Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32

பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன? ஏன்? எப்படி இழைக்கப்பட்டது?

ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும் மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் ஊடாக கண்டறியும் நடுவழிப் பாதை வழியாக ஸ்டாலினை கொச்சைப்படுத்துகின்றன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பின் கோட்பாட்டு நிலையில் ஜனநாயகத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் கோட்பாட்டளவில் வகுத்துக் கொள்ளும் இவர்கள், ஸ்டாலின் இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என்கின்றனர். பின்தங்கிய நாட்டின் குறிப்பான நிலை, விவசாய குணாம்சம், ஸ்டாலினின் முரட்டுக் குணம், ஜனநாயகத்தை ஏற்காதன் விளைவு, மேற்கு நாட்டு ஜனநாயகத் தன்மையை புரிந்து கொள்ளாத சமூகத்தின் குறைபாடான குணாம்சம், சோசலிசத்தை வன்முறையூடாக கட்டும் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு தனி ஒரு கட்சியாக உருவான ஜனநாயகமற்ற போக்கு, ஆரம்பம் முதலே லெனின் தலைமையில் வன்முறையை அடிப்படையாக கொண்டமையும், சோவியத்தின் புரட்சிக்கு மேற்கு நாடுகளின் புரட்சி உதவாமை என பல காரணத்தைச் சொல்லி, ஸ்டாலினை மறுப்பதில் காலத்தை ஒட்டி, அவதூறுகளை பரப்புகின்றனர்.

ஸ்டாலின் எதிர்ப்பை முன்னெடுப்பவர்கள் தனிமனிதனை வைத்தும், சம்பவங்களை மட்டும் அடிப்படையாக கொண்டும், கற்பனையாக விரும்பிய புள்ளி விபரங்கள் உடனும் இதைச் செய்கின்றனர். இந்த இடதுசாரி வேடதாரிகள் எங்கிருந்து புள்ளி விபரத்தைப் பெறுகின்றனர். ஏகாதிபத்தியம் மொத்தமாக வைத்ததில், கூட்டிக் கழித்து ஒரு படு மட்டான கணக்கை வைக்கின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. இடதுசாரி வேடம் இடுபவர்களின் புள்ளிவிபரங்கள் எப்போதும் ஏகாதிபத்தியத்தின் தனித் தனியான (அரசியல் காரணத்துக்காக கொல்லப்பட்டதாக ஏகாதிபத்தியம் வைக்கும் இப் புள்ளி விபரங்களை, கட்டுரையின் தொடர்ச்சியில் பார்ப்போம்.) உட்கூறு புள்ளிவிர எண்ணிக்கையை, சில மடங்கால் தாண்டிவிடுவதுடன், அவதூறுக்கு ஆதாரமாக கொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஸ்டாலின் அவதூறுகளை விரிவாக்க விரும்புவதன் ஊடாக விரும்புகின்றனர். உள் நாட்டில் நடத்தப்பட்ட வர்க்கப் போராட்டம் எப்படி, ஏன் வளர்ச்சி பெற்றது. ஸ்டாலின் எதிர்பாளர்கள் எப்படி இதை கையாண்டனர் என்பதை எல்லாம், எந்த இடதுசாரி மனிதாபிமானியும் முன்வைப்பதில்லை. ஸ்டாலின் எதிர்தரப்பினர் என்ன அரசியலை முன்வைத்தனர், ஸ்டாலின் என்ன அரசியலை முன்வைத்தார். இதை சாதிக்க எப்படியான போராட்டத்தை முன்வைத்தனர், எப்படி அனுகினர் என்பதை எல்லாம் இவர்கள் மூடிமறைத்தபடிதான், அவதூறுகளை கட்டமைத்தனர், கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை தெளிவாக புரிந்து கொள்ளாத வரை, வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளமுடியாது. இந்த வர்க்கப் போராட்டத்தில் ஸ்டாலின் இழைத்த சில கடுமையான தவறுகள் என்ன?

1.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை புரட்சிக்கு பின்பாக உள்நாட்டில் முன்னெடுத்த வரலாற்றில், அதை மக்களை சார்ந்து நின்று அவர்களைக் கொண்டே முன்னெடுக்கும் பாதையை அவர் மேற்கொள்ளவில்லை. அதாவது புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மக்கள்திரள் பாதையை அவர் கண்டறியவில்லை. எப்படி மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை சொந்த நாட்டில் விரிவாக்குவது என்ற, மக்கள் திரள் வர்க்கப் பார்வையை, மார்க்சிய வளர்ச்சியாக முன்வைக்கவுமில்லை. இதை அக்காலத்தில் இருந்த யாருமே கண்டறியவும் இல்லை, முன்வைக்கவுமில்லை. புரட்சிக்கு பிந்திய வர்க்க சமுதாயத்தில் மக்களை அணிதிரட்டி அவர்களைக் கொண்டு புரட்சி செய்யும் பாதையை மாவோ கண்டறிந்தார். கலாச்சார புரட்சி வர்க்கப் போராட்டத்தை எப்படி தொடர்வது என்பதையும், மார்க்சியத்தில் உள்ளடகத்தை மேலும் புதிய நிலைமையூடாக வளத்தெடுத்தது.

2.மக்கள் திரள் பாதையை கண்டறியாத ஸ்டாலின் நிர்வாக முறையுடாக, அதாவது மேல் இருந்து கீழாக மட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கவும், முன்னெடுப்பதில் கவனத்தைக் குவித்தார். இதனால் விவசாயத்தை கூட்டுப் பண்ணையாக, அதாவது கம்யூன்களை உருவாக்கிய பாதையில் கடுமையான தவறை இழைத்தார். விவசாயிகளிடையே உள்ள ஏற்றத் தாழ்வான வர்க்க அடிப்படையை கொண்டு, புதிதாக உருவாகியிருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கமான குலாக்களை தனிமைப்படுத்த, மற்றைய வர்க்கங்களை சார்ந்து நின்று அவர்களை அணிதிரட்டி கம்யூனை உருவாக்கத் தவறி, பொதுவான நிலக் கூட்டுப் பண்ணையாக்கலை முன்வைத்தன் முலம், பாட்டாளி வர்க்க நண்பர்களை எதிரி தனது பக்கம் அணிதிரட்ட முடிந்தது. பல அருமையான சினிமாக்கள் முதல் கலை இலக்கியம் வரை இந்த வர்க்க வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு, நிலக் கூட்டுப் பண்ணையாக்கலை விளக்கிய போதும், அதே நேரம் ஸ்டாலின் 1930 மார்ச் 2ம் தேதி

