Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாணகம் பூசும் தமிழ்த்தேசியம் முதல் இனியொருவின் அவதூறு வரை...

கருத்து முரண்பாடுகளும் - வேறுபட்ட அரசியல் நடைமுறைகளும் என்பது சமூக இயக்கத்தில் முரண்பாடானாதல்ல. இது கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்துடன் இருக்கும் அதேநேரம் - கட்சிக்கு வெளியில் ஜனநாயகமாக இயங்குகின்றது. இதில் இருந்து வேறுபட்டதே அவதூறுகள்.

நடைமுறையை மறுதளிக்க முடியாத, அதேநேரம் நடைமுறைக்கு எதிரான தனிநபர் கருத்தாக அரசியல் மாறுகின்ற போது, அவதூறை அரசியலாக்க முனைகின்றது.

இந்த வகையில் இனியொரு இணையம் அரசியல் வங்குரோத்தில் இறங்கி, தன் சுய கற்பனைக்கு ஏற்ப "பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுக்களுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது." என்ற, கற்பனையான அவதூறை முன்வைத்திருக்கின்றது. இப்படி அவதூறை அவர்கள் முன்வைப்பதற்கான இன்றைய அரசியல் சூழல் என்ன?

இன்றைய இலங்கை அரசியல் சூழல்

அரசியல் என்பது எங்கும் எப்போதும் நடைமுறையிலானது. இதேபோல் கடந்தகால அரசியல் மீதான சுயவிமர்சனம் என்பது கூட மக்களை அணிதிரட்டும் நடைமுறையிலானது. அதாவது உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுகின்ற நடைமுறையே இடதுசாரிய அரசியலாகவும் - அந்த மக்களின் வாழ்வுடன் இணைந்து பயணிப்பதே சுயவிமர்சனமுமாகும்.

வெறும் கோட்பாடுகள் - கருத்துகள் சமூகத்தை மாற்றுவதில்லை. அது சுயவிமர்சனமாவதில்லை. உழைக்கும் மக்களின் சமூக விஞ்ஞானத்தை நடைமுறையில் முன்நகர்த்தும் போது - அதை மறுதளிக்கின்ற கருத்துகளானது இறுதியில் அவதூறாக மாற்றம் பெறுகின்றது.

இந்த வகையில் இலங்கை இடதுசாரிய வரலாற்றில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி - முன்னிலை சோசலிசக்கட்சியும் இணைந்த அதன் அரசியல் பயணமானது - இன்றைய அரசியலில் தீர்க்கமான அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது. இவ்விரண்டு அமைப்பும் ஒன்றிணைந்து மக்கள் போராட்ட அமைப்பை உருவாக்கியது. மக்கள் போராட்ட அமைப்பு சமூகத்தில் பல்வேறு தரப்பை ஒன்றிணைத்து வரும் அதேநேரம், சமூகத்தில் முரண்பாடுகள் மீதான போராட்டங்களையும் அதற்கான அமைப்புகளையும் உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் தேசிய இனமுரண்பாடுகளை தீர்க்கவும், அதற்கான ஒரு வெகுஜனங்களை அணிதிரட்டவும்; சமவுரிமை இயக்கத்தை தோற்றுவித்தது.

தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்களை ஒன்றிணைந்து போராடும் சமவுரிமை இயக்கம், மத-இன--சாதிய ரீதியான பிரிவினைகள், ஒடுக்குமுறைகள் மீது ஒருங்கிணைந்த போராட்டத்தை இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றது.

இந்த வகையில் பௌத்த இனவாதிகள் பேருவளையில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்து போராடியது தொடங்கி அண்மையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய போராட்டங்கள் வரை, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் என்பது இடதுசாரிய போராட்ட பாரம்பரியத்தை இலங்கையில் மீண்டும் உருவாக்கி வருகின்றது.

இதை முறியடிக்க, இதற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் முதன்மையானதாக – எதிர்ப்புரட்சி அரசியலாக மாறுகின்றது. இந்த வகையில் அரசு மட்டுமல்ல - இனவாதத்தை அரசியலாக முன்னெடுக்கும் தமிழ் இனவாதிகள் மத்தியிலும் -இடதுசாரியத்தை முன் வைத்து இயங்கும் யாழ் மையவாதிகள் வரையான அனைத்து பிற்போக்குவாதிகளும், எதிர்ப்புரட்சிகர செயற்பாட்டு அரசியலை முன்தள்ளுகின்றனர்.

இந்த வகையில்

1. அரசியல் கைதிகளினது போராட்டத்தையும், கைதிகளுக்காக சமவுரிமை இயக்கம் கைதிகளின் உறவினர்களை இணைத்து நடத்தும் தொடர் போராட்டத்தையும் முறியடிக்க கூட்டடைப்பு களத்தில் இறங்கியது. கைதிகளை மூன்றாகப் பிரித்து அதற்குள் பிரிவினையை புகுத்தியதன் மூலம் - அரசியல் கைதிகள் என்ற பொது அடையாளத்தை நீக்கி, ஒரு பகுதியை குற்றவாளிகளாக - பயங்கரவாதிகளாக மாற்றி போராட்டத்தை முறியடிக்க முனைகின்றது.

