Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மனித உழைப்புத்தான் அறிவின் சாரம்: மார்க்சிய கல்வி -07

மனித அறிவு என்பது அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய வளர்ச்சியாகும். அதாவது வரலாற்று பூர்வமாகவே உழைப்பு பற்றிய அறியாமையில் இருந்து, உழைப்பின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு வளர்ந்து வருகின்றது. இதுதான் மனித அறிவின் எதார்த்தம். மனித உழைப்பு என்ற ஒரு நடைமுறைக்கு வெளியில், அறிவு சுயாதீனமாக இருக்கவும் முடியாது, தோன்றவும் முடியாது.உழைப்புதான் மனிதஅறிவின் அடிப்படையும் ஆதாரமுமாகும்.

நடைமுறையை மறுத்து அறிவைக் கொண்டு பிழைக்கும் "அறிவாளிகள்" சமூக அடிப்படையைக் கொண்டு, மனித உழைப்புக்கு வெளியில் மனித அறிவு தோன்றுவதாக நம்புகின்ற பொழுது சமூக அறியாமை தோன்றுகின்றது. இது நிலவும் தனிவுடமை அமைப்பு சார்ந்த அறிவாக, சமூக உள்ளடக்கமாக மாறி விடுகின்றது.

உழைப்பில் இருந்து பிரிந்த" அறிவாளியின்" சொந்த வாழ்வு முறைக்கு ஏற்றால் போல், அறிவு பற்றிய அறியாமையே அறிவாக கொள்ளப்படுகின்றது.

"உழைப்பே மனிதனையே சிருஸ்டித்தது" என்றார் எங்கெல்ஸ். மனிதனின் அனைத்தும் தளுவிய உள்ளடக்கமும் இது தான். உழைப்பு பற்றிய மனிதசாரமே, மனித அறிவாகும். அறிவு மனித கற்பனையில் பிறப்பதில்லை.

மனிதனின் கூட்டு உழைப்பு சார்ந்த அறிவுக்கு பதில், பிறர் உழைப்பைத் திருடிய தனிவுடமையில் அறிவு பிரிகின்ற போது, அறிவு கூட பிறர் உழைப்பில் இருந்துதான் திருடப்படுகின்றது. அதாவது உடல் உழைப்பில் இருந்து சிந்தனை உழைப்பு பிரிந்தபோது, புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சியுற்றது. உழைப்பில் இருந்து அறிவை பிரித்து திருடுவதன் மூலம் அறிவு கிடைக்கின்றது. அதாவது பிறர் உழைப்பை திருடுவதால் உழையாதவன் கையில் செல்வம் குவிவது எப்படியோ, அப்படித்தான் அறிவும் மனித உழைப்பில் இருந்து பிரித்து திருடப்படுகின்றது.

உழைப்பே மனிதனை முன்னிறுத்துகின்றது. உழைப்பு நின்றுபோனால், மனித உயிரினமே அழிந்துபோகும். மனித உழைப்புக்கு வெளியில் அறிவு என்ற ஓன்று கிடையாது. உழைப்பு என்னும் மனித செயற்பாடுதான், அறிவை பரிசோதிக்கும் ஒரேயொரு வாழ்வியல் சார்ந்த நடைமுறையுமாகும்.

நடைமுறையை மறுக்கும் "தத்துவவாதிகள்" போல், "கோட்பாட்டுவாதிகள்" போல், உழைப்பில் ஈடுபடும் மக்கள் தனது வாழ்வு சார்ந்த அறிவை குறுக்கிவிடுவதில்லை. இதனால் தான் வாழ்வு சார்ந்த நடைமுறையிலான எதார்த்த முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்த முரண்பாடுகளாக மாறுகின்றது.