வெற்றி தலைக்கேறியதின் வினை”

என்ற இடதுசாரித் தவறை சுட்டிக் காட்டிய நூல் வெளியான போதும், நடைமுறையில் அவை முழுமையாக வர்க்கப் பகுப்பாய்வை கையாளப்படவில்லை. எதிரியை தனிமைப்படுத்துவதில், தண்டனை வழங்குவதில் வர்க்கப் பகுப்பாய்வு செய்த போதும், நிலத்தை கம்யூனுக்குள் கொண்டு வந்த பாதையில் இவை வர்க்க பகுப்பாய்வை கையாள்வது அலட்சியப் படுத்தப்பட்டது. குறிப்பாக மூன்று முதல் ஆறு வருடத்தில் குறைந்தபட்சம் முழு நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் வந்துவிட்டது. 1934 இல் 75 சதவீதமான குடும்பங்களும், 90 சத வீதமான விளைச்சல் நிலமும் கூட்டுபண்ணைக்குள் வந்தது விட்டது. 1928 இல் 14 லட்சமும், 1929 இல் 42 லட்சமும், 1930 இல் 1.5 கோடி ஹெக்டேர் நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் வந்தது. 1934 இல் 90 சதவீத நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இது அசாதித்தியமான நிலமையாகும். இது வர்க்க வேறுபாட்டை கவணத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது. சோவியத்தில் நிகழ்ந்த புரட்சிக்கு பிந்திய முக்கிய புரட்சி என்ற வகையிலும், 1917 புரட்சியில் பகிர்ந்து அளிக்கப்பட்ட 40 கோடி ஏக்கர் நிலத்தை கூட்டுப்பண்ணைவடிவில் கொண்டு வரும் போது, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டிருந்த போதும், இதில் மக்களை சார்ந்து, அவர்களை புரட்சியில் நேரடியாக ஈடுபடுத்தும் மக்கள்திரள் மார்க்கத்தை கண்டு அறிய தவறிய போக்கு, புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியின் வடிவங்களை கண்டறிய முடியாத நிலைக்குள் இட்டுச் சென்றது. இந்த வடிவத்தை யாரும் அன்று கண்டறிந்ததில்லை. இது மேலும் மேலும் நிர்வாகம் வடிவம் சார்ந்து, மேல் இருந்து கீழ் என்ற ஒருபோக்கை மட்டும் சார்ந்து நின்று, கையாளும் வடிவமே புரட்சிவடிவமாகியது. இதில் இருந்து மாறுபட்ட வடிவத்தில் சீனப் புரட்சி மக்களை அடிப்படையாக கொண்டு நிலத்தை கூட்டுபண்ணையாக்கத்துக்குள் கொண்டு வந்தது மட்டமின்றி, கலாச்சாரப் புரட்சி போன்ற புரட்சிகரவடிவங்களும் கண்டுயறியப்பட்டன. சோவியத் கூட்டுப் பண்ணையாக்கல் மிகத் தீவிரமாக வேகமாக கட்டமைக்கப்பட்டதனால் இயல்பாக அது விவசாயிகளிடையே வர்க்க வேறுபாட்டை குறைத்து மதிப்பீட்டு, பொதுமைப்படுத்தி அனுகியதனால் ஏற்பட்ட தவறுக்கு, புறநிலையாக குறிப்பான காரணங்களும், அச் சமூகத்தில் இருந்துள்ளது.

1923 இல் அழுலுக்கு வந்த இடைக் கால பொருளாதாரம் சார்ந்து உருவான புதிய சுரண்டும் வர்க்கம், கட்சியில் அதன் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிய அதேநேரம், கட்சியிடமே வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரியதும், மேற்கு நாடுகளில் புரட்சியின்றி சோவியத்தில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பது தவறு என்ற வரட்டு வாதங்கள் ஊடாக கொச்சைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தை தடுத்த போக்கும், விவசாய குட்டிபூர்சவா வர்க்கத்தை சார்ந்து கட்சியில் வர்க்கப் போராட்டத்தை தடுத்த போக்கில், வர்க்கப் போராட்டத்தை தீவிரமாக்க புறநிலையாக நிர்பந்தித்தது. இதை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் தமது வர்க்கப் போராட்ட எதிர்ப்பை வன்முறை மூலமும், வன்முறை சாராத வடிவத்திலும், இரகசிய இரகசியமல்லாத அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். இந்த வர்க்க நெருக்கடியில் இருந்து மீண்டு வர்க்கப் போராட்டத்தை தொடர, கூட்டுப் பண்ணையாக்கல் ஒரு நிபந்தனையாகவும், அதே நேரம் வேகமாகவும் உருவாக்க புறநிலை கோரியது.

3.இந்த புறநிலை நிர்ப்பந்தம் அடுத்த தவறை வழிகாட்டியது. சோசலிச புரட்சியை பின்தங்கிய நாட்டில் அல்ல, ஒரு முன்னேறிய நாட்டில் மட்டுமே சாத்தியம் என்ற வரட்டு மார்க்சியவாதிகளின் வன்முறை கொண்ட எதிர் தாக்குதலில் இருந்து மீள, புரட்சியை வேகப்படுத்தி துரிதமாக்குவது அவசியமாகிறது. முதலாளித்துவ நாடுகளின் கைதொழில் வளர்ச்சியை ஒரே எட்டில் சோவியத் எட்டுவதன் மூலம், முன்னேறிய நாட்டின் பொருளாதார நிலையைக் கடப்பதன் மூலம், சோசலிச புரட்சி நடக்க முடியும் என்ற மேற்கு நிலைக்கு, சோவியத்தை இட்டுச் செல்வதை துரிதப்படுத்தியது. இது கைத் தொழிலை முதன்மைப் படுத்தியதன் மூலம், விவசாயிகளை ஒட்ட உரிஞ்சியது. கைத்தொழில் வளர்ச்சிக்கு விவசாயிகள் தமது முழு உழைப்பையும் நல்க வேண்டியிருந்தது. இதன் மூலம் பெரும்பான்மை உழைப்பாளிகளான விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். இங்கு ஒன்றை முன்தள்ளி மற்றதை பின்தள்ளி நாட்டை முன்னேற்றிய முறைக்கு பதில், இரண்டையும் ஒருசேர முன்தள்ளி செல்லவேண்டிய பாதை கைவிடப்பட்டது. இது விவசாயத்துக்கும், தொழிலாளிக்குமான முரண்பாட்டை களைவதற்கு பதில், முரண்பாட்டை அகலப்படுத்தியது. உண்மையில் இந்த மார்க்கத்தை ஸ்டாலின் எங்கிருந்து பெற்றார் எனின், புறநிலையாக நிர்ப்பந்தம் கொடுத்த தவறான டிராட்ஸ்கிய அரசியல் வழியில் இருந்து பெறுவதே, இங்கு நிகழ்ந்தது. டிராட்ஸ்கி பின்தங்கிய நாட்டில் புரட்சி நடத்த முடியாது என்று போட்ட ஆரவராத்தை கடக்கவும், அவர் வைத்திருந்த விவசாயிகளை அன்னியப்படுத்தி பார்க்கும் பார்வையினுடாக (டிராட்ஸ்கி உழைப்பை இராணுவ மயப்படுத்தவும், விவசாயிகளின் நிலத்தை உடன் கூட்டுப்பண்ணையாக்க வேண்டும் என்று லெனிடமே கோரியவர்), விவசாயிகளை ஒட்ட உரிஞ்சும் தத்துவத்தையே ஸ்டாலின் எடுத்துக் கொண்டே இத் தவறைச் செய்கின்றார். இதை செய்யும் போது நிர்வாக ரீதியான வடிவத்தில் கையாண்ட போக்கு கூட, டிராட்ஸ்கியின் அரசியல் வடிவத்தில் இருந்தே ஸ்டாலின் பெறுகின்றார். லெனின் இதை விமர்சனம் (“நிர்வாகத் தன்மை வாய்ந்த அனுகுமுறை”என) செய்திருந்த போதும், இதை ஸ்டாலின் அங்கு இருந்தே பெற்றதன் முலம், அடுத்த தவறை செய்கிறார்.

