Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

வீழ்வேன் என்று நினைத்தீரோ!!!

ஒரு சிறுவன், மிகக் கொடுரமான போரைக் கண்ணால் கண்டவன்; அரச பயங்கரவாதமும், வன்முறையும், வறுமையும் தாண்டவம் ஆடும் நிலப்பரப்பில் வாழ்பவன்; பற்றுவதற்கு ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்று பரிதவிக்கும் குடும்பச் சூழ்நிலையில் வளர்பவன். ஆனால் அதிகாரமும், அச்சுறுத்தலும் தனது தன்மானத்தையும் நெஞ்சத்துணிவையும் அடிமைப்படுத்த முடியாது என்று உலகு அதிரச் சொல்லி விட்டான்.

 

சேதுராகவன், காலில் விழும் கலாச்சாரத்தையே வெறுப்பவனாக இருக்கலாம், அல்லது தம்மை வருத்தி தன்னை வளர்க்கும் பெற்றோரின் காலிலோ, தனக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் காலிலே விழலாமே தவிர கண்டவன் காலில் எல்லாம் விழ மாட்டேன் என்று நினைப்பவனாக இருக்கலாம்; அல்லது அவன் போன்ற வன்னிச்சிறுவர்களின் வாழ்நாள் முழுவதும் கரிய நிழலாக தொடரப்போகும் குருதி வடியும் போரினை ஏவிய கொலைகாரர்களில் ஒருவனது காலில் விழமாட்டேன் என்ற எதிர்ப்புக்குரலாக இருக்கலாம். சிறுவனாக இருந்தால் என்ன, கிழவனாக இருந்தால் என்ன தம்மை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று குவிக்கும் ஒரு நாட்டில் அவனது துணிவு மலையிலும் மாளப்பெரிது.

காலில் விழும் கலாச்சாரம் இலங்கைத் தமிழரிடம் பெரும்பாலும் இருந்ததில்லை. “ஆனந்தா என் கண்ணையே உன்னிடம் ஒப்படைச்சிட்டேன்” என்று சிவாஜி, இரத்தம் வருமளவிற்கு உதட்டை இறுக கடிச்சுக் கொண்டு (அவர் உணர்ச்சி வசப்படுறாராம்) வசனம் பேசும் போது மணமக்கள் காலில் விழும் சினிமாக்களில் தான் காலில் விழும் வழக்கத்தை  பெரும்பாலானவர்கள் கண்டிருப்பார்கள். பிறகு திருமணங்கள், சாமத்திய சடங்குகளை வீடியோ எடுக்க வெளிக்கிட்ட பிறகு, ஆதி மனிதர்கள் தமது வேட்டையாடிய அனுபவங்களை “போலச் செய்தல்” மூலம் நடனங்களாக வெளிப்படுத்தியது போல, தாங்களும் ஆனந்தனும், சிவாஜியின் தங்கச்சியும் போலச் செய்து காலில் விழத் தொடங்கினார்கள்.

இந்தச் சிறுவனிற்கு இருக்கும் தன்மானமும், நெஞ்சத்து உறுதியும், பதவி எங்களிற்கு மேல் துண்டு மாதிரி எப்ப வேணுமெண்டாலும் தூக்கி எறிவோம், கொள்கை தான் எங்களது கோவணம் அதை ஒரு நாளும் கழட்ட மாட்டோம் என்று வீரவசனம் பேசும் அரசியல்வியாதிகளிற்கு இருப்பதில்லை.  தங்களிற்கு மேலே அதிகாரத்தில் இருப்பவர்களின் கால்களிலே கேட்காமலே விழுகிறார்கள். இதற்கு அண்மைய உதாரணம் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சர் பசீர் சேகுதாவுத்.

அனுராதபுரத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டிடம் இடிக்கப்பட்டது குறித்த நேர்காணலில் அவர் சொல்கிறார். கோத்தபாயாவை உரிய முறையில் அணுகி இருந்தால் அவர் பிரச்சனைக்கு ஒரு தீர்வை தந்திருப்பாராம். பட்டப்பகலில் எல்லோரினதும் கண் முன்னால் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட போது அரசு தடுத்து நிறுத்தவில்லை. இடித்தவர்கள் எவரையும் கைது செய்யவில்லை. எல்லாப் புகழும் ஆண்டவனிற்கு என்பது மாதிரி எல்லா பிழையும் பாதிக்கப்பட்டவர்கள் மேலே தான்  என்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கத்து அமைச்சர்.

முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளிற்கு காரணம் அவர்களிடையே ஒற்றுமை இல்லாதது தான் என்று பழியை  பாதிக்கப்படும் மக்கள் மேல் போடும் மந்திரி அதற்கான வேலைகளில் இறங்கலாமே, எதற்காக அரசாங்கத்தில் பதவியை கட்டிப் பிடித்துக் கொண்டு காலத்தை வீணாக்க வேண்டும். கொழுப்பு பூதங்களின் பிரச்சனையின் போது அம்பாறை, மட்டக்களப்பு எங்கும் முஸ்லீம் மக்கள் வீதிக்கு வந்து தீரத்துடன் போராடினார்கள். ஆனால் பதவிக்கும், பணத்துக்கும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிற இவர்கள், மக்களுடன் சேர்ந்து போராடாமல் ஜனாதிபதி ஒரு நல்லவர், அவர் ஒரு வல்லவர் பெண்ட் எடுக்கிறதிலே என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள்.

காலில் விழுவது தொடர்பாக எனது சொந்த அனுபவம் ஒன்று. எனது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனது திருமணத்திற்கு  போவதற்கு நேரம் மட்டுமட்டாக இருந்ததால் வேலை முடிந்ததும் அதே உடுப்பு, சப்பாத்து, சொக்சுடன் போய் விட்டேன். கலியாண வீட்டில் அவனது தரப்பில் பெரியவர்கள் ஒருவரும் இல்லாததால், எனது காலில் விழச் சொல்லி விட்டார்கள். அவர்கள் காலில் விழும் போது சப்பாத்தைக் கழட்ட வேண்டுமே, நிலைமை என்ன ஆகும் என்று மனம் பதறியது. நல்ல நாளிலே போயும் போயும் இவன் காலில் எல்லாம் விழுவதா என்று நினைத்தோ என்னவோ மணப்பெண், சேதுராகவன் மந்திரியை பார்த்து  முகத்தை திருப்பியது போல முகத்தை திருப்பிக் கொண்டு தயங்கினாள். நல்ல காலம் கலியாண வீடு தப்பிச்சுது.

ஊரிலே பயந்தாங்கொள்ளிகளான பொடியன்களை பார்த்து சொல்வார்கள், துணிச்சலான பெடியனின் சிறுநீரை குடியுங்கோடா வீரம் வரும் என்று. அப்பிடி பார்த்தால் வீரராகவனின் சிறுநீரை குடிக்க ஒரு பெரிய வரிசையே காத்து நிற்க வேண்டி வரும். அரசின் ஒட்டுண்ணிகள், கூட்டமைப்பு, அமெரிக்காவின் காலில் விழும் நாடு தாண்டி குதிப்பவர்கள், சோனியாவிடம்  ஈரத்தை காண்பவர்கள்……. வேண்டாம் இவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒண்ணுக்கடிக்க அந்த சின்னப் பெடியனால் முடியாது.

விஜயகுமாரன்

30/09/2011