உழைப்பு சார்ந்த எதார்த்தம், அதைச் சாராத வாழ்க்கைக்கும் எதிரான போராட்டத்தில் இரு வேறு அறிவாக உருவாகின்றது. அறிவு என்பது நடைமுறையில் தான் உருவாகின்றது. மனித உழைப்பு என்னும் செயற்பாட்டில் தான் அதை பரிசோதிக்க முடியுமே ஒழிய "மனம்" என்ற மனித கற்பனையில் அல்ல. முன்னைய வாழ்வு சார்ந்து மனித மனம் சார்ந்த சிந்தனைகள், மனிதசெயல்கள் மூலமே பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்படும்போது அது மனிதனின் புதிய அறிவாகின்றது.

இந்த அடிப்படை உண்மையை மறுத்தல் மூலமே, இதை பிரிப்பதன் மூலம், மனிதனை மனிதன் அடிமை கொள்கின்ற இன்றைய சமூக அமைப்பு முன்னிறுத்தப்படுகின்றது. இது மனித அறிவையும், மனித உழைப்பையும் பிரித்து விடுகின்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாக விளக்கி, அடிப்படையற்ற கற்பனைகள் மனிதன் பற்றிய அறிவாக்கப்படுகின்றது. இந்தப் பிரிவு மூலம் மனித உழைப்பை உழைப்பில் ஈடுபடாதவன் சுரண்டுவது என்ற அடிப்படை அறிவுக்கு இது இட்டுச் செல்லுகின்றது. இதன் சாரம் கூட்டான மனிதனின் சமூகச் செயற்பாடு இன்றி, தனிமனிதன் தனித்து இந்த பூமியில் வாழ்ந்து விட முடியும் என்ற பிரமையையும் நம்பிக்கையையும் உருவாக்கி விடுகின்றது. தனிவுடமைவாத சிந்தனையிலான மனித கற்பனையை முன்னிறுத்திய, தன்னிலைவாதத்தையே அறிவாக இது குறுக்கி விடுகின்றது.

மனித உழைப்புக்கு வெளியில் அறிவும், மனித சமூகத்துக்கு வெளியில் தனிமனித வாழ்வும் உண்டு என்று நம்பும் மனநிலையை இது உருவாக்குகின்றது. இப்படி உருவாகின்ற மனித கண்ணோட்டங்களும், செயற்பாடுகளும் பொய்மையில் வாழ்வதையே உண்மை வாழ்வாக முன்னிறுத்துகின்றது.

சமூக உணர்வு கொண்ட மனிதனாக வாழ்வதை மறுதளித்துவிடுகின்றது. சமூக உணர்வு கடந்த தனிமனித சிந்தனையும், அறிவும் மனிதனுக்குரிய அறிவாக இருப்பதில்லை. மாறாக தனக்குரிய, தன் இருப்புக்குரிய, தன் சுயநலம் சார்ந்த குறுகிய வக்கிர அறிவாகமாறுகின்றது. தன்னை மையப்படுத்திய அறிவாக பீற்றிக் கொள்கின்றது.

எங்கெல்ஸ் கூறினார் "அதிக சமூக உணர்வு கொண்ட மனிதனின் தோற்றத்தைச் சமூக உணர்வில்லாத மிக சமீபத்திய மூதாதையரிடையே தேடுவது சாத்தியமில்லை" என்றார். சமூக உணர்வையும், அது சார்ந்த அறிவையும் இன்றைய மனிதனிடம் இயல்பாக காண முடியாது. சமூகத்துக்கு முரணான, தன்னை முன்னிறுத்திய அறிவாக குறுக்கி விட்டது. இயல்பாகவே மனிதன் சமூகக் கூறுகளை மறுதளித்துவிட்ட மனித வக்கிரம் தான், இன்றைய பொது அறிவாக எதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றது. உழைப்பைக் கேவலமாக்கி, அதை தனக்காக உழைக்கும் அடிமையினதும் தனக்கு கீழ்ப்பட்டவனினதும் வாழ்வியல் நடைமுறையாக கருதும் சமூக உணர்வற்ற மனித நடத்தையாக உழைப்பு மாற்றப்பட்டு இருக்கின்றது. இது தான் இன்றைய தனிவுடமை அமைப்பின் மனித சாரமாக்கப்பட்டு இருக்கின்றது.