2. சமவுரிமை இயக்கம் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் போராடுவதுடன் இதனை முன்வைத்து யாழில் சுவரொட்டிகளை ஒட்டியது. யாழ்ப்பாணத்தில் ஒட்டிய சுவரொடடிகள் மீது, யாழ் மையவாதம் சாணகம் அடித்தும் அதைக் கிழித்ததன் மூலமும் சமவுரிமை இயக்க போராட்டத்தை முறியடிக்கும் தங்கள் வலதுசாரிய மேலாதிக்கத்தை பறைசாற்றியது.

3. சமவுரிமை இயக்கத்தின் நடைமுறைகளின் பின் மக்கள் அணிதிரண்டு போராடுவதை எதிர்க்கும் இனியொரு, கற்பனையான இணைய சமூக வலைத்தள அவதூற்றில் இறங்கி இருக்கின்றது. தன்னை இடதுசாரிய அணியாக காட்டிக் கொள்ளும இணையமான "இனியொரு" அண்மைய அரசியலை கருத்து மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ள முடியாது, அவதூறுகள் மூலம் முறியடிக்க முனைகின்றது.

பிள்ளையானை முன்னிறுத்தி இனியொருவின் அவதூறுகள்

கடந்தகால இயக்கங்கள் தொடங்கி அரச கூலிக்குழுக்களாக சீரழிந்த அனைவரும் உழைக்கும் மக்களை சார்ந்து இயங்கியது கிடையாது. இந்தியா, அமெரிக்கா தொடங்கி இலங்கை அரசு வரை அவர்களின் கைக்கூலிகளாக, மக்கள் விரோத கூலிக்குழுக்களாக இயங்கியது என்பதே கடந்த கால வரலாறு. மக்களுக்கு எதிராக இயங்கியவர்கள் மக்களை கொன்று குவிக்கவும் பின்நிற்காதவர்கள், மக்களுக்கு சார்பாக முன்னின்றவர்களை தேடி அழித்தனர். இங்கு பிள்ளையான் மட்டுமல்ல. 1983களில் புளட் செய்யாத கொலைகளா? இதற்கு அண்மைய உதாரணம் ஒன்றை எடுப்போம். அண்மையில் மரணித்த டேவிற் ஐயாவை அன்று அவதூறுகளை முன்வைத்துக் கடத்தியவர்கள், அவரை கொல்ல அலைந்த கொலைகாரர்கள் அதை எல்லாம் மறைத்து அவருக்கு முன்னணியில் நின்று அஞ்சலி செலுத்திய பின்னணியில் வைத்து, பிள்ளையானை முன்னிறுத்தி இன்று செய்யும் அவதூறை புரிந்து கொள்ள வேண்டும்.

1983இல் யாழ் மையவாத அரசியல் மூலம் கட்டமைத்த மக்கள் விரோத அரசியல் தொடங்கி கொலைகள் வரை, இன்று இனியொரு திட்டமிட்டுப் புனையும் அவதூறுகளின் வடிவில் அன்று இயங்கின என்பது வரலாறு. பிள்ளையானை குமார் குணரத்தினம் சந்தித்ததாக கூறுகின்ற அவதூறுக்கு பின்னால், குமார் குணரத்தினத்தைக் கைது செய்து அழிக்கக்கோரும் கடந்தகால அரசியல் நடைமுறை தான் வெளிப்படுகின்றது.

"பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும்" என்று அவதூறாக எழுதி அழிக்க முனையும் பின்னணி என்பதும் - 1983களில் இது போன்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்பட்ட பலரின் வரலாற்றுக்கு நிகரானது. "பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும்" என்கின்ற போது, அந்தத் "தகவல்" மூலம் என்ன? அது எங்கே எப்போது வெளியானது?.

நடக்காத ஒன்றை நடந்ததாக எழுதுகின்றவர்கள், "புலம்பெயர் ஆதரவுக் குழுக்களுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது." என்ற அடுத்த அவதூறை முன்வைக்கின்றனர். “புலம்பெயர் நாடுகளில் பிள்ளையான் ஆதரவுகுழு”வுடன் என்ற யாருடனும், சமவுரிமை இயக்கத்துக்கு எந்த அரசியல் உறவும் கிடையாது. பிள்ளையான் குழுவுடன் பேசியது கூட கிடையாது.

ஆக பழைய இயக்க அரசியல் வழியில் பொய், பித்தலாட்டம் அதன் மூலம் அவதூறு அரசியல் என்பது நடைமுறையற்ற அரசியலாக முன்வைக்கப்படுகின்றது. இன-மத-மொழி கடந்த சமவுரிமை இயக்க நடைமுறையை நிராகரிக்க, அதை அவதூறு செய்து அழிக்க முனைகின்ற இந்தச்சிந்தனை முறை என்ன? அவர்கள் கூறுவது போல் இடதுசாரியமா?

