Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..

வன்னி அவலமும், படுகொலைகளும் எங்கள் மனதோடு அழிக்க முடியாத பதிவுகளாக பதிவாகி விட்டது. மே பிறந்து விட்டால் அந்த அவலக் குரல்களும், கெஞ்சல்களும் எம்மை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. உண்மையாகவே மக்களை நேசிக்கும் உள்ளங்களால், இந்த உணர்வினை ஓரம் தள்ளி வைத்துவிட்டு தன் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது. இலட்சக் கணக்கான அந்த அப்பாவிகளின் கத்தலும், கதறலும் அவ்வளவு இலகுவில் எங்களை அமைதி கொள்ளவிடாது. மக்களுக்கெதிராக இந்த கொடுமைகளையும், துரோகத்தனத்தையும் இழைத்த அந்த ஒவ்வொரு அரசியல் அதிகார வெறியர்களையோ அவர்களின் சூழ்ச்சிகளையும், கபடநடவடிக்கைகளையும் என்றும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.



அமெரிக்கா முதல் இந்தியா வரை பல நாடுகள் இதில் அடங்கி இருந்தாலும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஈழத்து தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் நாட்டு அரசியல்வாதிகள், பிரமுகர்கள்.. என்று எத்தனை மக்கள் துரோகக் கும்பல் இணைந்து இந்த மக்கள் பேரழிவு நாடகத்தினை, புலித் தலைமைத்துவத்தின் அழிவினை நடாத்தி முடித்தார்கள். இந்த துரோகிகள் தான், இன்று முள்ளிவாய்கள் பேரழிவிற்கு துக்கம் தெரிவித்து விழா எடுக்கிறார்கள். இது இவர்கள் தங்கள் பிரமுகத்துவத்தை விளம்பரப்படுத்தி தங்களை மக்கள் முன் நிறுத்தி இன்னும் மக்கள் பணத்தினை சுரண்டி பிழைப்பு நடாத்தும் நடவடிக்கை தானே ஒழிய இதில் எள்ளளவு கூட மக்கள் மீதுள்ள அனுதாபமோ, புலித் தலைவர்கள் மேலுள்ள விசுவாசமோ இல்லை. முப்பது வருட தலைவனை ஒருநாளிலே மறந்தவர்கள் தான் இந்த பிரமுகர்கள்.

புலிகள் பாசிஸ்டுகள், தாங்கள் தப்புவதற்காக அப்பாவி மக்களை பணயம் வைத்து பலி கொடுக்கிறார்கள், கொலைகாரர்கள் என்றெல்லாம் திட்டியவர்கள் இறுதியில் புலித்தலைமைத்துவம் சரணடைந்து அந்த தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும் இலங்கைக் காட்டுமிராண்டி இராணுவத்தினால் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட போது கண்ணீர் விட்டார்கள், கண்டித்தார்கள்..!

ஆனால் இந்த துரோகிகளோ, இலங்கை பாசிச அரசோடு இணைந்து அந்த கொலைகார மகிந்த அரச கும்பலின் கொலைகளை மறைக்க முனைகிறார்கள். தங்கள் துரோகங்கள் மக்களுக்கு அம்பலப்பட்டுவிடும் என்ற பயம் இவர்களுக்கு. இவர்கள் இருக்கும் வரை மகிந்தாவும் பிழைத்துக் கொள்வான். இந்த துரோகிகள் இன்று முள்ளிவாய்க்காலுக்காக கண்ணீர் விடுகிறார்களாம். அப்பாவி மக்களின் அழிவும், மாவீரர்களின் உயிர்த்தியாகமும், புலித்தலைவர்களின் படுகொலையும் இவர்களுக்கு பிழைப்பாகிவிட்டது.

அந்த இறுதி நாட்கள் வெறும் அனுதாபவிழா எடுத்துவிட்டு மறுநாள் மறந்து போகும் நாட்கள் இல்லை. எங்கள் மக்களோடு நிலைத்துப் போன துன்பம் நிறைந்த நாட்கள். அந்த மே 16-17-18-19 நாட்கள் நம்பிக்கை துரோகங்களும், சூழ்ச்சிகளும் நிறைந்த நாட்கள்.

துரோகிகளை இனங்கண்டு கொள்ள வேண்டிய நாட்கள் தான் இந்த இறுதி நாட்கள்...! உண்மை நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நாட்கள்...! நட்பையும் துரோகத்தினையும் புரிந்து கொள்ள வேண்டிய நாட்கள்...!

நண்பர்களையும் துரோகிகளையும் இனங்கண்டு கொள்ள முடியாத தன்மைதான் இன்று புலிகளை இல்லை என்றாக்கியது. இந்த தவறினை இனியும் நாங்கள் செய்யாமல், எங்கள் மக்களை இன்னொரு பதுங்குளிக்குள் தள்ளாமல் உண்மைகளை இனங்கண்டு, துரோகங்களை ஓரம் தள்ளி மக்களின் ஒடுக்கு முறையினை சரியான முறையில் புரிந்து கொண்டு அதற்கெதிராக போராடுவோம்..!

எங்கள் கண்ணீரை மாற்றுவோம்..!

- தேவன். (18/05/2012)