Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரஜாவுரிமை கோரியவருக்கு சிறை - கொள்ளையடிக்க உதவுபவருக்கு பிரஜாவுரிமை

மக்களை நேசிப்பது குற்றம் - கொள்ளை அடிப்பது ஜனநாயகம். இலங்கை ஜனநாயகத்தின் வெட்டுமுகம் இதுதான்.

தனது பிறப்புரிமையான பிரஜாவுரிமையைக் கோரிய குமாரை சிறையில் அடைத்து வைத்து இருக்கின்றது நல்லாட்சி அரசு. முகமாற்ற ஆட்சி குமாரை கைது செய்து இன்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. நாட்டின் கேகாலை மற்றும் பல நகரங்களில் தெடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் என்பன முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு நகரத்தில் கோட்டை மத்திய புகையிரத நிலையத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இப் போராட்டங்கள் 50 நாட்களை தாண்டியும் அரசு ஒவ்வொரு தடவையும் விளக்கமறியல் என்று திகதியை தள்ளிப்போட்டு சிறையிலடைக்கின்றது. எந்த விசாரணையையோ குற்றச்சாட்டினையோ நீதி விசாரணைக்கு எடுக்க முடியாமல் வெறுமனே நாட்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றது. இது எதனைக் காட்டுகின்றது எனில் இந்தச் சிறைத் தண்டனைக்கு அவர்களிடம் எந்த சட்ட நியாய விளக்கமும் இல்லை என்பது தான். இந்தச் சிறையடைப்புக்கு காரணம் குமார் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுக்கும் அரசியலே ஒழிய வேறு எதுவுமல்ல.

24 மணி நேரத்தில் சிங்கப்பூர் பிரஜையான அர்ஜீன் மகேந்திரனுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கிய அரசு, தன் சொந்த நாட்டு பிரஜாவுரிமையை கோரியதால் இரு மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது, அவர்கள் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பது மட்டும் தான்.

அர்ஜீன் மகேந்திரனுக்கு பிரஜாவுரிமைiயை வழங்கி இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் வைத்ததன் மூலம் உலக பன்நாட்டு மூலதனம் மக்களை கொள்ளை அடிக்க உதவியவர்கள், பிரஜாவுரிமைiயை கோரிய குமாரை சிறையில் அடைத்ததன் மூலம் மக்களுக்காக போராடுவதை தடுக்க முனைந்திருக்கின்றனர்.

இங்கு சட்டத்தின் ஆட்சியும், கைது என்பதெல்லாம் வர்க்கம் சார்ந்தது என்பதும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதுமாகும். நல்லாட்சி என்பது வெறும் முகமாற்றம் என்பதும், உலக பன்நாட்டு மூலதனத்தின் ஆட்சி தான் என்பதை அரசின் சமூக பொருளாதாரக் கொள்கைகள் எடுத்துக் காட்டுகின்றது.

இதற்கு அமைய மக்களைச் சுரண்ட உலக வங்கியுடன் திட்டம் போடும் மத்திய வங்கி ஆளுநருக்கு பிரஜாவுரிமை வழங்கிய அரசு, மக்களைச் சுரண்டும் அரசின் கொள்ளையை எதிர்க்கும் குமாருக்கு பிரஜாவுரிமையை மறுத்து அதற்காக சிறையில் அடைத்திருக்கின்றது.

2012 இல் இருந்த அரசு குமாரை சட்டவிரோதமாக கடத்தி காணாமல் போனவராக்க முனைந்தது. இன்றைய அரசு அவரை சிறையில் அடைத்து வைத்திருக்கின்றது. இது தான் அவர்கள் தருவதாகக் கூறிய “ஜனநாயகம்”.

இனவாதத்துக்கு எதிராக அனைவருக்கும் சமவுரிமையை முன்வைத்த தலைவருக்கு சிறை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியவருக்கு சிறை.

அனைத்துக் கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய் என்று கோரி மக்களை அணிதிரட்டியவருக்கு பிணை இல்லாத விசாரணை.

குமாரை கடத்தியவர்களுக்கு, அவரை காணாமலாக்க முயன்றவர்களுக்கு, சுதந்திரமான, சலுகைகளுடன் கூடிய சொகுசு வாழ்க்கை. இங்கு சட்டம், நீதி, ஜனநாயகம், மக்கள் ஆட்சி எல்லாம் போலியானது. அது ஒரு வர்க்கத்துக்கானது.

மக்களுக்காக வாழ்வதால் பிணையின்றி இரு மாதங்களாக சிறையில் அடைத்துள்ள அரசு, இதற்கு எதிராக 50 நாட்களுக்கு மேலாக தொடரும் தொடர் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ள மறுக்கும் அரசு, மக்களின் குரல்களுக்கு சுருக்குக்கயிற்றைத் தான் தீர்வாக வைத்திருக்கின்றது.

நல்லாட்சியின் பெயரில் மாணவர்களை கொலைவெறியுடன் அடித்து நொருக்கும் இந்த அரசு தான், தங்கள் பிரதேசத்தில் கொட்டிய குப்பைகளை அகற்றக் கோரிய மக்களை அடித்து துவைத்திருக்கின்றது.

இன நல்லிணக்கத்தை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுக்கின்றது. சொந்த நீதி விசாரணை மூலம் நாட்டின் இனவாதக் குற்றங்களை தண்டிப்பதாக ஐ.நாவில் வைத்துக் கூறிய அரசு, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கஞக்கு பதவிகளையும், சலுகைகளையம் வழங்கி கௌரவிக்கின்றது.

இதைக் கோரி போராடாது இருக்க எதிர்க்கட்சிக்கு பதவிகளும் சலுகைகளும் போராடுபவர்களுக்கு சிறை.

ஊழல், இலஞ்சம், குற்றங்கள் மீது சட்டத்தின் ஆட்சி என்று கூறி ஆட்சியை பிடித்தவர்கள், தங்கள் அரசியல் எதிரிக்கு எதிராக மட்டும் பூச்சாண்டி காட்டி தங்களுக்கு அடிபணிய வைப்பதை நல்லாட்சியாக பறைசாற்றுகின்றனர்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பதும், அனைவரும் சமன் என்பதும் மறுக்கப்படுகின்ற பின்னணியில், குமாரின் கைது வர்க்கம் சார்ந்தது என்பதும், சட்டத்தின் ஆட்சிக்கு முரணானதும் கூட. இதற்கு எதிராக மற்றொரு முகமாற்றமல்ல, மற்றொரு போலி நல்லாட்சியல்ல என்ற உறுதியுடன் அணிதிரள்வோம்.