Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி பேசுகிறேன்!

பொதுவாகநாங்கள் கூட்டங்களில் பேசுவதில்லை. பேசத் தெரியாது என்பதற்காக இல்லை, நாங்கள் செயல் வீரர்கள். ஏதாவது பிரச்சனை என்றால் எங்களது துப்பாக்கிகள் தான் பேசும். எங்களது மேதகு தேசியத் தலைவரே தன்னிடம் யாராவது கேள்வி கேட்டால், பக்கத்தில் இருக்கும் தேசத்தின் குரலைத் தான் அண்ணே நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கோ என்று கைகாட்டி விடுவார். புலம்பெயர் நாடுகளில் கூட்டமென்றால் தமிழ் நாட்டிலிருந்து யாரையாவது கூப்பிட்டால் கொடுத்த காசிற்கு மேலாக கூவி விட்டு போய் விடுவார்கள்.

 

இன்றைய அரசியல் நிலையைப் பற்றி நான் பேச வேண்டும்.  நேற்றைய, இன்றைய, நாளைய அரசியல் நிலை எங்களிற்கு எப்போதும் ஒன்று தான். எங்களுடைய யாழ் மாவட்ட தேசியத் தலைவர் மேதகு கிட்டு விட்டுப் போன அறிக்கை ஒன்றில் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் என்பது போல் சொன்ன “மக்களிற்கு பேச்சுரிமை ஜனநாயக உரிமை என்பவற்றை கொடுத்தால் நாங்கள் அரசியலில் அநாதைகள் ஆகிவிடுவோம்” என்பது தான் அது. முள்ளிவாய்க்கால் வரையும் அவருடைய கொள்கைகளை நாம் விடாமல் பின்பற்றி வந்திருக்கின்றோம்.

வன்னியில் இறுதிப் போர் நடந்த போது நாங்கள் தான் இலண்டன் மாநகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். உலகெங்கும் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கான இயக்கக் கொடியை பிடித்த படி எங்கள் தலைவர் மேதகு தான் என்று கோசமிட்ட படி போராட்டம் நடத்தினால் அதற்கு இந்த நாடுகள் செவி சாய்க்குமா என்று சில வீணாய் போனவர்கள் கேட்கிறார்கள்.
இவர்களிற்கு நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ராஜிவ் காந்தியை போட்ட பிறகும் கூட இந்தியாவை எங்களிற்காக பேச வேண்டும் என்று கேட்டவர்கள் நாங்கள். முன்பு ராஜிவை போட்டோம். இப்போது சோனியாவின் காலைப் பிடிக்கக் கூடாது என்பது ஒரு துன்பியலான செயல்.

நாங்கள் எங்களினுடைய நோக்கத்திற்க்காக மட்டுமே செயல்படுபவர்கள். அதற்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிப்போம். யாரை வேண்டுமானாலும் எதிர்ப்போம். (எதிர்ப்போம் என்றால் போட்டுத் தள்ளுவோம் என்று நீங்களாக கற்பனை பண்ணிக் கொள்ளக் கூடாது) ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொலை செய்கின்றனர் என்பதற்காக, அமெரிக்க மக்கள் திலகம் ஒபாமாவை நாங்கள் எதிர்க்க முடியுமா?. அவர் தான் நாடு கடந்த தமிழீழத்தை பெற்றுத் தரப் போகின்றார். இந்தியத் தேர்தல் நேரத்தில் புரட்சி அழகி ஜெயலலிதா எங்களை ஆதரித்தார். போர் என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் என்று அதற்கு முதல் நாள் தான் பேசியிருந்தார்.  பிரபாகரனின் வயது முதிர்ந்த தாய் தந்தையை இந்தியாவில் வைத்திருக்கக் கூடாது என்று கூடப் பேசியிருந்தார். இதையெல்லாம் அவர் எங்களை ஆதரிக்கும் போது மனதில் வைத்திருக்க முடியுமா?. நாங்கள் அவரை ஈழத்தாய் என்று போற்றிப் பாடுகின்றோம். அவரை ஊழலின் தாய், அராஜகத்தின் தாய் என்று தமிழ் நாட்டு மக்கள் சொல்லுகின்றார்கள் என்பதற்காக நாங்கள் கும்பிடாமல் இருக்க முடியுமா?. எங்களை ஆதரித்தார் என்ற காரணத்திற்காக ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட தன்மானச் சிங்கம் வை.கோபால்சாமியே புரட்சி அழகியை அன்புச் சகோதரி என்று அழைக்கிறார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலங்களில் எங்களுடைய இருமலில், மன்னிக்கவும் உறுமலில் அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், அதனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று, களனிகங்கையில் அவரால் கொல்லப்பட்ட ஏழைச் சிங்கள மக்களின் பிணங்கள் மிதந்து வந்த போது கூட தயங்காமல் எழுதினோம். பிறகு போட்டுத் தள்ளினோம்.

