Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிற்றினப் புலுனிகளுக்கு என்னதான் நடக்கிறது..!?

 

அயல் வீட்டுப் பூனை

குருவிக் குஞ்சொன்றை

வாயில் கவ்விக்கொண்டு

என் பக்கமாக வந்து

திடீரென மறுபக்கம் பாய்கின்றது.

 

அதன் முறாய்த்த விழிகள் 

என்னை எதிர்ப்பதையும்

அக் குஞ்சு துடிப்பதையும்

அத் தெருவின் விளக்கொளியில்

தெழிவாகத் தெரிகின்றது.  

 

காலைமுதல் மாலைவரை

ஏகாந்த கீதம் பாடுகின்ற

சிற்றினப் புலுனிகள்

சாமங்களில் மட்டும்

மாறுபட்டுக் கத்துகின்ற காரணங்கள்

இதுதான் என்பதும்

எனக்குத் தெழிவாகப் புரிகின்றது.

 

இந்த நிலமும் மரங்களும்

சுதந்திரமானது என

புலுனிகளுக்குத் தானியம் வைப்பதும்

பூனைக்குப் புலால் போடுவதும்

அந்த வீட்டுக்காரர்தான்.

 

இந்த மரங்களில் குடும்பமாய் வாழ்ந்து

குஞ்சுகளைப் பொரித்து

காலங் காலமாய் கீதங்கள் பாடுமாறு

சுதந்திரச் சிற்றினக் குருவிகளுக்கு

மாற்றாசை காட்டி - அதன்

எதிர் கால வாரிசுகளை

பூனைக்கு இரையாக்குகின்றாரோ இவர்..!?

அல்லது

புலுனிகளின் ஏகாந்த கீதங்கள்

பூனைக்கு கொலையாடத் தூண்டியதோ..!?

 

ஆக.. சிற்றினக் குருவிகளே

நீங்கள்..!

எந்தத் தேடல் தெழிவுமின்றி

ஏகாந்த கீதங்களைப் பாடுங்கள்.

 

பாசிசப் பசிகொண்ட பூனை

இருளுக்குள் உங்களைப் புசிக்க

எந்தத் தேடல் தெழிவுமின்றி

ஏகாந்த கீதங்களை

பாடுங்கள் குஞ்சுகளே..!?

 

உங்களின் நிலையால்

ஒவ்வொரு இருளின் சாட்சியிலும் 

பூனையின் குணாம்சம் எதுவோ

அது அதனை நிறுவி மகிழ்கின்றது.

 

பறக்கும் சக்திபெற்ற குருவிகள்

பாதுகாப்பாக - சுதந்திரமாக

தினந் தினமாய் - தம்

வாழ்வைத் தொலைப்பதற்கே 

ஏகாந்த கீதங்களைப் பாடுவதால்

அக்குருவிக் கூட்டுக்குள் மரணவீடு..>

அம்மரண வீட்டில் நானுமோர் பங்காளன். 

 

அந்தப் பூனையின் பாசிசத்தையும்

அதற்கான காரணிகளையும் எதிர்த்து

நான் இந்தப் பொதுவீதியில்.

 

இந்த உயிரினங்கள் இப்படித்தான்.

இந் நிலையை விட்டு

இதுகளால் மாற்றங்காண முடியாதுதான்.

இவை நடப்புகளின் நியதி என்றால்..?

 

மனித இனம் அப்படியல்லவே..!?

தேடலும் - சிந்திக்கும் செயற் திறனும்

ஆற்றலாய் தன்னக்தே கொண்டவரல்லோ..!?

 

இவை மறந்து

பௌத்த சிங்களப் பேரினப் பாசிசத்தை

தூண்டிவிடும் தமிழ்க் குறுமுட்டுத் தேசியத்தால்

நாம் சிறிதாகவும் பெரிதாகவும்

அழிந்து சாவோம் என

கங்கணம் கட்டி நிற்கும் நிலையாக..>

 

புலுனிக் குஞ்சுகள்

பூனையின் பாசிசத்தை எதிர்த்து

தினமும் நாதகீதம் பாடுதலென்பது

புலுனிகள் தமதினத்தை

அழியக் கொடுத்தல் என்பதாகும்.

 

இதில் சிற்றினக் குருவிகளுக்கும்

பாசிசப் பூனைக்கும் இடையிலான

பாதுகாப்பு வாழ்வினை

வழங்காத அயல் வீட்டுக்காரர்

மனித பக்குவம் அற்றவர்.

 

எங்கள் நாட்டின் அரசு

மக்களின் வாழ்வை அழித்தவாறு

உலகில் தனது நாடு

மிக அழகானது என்பதுபோல.

 

பௌத்த அரச பேரினவாதத்தின்

இனங்களுக்கு இடையிலான

பிரித்தாள்கை எப்படிப் பயங்கரமானதோ

அப்படிப் மகா பயங்கரமானதே

இந்த தனித் தமிழீழம் என்பதும்..>

பிரித்துப் போதல் என்பதும்..>

ஏனைய இனங்களை பிரித்து வைத்தல் என்பதும்..>

தமிழர்க்குள் தமிழர் பிரிந்து கொல்வதுமாகும்.

 

இவையே சிற்றினப் புலுனிகளின் வாழ்வில்

தினமும் நடக்கின்றது.

- -மாணிக்கம்