Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுங்கியும் ஒடுக்கியும் வாழ்வதா மனித இயல்பு?

மனிதர்கள் அடக்கியும் ஒடுங்கியும் இருத்தலையே ஒடுக்குமுறையாளன் விரும்புகின்றான். இதை எதிர்த்துப் போராடுவதே, ஒடுக்கப்பட்டவர்களின் இயல்பாக இருக்கின்றது. இதுவே என்றென்றும் மனித இயல்பாகவும், வாழ்வாகவும் இருக்கும் என்று கருதுகின்றோமா!?

இப்படி இருக்க கடந்தகாலத்தில் போராடிய தமிழ் மாணவர்கள் பரம்பரை, இன்று ஒடுங்கியும், ஒதுங்கியும் இருக்கக் காரணமென்ன? இதிலிருந்து மீண்டெழுவது எப்படி?

இன்று அரசால் திட்டமிட்டவகையில் மாணவர்களின் அடிப்படைக்கல்வி உரிமைகள் பறிக்கப்படும் போதும், தமிழ் மாணவர்களின் அமைதி என்பது, சமுதாயத்தின் பொது அடிமைத்தனத்துக்கே இட்டுச் செல்லும். அடக்குமுறை கண்டு அஞ்சுவதோ, அதற்கு அடங்கிப்போவதோ மாணவர்களின் இயல்பல்ல. இருந்தும் மாணவர்கள் தம் உரிமைக்காக போராடாது ஒடுங்கியும் ஒதுங்கியும் வாழ்கின்றார்கள் என்றால், ஒடுக்குமுறை மட்டும் தான் காரணமா?

ஒடுக்குமுறை என்பது, போராட்டங்களின் முன் புதிதாக தோன்றியதல்ல. ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமே கடந்தகால வாழ்வாக இருந்திருக்கின்றது. ஆக இது புதிய விடையமல்ல. ஒடுக்குமுறை என்பது இருந்து வருவது தான். இன்று ஒடுக்குமுறையைக் கண்டு அஞ்சும் புதிய சூழலுக்கு காரணமென்ன?

கடந்தகாலப் போராட்டம் தான். ஒடுக்குமுறையை எதிர்த்து போராடிய போது, கையாண்ட வழிமுறைகள் தவறுகள் இன்று போராட முடியாத சூழலை உருவாக்கி இருக்கின்றது. இதுவே இன்று ஒடுக்குமுறையாளனைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. கடந்தகால தவறுகளால் ஒடுக்குபவன் ஒடுக்குவதில் வெற்றி பெறுகின்றான். அதாவது ஒடுக்குமுறைக்கு எதிராக தனிமைப்பட்டு போன கடந்தகால கொள்கைகளும் நடத்தைகளுமே, இன்று ஒடுங்கிப் போக காரணமாகிவிடுகின்றது.

கடந்தகாலத்தை மீளாய்வு செய்ய வேண்டிய வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். குறிப்பாக இது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் முதன்மையான விடையமாக இருக்கின்றது. இன்று பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், அனைவருக்குமான கல்வி உரிமைக்காக போராடும் நேரத்தில், சிறுபான்மை இன மாணவர்கள் ஒடுங்கிக் கிடப்பது என்பது, கடந்தகால இனவாத அரசியலின் பொது விளைவாகும். இனரீதியான ஒடுக்குமுறை மட்டுமல்ல, இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான இனவாதமாக குறுக்கிப் போராடியதும் ஒரு காரணமாகும்.

