Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

நாங்கள் பெறும் கல்வியை அரசியல் மேம்படுத்துகிறது

(JNUSU துணைத்தலைவரான ஷெஹ்லா ரஷீத் ஷோராவுடன் நேர் காணல்) -AJOY ASHIRWAD MAHAPRASHASTA

ஷெஹ்லா ரஷீத் ஷோரா JNUSUவின் துணைத் தலைவர். JNUவை வேட்டையாடும் செயல் என்று அவர்கள் கருதுவதற்கு எதிராக நடக்கும் மாணவர் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். ஷெஹ்லா ரஷீத் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அவர் அகில இந்திய மாணவர் கழகத்தின் (AISA) ஓர் உறுப்பினர். யூஜிசியை ஆக்கிரமிக்கும் இயக்கம், ரோஹித் வெமுலா தற்கொலைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பிரதான இடது மாணவர் தலைவர்களில் ஒருவர். அவர் பிரண்ட் லைன் (Frontline) இதழுக்கு அளித்த பேட்டியின் சாரமான பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

Frontline: தேச விரோத நடவடிக்கைகளின் முனையங்களில் ஒன்று என்று JNUவை முத்திரை குத்துகிறார்கள். நீங்கள் இது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

JNU மீதான தாக்குதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அவர்கள் JNU வைக் குறிவைத்து வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்கான சால்ஜாப்பு ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் பார்த்தால், எழுப்பப்பட்ட முழக்கங்கள் பற்றியதல்ல பிரச்சனை. அது தேசியம் பற்றிய பிரச்சனையும் இல்லை. வலது சாரியினர் நடத்திய இயக்கம் JNU வை இழுத்து மூட வேண்டும் என்பதற்கானது. அது JNU மீதான தாக்குதல் இல்லை. மாறாக, மக்கள் இயக்கங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கான தாக்குதல். JNU எந்த அளவிற்குக் கல்விக்காகப் புகழ் பெற்றதோ அதே அளவுக்கு மக்கள் இயக்கங்களில் பங்கெடுப்பதற்கும் அறியப்பட்ட ஒன்று. JNU மீதான தாக்குதல், நிலப்பறிக்கு எதிரான- அரசு ஒடுக்கு முறைக்கு எதிரான- பாலின நீதிக்கான - சமூக நீதிக்கான- தனியார் மயத்திற்கு எதிரான இயக்கங்கள் மீதான தாக்குதல். JNU தேசத் துரோகமானது என்று முத்திரை குத்துவதன் மூலம், மோடிக்குப் பணியாதவர்கள், தேசியம் என்பது குறித்த ஆதிக்கம் செய்யும் கருத்தாக்கத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள், குரலை உயர்த்தும் ஒரு பெண்... இவர்களையெல்லாம் தேச விரோதிகள் என்போம் என்கின்றனர்.

Frontline: JNUSUவின் துணைத் தலைவர் என்ற முறையில் JNU ஆதரிக்கும் கோட்பாடுகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அரசுக்கு எதிரான இந்த மாபெரும் எழுச்சியைப் பார்க்கும் போது, JNU என்றால் என்ன? அரசு ஏன் அதனை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஆதிக்கம் செய்யும் கருத்தாக்க மாற்றியமைந்த வரலாறு எங்களுக்கு உண்டு. நாங்கள் பதிலளிக்க முடியாத கேள்விகளைக் கேட்டு வந்திருக்கிறோம். சமத்துவத்தை, பாலின நீதியை, சமூக நீதியை JNU ஆதரிக்கிறது. தெருக்கூட்டும் தொழிலாளியின் பிள்ளை ரூபாய் 250க்கு இங்கே படிக்க முடியும். JNU ஒவ்வொரு தனி நபரையும்- அவரின் வர்க்கம் என்ன என்பதைப் பொருட்படுத்தாமல்- சமமான ஒருவர் என்றே பார்க்கிறது. செல்வாக்கு செலுத்தும் வர்க்கங்கள், ஆதிக்க வர்க்கங்கள், ஆர்எஸ்எஸ், நரேந்திர மோடி போன்ற ‘பிரச்சாரக்’குகள்தான் இதனால் அச்சமடைவார்கள். ‘JNU வில் படிக்கும் பெண்கள் விபச்சாரம் செய்யும் பெண்களைக் காட்டிலும் மோசமானவர்கள், இங்கே 3000 ஆணுறைகள் கிடைத்தன’ என்று பிஜேபி தலைவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். பாலியல் தொழிலாளர்கள் மிக மோசமான நபர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. உண்மையென்னவென்றால், பிஜேபியின் தலைவர்கள் பெண் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள். ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்குச் சரி சமமான இடம் கொடுப்பதை எதிர்ப்பவர்கள், அவர்கள். இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் ஏழைக்கு உலகத் தரமுடைய கல்வி கிடைக்கும். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் சொல்லும் கதையான 'திறமை' என்றதை நாங்கள் வீழ்த்தியிருக்கிறோம்.