மனித தோற்றத்தில் மனிதனின் உயர்வான சமூக உணர்வாக்கம் தான், மிருகத்தில் இருந்தும் மனிதனைப் பிரித்தது. அதுதான் மனிதனின் கூட்டு உழைப்பும் கூட்டு வாழ்வும். இன்றைய சமூக உணர்வாக்கமல்லாத எந்தக் கூறும், மிருகத்தன்மை கொண்டதே ஒழிய, அது மனிதத் தன்மை கொண்டதல்ல.

அதாவது சமூக உணர்வாக்கமல்லாத எந்த அறிவும்,மனிதத் தன்மை கொண்ட உண்மை அறிவல்ல. மனிதனின் சமூக உணர்வாக்கமே, இயற்கையின் விதியுமாகும். இன்றைய சமூக உணர்வாக்கமல்லாத அறிவு முதல், செயற்பாடுகள் அனைத்தும் மனிதனுக்கு எதிரானது. மனிதனை மனிதன் எதிரியாக்கி வைத்திருக்கும் சிந்தனைகள், செயல்கள் அனைத்தும் மனித அறிவின் பாலானதல்ல. மிருகத்தனத்தின் பாலானது. மனிதனை மனித உழைப்பில் இருந்து பிரிந்த, பிரித்து வைத்திருக்கின்ற அறிவாகின்றது. உழைப்பில் இருந்து அறிவையே பிரித்துவிடுகின்ற அறிவுச் செயல்.

இதை அறிவு என்று கூறிக்கொண்டு, தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்கின்ற பொய்மையை உண்மையாக காட்டி அறிவை திரிக்கின்றது. சமூக உணர்வுள்ள மனிதன் எப்படி சமூக உணர்வற்றவனாக வாழ்கின்றான் என்ற உண்மையை உணரவும், உணர்த்தவும் விரும்பாத எல்லைக்குள், மனித அறிவு ஊனமாக்கப்பட்டு இருக்கின்றது. மனிதனை மனிதன் ஒடுக்கியும், சுரண்டியும் வாழ்கின்றதால், தனக்கு கிடைக்கும் வாழ்வை மனித வாழ்வாக அறிவாக காட்டுகின்றனர். இந்த வாழ்வை மேன்மையானதாகவும், தன் அறிவால் அறிவுத் திறமையால் இது கிடைப்பதாக கூறுகின்ற பொய்யான அறிவியல் தர்க்கமாக அறிவு கட்டமைக்கப்படுகின்றது. மனித உழைப்புதான், மனித வாழ்வின் அனைத்தும் என்ற உண்மையை மறுதளித்து விடுகின்றது.

இன்று "சொர்க்கம்" என்று கருதும் எந்த மனித வாழ்வு சார்ந்தசெயற்பாடுகளுக்கு பின்னும், மனித உழைப்பே ஒழிந்து இருக்கின்றது. அந்த உழைப்பு சுரண்டப்பட்டு, அதை தங்கள் சொத்தாக முன்னிறுத்தி" சொர்க்கமாக்கப்பட்டு" காட்டப்படுகின்றது. இது மனித உழைப்புக்கு வெளியில் சுயாதீனமாக இந்த "சொர்க்கம்" இருப்பதாக கட்டமைக்கும் பொது அறிவும், அது தனது தனித்துவமான தனிவுரிமை என்றும், அதில் தலையிட சமூகத்துக்கு உரிமையில்லை என்று கூறுமளவுக்கும் அறிவு சிதைக்கப்பட்டு இருக்கின்றது. மனித உழைப்பின்றி எதையும் உருவாக்கவும், வாழவும் முடியாது என்ற உண்மையை மறுதளித்துவிடுகின்றது. சமூக உணர்வு கொண்ட மனிதனின் உழைப்பைத் திருடியும், அடக்குமுறை மூலம் அபகரிக்கும் சமூக உணர்வற்ற மனிதனின் வாழ்வு பற்றிய அறிவுதான், மனித சாரம் என்று கூறும் சர்வாதிகார அமைப்பு முறைமையே அறிவாக காணப்படுகின்றது.

