Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் M.C லோகனுக்கு செங்கொடி போர்த்தி, செவ்வணக்கம்!

நேற்றைய தினம் ஞாயிறு (01/03/2015) காலை 10:00 மணி தொடக்கம் டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் தோழர் M.C. லோகநாதனின் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு ஏறத்தாள ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர்.

ஜரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர்கள் செங்கொடியினை தோழர் லோகனுக்கு போர்த்தி செவ்வணக்கத்தினை தெரிவித்தனர். இதனை தொடந்து அங்கு உரையாற்றிய தோழர் இரயாகரன் அவர்கள் தோழர் M.C. லோகன் அவர்களின் 30 வருடங்களிற்கு மேலான அரசியல் செயற்பாடுகள் மற்றும் சமய சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள், சாதிய வேறுபாடுகளிற்கு எதிரான தோழரின் உறுதியான செயற்பாடுகள், எழுத்துக்கள் பற்றி தெரிவித்ததுடன் மேலும் தோழர் எழுத்துடன் நின்றவர் அல்ல மக்கள் மத்தியில் வேலை செய்த செயல்வீரர் என்பதனையும் குறிப்பிட்டார்.

தான் கொண்ட கொள்கைக்காக கதைத்துக் கொண்டு இருக்காமல் நடைமுறையில் ஈடுபடுபவரே உண்மையான போராளி. இந்த வகையில் இலங்கையில் தனது தாயாரின் மரணச்சடங்கிற்கு சென்றிருந்த தோழர் அங்கு நடைபெற்ற "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்ற போராட்டத்தை சகதோழர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்து முன்னின்று நடாத்தியதனையும் நினைவு கூர்ந்தார். தோழருக்கு செலுத்தும்  உண்மையான மரியாதை என்பது அவர் இணைந்திருந்த புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் இலட்சியங்களை அடைய எந்த சமரசமுமற்ற போராட்டத்தை முன்னெடுத்து செல்வது மட்டும்தான் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சமவுரிமை இயக்கத்தின் சார்பில் தோழர் கிளி அவர்கள் உரையாற்றுகையில் அண்மைக்காலத்தில் டென்மார்க்கில் தோழர் லோகன் முன்னின்று நடாத்திய சமவுரிமை நிகழ்வுகளையும் அதில் சிங்கள மக்களையும் இணைத்து செயற்பட்டதனையும் நினவு கூர்ந்ததுடன் தோழரின் இலட்சியங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை எனக் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள், டென்மார்க் தமிழ் சமூக அமைப்புக்கள் அஞ்சலி உரைகள், கவிதைகளை வாசித்தனர்.

தோழரின் தலைமையில் அண்மையில் டென்மார்க்கில் சிங்கள மக்களையும் இணைத்து நிகழ்ந்த சமவுரிமை இயக்கத்தின் கலாச்சார மாலை நிகழ்வானது வரலாற்றில்  முக்கியமான நிகழ்வு என்று தெரிவித்தனர்.

ஒரு உறவினர் பேசுகையில் தோழர் ஊரில் நின்றிருந்த வேளையில் அங்குள்ள பிரச்சினை ஒன்றுக்காக  ஊர் மக்களை அணிதிரட்டியதையும் நினைவு கூர்ந்தார்.

ஏறத்தாள 3 மணித்தியாலங்கள் இந்த இறுதி நிகழ்வானது இடம்பெற்றது. தோழரின் இலட்சியத்திற்கு மரியாதை கொடுத்து அவரது மனைவி, பிள்ளைகள் இந்த இறுதி நிகழ்வில் எந்த சமய சம்பிரதாயங்களையும் அனுமதிக்காது, அவரது தோழர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்கான ஒரு நிகழ்வாக அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.