Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மானுடத்திற்காக வாழ்வதையே, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வாழ்ந்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன்!!!

தனக்காகவும், தன் குடுப்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன்.

அந்த போராட்டக் குணமே அவனை எமது புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைய வைத்தது. அந்த போராட்டக் குணமே அவனை எமது தோழன் ஆக்கியது.

எம்மைச் சுற்றிய எல்லாம் இனவாதம், சாதியம், ஆயுதம் தாங்கியவர்களின் அராஜகங்கள் என்று மனிதத்தை குழி தோண்டி புதைத்த போது கும்மிருட்டில் மிளிரும் ஒரு நட்சத்திரம் போல எழுந்தவன் எங்கள் எம்.சி. கருத்து, எழுத்து, பேச்சு என்பதைத் தாண்டி, மக்களுடன் வாழ்வதும், போராடுவதுமே சமத்துவ சமுதாயம் ஒன்றைக் கொண்டு வரும் என்ற பொதுவுடமை தத்துவத்தை ஏற்றுக் கொண்டு, அதற்காக செயற்பட்டவர்களில் ஒருவனாக அவன் இருந்தான் என்பதே அவன் எமது சமுதாயத்திற்கு விட்டுச் செல்லும் செய்தி.

தாயின் மரணத்திற்காக நாடு சென்றவன், மரணச் சடங்குகள் முடிந்த அடுத்தடுத்த நாட்களில் பால் நினைந்தூட்டிய தாயின் பிரிவையும் மறைத்துக் கொண்டு முன்னிலை சோசலிசக் கட்சி, யாழ்ப்பாணத்தில் "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்று இலங்கை அரசிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டான். சக தோழர்கள் போராட்டக் களத்தில் நிற்கும் போது தனது நிலையை கருத்தில் கொள்ளாது தானும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோழர்களோடு இணைந்து போராடியது அவனது தனித்துவம்.

லோகநாதன் தனது அரசியல் பயணத்தை தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தில் தொடங்கினான். பின்பு அந்த இயக்கத்தின் மக்கள் விரோத அரசியலிற்கு எதிராக போராடி வெளியேறினான். டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்த பின்பு "சஞ்சீவி" என்ற கலை இலக்கிய அரசியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு மக்களிற்கு மறுக்கப்பட்ட அரசியல், ஜனநாயக உரிமைகளிற்காக போராடியபடி மக்கள் போராட்ட அமைப்பை கட்டுவதற்கான முயற்சிகளில் பங்கெடுத்தான். 1992 இல் சுயாதீன தகவல் மையத்தில் இணைந்து செயல்பட்டான். அதன் பின்பு இலங்கையின் பேரினவாத அரசிற்கும், ஆயுதம் தாங்கிய அராஜகக் கும்பல்களிற்கும் எதிராக உருவாக்கப்பட்ட "மூன்றாவது பாதை" அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்து செயற்பாடுகளை முன்னெடுத்தான். இதே காலகட்டத்தில் முற்போக்கு சக்திகள் இணைந்து இந்தியாவில் உருவாக்கிய "தேசபக்தன்" அமைப்பினருடனும் இணைந்திருந்தான்.

2009 இல் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இடதுசாரிய கொள்கைகளை உயர்த்திப் பிடித்தபடி மக்கள் விடுதலையை முன்னிறுத்தி எழுந்த போது அதில் இணைந்து கொண்டான். முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றின் போராட்டப்பாதையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களிற்கிடையில் ஒற்றுமையை, இன ஜக்கியத்தை வலியுறுத்தி கட்டப்பட்ட சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப காலகட்ட உறுப்பினராகவும், டென்மார்க் சமவுரிமை இயக்கக் கிளையின் செயற்குழு உறுப்பினருமாக முன்னின்று உழைத்தவன் எங்கள் தோழன்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் "முன்னணி" சஞ்சிகையை பரவலாக எடுத்துச் சென்றவன்; இடதுசாரிய முன்னணியின் அமைப்பான மக்கள் போராட்டக் குழு வெளியிடும் "போராட்டம்" பத்திரிகையை மக்களிடம் கொண்டு செல்ல முன்னின்று உழைத்தவன்; புதிய ஜனநாயக முன்னணியின் இணையத்தளத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதியவன்; தமிழ்மொழி ஆளுமை கொண்டவன்; இனம், மதம், சாதி என்பவற்றிற்கு எதிராக தனது உணர்வுபூர்வமான, கோபம் ததும்பும் எழுத்துகள் மூலம் சாடியவன் இன்று தனது எழுத்தை நிறுத்திக் கொண்டான்.

இனவாதம், சர்வாதிகாரம் என்னும் புதைமணலில் கால்கள் புதைந்தபடி அவலங்களும், துயரங்களுமே வாழ்க்கையாகிப் போன எமது மக்களின் நிலையை மாற்றி அமைக்க எங்களது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கும் விடியல்காலைப் பொழுதில் அவனை மரணம் தழுவியிருக்கிறது. எமது மக்களின் போராட்டங்களுடன் முப்பது வருடங்களாக இணைந்திருந்த மாணிக்கம் செல்லம் லோகநாதனின் வாழ்வு மரணத்துடனான போராட்டத்துடன் முடிவுக்கு வந்த போதும் அவன் உயர்த்திப் பிடித்திருந்த செங்கொடியை அவனது தோழர்களாகிய நாங்கள் என்றும் தாங்கிப் பிடித்திருப்போம்.

சென்று வா தோழனே, நாளை வரும் போர்க்களங்களில் உனது பாடல்களை நாம் பாடுவோம். கத்தும் கடல் அலையை மேவி அவை ஒலிக்கும். மூசி வீசும் காற்று உனது பாடல்களை காவிச் செல்லும். சென்று வா எம்தோழனே, செஞ்சுடர் எரிய ஒளி வீசும் நம் சுதந்திரக்கோட்டையின் மூலைக்கல்லாய் நீ இருப்பாய். சென்று வா எம் தோழனே, இருளிலும் ஒளிரும் சிவப்பு நட்சத்திரமாய் நீ இருப்பாய் சென்று வா. செவ்வணக்கம் தோழனே, சென்று வா!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

22/02/2015