Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

நித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா! - ஷெஹ்லா ரஷீத்

அன்புள்ள ஜிஷா, நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்கமாட்டாய். அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக கல்வி கற்றுக்கொண்டு உனக்கும், உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருந்திருப்பாய். வானங்களையும், நட்சத்திரங்களையும் கனவுகண்ட ரோஹித் வெமுலா போன்ற ஒருவராகத்தான் நீ இருந்திருப்பாய். நீ ஒரு சட்டம் பயிலும் மாணவி என்பதை அறிந்தேன். இந்நாட்டின் சட்டங்கள் நம்மை மோசமாக ஏமாற்றம்கொள்ளச் செய்கின்றன என்பதைச் சொல்ல வருந்துகிறேன்.

ஒரு பன்வாரி தேவிக்கு நீதி கிடைக்காததால்தான் பகானா சம்பவிக்கிறது. பகானாவில் யாருக்கும் நீதி கிடைக்காததால்தான் டெல்டா மேக்வால் சம்பவிக்கிறது. டெல்டா மேக்வாலுக்கு நீதி கிடைக்காததால்தான் ஜிஷா சம்பவிக்கிறது. மிகுந்த வேதனையோடு உனக்கும் நீதி கிடைக்காது என்பதை என்னால் யூகிக்கமுடிகிறது.

ஏனெனில், நீ கற்ற சட்டம் இந்த தேசத்தை இயக்கும் சட்டமல்ல. இத்தேசம் மனு ஸ்மிரிதி என்றழைக்கப்படும் இணைச் சட்டத்தின்படியேதான் இயங்குகிறது. நீதிபதிகளின் தீர்ப்புகளில் எல்லாம் இது வழக்கமாக மேற்கோளாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி நீ சட்டக் கல்லூரியில் படித்திருக்கமாட்டாய். இந்த மனு ஸ்மிரிதியின் சட்டம்தான் பெண்களுக்கும், தலித்துகளுக்கும் வரம்புகளை நிர்ணயிக்கிறது.

பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குப்பிறகு வெளியே போகக்கூடாது, பெண்கள் படித்து பிறரைச் சாராமல் வாழக்கூடாது, தலித்துகள் படித்து திறமையானவர்களாக வளரக்கூடாது என்பவை இந்நாட்டை நடத்தும் மனு ஸ்மிரிதி சட்டத்தில் பதிந்திருப்பவை.

நீ இத்தேசத்தை நேசித்திருக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான தேசம் இல்லை என்பதை வருந்திச் சொல்கிறேன். மாறாக, நீ ஆணாதிக்கம் குறித்தோ, சாதி அல்லது வர்க்கம் குறித்தோ கேள்வி கேட்டிருந்தால், உன் குரல்வளையில் ஒன்றிரண்டு கோஷங்களைத் திணித்திருப்பர். “போலோ பாரத் மாதா கி ஜெய்”, “போலோ வந்தே மாதரம்”. நம் அரசுக்கு மிகவும் பிடித்தமான, அநீதி குறித்து புகார் எழுப்புபவர்களுக்கான பதிலுரை இது.

நீ தேசப்பற்று கொண்டவளாக, தேசத்தை நேசிப்பவளாக இருந்திருப்பாய் என யூகிக்கிறேன். ஆனால், நீ வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும்போது ‘பாரத் மாதா கி ஜெய்’ என பிரகடனம் செய்வதுஇ உன்னைக் காப்பாற்றாது. அது உதவிக்கும் வராது.

உனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையின் விவரங்களாக வெளிவருபவற்றை நினைத்து நடுங்குகிறேன். குழந்தையாக இருக்கும்போதே தம் பெண் குழந்தைகளைக் கொல்பவர்கள் எல்லாம் சரியான காரியத்தைத்தான் செய்கிறார்களோ! என்று என்னை அது சிந்திக்கவைக்கிறது. வலிமையாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டிய என்னைப்போன்ற ஒருவருக்குத் தோன்றும் கலக்கமான சிந்தனைதான். ஆனால், அது நானாக இருந்திருக்கலாம், வேறு யாராகவும் இருந்திருக்கலாம். எனக்கு உன்னைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், நீ உணர்ந்திருக்கும் பேரச்சத்தைப்பற்றி என்னால் யோசிக்கமுடிகிறது.

உனக்கு நேர்ந்தவைகள் அனைத்தும் மிரட்டல்களாக, பாஜக ஆதரவாளர்களால் எனக்கும் ட்விட்டரில் சொல்லப்பட்டிருக்கிறது. எங்கிருந்து வருகிறது இந்த யோசனை? உன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களின் நடவடிக்கைகளுக்கும், இந்நபர்களின் (பாஜக ஆதரவாகச் செயல்படும் இணைய விஷமிகள்) சொற்களுக்கும் எப்படி வியத்தகு ஒற்றுமை இருக்கிறது?

அது மனு ஸ்மிரிதியின் சித்தாந்தம், வெறுப்பு சாதி ஆணாதிக்கத்தின் சித்தாந்தம்தான். இந்த இரண்டு குற்றவாளிக் கும்பல்களை இம்மாதிரியான காரியங்களைச் செய்யவும், பேசவும் வைத்திருக்கிறது.