4.நிர்வாக ரீதியான அரசியல் அணுகுமுறை டிராட்ஸ்கியின் பண்பாக இருந்தது. இதைத்தான் லெனின் டிராட்ஸ்கி பற்றிய விமர்சனத்தில் சுட்டிக் காட்டுகின்றார். டிராட்ஸ்கி மக்களுக்குள் இயங்கிய ஒரு ஊழியாராக பயிற்சி பெற்றவர் அல்ல. ஆரம்ப காலத்தில் பல்வேறு வகைப்பட்ட கதம்பக் கோட்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்ட பின்பு, பேச்சு ஆற்றலால் 1905 புரட்சியில் மேடையேறி தலைவரானவர். அதன் பின்பு சமூகத்தில் இருந்து அன்னியமாக, கட்சியின் புரட்சிகரமான நடவடிக்கையில் ஈடுபடாது, முற்றாக வெளிநாடுகளில் அங்குமிங்குமாக, வெளிவந்த மார்க்சியத்தை திரிக்கும் பத்திரிகையில், இடைநடுவழிப் பாதையை கோட்பாட்டுக்கு புறம்பாக எழுதி வாழ்ந்தபடி காலத்தை ஒட்டினார். இதற்கு எதிரான புரட்சிகரமான மக்கள்திரள் கட்சிகளில் அவர் இணைந்து இருக்கவுமில்லை, அதுபோல் போராடியதுமில்லை. மாறாக அலைந்து திரிந்தும், கட்சிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளுக்குள் தலை நீட்டியும், அதற்குள் சதிப்பணியான (இது லெனின் கூற்று) அனுகுமுறைகளும், அடிப்படையில் நிர்வாக ரீதியாக காய்களை நகர்த்தும் அரசியலில் பிரமுகராக இருந்தார். இவருக்கு இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக ஆற்றல் இவரின் ஒரே அரசியல் மூலமாக இருந்தது. போல்ஸ்விக்கு எதிராக எப்போதும் மென்ஸ்விக்குகளுடனும் கூடியும், சில நேரங்களில் இதற்கு இடையிலும் ஒரு பாதையை வைப்பதுமாக இருந்ததுடன், இதை பிரதிநிதித்துவப் படுத்திய சர்வதேச போக்குகளிலும், அங்கம் இங்கும் அலைந்து திரிந்த லும்பன் அரசியலையே, அரசியல் நடைமுறையாக கொண்டிருந்தவர். 1917 இல் போல்ஸ்விக் கட்சியில் இணைந்தவுடன், யுத்த நிலைமை காரணமாக இராணுவத்தில் கட்டளையிடும் ஒரு அரசியல் வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற போக்குகள், நிர்வாகத் தன்மை மற்றும் அதிதமான சுய நம்பிக்கை சார்ந்து, இயந்திர கதியில் கட்சி நிர்வகத்தை கையாளும் தன்மையைக் கொண்டிருந்தார். இது அதிகார வர்க்கத்தின் ஊற்று மூலமாக மாறிவிடுகின்றது.

இந்த டிராட்ஸ்கிய அரசியலில் இருந்து ஸ்டாலின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. கட்சியை ஆரம்பம் முதல் உருவாக்கிய ஸ்டாலின், மக்களுக்குள் தலைமறைவாக அவர்களுக்குள் வாழ்ந்து, அவர்களைச் சார்ந்து மக்கள் திரள் பாதையே ஸ்டாலின் மார்க்கமாக இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிந்தி சமுகத்தில் இதில் ஊன்றி நிற்க தவறியது ஏன்? ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில், முரண்பாடுகள் கட்சியின் உயர் மட்டங்களில் தொடர்ச்சியாக அலை அலையாக முன்வந்த போது, முரண்பாட்டை முன்வைத்தவர்கள் தமது சொந்த அரசியல் வழியில், நிர்வாக ரீதியான வழிகளில் பகிரங்கமான, இரகசியமான அணைத்து வழியிலும் மேல்மட்ட சதியை கட்டமைத்த போது, ஸ்டாலின் மற்றாக நிர்வாக ரீதியான வடிவத்தை கையாளும் தவறைச் செய்கிறார். கட்சியின் மேல் மட்டத்தில் பாட்டாளி வர்க்க போராட்டத்துக்கு எதிராக கையாண்ட அனைத்து நிர்வாக ரீதியான நடத்தைக்கும், சமூகத்தில் மறைமுகமாக வர்க்க வேர் இருப்பதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவில்லை. அதை மேல்மட்ட சதியாக மட்டும் குறுக்கி பார்த்த நிலையில், அதை நிர்வாக ரீதியாக அணுகுவதை துரிதப்படுத்தியது. இடதுசாரி கம்யூனிசம் என்ற நூலில் லெனின்