மனித சமூகம் சார்ந்த கூட்டு உழைப்பு இன்றி, இன்றைய உலகில் மனித வாழ்வை வாழவே முடியாது என்ற உண்மையை மறுதளிக்கின்றது. மனிதன் இது பற்றிய அறிவை கொண்டிராதவனாக, மனித அறிவு குறுக்கப்பட்டு முடக்கப்பட்டு இருக்கின்றது.

மனித சமூகம் பற்றி தன் சுய அறிவற்று இருத்தலே மனித அறிவாக்கப்படுகின்றது. ஏழ்மையும், செல்வமும் என்ற இரு எதிர்மறைக் கூறில், மனித உழைப்புகாணப்படுகின்றது.

அதைப் பயன்படுத்தும் முறைமையில் முரண்பாடே, இதற்கு காரணமாக இருக்கின்றது. சமூக உணர்வுள்ள மனிததன்மையற்ற கூறுகள் இதற்கான அடிப்படையாக இருக்கின்றது. சமூக உணர்வுள்ள மனிதன், சமூக உணர்வுடன் சமூகத்தில் பகிர்ந்து கொள்கின்றான். இது சார்ந்த அறிவு அல்ல, சமூகதன்மையற்ற மனிதனின் அறிவு. சமூகத்தன்மையற்ற மனிதன், மனிதனுக்கு இடையில் பகிர்ந்து கொள்வதற்கு எதிரானவனாக இருக்கின்றான். இப்படி அறிவு இரண்டாக பிரிகின்றது.

உழைப்பு பற்றி வெறுக்கத்தக்க மனித எண்ணங்களும், எண்ணப்பாடுகளும் அறிவை முடக்கி தடைசெய்கின்றது. மனித உழைப்பு தனக்கு கீழ்ப்பட்டவனின் இழிவான தீண்டத்தகாத மனித செயற்பாடு என்று கருதும் தனிமனித வாழ்க்கைமுறை, சமூக உணர்வுள்ள மனித வாழ்வை மறுதளிக்கின்றது.

சமூக உணர்வுள்ள மனித வாழ்வை மறுத்து, சமூக உணர்வற்ற மிருகத்துக்குரிய வாழ்வை முன்னிறுத்துகின்றது. இதுதான் தனிவுடமையின் சாரம். உழைப்பை அபகரிப்பதே அறிவாகவும், வாழ்வாகவும் போற்றப்படுகின்றது.

உழைப்பாளிதான் உற்பத்தி செய்யும் பொருளை மட்டுமின்றி, தான் உற்பத்தி செய்யும் திறனையும் கூட பிறருக்கும் கொடுக்கும் நிலையில், மனித கூறுகளையும் இழந்து விடுகின்றான். உழைப்பவனிடம் பறிப்பதையே, சமூக அறிவாக்கப்படுகின்றது. இதற்கு இணங்கி அன்னியமாகி வாழ்தலையே, மனித வாழ்வாக பேணப்படுகின்றது.

உழைப்பவன் தனக்காக வாழ்தல் அல்ல. பிறருக்காக வாழ்கிறான். இதன் அர்த்தம், தனக்கு கீழ்ப்பட்டவனின் பிறரின் இழி செயற்பாடாக உழைப்பு குறுக்கப்பட்டு இருக்கின்றது. சமூக உணர்வற்ற தனிவுடமை சமூகத்தில், உழைப்புக்குரிய இடம் இதுதான். உழைப்பே மனிதக் கூறுகளாக இருந்த இடத்தில் இருந்து, உழைப்பே அவனுக்கு சொந்தமாக இருக்கா வண்ணம் மனிதனை மிருகமாக்கி விட்டது.

-தொடரும்

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம்-03

மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04

விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05

அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06