்கின்ற பொறுக்கித்தனத்தை செய்யுமாறு முன்வைக்க முடிகின்றது.

மக்களை சாதிய ரீதியாக பிரித்து வைத்திருக்கும் இந்த இனவாத அரசியல், அனைவரும் பரஸ்பரம் மொழியை கற்பதை மறுதளித்து, பொருளாதார நலனுக்காக கற்குமாறு முன்வைக்கின்றது. இந்த மோசடியை இனங்கண்டு கொள்வதும், சமவுரிமையிலான இன ஜக்கியத்துக்கான மக்கள் திரள் நடத்தையின் ஒரு அங்கமாக மொழியைக் கற்றுக் கொள்வதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான அரசியல் நடைமுறை மூலமே மக்கள் இயல்பாக பரஸ்பரம் மொழியைக் கற்றுக்கொள்வார்கள்;.

இதற்கு மாறாக பரீட்ச்சையில் சித்தி பெற (பாஸ் செய்ய) "கல்வி" என்பது போல், பிழைத்துக் கொள்ள "மொழி" என்பது, ஆளும் வர்க்க சிந்தனை நடைமுறை முறைமட்டுமல்ல யாழ் சைவ வேளாள சாதிய சமூக அமைப்பிலான மேட்டுக் குடிகளின் கண்ணோட்டமும் கூட.