“(ஓரே ஒரு நாட்டில் கூட) தூக்கியெறியப்படுவதால் அதன் எதிர்ப்பை பத்து மடங்கு அதிகரித்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த எதிரியாகிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக புதிய வர்க்கம் நடத்தும் மிகவும் தீர்மானகரமான, மிகவும் ஈவுரக்கமற்ற ஒரு யுத்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி அதன் சர்வதேசிய மூலதனத்தில் மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வதேசிய தொடர்புகளின் பலத்திலும் நம்பகமான தன்மையிலும் மட்டுமல்ல பழக்க வழக்கங்களின் சக்தி வாய்ந்த படிப்பிலும், சிறு உற்பத்தியின் பலத்திலும் கூட இருக்கின்றது. ஏனெனின் துரதிஷ்ட வசமாக உலகில் இன்னும் மிகமிகப் பரந்த அளவிலானதாக சிறு உற்பத்தி இருக்கிறது. இடையராதும், தினந்தோறும், மணிதோறும், தன்னியல்பாவும் ஒரு திரளான அளவிலும் முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்கான தோற்று வாய்க்குக் காரணமாக சிறு உற்பத்தி இருக்கிறது. இந்தக் காரணங்களினால் எல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றியமையாததாக இருக்கிறது. சளையாத, கட்டுப்பாடான உறுதியான, வெல்லற்க மற்றும் திடசித்தம் ஆகியவற்றைக் கோரும் ஒரு யுத்தமின்றி, நீண்ட உடும்புப்பிடியான மற்றும் ஜீவமரண யுத்தமின்றி முதலாளித்துவத்தின் மீது வெற்றி சாத்தியமில்லை”

இந்த கூற்றுகளை பிரதிநிதித்துவம் செய்த கட்சியின் தலைமை உறுப்புகளுக்கு, சமூகத்தில் ஒரு வர்க்க வேர் உண்டு என்று பார்த்திருப்பின், ஸ்டாலின் தனது கடந்தகால மக்கள் திரள் பாதையை கொண்டே இந்த போக்கை தனிமைப்படுத்தி ஒழித்திருக்க முடியும்;. இதை சரியாக அணுகாமையால் அடுத்த தவறு ஏற்படுகின்றது.

5.பல்வேறு வர்க்க கோரிக்கையை உள்ளடக்கிய சமூக வேர்களை அடிப்படையாக கொண்டு கட்சியின் உயர் மட்டங்கள், தமது அதிகாரத்தை நிலைநிறுத்த கட்சியூடாக தீவிரமாக முனைந்தன. இதன் போது வன்முறை, வன்முறை சாராத அனைத்து வடிவத்தையும், இரகசியம் மற்றும் இரகசியமல்லாத குழு வடிவில் கட்டமைக்கப்பட்டன. 1.12.1934ம் ஆண்டு இந்த இரகசிய சதிக் குழுக்கள், ஸ்டாலின் மிக நெருங்கிய நன்பரும் கட்சியின் முன்னணித் தலைவருமான கிரோவ்வை படுகொலை செய்ததைத் தொடர்ந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்த, நிர்வாக ரீதியான அனுகுமுறையில் சார்ந்திருப்பதை நடைமுறையாக்கியதுடன் அதையே ஒரு கோட்பாடக்கினர்.

6.1934 இல் கிரோவ் படு கொலையைத் தொடர்ந்து இரகசிய சதிக் குழுக்களை கண்டறிவதில் அதிகமான அக்கறை காட்டப்பட்டது. இதன் விசாரணைகளின் வடிவமாகவே 1937-1939 காலகட்ட கட்சி சுத்திகரிப்பு இயக்கம் விரிவாக நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இதை கையாள்வதில் கட்சியின் முதன்மைப் பாத்திரம் பின்தள்ளப்பட்டது. இந்த சதிகளை கண்டறிய முற்றாக இரகசிய உளவு அமைப்பை சார்ந்து அதை விரிவாக்கினார். இதன் போது கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர்கள் பலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, அவ் விசாரனையை பகிரங்கமாக சர்வதேச பத்திரிகைதுறையின் முன்பாகவே நிகழ்த்தப்பட்டது. இந்த விசாரனையின் போது, அவர்கள் தமது அரசியல் நிலைக்காக நிதிமன்றத்தில் உறுதியுடனேயே வாதித்திட்டனர். அதன் அடிப்படையில் தமது சதியை நியாப்படுத்தினர். தமது அரசியல் நடத்தைகளை முன்வைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. உண்மையில் உண்மையான சதியாளர்கள் விசாரனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆரம்பத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, சதிசெய்த குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற கொண்டு வந்த கட்டம் தாண்டி, அடுத்த கட்டத்தில் பொது முரண்பாடுகள் மீதானதாகவும், நட்பு முரண்பாடுகள் மீதான பொதுவான கைதாக மாறிவிட்டது. இவைகூட ஏற்பட காரணம், இரகசியமான சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைமை தாங்கிய அரசியல் சார்ந்த இரகசியக் குழுக்கள், கட்சியின் முரண்பாடுகளையும் கையாளத் தொடங்கியிருந்தது. முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பவர்களை சந்தித்து வென்று எடுக்கவும், சதியில் பங்காளியாக்குதல் என்ற பொதுவான இரகசிய சதிப்பாணியும், கட்சி மற்றும் கட்சிக்குள் கட்சி கட்டும் இரகசிய அனுகுமுறைகள், இந்த கைதை பொதுமையான முரண்பாட்டின் மீதானதாக மாற்றிவிடுகின்றது. பொது முரண்பாடுகள் மீதான இரகசிய சதிக் குழுக்களின் அரசியல் செயற்பாடு, ஸ்டாலினை கட்சியிடம் நம்பிக்கை இழக்க வைத்ததுடன், முற்றாக நிர்வாக ரீதியான இரகசிய உளவு அமைப்பை சார்ந்திருப்பதை உந்தித்தள்ளியது. அதாவது கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை கொண்டு, ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கட்சியில் வர்க்கப் போராட்டத்தை தொடர மறுத்து, ஸ்டாலினையும் அவர் சார்ந்த பாட்டாளி வர்க்க நிலையையும் இரகசியமான வழியில் அகற்றிவிட முயன்ற போக்குதான், பொதுவான முரண்பாட்டின் மீதான விசாரனையாக மாறிவிடுகின்றது. அன்று பாதுகாப்பு படையில் எதிரி உடுருவியிருந்ததும், இதன் குறிப்பான விளைவுகளாக இருந்தது. உண்மையான ஸ்டாலின் ஆதாரவளர்கள் கூட தண்டனைக்குட்பட்டனர்.