மகிந்தா பிரித்தானியா வந்த போது வழக்கு போடப் பிந்தி விட்டோம் என்று சிலர் கவலைப்படுகின்றார்கள். பதவியில் இருக்கும் அரச தலைவரை பிரித்தானிய மண்ணில் வைத்து கைது செய்ய முடியாது என சிலியின் சர்வாதிகாரி பினாச்சட் வழக்கு உட்பட பல வழக்குகளில் பிரித்தானிய நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. கவலைப்பட வேண்டிய விடயம் என்ன என்றால் வழக்கு போடத் தேவையான பணம் எங்களிடம் இல்லை என்பது தான். அதற்கு தேவையான 25000 பவுண்கள் எங்களிடம் இருக்கவில்லை என்று நாங்கள் தொலைக்காட்சியில் சொன்ன போது, பிரித்தானியாவே கடலில் ழூழ்கிப் போகும் அளவிற்கு தமிழ் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததாக சொன்னார்கள். வழக்குப் போட நிதி கேட்டு தொண்டர்கள் வழக்கம் போல் வீடு வீடாக வருவார்கள். எப்போதும் போல் இப்போதும் வாரி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

பில்லியன் கணக்கில் பணம், அதற்கு மில்லியன் கணக்கில் வருட வருமானம். அந்தப் பணம் எல்லாம் எங்கே என்று சில மண்டை காய்ந்தவர்கள் கணக்கு கேட்கிறார்கள். இந்தப் பணம் இயக்கத்தின் பணம்.  இதை மேதகுவிடம் மட்டுமே கொடுப்போம். அவரிற்கு மட்டுமே கணக்கு காட்டுவோம். அவர் தான் இல்லையே. வருடம் இரண்டாகியும் நிழல் கூட அசையவில்லையே என்றும் சிலர் கேட்கிறார்கள். இரண்டாயிரம் வருடமாக இயேசு திரும்பி வருவார் என்பதை நம்புகிறீர்கள். ஆனால் எங்கள் தலைவர் திரும்பி வருவார் என்பதை மட்டும் ஏன் நம்ப மறுக்கின்றீர்கள்?. ஜரோப்பிய அரச குடும்பங்கள், கிட்லர், சேர்ச்சில், ஜோர்ச்புஸ், ஜோர்ச்சின் வளர்ப்பு பிராணி ரொனி எல்லாம் இயேசு திரும்பி வருவார் என்பதை நம்பும் பெரும் அறிஞர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

சண்முகதாசன், கார்த்திகேசன் காலத்தில் இருந்து கம்யுனிஸ்ட் கட்சியிலிருந்த விசுவானந்ததேவன், தொழிற்சங்கத் தலைவர் விஜயானந்தன் போன்ற பல கம்யுனிஸ்டுக்களை நாங்கள் கொலை செய்தோம் என்று இலங்கையிலிருந்து வந்திருக்கும் கம்யுனிஸ்ட்டு கட்சியை சேர்ந்தவர் கவலைப் படக் கூடும். இங்கு இலண்டனில் இருக்கும் கம்யுனிஸ்ட்டுக்கள்  என்று சொல்லிக் கொள்ளும் சிலரைப் போல், ஒருவருக்கும் விளங்காமல் கட்டுரைகளை எழுதி விட்டு, எங்களைப் போராட்ட சக்திகள் என்று சொல்லியிருந்தால், நாங்கள் ஏன் மரண தண்டனை கொடுக்கப் போகின்றோம்.


கே.பி உடன் 10 சத வீதம் தொடர்பில் இருப்பவர்கள், 20 சத வீதம் தொடர்பில் இருப்பவர்கள், நேர்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று எங்களை ஜந்து பிரிவுகளாக பிரித்து கட்டுரை ஒன்று வந்த போது, நாங்கள் என்ன பள்ளிக்கூடமா நடத்துகின்றோம் வகுப்பு பிரிப்பதற்கு என்று நானே ஒரு நிமிடம் பயந்து விட்டேன். எல்லாவற்றையும் மறந்து விடலாம். ஆனால் வன்னி மக்களைப் பிடித்து வைத்திருந்ததைக் கூட ஏன் என்று கேட்காதவர்கள், எப்படி நல்ல சக்தியாக இருக்க முடியும்?. “ஒரு மனிதனாகக் கூட இருக்க முடியாதே” என்று கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த வில்லங்கம் பிடித்தவர்கள் சிலர் கேட்கின்றார்கள். ம.க.இ.காவினால் இந்த வருடத்தின் மிகச் சிறந்த நேர்மையாளர் பட்டம் பெற்ற தமிழ் நாட்டு பத்திரிக்கையாளர், வன்னி மக்களை விடச் சொல்லி கேட்டிருக்கக் கூடாது என்று சொல்லியிருப்பதை,  இவர்களிற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

இவ்வளவு நாட்களாக எங்களை ஆதரித்த பல பொது மக்கள் கூட, இன்று எமது போராட்டம் பற்றி கேள்விகள் கேட்கின்றார்கள். கணக்கு கேட்கிறார்கள். உங்களால் மக்கள் பலியாகி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றார்கள். ஆனால் முற்போக்கு சக்திகள் என்று சொல்லும் இந்தப் புதிய அமைப்பு, எங்களை தூய தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு, தாங்களாகவே வந்து நீங்கள் ரொம்ப நல்லவர்கள் என்று ஆதரவு தருகிறார்கள். இங்கு மார்க்சியம் பேசும் வேறு அமைப்புக்கள் இருந்தாலும் அவர்களுடன் கடைசி வரையும் சேர மாட்டோம். நீங்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்கின்ற இந்த புதிய அமைப்பின் டீல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு.

 

கடந்த காலங்களில் இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போராடிய போது, பிராந்திய வல்லரசிற்கு எதிரான தேசபக்தர்கள் என்று எங்களைச் சொன்ன என்.எல்.எவ்.ரி இற்கு செய்தது போல, பலஸ்த்தீனிய ராணுவப் பயிற்சியில் தாங்களாகவே பங்கு தந்த ஈரோஸ் அமைப்பிற்கு செய்தது போல, இந்தப் புதிய அமைப்பிற்கும் வருங்காலங்களில் எங்களுடைய வழக்கமான பாணியில் நன்றியைக் காட்டுவோம் என்று கூறி முடிக்கின்றேன்.