கடந்தகாலத்தில் சிறுபான்மை இன மாணவர்கள் தங்களைத் தாங்களே இனரீதியாகக் குறுக்கிக் கொண்டனர். இதன் மூலம் இனவொடுக்குமுறையாளனின் ஒடுக்குமுறைக்கு உதவும் வண்ணம், தம்மைத்தாமே தனிமைப்படுத்திக் கொண்ட வரலாற்றுத் தவறுதான்,
சிறுபான்மை மக்கள் இன்று ஒடுங்கிவாழும் இயல்பாக மாறி இருக்கின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் வெற்றி பெற்று இருக்கின்றான். இதில் இருந்து விடப்பட்டு ஒடுக்குமுறையாளனின் நோக்கத்தை எதிர்கொண்டு வெல்ல வேண்டுமாயின்

1.சிறுபான்மை மாணவர்கள் பெரும்பான்மை மாணவர்களுடன் இணைந்து போராட வேண்டும். அதாவது பொதுவான மாணவர்கள் போராட்டங்களில் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம், தம்மீது இனரீதியாக தனிமைப்படுத்தி ஒடுக்கும் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடவேண்டும். இதன் மூலம் சிறுபான்மை மீதான இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக, பெரும்பான்மை மாணவர் சமூகத்துடன் இணைந்து போராட முடியும்.

2.மாணவர்கள் தமக்குள் தாம் குறுக்கிக் கொண்டும், தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் பதில், மக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு போராட வேண்டும்.

தனித்து இயங்குவது, தனிமைப்பட்டு நிற்பதுதான் தோல்விக்கான அரசியல் அடிப்படை. தனிமைப்படுத்தி ஒடுக்குவதன் மூலம் தான், ஒடுக்குமுறையாளனின் வெற்றியாக இவை மாறுகின்றது. கடந்த காலத்தில் தனிமைப்பட்டுப்போன குறுகிய இனவாதமும், மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக கூறி மக்களிடம் தனிமைப்பட்டுப் போன அரசியல் தவறுகள், இன்று ஒடுங்கியும் ஒதுங்கியும் வாழும் நிலைக்கான அடிப்படையான அரசியல் காரணமாகும்.

இன்றைய இந்த நிலைமைக்கு ஒடுக்குமுறையாளனை மட்டும் காரணமாகக் காட்டுவதும், எண்ணுவதும், எங்கள் கொள்கைகளும் நடைமுறைகளும் காரணமல்ல என்பதுவும், எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படி இதை பிரச்சாரம் செய்பவன் மோசடிக்காரனாகவும், ஒடுக்குமுறைக்கு உதவுபவனாகவும் இருக்கிறான்.

ஒடுக்குபவன் ஒடுக்குமுறையை ஏவியதாலேயே, கடந்தகாலத்தில் போராடினோம். போராடித் தோற்றதால், ஒடுக்குமுறையை நாம் தெரிந்து கொள்ளவில்லை. உண்மையில் ஒடுக்குமுறையை தோற்கடிக்க முடியாமல், நாம் தோற்றோம். அதாவது எங்கள் போராட்டம் ஒடுக்குமுறையை தோற்கடிக்க முடியாத வண்ணம், தவறாக இருந்ததால் தோற்றோம். இப்படித்தான் இதை நாம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். வெல்ல வேண்டும் எனில் கடந்தகாலத்தில் என்ன செய்து இருக்க வேண்டும் என்று, மீள சிந்திக்குமாறு மாணவர்கள் போராட்டங்கள் கோருகின்றது.

இனரீதியாக மாணவர்களைப் பிரித்து ஒடுக்குகின்ற அரசின் இனக்கொள்கைக்கு எதிராக, இனங்கடந்து போராடுவதன் மூலமே அதை முறியடிக்க முடியும். நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து, அனைவரையும் ஒன்றிணைக்கின்ற வரலாற்றுக் கடமை மாணவர்களுக்கு உண்டு. இனம், சாதி, பால், நிறம்.. என்று மாணவனைப் பிரிக்கின்ற, மாணவர்களை மோதவைக்கின்ற மனிதவிரோத கூறுகளை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம் ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முறியடிக்க முடியும்.