சதியில் நேரடியாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் மேலான விசாரனையின் போது, அவர்கள் முரண்பாடுகளை கையாளும் எல்லையில், கட்சியின் முரண்பாட்டின் எல்லைவரை விரிந்த தளத்தில் இரகசியமாக சந்தித்து, தமது சதிக்கு வென்றெடுக்கும் போக்கு காணப்பட்டது தெரியவந்த போது, அதை, ஸ்டாலின் முரண்பாடுகளை எல்லாம் சதியாக காண்பதன் மூலம் தவறு இழைத்தார். இது முரண்பாட்டை மறுக்கும் கோட்பாடாக மாறி, அதை சதியாக மட்டும் கண்பது என்ற அரசியல் தவறை கையாண்டார். கட்சிக்குள் இருந்த எதிரியையும், கட்சிக்குள் இருந்த முரண்பாட்டையும் வேறு பிரித்தறிவதை கைவிட்டார். இதனால் முரண்பாட்டின் இயங்கியல் தன்மையை படிப்படியாக கைவிட்டார். இது இரண்டு பிராதானமான கோட்பாட்டு தவறை உருவாக்கியது

1.முரண்பாடு தான் ஒரு சமுதாயத்தின் ஒரு இயங்கியல் விதிமட்டுமின்றி, வளர்ச்சியின் விதியுமாகும். முரண்பாடு இல்லாத இயக்கம் என்பது கற்பனையானது. முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசமும், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசமும் என்ற அணைத்திலும் முரண்பாட்டின் விதியுண்டு. முரண்பாடு நட்பாகவும், பகையாக என இரண்டும், அக்கம்பக்கமாக சமுதாயத்தில் காணப்படுகின்றது. இதை அவர் கட்சிக்குள் மறுப்பதை ஒரு பொதுவடிவமாக்கினர். முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றது. முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சிக்கு எதிராக மாறும் போது அதை அழிப்பதற்கு பதில், சமுதாய வளர்ச்சியை ஊக்குவித்த முரண்பாட்டையும் பகைமுரண்பாடக்கிய, கோட்பாட்டு தவறை செய்தார்.

2.அடுத்து அவர் இயங்கியல் வளர்ச்சி விதியை நிராகரித்தார். ஒரு பொருள் நிலையானது என்ற அடிப்படையான கொள்கையை, கட்சி உறுப்பினர்கள் மீது கையாளும் வழிமுறையில், இது சார்ந்து வெளிப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் மாறிக் கொண்டிருப்பதை காணத் தவறினர். நட்பு முரண்பாடுகளையும், தவறுகளையும், பகைமுரண்பாடுகளையும் ஒன்றாக்கியதன் மூலம், இயங்கியலில் மாறிக் கொண்டிருக்கும் தன்மையை மனிதர்களுக்குள் புரிந்து கொள்ளவும், அதை நடைமுறையில் கையாளவும் மறுத்தார். இது திருந்தக் கூடிய மற்றும் நட்பு முரண்பாட்டை இயங்கியல் வளர்ச்சி விதியாக்க மறுத்தன் விளைவு, முரண்பாடுகளை பொதுவான எதிரியாக காண்பது நிகழ்ந்தது. பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான எதிரியின் நோக்கத்தை இனம் கண்டு, அதை தனிமைப்படுத்தி அழிப்பதுக்கு பதில், பொதுவான வகையில், முரண்பாட்டின் மீது சதியைக் காண்பது ஒரு வடிவமாகியது.

இதனால் கட்சியில் சரியான சக்திகள் கூட, இனம் பிரிக்க முடியாத பொதுவாக வகைப்படுத்தும் அரசியல் தவறால், உண்மையான சதியாளர்களுடன் இணைக்கப்பட்டு கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். இது பற்றி 1940 இல் ஸ்டாலின் எழுதிய லெனினியம்” என்ற நூலில் களையெடுப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதுடன், களையெடுப்புடன் கடுந் தவறுகள்” ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு, சுயவிமர்சனம் செய்துள்ளார்.

7.சதிகள் மீதான விசாரணை, விரிந்த தளத்தில் கட்சிக்குள் முரண்பாடுகள் மீது சதிக் குழுக்களின் தொடர்புகள் தெரியவர, கட்சி மீதான நம்பிகையை தொடர்சியாக இழக்கின்றார். இது கட்சி மீதான நம்பிகையை விட, தன் மீதான நம்பிக்கையை ஆதாரமாக கொள்வது ஒரு போக்காக மாறுகின்றது. அதாவது போல்ஸ்விக் வரலாற்றில் தனது சரியான தொடர்ச்சியான நிலையை அடிப்படையாக கொண்டு, சுய நம்பிக்கையில் சார்ந்து நிற்பதில் அதிகமான கவனத்தை குவிக்கின்றார். அன்று டிராட்ஸ்கியின் தன்னம்பிக்கையை (இது லெனின் டிராட்ஸ்கி மீது செய்த விமர்சனம்) தொட்டு, ஸ்டாலின் தன்னம்பிக்கையில் தன்னை ஆதாரப்படுத்தினர். இது கட்சியை சார்ந்திருப்பதை கைவிடுவதாக மாறியது. இது கட்சியை விட தன்னைச் சார்ந்து முடிவு எடுக்கும் பண்பாக மாறுகின்றது. இது லெனின் ஸ்டாலின் மீது செய்த விமர்சனத்தை படிப்படியாக கைவிட்டு, அதை மீள கையாளும் அளவுக்கு புறநிலமை மற்றும் முரண்பாட்டை பொதுமையாக்கிய தவறால், ஸ்டாலினை தொடர்ச்சியான தவறுக்கு இட்டுச் சென்றது. ஸ்டாலின் கட்சியை கூட்டுவது, விவாதிப்பது அனைத்தையும் படிப்படியாக கைவிடுகின்றார். இது இயல்பாக தனிமனித வழிபாட்டுக்கு வித்திடுகின்றது. இதன் மூலம் எதிரியும் இந்த தனிமனித வழிபாட்டில் ஒளித்துக் கொள்வது, புதிய போக்காகின்றது. முன்பு கட்சியில் முரண்பட்ட விவாதங்கள், எதிரியையும் நண்பனையும் தெளிவாக இனம் காண்பது சாத்தியமாக இருந்தது. ஆனால் முரண்பட்ட விவாதங்கள் குறைந்து செல்ல, தனிமனித வழிபாடு முதன்மை பெற, எதிரியையும் நண்பனையும் இனம் காண்பது முடியாததாகி விடுகின்றது. ஸ்டாலினை தனிமனித வழிபாட்டின் ஊடாக, புகழ்வதன் ஊடாக, எதிரிகள் சொந்த கோட்பாடுகளை அதற்கு பின் ஒளித்து வைத்தபடி, அதிகாரத்தின் உயர் வடிவங்களை கைப்பற்றுவது இலகுவானதாகியது. ஸ்டாலின் மறைவுக்கு பின்பு எதிரி வர்க்கம், இந்த தனிமனித புகழ்பாடும் எல்லைக்குள் ஒளித்தபடி, அதிகாரத்துக்கு இலகுவாக வரமுடிந்தது. அதேபோல் ஸ்டாலின் அவதூறுகளையும் அதன் எல்லைக்குள், இரகசிய குழுவில் கட்டமைக்க முடிந்தது. முரண்பாடுகளை கட்சியில் முன்வைக்கும் ஜனநாயக மத்தியத்துவமும், ஒழுங்காக கட்சி காங்கிரஸ் கூடியிருப்பின், இலகுவாக 1950 களில் எதிர்புரட்சி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க கையாண்ட வழியில் ஏற்பட்ட தவறு ஊடாகவே, எதிரி ஆட்சிக்கு வந்திடுவது நிகழ்கின்றது.

