Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கொலையாளிகளின், கொள்ளையர்களின் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம்

எண்பத்துமூன்று ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக,மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள்.

பெற்ற தாய்,தந்தையரை விட்டு,காதலுக்குரியவர்களை விட்டு, கைக்குழந்தைகளைக் கூட விட்டு விட்டு இனி ஒரு விதி செய்வோம் என்று விண்ணதிர வந்தார்கள். பாசம் அறுத்து, நேசம் மறந்து, ஆசை துறந்து நம்தேசம் மீட்போம் என்று வெஞ்சமர் புரிய வந்தார்கள்.

டெல்லியில் இருந்தவர்கள் கோரப்பற்களை தெரிய சிரித்துக் கொண்டார்கள். வங்கதேசத்தில் தேசபக்தர்களை கொன்று தள்ளி தங்களின் தரகர்களிடமும், மதவாதிகளிடமும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தவர்கள் மறுபடி ஒரு வேட்டைக்கு வேளை வந்ததென வாயில் நீர் ஊற பார்த்திருந்தார்கள். ஆயுதம் தருகிறோம், ஆயுதப்பயிற்சி தருகிறோம் என்றார்கள். எமக்கு எதுவும் வேண்டாம் எல்லாம் உமது விடுதலைக்காகவே என்று கருணைமழை பொழிந்தார்கள்.

மூன்று மாதப்பயிற்சி முடிந்தவுடன் தனிநாடு ஏறுங்கள் தோணி என்று ஏற்றி விட்டார்கள் தலைவர்கள். "அட்டைகள் இரத்ததானம் செய்யுமா" என்று கேட்ட குரல்கள் கும்பல்களின் கூச்சலில் அடங்கிப்போயின. "வங்கம் தந்த பாடம்" என்ன என்று சொல்ல வந்தவர்களின் கண்டம் அறுத்து கொலை செய்தார்கள்.

"திடீர் சாம்பார்", "திடீர் ரசம்" போல் திடீர் புரட்சியும் வருமோ என்றால், கப்பல் எரியும் போது முதலில் எங்களை காப்பாற்றி கொள்ளப் பார்ப்போம், பிறகு மற்றதைப் பார்க்கலாம் என்றார்கள்.

அங்கிருந்து தூண்டில் போட்டவர்கள், ஆளை ஆள் வெட்ட சொன்னார்கள். அடுத்த இனத்தவனை அடித்துக் கொல்ல சொன்னார்கள். கொஞ்சி கொஞ்சி பேசிய குழந்தைகளைக் கூட குதறி எடுத்தார்கள் இவர்கள். மற்ற மதத்தவரை கொல்லச் சொன்னார்கள் அவர்கள்.  மண்டி இட்டு தொழுதவரை கொன்றார்கள் இவர்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் ஆகினர். போராளிகள் பயங்கரவாதிகள் ஆகினர். வேலை முடித்த போசகர்கள் வெற்றிப் புன்னகை சிந்தினார்கள். எத்தனை முறை சூடு கண்டாலும் அடுப்பங்கரைகளை மாற்றினார்களே தவிர அனுபவங்களை பெறவில்லை. டெல்லி இருக்கும் திசை நோக்கி தினமும் தொழும் தமிழ்நாட்டுக் கோமாளி டெல்லியை மீறி பணம் கொடுத்தானாம். காவல் தெய்வம் என்று கதை சொல்கிறார்கள்.

சர்வதேச போசகர்களின் சகா வத்திக்கான் போப்பின் உள்ளூர் பாதிரி ஒருவன் பிலிப்பைன்சில் இருந்து கொண்டு வானொலியில் தமிழ் மக்களின் வேதனைகளை சொல்லி அழுகிறான் அவனும் போசகன் தான் என்றார்கள். மீட்பர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள். நேரிலே வந்து கொன்றார்கள் சிலர். வெட்டிய வாளிற்கு வெண்ணெய் பூசி விட்டார்கள் சிலர்.

குண்டுகள் சிதறின. குருதி வெள்ளம் பாய்ந்தது. மண்ணில் உயிர்கள் மறைந்து போயின. நம்பிக்கைகள், நாளைய கனவுகள் மறைப்புகள் அற்ற வெளியில் அடியோடு சரிந்தன. மீட்பர்கள் கண்ணீர் விட்டார்கள். சாட்சியம் மட்டும் இருந்தால் தூக்கிலே போடுவோம் என்றார்கள்.

முள்ளிவாய்க்காலின் நினைவாக தமிழ் நாட்டிலே நினைவுமுற்றம் ஒன்று கட்டுவோம் என்றார் "மாவீரர்" ஒருவர். மறுபடியும் போசகர்கள் வந்தார்கள். மக்களின் பணத்தை கொள்ளையடித்து மகாபணக்காரன் ஆனவனின் பணத்திலே மக்களிற்கான நினைவுமன்றம் கட்டப்பட்டது.

அதற்கென்ன ஆர் குற்றினாலும் அரிசி ஆனால் சரிதானே. குஜராத்திலே கொன்றவர்கள் கொலையுண்ட மக்களின் நினைவிடத்தை திறந்து வைக்க வந்தார்கள். ஆயிரம் அழிவுகள் வந்தால் என்ன கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் தான் போசகர்கள். ஒடுக்கப்படும் எல்லா இனமக்களும் சேர்ந்து போராடுவோம் என்பவர்கள் தமிழின துரோகிகள்