இது வேறு ஒன்றுமல்ல, யாழ் மையவாத “இடதுசாரியம்”. சமூகச் செயற்பாட்டை மறுத்து தங்களை முதன்மையாக்கி முன்னிறுத்திக் கொள்ளுகின்ற இந்த சிந்தனை முறையானது - யாழ் மையவாதம் சார்ந்ததாக, அதாவது வலதுசாரிய யாழ் வெள்ளாள இந்துத்துவ மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது தன்னை இடதுசாரியத்தின் பெயரில் முன்னிறுத்துகின்றது.

ஒரு அரசியல் செயற்பாடு சார்ந்து கருத்தியல் முரண்பாடு என்பதும், மாறுபட்ட அரசியல் நடைமுறை என்பது சமவுரிமை இயக்கம் வரவேற்கும் அதேநேரம் திட்டமிட்டுக் கட்டுகின்ற அவதூறுகள் என்பது அரசியல் முரண்பாடுகளல்ல. அது எதிர்ப்புரட்சி அரசியலாக, யாழ் வெள்ளாள இந்துத்துவ மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தனிநபராக சீரழிந்த லும்பன்களின் குறுகிய செற்பாடுகளாகும்.

இடதுசாரிய வர்க்க அரசியலை இலங்கையில் மீட்டு எடுக்கும் அரசியல் போராட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதன் நடைமுறையையும் முறியடிக்க, இலங்கை முதலாளித்துவமும் “இடதுசாரிய”த்தின் பெயரில் யாழ் சைவ வேளாள மேலாதிக்கவாதிகளும் முனைப்புப் பெற்று அவதூறுகளில் இறங்கி இருப்பதை அண்மைய அரசியல் வரலாற்றில் காணமுடியும்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பிரேமகுமார் குணரத்தினம் மகிந்தா அரசிடம் பணம் வாங்கி மைத்திரியின் வாக்கை பிரிக்க இலங்கைக்கு வந்ததாக யூ.என்பி ஆதரவு "நல்லாட்சி ஜனநாயகவாதிகள்" கூறியது முதல் பிள்ளையான் குழுவை குமார் குணரத்தினம் சந்தித்ததாக "இடதுசாரியத்தின்" பெயரில் கூறுகின்ற பித்தலாட்டம் அனைத்தும், அவதூறு என்ற நாணயத்தின் இரு பக்கங்களே.

இது போன்ற அவதூறுக்கு வரலாற்றில் இருந்து ஒரு உதாரணத்தைக் காட்ட முடியும். 1917 சோவியத் புரட்சியின் போது லெனின் ஜெர்மனி ஊடாக - ஜெர்மனியின் அனுமதியுடன் புகைவண்டியில் ருசியா சென்ற போது, அவரை ஜெர்மனிய ஒற்றராக அவதூறு செய்யப்பட்டது. ஜெர்மனியுடன் யுத்தத்தில் ஈடுபட்ட மற்றைய ஏகாதிபத்தியங்கள் முதல் இடதுசாரி மென்சுவிக்குகள் வரை, லெனினுக்கு எதிராக செய்த அவதூறுகள் தான் வரலாற்றில் பிரேமகுமார் குணரத்தினம் வரை தொடருகின்றது.

இந்த அவறூறு அரசியல் பாரம்பரியம் என்பது தற்செயலானதல்ல. இவர்கள் தங்கள் கடந்த இயக்க அரசியல் வாழ்வில் ஜனநாயகவாதிகளையும், மக்களை நேசித்தவர்களையும் தங்கள் அவதூறுகள் மூலம் சித்திரவதைகளைச் செய்து கொன்று குவிக்க எப்படி உதவினார்களோ, அதையே இன்று வரை அவர்கள் தங்கள் அரசியலாக தொடருகின்றனர். மக்கள் சார்ந்த புதிய அரசியல் நடைமுறை மூலம் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்ய மறுப்பவர்கள் தான் நடைமுறை சாராத தங்கள் கடந்தகால அரசியல் வழியில் அவதூறுகளை தொடருகின்றனர்.

இது அவர்களின் கடந்தகால அரசியல் என்பது, அதனால் கொல்லப்பட்டவர்கள் வழியில் இன்றைய உழைக்கும் மக்களின் போராட்டத்தை அழிக்கும் எதிர்ப்புரட்சி அவதூறுக்கு இனியொரு தலைமை தாங்க முனைகின்றது. ஆரசியல் ரீதியாக இழிந்த போன எல்லா தனிநபர்களும் அராஜகவாத அவதூறு அரசியலுக்குள் சரணடைந்து இருப்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றது.

அரசியல் என்பது நடைமுறை. அதில் பங்குகொள்வதே சுயவிமர்சனம் என்பதை அரசியலாக ஏற்றுக்கொண்டு போராடுவது, தனிநபராக அராஜக அவதூறுகளில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு செயற்படுவதையே இடதுசாரிய வர்க்க வரலாறு அனைவரிடமும் கோருகின்றது.