8.மேல்மட்ட கட்சியில் ஸ்டாலின் நம்பிக்கை இழக்க, இரகசியக் குழுக்களின் விரிவான நடத்தைகள் காரணமாக இருந்தன. ஸ்டாலின் சுய தன்நம்பிக்கை மீது சார்ந்திருந்தனால், தனிநபர் வழிபாடு ஒரு பொது அரசியல் வடிவமாகியது. சதி மீதான பகிரங்க விசாரணை, முரண்பாடுகள் மீதான பொதுவான விசாரனையாக மாறிய போது, ஸ்டாலின் தனது சொந்த அரசியல் சட்ட அமைப்புக்குள் விசாரனை செய்வதை கைவிட்டு, அதற்கு புறம்பான வழியில் அவ் விசாரனையை நடத்தியதன் மூலம், தனது சொந்த அரசியல் சட்ட அமைப்பைக் கூட புறக்கணித்தன் மூலம், அரசியல் தவறு இழைத்தார்.

9. இதன் மூலம் நட்பு மற்றும் தவறு இழைத்த முரண்பாட்டின் மீது உள்ள சரியான போல்ஸ்விக்குகள், மற்றும் திருந்தி வரக் கூடிய உறுப்பினர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டனர், அரசியில் ரீதியாக ஒதுக்கப்பட்டனர். இது கட்சிக்கு மாபெரும் இழப்பைக் கொடுத்தது. 1950 இல் அரங்கேறிய எதிர்புரட்சிக்கு இது சாதகமாக இருந்தது. ஸ்டாலின் விரும்பிய பாட்டாளி வர்க்க விடுதலைக்கு எதிராகவே, இது தனது விளைவைக் கொடுத்தது. ஸ்டாலின் கூறியது போல்

“முதலாளியத்தைத்திரும்பக் கொண்டுவரும் சாத்தியப் பாட்டுக்கான நிலைமைகள் நமது சோவியத் நாட்டில் உள்ளனவா? ஆம், இங்கு உள்ளன. இது விந்தையாகத் தோன்றலாம் தோழர்களே, ஆனால் இது உண்மை”

இது பற்றி ஸ்டாலின் நிறையவே எப்படி எல்லாம் ஏற்பட முடியும் என எழுதியுள்ளார். ஸ்டாலின் எச்சாரித்படியே அவரின் மரணத்தின் பின்பு இது நிகழ்ந்தது.

10.எதிரிகளை கட்சி இனம் கண்டு கொண்டதன் மூலம், அவை உயர்மட்ட சதியாக வெளிப்பட்டதால், களையெடுப்பு உயர்மட்ட வடிவமாக இருந்தது. 1937-1939 களில் கட்சியில் எதிரி வர்க்கத்தை ஒழிக்கும் விசாரனைகள் நடத்தப்பட்டு அது முடிவுக்கு வந்த போது, 1939 இல் ஸ்டாலின் வர்க்கங்கள் ஒழிந்து விட்டது என்று பிரகடனம் செய்தார். அதை அவர்

“உள்நாட்டில்உறுதியற்ற தன்மையை உருவாக்கும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும், உழவர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையே உள்ள தீர்க்க முடியாத முரண்பாடுகளால் முதலாளியச் சமுதாயம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சுரண்டல் நுகத்தடியிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சோவியத் சமுதாயத்திலோ இத்தகைய முரண்பாடுகள் ஏதும் இல்லை, அது வர்க்க முரண்பாடுகளிலிருந்து விடுபட்டிருக்கிறது, அது தொழிலாளர், உழவர், அறிவாளிகள் ஆகியோரின் நட்பு நிறைந்த ஒத்துழைப்பு என்ற காட்சியை வழங்குகிறது”

என்றார் ஸ்டாலின். இது போல் 1936 புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போதும் இதுபோல் கூறிய ஸ்டாலின், 1937 சதிகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு முந்திய கருத்துக்கு எதிராக, எதிரி வர்க்கம் பற்றி எச்சரித்து போராடக் கோருகின்றார். இங்கு ஸ்டாலின் களையெடுப்பின் அரசியல் கண்ணோட்டம், குறிப்பான நிலைமைகளைச் சார்ந்து வெளிப்படுகின்றது. இங்கும் வர்க்க முரண்பாட்டை மேல் மட்டத்தில் மட்டும், அதுவும் சதியாக கண்டு கொண்டதும், அதற்கு சமூக வேர் இருந்தை காணத் தவறிய அரசியல் தவறை இழைக்கின்றார். அத்துடன் தொடர்ச்சியான வர்க்கப் போராட்ட லெனினிய கண்ணோட்டத்தையும், மேல் மட்ட சதியாக மட்டும், குறுக்கி பார்த்து விடும் தவறு நிகழ்ந்தது. வர்க்கப் போராட்டம் கட்சியில், அதிலும் மேல் மட்டங்களில் குவிந்த காணப்படும் என்பது உண்மையாக இருந்த போதும், அதை பிரநிதித்துவப் படுத்தும் சமூகத் தொடர்ச்சி சமூகத்தில் இருப்பதை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. இது புரட்சிக்கு பிந்திய மக்கள் திரள் அமைப்புகான புரட்சிகரமான பாதையை இனம் கண்டு கொள்ளாத, தொடர்ச்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. 1939 இல் வர்க்கங்கள் எதுவும் இல்லை என்ற ஸ்டாலின் தவறான விளக்கம், எதிரி வர்க்கம் தன்னை அதற்குள் ஒளித்துக் கொள்ளவும், எதிர் புரட்சிக்கான மறுவார்ப்பு செய்து ஆட்சியைக் கைப்பற்றவும் எதிரிக்கு வாய்ப்பளித்தது.

