Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மைத்திரி வென்றதும் மகிந்தாவின் ஆட்சியை கைமாற்றியதுமா ஜனநாயகம்!?

"ஜனநாயகத்தை" மறுதளித்ததாக நம்பிய மகிந்தா இன்று ஆட்சியில் இல்லை. எல்லாத்தை ஆட்டிப் படைத்த பாதுகாப்புச் செயலளார் கோத்தபாயவும் அதிகாரத்தில் இல்லை.

ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டு இருந்த மகிந்த குடும்பமும் இல்லை. மாறாக "புதியவர்கள்" ஆட்சிக்கு வந்துள்ளனர். இப்படி ஆட்சி அதிகாரம் மாறியதால் நாட்டில் "ஜனநாயகம்" வந்திட்டதா!?

ஆனால் மக்கள் ஜனநாயகம் வந்து விட்டதாக நம்புகின்றனர். இவ்வாறன மேலோடமான மாற்றங்கள் தான் ஜனநாயகம் என்று நம்பும் அளவுக்கு, மக்கள் மத்தியில் அறியாமை புகுத்தப்பட்டு இருக்கின்றது என்பதே இதன்பின்னுள்ள உண்மையாகும்.

மைத்திரியை வெல்ல வைத்ததும், மகிந்தா அதிகாரத்தை கைமாற்றியதும் தான் ஜனநாயகம் என்பது பொது புத்தி அரசியல். இதன் அடிபடையில் எழும் கேள்வி என்னவென்றால், அதிகாரத்தை இழந்த, அதிகாரத்தை அனுபவிக்கத் துடித்த கூட்டத்திற்கு கிடைக்கும் வாய்ப்பை உருவாக்க அளித்த வாக்களிப்பா மக்களின் ஜனநாயகம்?

இந்த முகமாற்றம் அதிகாரத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதிகாரமும், அதை அண்டி நக்கிபிழைக்கும் புதிய கும்பலால் மக்களுக்கு என்ன கிடைத்து விடும். மக்களுக்கு ஜனநாயகம் வந்துவிடுமா? மக்கள் இழந்த உரிமைகளையும் வாழ்கையையும் மீளப் பெற்று விடுவார்களா?

எதிர்பாரதவிதமாக நாளை "தமிழனுக்கு" தமிழ்மக்களை அடக்கியாளும் (அதிகார பரவலாக்கலைக்) அதிகாரத்தைக் கொடுத்தால் ஜனநாயகம் வந்துவிடுமா? எதற்கு ஏன் வாக்களிகின்றோம்?

"ஜனநாயகத்தை" குழி தோண்டி புதைத்தாக நம்பும் "ஜனாதிபதி" ஆட்சி முறைக்கு பதில் பாரளுமன்ற ஆட்சியும் நாளை வந்துவிட்டால், நாட்டின் "ஜனநாயகப்" பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமா?

நடந்து முடிந்த தேர்தலில் முகமற்றத்தையும், வடிவ மாற்றத்தையும் "ஜனநாயகமாகக்" கொண்டு வர அறிவுத்துறையினர் என்று கூறிக்கொள்வோர் தலையால் நடந்தனர். அதுமட்டுமின்றி இந்த முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் தங்களை மூடிமறைத்துக் கொள்ள பயன்படுத்தும் இடதுசாரியத்தின் பெயரிலும், இதன் மகிமையைப் பற்றி வாந்தி வாந்தியாக எடுத்தார்கள்.

அறியாமையை விதைத்தன் மூலம் மக்கள் இந்த முகமாற்ற முறைக்கு வாக்களித்தார்கள். இந்த மக்களின் தெரிவை அவர்களின் சுயதெரிவு என்கின்றனர். இப்படி அறிவுத்துறை தன் தொப்பியை சூழலுக்கும் பிழைப்புக்கும் எற்ப மாற்றி மாற்றிப் போட்டு, மக்களை இந்த முதலாளித்துவ முகமாற்ற முறைக்கு பின்னால் கனவு காண வைக்கின்றனர். மக்களை அறிவூட்டி வழிநடத்த வேண்டியதே அறிவுத்துறையினராக இருப்பதற்கான சமூகத் தகுதி. அதைவிட்டு மக்களை அடிமை கொள்ளும் முதலாளித்துவதின் பின் அணி திரட்டுகின்றதும், அதையே ஜனநாயகமாக பீற்றிக்கொள்கின்ற பிழைப்புவாதமே இந்தத் தேர்தலிலும் கோலோசியது.

இப்படி ஆளும் வர்க்கத்தை தேர்ந்தெடுக்க தேர்தலில் வாக்களித்த மக்களின் ஜனநாயகம் பற்றி பொது அறிவு, முதலாளித்துவ உள்ளடக்கத்தையே அளவிடாகக் கொண்டது. அது முகமாற்றமாகவும், அதிகார மாற்றமுமாக விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இன்று மத்தியதர வர்க்கத்தின் பொதுபுத்தி அரசியல், இதுவாகத்தான் இருக்கின்றது. நடந்து முடிந்த முகமாற்றத்தையும், அதற்கு உடன்பட்டு அதிகாரத்தைக் கைமாற்றியதையும் ஜனநாயகமாக கொண்டாடும் சமூகத்தின் பொது அவலமே, இந்தத் தேர்தல் முடிவுகளாகும்.