இன்று பறிக்கப்படும் மாணவர்களின் கல்வி உரி;மைக்காக, இனம் கடந்து போராடுவது அனைத்து மாணவர்களினதும் இன்றைய வரலாற்றுக் கடமையாகும். மாணவர்களின் இலவசக் கல்விக்கான அடிப்படை உரிமையை மறுக்கின்றதும், கல்வியை சந்தைப் பொருளாக்குகின்ற அரசின் செயற்பாடுகளே, மாணவர்களுக்கு எதிரான அரசின் பொதுக் கொள்கையாக உள்ளது. இதற்கு எதிராக இன்று மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல பத்து இலட்சங்கள் இருந்தால் மட்டும் தான், இனிமேல் பல்கலைக்கழகப் பட்டங்கள் என்ற அளவுக்கு, கல்வி வியாபாரப் பொருளாக்கப்படுகின்றது. இனம், மதம் கடந்தும், பெரும்பான்மை சிறுபான்மை என்று இல்லாமலும், அனைத்து மாணவர்களுக்கும் எதிரான மூலதனத்தின் கொள்கை அரசால் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

பணம் இருந்தால் தான் கல்வி, இதுதான் தேசத்தின் கல்விக் கொள்கையாக மாறி வருகின்றது. மக்களின் உழைப்பிலான வரிப்பணத்தில் இருந்து அனைவருக்குமான இலவசக் கல்வி என்ற கடந்தகால கல்விக் கொள்கையை மறுப்பதன் மூலம், பணம் இருந்தால் தான் கல்வி என்ற மனிதவிரோத வியாபாரக் கொள்கைகள் புகுத்தப்படுகின்றது. கல்விக்கான மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கிய நிதியை வெட்டுமாறு உலக வங்கி கோருகின்றது. கல்விக்கான மக்களின் வரிப்பணத்தை, தனது நிதிமூலதனத்துக்கான வட்டியாக தரும்படி கோரும் நிதிமூலதனத்தின் கொள்கைக்கு அமைவாகவே, கல்வி தனியார் மயமாக்கப்படுகின்றது. இதன் மூலம் தனியார் மூலதனத்தைக் கொண்டு, கல்வியையே வியாபாரம் செய்யுமாறு கோருகின்றது.

இப்படி எங்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கிய கல்விக்கான வரிப்பணத்தைக் கொள்ளையிடவும், கல்வியை சந்தைப் பொருளாக்கி மக்களைச் சூறையாடவும் முனைகின்ற இரட்டைக் கொள்கையே அரசின் இன்றையக் கல்விக் கொள்கையாகும். இன்றைய மாணவர் போராட்டங்கள், இதற்கு எதிராகவே முன்னெடுக்கப்படுகின்றதன.

இன்றைய மாணவர்களின் அடிப்படைக் கல்வியையும், எதிர்கால மாணவர்களின் கல்வி உரிமைகைளையும் பறிக்கின்ற நவதாராளமயக் கொள்கைதான் அரசின் பொது அரசியல் நடத்தையாகின்றது. தேசத்தின் தேசியக் கொள்கைகளை மறுத்து, நவகாலனிய நவதாராளமயத்தைப் புகுத்தி சூறையாடுகின்ற, இந்த மக்கள் விரோதத்தை எதிர்த்து மாணவர்கள் போராடவேண்டிய வரலாற்றுக் கடமையாக மாறியுள்ளது.

இதற்கு எதிராக இன்று பெரும்பான்மை மாணவர் சமூகம் போராடும் நிலையில், சிறுபான்மை மாணவர் சமூகம் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளால் ஒடுங்கி ஒதுங்கி நிற்கின்றது. இதில் இருந்து மீண்டு எழுவது வரலாற்றுக் கடமை. கடந்தகாலத்தில் இனரீதியான ஒடுக்குமுறையையும், அதற்கு எதிராக இனரீதியான குறுகிய அணுகுமுறையுமே, இதற்கு எதிராக இன்று போராட முடியாமல் போனதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.

இதை இன்று சுயமாக மீளாய்வு செய்வதன் மூலம், பெரும்பான்மை மாணவர் சமூகத்தின் துணையுடனும், பாதுகாப்புடனும் இணைந்து போராடுவதன் மூலமே மாணவர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்த உண்மையில் இருந்துதான், ஒதுங்கியும் ஒடுங்கியும் வாழும் எம்மை நாம் விடுவித்துக் கொண்டு சமூக உணர்வுள்ள மனிதனாக வாழமுடியும்.