11.எதிரி இல்லை என்று கூறிய போதும், யதார்த்தத்தில் அவைகளை எதிர் கொள்கின்ற போது ஸ்டாலின் “அதிகாரவர்க்கத் துரு” என்று அதிகார வர்க்கம் பற்றி எச்சரித்து, அவர் வெறும் நிர்வாகம் மட்டும் சார்ந்த வர்க்கப் போராட்டத்தை நடத்தியமை, என்பது உள்ளடகத்தில் அதிகார வர்க்கத்தின் உருவாக்கத்தை களைந்துவிடவில்லை. இது பொருளாதாரம் உள்ளிட்ட சலுகைகளை கொடுப்பதன் ஊடாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வழிகாட்டியது. 1952 இல் 19 வது கட்சி பேரவையில் சில உதாரணங்கள் மூலம் அதிகாரத்துவம் பற்றி அம்பலம் செய்யப்பட்டது. ஆனால் இதன் தோற்றவாய் மற்றும் அதன் ஒழிப்பு பற்றி யாரிடமும் ஒரு மக்கள்திரள் வழி இருந்ததில்லை. ஒன்றில் புரட்சியை கைவிட்டுச் செல்வது அல்லது நிர்வாக முறையிலான பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை மேல் இருந்து கையாள்வது என்ற இரு பாதையே, எதிர் எதிராக காணப்பட்டது.

12.வர்க்கப் போராட்டத்தை நிர்வாகம் சார்ந்து மேல் இருந்து கீழாக மட்டும் முன் தள்ளிய போக்கில், மேல் இருந்தவர்களை திருத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார். இது சலுகைகளையும், வேறுபட்ட சம்பள விகிதத்தையும் கொண்ட போக்கு அனுமதிக்கப்பட்டது. இது சலுகை பெற்ற பிரிவை உருவாக்கியது. ஸ்டாலின் இங்கும் கடும் சீரழிவுகள் மீது களையெடுப்புகளை நடத்திய போதும், உண்மையில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையை கண்டறியாததால், நிர்வாக ரீதியான தண்டனை, சலுகை என்ற இரு போக்கை சார்ந்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாத்தார். இங்கு மக்கள் திரள் பாதை யாராலும் இக்காலத்தில் முன்வைக்கப்படவில்லை. இந்த பாதையை மாவோதான் முதன் முதலாகக் கண்டறிந்தார்.

13.அடுத்து தொழில் மயமாக்கலுக்கு விரிவான அழுத்தம் கொடுத்து, விவசாயத்தை புறக்கணித்துடன், தொழில் மயமாக்கலுக்கு விவசாயத்தை மூலதனமாக்கியதால், தொழிலாளார் விவசாயிகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வு மறைவதற்கு பதில் ஆழமாகியது. இது வர்க்க வேறுபாட்டை குறைப்பதற்கு பதில், எதிர் மறையில் செயலாற்றியது. இந்த அனுகுமுறை வர்க்கங்களை ஒழிக்கும் போராட்டத்துக்கு எதிரானதாக இருந்தது.

14.அடுத்து ஸ்டாலின் அடிக்கட்டுமானம் மற்றும் மேல்க்கட்டுமான உறவின் இயங்கியலை ஒருதலைபட்சமாக பார்த்தார். அடிக்கட்டுமான மாற்றத்தை சாதிப்பதன் மூலம், மேல் கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டு வந்த விட முடியும், இதனுடாக சோசலித்தை கட்டிவிட முடியும் என்று நம்பினார். இதனால் அடிக்கட்டுமானத்தில் நடத்திய புரட்சியை மேல் கட்டுமானத்தில் கையாளவில்லை. இது உள்ளடக்கத்தில் பொருளாதார வாதமாக உள்ளது. புரட்சி பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகவும், பரஸ்பரமும், இடைவெளியின்றி அனைத்து வடிவத்திலும் இடைவிடாது நடத்தப்பட்டிருக்க வேண்டும்;. மேல் கட்டுமான புரட்சி நடத்தப்படாமையால் அடிக்கட்டுமான புரட்சி, சோசலிசத்தை பலப்படுத்தும் திசையிலான வளர்ச்சியில் முடமாகியது. சோசலிசத்தை பாதுகாத்து நிறுவும் போராட்டத்தில், ஸ்டாலின் சமூக விளைவுகளைப் பற்றி சிந்தித்தை விட, பொருட்களைப் பற்றியே கவனத்தைக் குவித்தார். அதாவது மேல்கட்டுமானத்தை பற்றி அக்கறைப்படாது, அடிக்கட்டுமானதில் மட்டுமே கவனத்தை குவித்தார். இது உண்மையில் மக்கள்திரள் பாதையுடன் தொடர்புடையதாக இருந்தது.

15.ஸ்டாலின் மக்களைப்பற்றி பேசாது நிபுணர்கள், கட்சி ஊழியர்கள், என்று ஒரு பக்கத்தை மட்டுமே அழுத்தம் கொடுத்து, பாட்டாளி வர்க்க நிர்மானிப்பை முன்னெடுக்கும் அரசியல் மார்க்கத்தை வைக்கின்றார். அதாவது மக்கள் என்ற முக்கியத்துவம் உடைய பகுதியை கவனிப்பதில் தவறு இழைத்தார். கட்சி ஊழியர்களும், நிபுணர்களும் மக்கள் இன்றி இல்லை என்பதை புரிந்த கொண்டு, இரண்டையும் கொண்டு முன்னேறும் மார்க்கத்தை காணத் தவறினார். இந்தத் தவறும் நேரடியாக மக்கள் திரள் பாதையுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.

16.ஸ்டாலின் நிர்வாகம் சார்ந்த விதிகளையே புரிந்து கொள்வது பற்றி அக்கறை கொண்டார். ஆனால் இதில் உள்ள நிகழ்வுமுறைகளைபற்றி அக்கறைப்படுவதில் தவறு இழைத்தார். ஸ்டாலின் கூட்டு உடைமையில் இருந்து பொதுவுடமைக்கு மாறும் வழியை கண்டறியவில்லை. கம்யூனிசத்தை நோக்கி இடைவிடாத மக்கள் திரள் புரட்சியின்றி, கம்யூனிசத்தை அடைய முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதாவது ஒரு மக்கள் திரள் புரட்சி, எப்படி தொடர்வது என்ற விதியை கண்டறியத் தவறினார். இதை யாரும் அன்று முன்வைக்கவில்லை.

