Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போராடும் கைதிகளும், இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பின் சதிச்செயல்களும்

சிறையில் உள்ள கைதிகளை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க மறுப்பதும், அவர்கள் அனைவரினதும் விடுதலை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுப்பதனை மறுப்பதும்; மக்களுக்கு செய்யும் துரோக அரசியலாகும். மைத்திரி-ரணிலுடன் இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பு முதல் புலம்பெயர் பினாமி அமைப்புகள் வரை மேற்குறித்த அரசியலை தான் இன்று செய்கின்றனர். சிறையில் அடைத்து வைக்கபபட்டுள்ள விசாரணைக் கைதிகள் முதல் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களே. இந்த அவசாரகாலச் சட்டத்தை நீக்கக்கோரிப் போராடாமல், கைதிகளின் விடுதலை பற்றி பொதுவாக பேசுகின்றவர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகளே.

இந்த அரசியல் பின்னணியில், அரசு அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற உடனடி விடுதலையினை மறுக்கின்றதோ அதைத்தான் இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பும் அரசுடன் சேர்ந்து செய்கின்றது. கைதிகள் விடையத்தில் அரசு மற்றும் கூட்டமைப்பு; கூட்டுச்சதிகளின் மூலம் கைதிகளை பிரித்து தனிமைப்படுத்துவதும் சிலரை விடுவிப்பதன் மூலம் கைதிகளின் போராட்டத்தை முறியடிப்பதும் தான் இன்று நடந்தேறுகின்றது.

கூட்டுச்சதித் திட்டத்திற்கு அமைய "7ம் திகதிக்கு முன் கைதிகள் விடுவிக்கப்படுவர்கள்" என்று சம்பந்தன் கைதிகளை சந்தித்து உறுதி கூறியதன் பேரிலேயே கைதிகள் தங்கள் போராட்டத்தை நிறுத்தினர். அப்போது அனைத்துக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றே கைதிகளும், மக்களும் நம்பினார்கள்.

உண்மையில் இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பதும் காலகாலமாக கைதிகளையும், மக்களையும் ஏமாற்றி வரும் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பதும் இன்று வெளிப்டையான உண்மையாகி இருக்கின்றது.

கைதிகளுக்காகவும், தமிழ் மக்களிற்காகவும் முன்வந்து போராட மறுக்கின்ற இணக்க அரசியலை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கூட்டமைப்பு; பிற பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராடும் போதும்; மக்கள் தாமாக முன்வந்து போராடும் போதும் அவற்றினை முறியடிக்கும் அரசியலையே காலகாலமாக செய்து வருகின்றனர். கைதிகள் விடையம் மட்டுமல்ல, அனைத்து விடையத்திலும் இதுவே நடந்தேறுகின்றது. இதனால் தான் பிரதமர் ரணில், எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை சிறந்த எதிர்க்கட்சி தலைவர் என பாராட்டியுள்ளார்.

ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் வர்க்க ரீதியான இந்த கூட்டு இணக்க அரசியல் பின்னணியிலேயே கூட்டடைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சம்பந்தன் கைதிகளை பிரித்து குற்றங்கள் ஏதும் சுமத்தப்படாதுள்ள ஒரு பகுதியினரை மட்டும் விடுவிடுவிப்பது பற்றிய பித்தலாட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

பிரதமர் கைதிகளின் ஒரு பகுதியினரின் பிணை பற்றியும் மறுபக்கத்தில நீதி அமைச்சு கைதிகளின் ஒரு பகுதினரின் உடனடி விடுதலை பற்றியும், ஆளாளுக்கு முரண்பட்ட அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அள்ளி விசுகின்றனர்.

கூட்டமைப்பின் சதியையும், காட்டிக்கொடுப்பையும் பாதுகாக்க "சிங்களம் ஏமாற்றுவதாக" பல்லவி பாடும் இனவாதத் தமிழ் தேசியம் தமிழன் ஏமாற்றியதை மூடிமறைப்பதும், அதைத் "தமிழனின்" ராஜதந்தரமாக பீற்றிக் கொள்வதும் இன்று வரை தொடருகின்றது.

கைதிகளை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க மறுப்பதும், அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலைக்காக போராட மறுப்பதும், கைதிகளை சிறையிட்டுள்ள அவசாரகால சட்டத்தை நீக்க கோரி போராட மறுப்பதும்; கூட்டமைப்பின் காட்டிக் கொடுப்பு அரசியலாகவும், அரசுடன் கூடி கைதிகளின் போராட்டத்தை முறியடிக்க முனைவதுமே நடைமுறையாகவும் இருக்கின்றது.

"தமிழ்" மக்கள் ஆதரவு பெற்றவர்களாக கூறிக்கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுவதை இனம் கண்டு கொண்டு, மக்களுக்காக போராடும் புதிய அரசியலை மார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் நாங்கள் பயணிக்கின்றோம். இது மட்டும் தான் எம்முன்னுள்ள ஒரேயொரு தீர்வாகும்.