Frontline: மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வரக்கூடாது, அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சங்கப் பரிவாரம் இந்த இயக்கத்திற்கு அறிவரை சொல்லியிருக்கிறதே?

கல்விக்கும் மாணவர் அரசியலுக்கும் உறவு இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அது நாங்கள் பெறும் கல்வியை செழுமைப்படுத்துகிறது. எனது அனுபவத்தில் மாணவர் அரசியல் தவிர்க்க முடியாதது. நீங்கள் அரசியல் செய்கிறீர்களோ இல்லையோ, அரசியல் உங்களைப் பாதிக்கிறது. பெலோஷிப்புகளை ஒழிக்கும் முடிவு அரசியல் அற்ற முடிவா? இல்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்களால் போடப்பட்ட உத்தரவு அது! அப்படியிருக்க அதன் எந்தப் பகுதி அரசியலற்றது? எங்களுக்கான ஆய்வு நிதி குறைக்கப்படும் என்றால், எங்களின் நலன் குறித்து நாங்கள் குரல் எழுப்ப வேண்டும். JNU வின் நூலகம் இப்போது 24 மணி நேரமும் திறந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் மிக நீண்ட போராட்டம். அரசின் கொள்கைகள் மாணவர்களை நேரடியாகப் பாதிக்கின்றன. நாங்கள் இந்த வயதில் வாக்களிக்கலாம் என்றிருக்கும்போது, நாங்கள் ஏன் அரசியல் செய்யக் கூடாது? அரசியல் கூடாது என்று ஆர்எஸ்எஸ் வாதம் செய்வது, நிலப்பிரபுத்துவத்திற்கு அப்பாற்பட்ட உலகொன்று பற்றி அவர்களால் யோசிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அவர்கள் ஜனநாயக மதிப்பீடுகளுக்கு எதிராக இருக்கிறார்கள்.

ஆதிக்கத்தின் அரசியல் இருக்கும் என்றால், அங்கே எதிர்ப்பின் அரசியல் இருக்கும். வலதுசாரிகள் ஆதிக்கத்தின் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் எதிர்ப்பின் அரசியலைச் செய்கிறோம். அவர்களின் தாக்குதலை நாங்கள் எதிர்த்து நிற்கிறோம்.

Frontline: மாணவர்கள் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. JNUSU வின் திட்டம் என்ன?

இந்தக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால், அரசு தாக்குதல் நிலையெடுப்பதாகப்படுகிறது. உமர் போன்ற முஸ்லீம் மாணவர்கள் பற்றிய ஓர் உருவரையை உருவாக்கி, அவருக்கு பயங்கரவாத குழுக்களுடன் உறவிருக்கிறது என்று பொய்யாகச் சொல்கிறார்கள். அரசியல் கருத்துகளில் நானும் உமரும் மாறுபடுகிறோம். ஆனால், அறிவாற்றல் உள்ள அந்த இளைஞன் ஏழைகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறார் என்பது வளாகத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும் தெரியும். அதற்காக நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம். எந்த முறையான நடைமுறையையும் பின்பற்றாமல், எட்டு மாணவர்களைக் கல்வியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைத்தது, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதன் மறு அரங்கேற்றம்தான். முசாபர்நகர் பற்றிய படத்தைத் திரையிட்டது HCUவில் சொல்லப்பட்ட சால்ஜாப்பு. இங்கே காஷ்மீர் பற்றிய நிகழ்ச்சி காரணமாக்கப்பட்டது. HCUவில் பிஜேபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பண்டாரு தாத்தேத்திரியா குறுக்கீடு செய்தார். இங்கே கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி. ஓரங்கட்டப்பட்ட, ஏழை பின்புலத்தைக் கொண்ட மாணவர்கள்தான் இரண்டு இடங்களிலும் குறி வைக்கப்பட்டார்கள். நாங்கள் கன்னையவின் பிணைக்காகக் காத்திருக்கிறோம். அவர் வெளியில் வந்த பின்னர், இந்த பாசிச அரசை எதிர்கொள்வதற்கான செயல் தந்திரத்தை நாங்கள் உருவாக்குவோம்.

-Marxist Leninist Articles and Publications