உனக்கு நீதி கிடைக்காது. ஏனெனில், பாலியல் வன்கொடுமையின் உண்மையான காரணத்தைத் தவிர்த்து, மற்ற எல்லாவற்றின்மீதும் வேகமாக குற்றம்சாட்டுகிறோம். பாலியல் வன்கொடுமைக்குக் காரணமாக பெண்களின் ஆடைகளை, அவர்களின் விருப்பங்கள், வறுமை, மது, சௌ மெய்ன் ( நூடுல்ஸ் உணவு), கைப்பேசி மற்ற அனைத்து முட்டாள்த்தனமான காரணங்கள்மீதும் பழி போடுகிறோம். ஆனால் ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவத்தால் பெண்களைப் பண்டமாக்குதல், சாதி, நம் சமூகத்தை குற்றம் சாட்டவில்லை.

உன்னைப்போன்ற பெண்களுக்காக, பகானா கூட்டு பலாத்காரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்காக காஷ்மீரிலும், வடகிழக்கிலும் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்காக, இந்நாட்டின் பழங்குடியினர் மீதான கார்ப்பரேட்களின் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் காரணத்தால் மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்பட்டு, அதன் காரணமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்வதவருக்கு துணிகர விருது வழங்கப்பட்டிருக்கும். சோனி சோரி போன்ற பெண்களுக்காக நாங்கள் நீதிகேட்டு பிரச்னை எழுப்பினால் அரசியல் செய்யாமல், படிப்பில் கவனம் செலுத்துமாறு சொல்லப்படுகிறோம்.

படிப்பை மட்டும் கவனித்துக்கொண்டு, அரசியல் செய்யாமல் இருக்கும், கோடான கோடி மாணவர்களில் ஒருத்தியாகத்தான் நீ இருந்திருப்பாய். ஆனால், இச்சமூகத்தின் உக்கிரம் உன்னை விட்டுவைக்கவில்லை. நீ அனுபவித்த கொடுமை உனக்கெதிரான வன்மத்தின் விளைவு இல்லை. பெண்களுக்கு எதிராக ஆழப்பதிந்திருக்கும் பாகுபாடுகள், பரவியிருக்கும் வெறுப்பு, பெண்களை உபயோகித்து தூக்கியெறியும் பொருட்களாக நடத்துதல் ஆகியவற்றின் விளைவு.

நீ சந்தித்திருக்கும் வன்முறை அனைத்துப் பெண்களுக்கெதிராக, எனக்கெதிராக, என் நண்பர்களுக்கெதிராக சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், படித்துக்கொண்டும், கேள்வி கேட்டுக்கொண்டும், அரசியலில் இயங்கும் பெண்களுக்கு எதிராக குறிப்பாக, நாம் பாரம்பரிய சமூக அமைப்பில் உயர்வர்க்கத்தினர் இல்லை என்பதால் நிலவும் வெறுப்பின் வெளிப்பாடுதான். என்ன தைரியம் இருந்தால் அவர்கள், தங்கள் பாலினத்தைமீறி நடப்பார்கள்? என்ன தைரியம் இருந்தால் தங்கள் இரண்டாம் நிலை சிறுபான்மை அந்தஸ்தை மீறி நடப்பார்கள்? என்ன தைரியம் இருந்தால் தங்கள் கீழ்ச்சாதி அந்தஸ்தை மீறி நடப்பார்கள்?

சாதி, வர்க்கம், பால், இனம், ஊனம் ஆகியவற்றின் பிரச்னைகளை எழுப்பும்போது, மக்களை ‘பிளவு’படுத்த வேண்டாம் என சொல்லப்படுகிறோம். சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளதால், அதைச் சொல்கி்றார்கள்; சமத்துவத்தை அடையப் பெறுகிறார்கள்.

ஆனால், சாதியின் குரூரமான யதார்த்தங்கள் விரைவில் நம்மீது விடியும். உனக்காக நாங்கள் நீதி வேண்டும்போது, எல்லோராலும் நிர்பயா என்றழைக்கப்பட்ட பெண்ணினது நிலையைப்போலவே கொடுமையானதாக உன் நிலை இருந்தாலும், தேசத்தின் மனசாட்சியை அது உலுக்காது. உன் விஷயத்தில் அவர்கள் ஏழைகளாக இல்லாதபட்சத்தில் யாருக்குமே தண்டனை கிடைக்காது.

சக பெண்ணாக, நித்திய இளைப்பாறுதல் கொள் சகோதரியே! எனச்சொல்ல எவ்வளவு விரும்புகிறேன் தெரியுமா? ஆனால், நாம் வாழும் இக்காலம், அதைச்சொல்ல என்னை அனுமதிக்கவில்லை.

நித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா! எனச் சொல்ல, நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். இந்நாட்டில் யாரையும் நித்திய இளைப்பாறுதல் அடையவிடாதே. இத்தேசத்தை, இவ்வுலகை வெறியூட்டு. அதன் களிப்பிலிருந்து விழித்தெழச் செய்.

உன்,
ஷெஹ்லா ரஷீத்

(ஷெஹ்லா ரஷீத் -டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி, காஷ்மீரில் இருந்து மாணவர் அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷீத், ரோகித் வெமுலாவுக்கு ஆதரவான போராட்டத்தை முன்னின்று நடத்தி இந்தியா முழுக்க முன்னோடி மாணவி ஆனார். அவர் கேரளாவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜிஷாவுக்கு எழுதிய கடிதம் இது)


தமிழில் -ஸ்னேகா, காட்சி ஊடகத்துறை மாணவி, மும்பை.