17.மக்கள் திரள் பாதையை கண்டறியாததால் மையப்படுத்தப்பட்ட வடிவில் அனைத்தையும் நிர்வகிக்கும் முறை பரந்த தளத்தில் காணப்பட்டது. மேல் இருந்து கீழாக, கீழ் இருந்து மேலாக என்ற, பரஸ்பர விதி கண்டறியப்படவில்லை. இதனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க போராடிய வரலாற்றில், அவை முழுமையாக மக்களின் நலனை தொடர்சியாக பிரதிபலிக்கத் தவறியது.

18.கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை கையாள்வதை 1937 களில் கைவிட்டார். 1937 களின் முன்பு ஸ்டாலின் கையாண்ட சரியான அரசியல் வழிகள், லெனினியத்தின் தொடர்சியாக (கூட்டுப் பண்ணையாக்கலிலும், மூலதனத்தை திரட்டிய வடிவத்திலும்;, வர்க்கங்களை வகைப்படுத்துவதில் தவறுகள் இழைத்த போதும்) விரிவாக்கிய பண்பை, புறநிலையின் வளர்ச்சி பெற்ற எதிரி வர்க்கத்தின் சதிகளின் நிர்ப்பந்தில் கைவிட்ட வரலாற்றின் ஊடாகவே, ஸ்டாலின் அவதூறுகள் எதிரி வர்க்கத்தை மறைத்தபடி, கட்டமைக்கப்படுவதை நாம் இன்று தெளிவுபடவே எல்லா ஸ்டாலின் அவதூறுகள் மீதும் இனம் காண்கின்றோம். இதன் ஊடாக சரியான முந்திய மார்க்கங்கள் கூட, அரசியல் ரீதியாக துடைத்தெறிய எதிரி வர்க்கங்கள் முனைகின்றது. இதைத் தான் குருசேவ் முதல் கொர்ப்பச்சேவ் வரை கையாண்டு, ஏகாதிபத்தியத்திடம் புரட்சியை தரை வார்த்தனர். ஸ்டாலின் சில வெளி நாடுகளின் கட்சி உறவுகளை கையாள்வதிலும் கூட, தவறு இழைத்தார். சில தவறான மோசமான ஆலோசனைகளைக் கூட வழங்கினார். ஏகாதிபத்தியங்கள் சோவியத் மீதான யுத்தமாக இரண்டாம் உலகயுத்தத்தை நகர்த்த நடத்திய ஏகாதிபத்திய சதிகளை, ராஜதந்திரமாக ஏகாதிபத்தியத்துக்கிடையில் ஸ்டாலின் நகர்த்திய நிலையில், அதை மட்டும் சார்ந்து நின்றதன் மூலம், யுத்தத்துக்கு முன்பு இரண்டாம் உலக யுத்த தயாரிப்பில் முழுமையான கவனத்தை செலுத்தி, தற்காப்புக்கு தயார் செய்யத் தவறினர்.

19.பாட்டாளி வர்க்க தத்துவத்தில் வர்க்க சமுதாயத்தில் அதை எதிர் கொள்ள காலத்தால் அழியாத பல தத்துவார்த்த விடையத்தை தந்ததுடன், எதிரியை கோட்பாட்டு ரீதியாக அம்பலம் செய்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியவர், பிற்பட்ட காலத்தில் சில கடந்த கால ஆவணங்களை தவறாக திருத்த அனுமதித்தார். புரட்சியின் வேறுபட்ட காலத்தில் இணைந்து கொள்ளும் நபர்களின் வேறுபட்ட வாக்க நோக்கத்தையும் மற்றும் அரசியலின் தொடர்ச்சியின்மையை, அவர்களின் வர்க்க அரசியலுடாக அம்பலம் செய்த சரியான பாதையை முழுமையாக சார்ந்திருக்கத் தவறி, பிற்பட்ட காலத்தில் தனிமனித வழிபாட்டு வழிகளுடாக ஆவணங்களைத் திருத்த அனுமதித்தது, அரசியல் ரீதியாக பாட்டாளி வர்க்கமல்லாத கட்சியில் ஒட்டிக் கொண்ட சகபயணிகளை, அரசியல் ரீதியாக அம்பலம்செய்யும் பழைய பாதை முழுமையாக சார்ந்திருப்பதை கைவிட்டது என்பது, சக பயணிகள் இதற்கு ஊடாக தம்மை அரசியரீதியாக பாதுகாக்கும் வழிக்கு இட்டுச் செல்ல மறைமுகமாக அனுமதித்த தவறுகளையும் இழைத்தார்.

இதுபோன்று பல கடுமையான தவறுகளை, மக்கள் திரள் பாதையை கண்டறியத் தவறியதால் இழைத்தார். மக்கள் திரள் பாதையை தொடர்சியான வர்க்கப் போராட்டத்தில் கண்டறியத் தவறியதன் விளைவால், ஜனநாயக மத்தியத்துவத்தைக் கூட கட்சியில் இருந்து விலக்கியதுடன், அகமுடிவுகளை சார்ந்திருக்கும் நிலைக்கு சரிந்து சென்றார். இது உண்மையான எதிரிகளை ஒடுக்கிய அதே நேரம், நண்பர்களையும் ஒடுக்கும் அளவுக்கு விரிவாகியது. இதன் போது தனிமனிதர் வழிபாடு புதிய வடிவமாக வளர்ச்சி பெற்றது. இதற்குள் எதிரி ஒளிந்து கொண்டதுடன், அதன் வழியிலேயே ஆட்சியை கைப்பற்றி அதை தனிமனித வழிபாட்டு கண்ணோட்டத்திலேயே தனிமனிதனாக குற்றம் சாட்டி, ஸ்டாலினை எட்டி உதைக்கவும் பின்நிற்கவில்லை. எப்படி தனிமனித வழிபாடு தவறானதோ, அதே அளவுக்கு ஸ்டாலினை தனிமனிதனாக குற்றம் சட்டும் அரசியலும், தனிமனித வழிபாட்டு தூற்றுதல் எல்லைக்கு உட்பட்டதேயாகும்.

முதற்பதிவு: செங்கொடி

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 19

20. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 20

21. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 21

22. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 22

23. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 23

24. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 24

25. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 25

26. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 26

27. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 27

28. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 28

29. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 29

30. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 30

31. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 31