Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

முட்டையிலே மயிர் புடுங்குதல்

இலங்கை புதிய ஜனநாயக கட்சியின் அறிக்கையினைஇனியொரு இணையத்தளம்  அண்மையிலே பிரசுரித்திருந்தது. அதற்கு வந்த பின்னூட்டங்களை எழுதியவர்கள் அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கட்சி மீது சேறடிப்பதில் சுய இன்பம் காண்கிறார்கள்.

 

ஒரு சில எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள், நாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்டுக்கள், இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் சும்மா இருந்து கதைக்கத் தான் லாயக்கு என்றார்கள். மூலைக்கு மூலை இராணுவமும், பொலிசும், ஜனநாயக நீரோட்டத்தில் நீச்சலடிக்கும் குண்டர்களும், மன்னிக்கவும் தொண்டர்களும் சர்வாதிகாரம் செய்யும் நாட்டில், புதிய ஜனநாயக கட்சியினர் எந்தவிதமான அதிகாரங்களிற்கும் அடிபணியாமல் இருப்பதே ஒரு பெரும் போராட்டம் தான். பெரும்பாலானவர்கள் “கையது கொண்டு மெய்யது பொத்தி” வாழும் நாட்டில் ஒரு கம்யுனிஸ்டு  கட்சி  உறுப்பினராக இருப்பது  என்பது மரணத்தில் வாழும் வாழ்வு தான்.

இது இந்த நானும் ரெளடி தான் என்று  இல்லாத மீசையை முறுக்கின்றவர்களிற்கு தெரியாமல் இல்லை. ஆனால் தாங்கள் ஓர் ஒன்று, ஒன்று என்று வாய்ப்பாடு மாதிரி மார்க்கசிய புத்தகங்களில் பாடமாக்கி வைத்திருப்பதை வாரி வழங்குவதற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதினால் தத்துவ மழை பொழிகிறார்கள்.

இங்கே தம்மை தாமே புரட்சியாளர்கள் என்று பீற்றிக் கொள்ளுபவர்கள் அதற்காக இலங்கையிலோ, புலம்பெயர் நாடுகளிலோ என்ன செய்தார்கள் என்பதை சொன்னால் நாமும் அவர் பின் தொடர்வோம். குறைந்த பட்சம் புதிய ஜனநாயக கட்சியுடன் இவர்கள் தங்கள் விமர்சனங்களை, விவாதங்களை நேரடியாக வைத்திருந்தாலாவது நேர்மையாக இருந்திருக்கும்.

 

டுத்ததாக சில வாலுகள், அரசியல் தளங்களிலே நகைச்சுவை இருப்பதில்லை என்ற குறையை போக்குவதற்காகவே அவதாரம் எடுத்ததுகள். பின்னூட்ட ஜோதியிலே தாங்களும் கலக்கின்றன. ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் கம்யுனிச நாடுகள், மகிந்தாவின் கூட்டாளிகள், நீங்களும் கம்யுனிஸ்டு கட்சி என்கிறீர்கள், அப்ப நீங்களும் மகிந்தாவின் கூட்டாளிகள் தான் என்று ஒரு பயங்கரமான அரசியல் உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆகா என்ன ஒரு அரசியல் ஞானம். என்ன ஒரு உலக அறிவு.

ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் கம்யுனிசம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கு கூட அருகதை அற்றுப்போய் எத்தனையோ வருடங்களாகி விட்டன என்ற சின்ன விடயத்தை யாராவது இதுகளிற்கு எடுத்து சொல்ல கூடாதா? அளப்பெரிய தியாகங்களுடன், மானுட விடுதலை வேண்டி ஆயிரக்கணக்கானவர்கள் அந்த நாடுகளில் கட்டி எழுப்பிய கம்யுனிஸ்டு கட்சிகள் திரிபுவாதத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் பாதை மாறி பலகாலம் ஆகி விட்டது என்ற கைப்பிள்ளைகளிற்கும் தெரிந்த கதை இதுகளிற்கு மட்டும் ஏன் தெரிவதில்லை.

புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவாளரான  ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார், உதுல் பிரேமரத்தினா போன்றவர்கள் அரசை எதிர்த்து தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள், உங்களால் ஏன் அப்படி எதுவும் செய்ய முடிவதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். உதுல் போன்றவர்களிற்கு  சிங்களவர்கள் என்ற பாதுகாப்பு ஒரு கட்டம் வரை இருக்கிறது. தமிழன் என்ற ஒரு காரணமே எங்களை அழித்து விட  இந்த மக்கள் விரோத அரசிற்கு போதுமானது. இனவெறியை  எதிர்ப்பவர்களிற்கு எதிராக இனவாதத்தை பாவிப்பது தான் இலங்கையின் குரூரமான யதார்த்தம் என்றார்.

புதிய ஜனநாயக கட்சியில் நெடுங்காலமாக இயங்கி வரும் தோழர் ஒருவர் சொன்னார்,  எமது கட்சியை சேர்ந்தவர்கள் சிறையிலே சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். முன்ணணியில் உள்ள தோழர்களது அசைவுகளை கண்காணிக்கிறார்கள். ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட வாழ்வுமே மிகுந்த பொருளாதார நெருக்கடிகளிற்குள் மூச்சுத் திணறியபடி தான் நகருகின்றது. E.P.D.Pயினரின் தினமுரசு மக்கள் விரோத பேரினவாத அரசின் கருத்துக்களையும், உதயன் கூட்டணியினரின் பிழைப்புவாத வலதுசாரி கருத்துக்களையும் தமிழ் மக்களிடம் பரப்புரை செய்கையில் எங்களால் பொதுமக்களிற்கான ஒரு பத்திரிகையை கொண்டு வர முடியாத நிலைதான் உள்ளது. அறுபதுகளில் சாதிப் போராட்டங்களில் கட்சி தலைமைப் பாத்திரம் எடுத்து போராடியதை போல தேசிய இன போராட்டத்தில் முன்னிலை வகிக்காததினால், வலதுசாரி கட்சிகள் மக்களிடையே இனவாதத்தை ஆழமாக விதைத்து விட்டன.

ஆனால் இவைகளையே சொல்லிக் கொண்டு நாம் பேசாமல் இருக்கப் போவதில்லை. கடந்த கால அனுபவங்களை தொகுத்துக் கொண்டு வருங்காலங்களை நோக்கி செல்லத்தான் போகின்றோம் என்றார். தெருவிலே சென்ற வாகனங்களின் இரைச்சலை மீறி அவரின் குரல் உயர்ந்து ஒலித்தது.  மகிந்தாவின் காலை நக்குவது அல்ல, வல்லரசுகளிற்கு பிற்பாட்டு பாடுவது அல்ல, மக்கள் போராட்டமே இலங்கை மக்களின் பிரச்சனைகளிற்கு நிலையான தீர்வினை தரும் என்பதனை ஓங்கி சொன்னது அந்தக் குரல்.

விஜயகுமாரன்

24/09/2011