இதன் விளைவு என்ன? மைத்திரி ஜனாதிபதியானதும், சரத் பொன்சேகர இழந்தை மீளப் பெறுவதும், சிராணி பண்டாரநாயக்க மீள உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதும், சந்திரிக்கா வருடம் தோறும் கிடைத்த பணத்தை மீளப் பெறுவதும், ரணிலின் அதிகாரக் கனவு நிறைவுவேறுவதுமாக... நடந்தேறுகின்றது. எந்த வகையில் நடக்கும் மாற்றம் மக்களுக்கானதா அல்லது மக்களுக்கு எதிரானதா?

முன்பு மக்களை ஒடுக்கியவர்கள், மக்களை சுரண்டி வாழ்தவர்கள் தாங்கள் இழந்தை மீண்டும் பொறுவதா ஜனநாயகம்? மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் மீளப் பதவிக்கு வருவதும், அதிகாரத்தை பெறுவதும், சொகுசான வாழ்கையை அனுபவிப்பதுமா ஜனநாயகம்? இதற்காக கிடைத்த முகமாற்றமும், அதன் மூலம் பெற்ற அதிகாரமுமா ஜனநாயகம்? இதன் அடிபடையில் எழும் கேள்வி என்னவென்றால், அதிகாரத்தை இழந்த, அதிகாரத்தை அனுபவிக்கத் துடித்த கூட்டத்திற்கு கிடைக்கும் வாய்ப்பை உருவாக்க அளித்த வாக்களிப்பா மக்களின் ஜனநாயகம்?

யுத்த குற்றவாளிகளைக் கொண்ட இந்த அரசு இயந்திரம், அதில் ஒரு பகுதிக்கு தலைதாங்கிய இராணுவத்தளபதியை முன்னிறுத்திய நிற்கும் முகமாற்ற ஜனநாயகம், மக்களுக்கு எதிரான குற்றத்தைத் தண்டித்துவிடுமா?

டக்கிளஸ் மற்றும் ஆளுனர் சந்திரசிறி இல்லாத வடக்கு மாகணசபை மூலம் தன் அதிகாரத்தை அனுபவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருப்பதா, தமிழ் மக்களுக்கான ஜனநாயகம்;?

நவதார பொருளாதார மூலம் பறித்தெடுத்த நிலத்தைத்தான் மீட்க முடியுமா? நவதாரமயத்தால் தங்கள் சுய தொழில்களையும் வாழ்கையையும் இழந்து நாடுவிட்டு நாடு சென்று வாழும் வாழ்கைக்கு தான் முடிவு வருமா? கல்வியையும், பல்கலைக்கழகங்களையும் தனியார் மயமாக்கி கல்வி விற்கப்படுவற்கு எதிரான மாணவர்களின் அடிப்படை உரிமையைத்தான் கொடுத்து விடுமா? ..

காடுகளையும், வாழ்விடங்களையும், சுற்றுச் சூழலையும் அழித்து உருவாக்கும் உலகமாயமாகல் வீதிகள் அமைப்பது நின்றுவிடுமா? மீனவர்களின் வாழ்வை அழித்து கடலையும், கரையோரங்களையும் உல்லாச மையங்களாக மாற்றுவது நின்றுவிடுமா? நாட்டை, நாட்டு மக்களின் இறைமையையும் விற்று, கடன் வாங்குவது நின்றுவிடுமா?

எம்மீனவர்களின் வாழ்வுரிமையை பறித்து கடலை பன்நாட்டு மீன்பிடிப்புக்கு கொடுப்பது நின்று விடுமா? விவசாயிகள் பன்நாட்டு பண்னைகளில் விவசாயக் கூலிகளாக மாற்றுவது நின்றுவிடுமா? இராணுவம் நிலங்களையும், தொழில்களையும் மக்களிடம் புடுக்கி தனதாக்கும் வக்கிரம் முடிவுக்கு வந்துவிடுமா?

இந்த முகமாற்றும் ஆட்சி "ஜனநாயகம்" எதை மக்களுக்கு தந்துவிடும்? சமவுரிமைகள் மறுக்கப்பட்ட நாட்டில், மக்களின் சமவுரிமையைத்தான் கொடுத்துவிடுமா?

இல்லையென்றால் அதற்கு என்ன வழி? இதை தேடுவதை விடுத்து, எதற்காக முகமாற்றதுக்கும் முகமாற்றமல் இருக்கவும் வாக்களித்தீர்கள்!? அப்படி வாக்களிக்கக் கோரியவர்களை நம்பத்தான் முடியுமா?

இங்கு பேசப்படுகின்ற ஜனநாயகம் என்பது உழைக்கும் மக்களுக்கானதல்ல. முதலாளித்துவ வர்க்கங்களுக்கும், அதை அண்டிப் பிழைக்கும் அதிகார வர்க்கத்துக்கும் தான். இதற்குள் அதை பங்கிடுவதிலும், அனுபவப்பதிலும் எற்படும் முரண்பாடுகள் தான், ஜனநாயகத்தின் பெயரிலான முகமாற்றமாகும்.

இன்று முகமாற்றம் மூலம் நடந்தேறும் அதிகார மாற்றங்களை ஜனநாயகமாக கொண்டாடும் சமூகத்தின் பொதுப் புத்தியானது, தனக்கான புதை குழி என்பதை வாழ்க்கை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதை இந்த முகமாற்ற ஜனநாயகத்தால் தடுக்க முடியாது.