Mon11292021

Last updateSun, 19 Apr 2020 8am

உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை!!

காணாமல் ஆக்கப்பட்ட எம் கண்மணிகளிற்கு நியாயம் வழங்கு!

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

அரச பயங்கரவாதத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் பயங்கரவாதச்சட்டம் என்னும் கொடிய சட்டத்தை நீக்கம் செய்!

என்று இலங்கை அரசை நோக்கி அறைகூவல் விடுத்து காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். தம் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அவர்களிற்கு ஆதரவாக பொது மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசாமி கோவிலடியில் உண்ணாவிரதம் இருப்பவர்களிற்கு ஆதரவாக மக்கள் திரண்டு குரல் கொடுத்தனர்.வவுனியா முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற அமைப்புக்கள் சேர்ந்தவர்களும் வவுனியாவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தம் அன்புக்குரியவர்களை இழந்த துயரமும், உண்ணாவிரதமும் அவர்களின் உடல்நிலையை மோசமாக பாதித்த போதும் அவர்கள் தம் மனவுறுதியில் திடமாக இருந்தார்கள். தம் அன்புக்கு உரியவர்களிற்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை என்பதில் அவர்கள் வைராக்கியமாக இருந்தார்கள். "உண்ணாவிரதம் இருக்கும் யாரையுமே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முடியாது, வேண்டுமென்றால் மருத்துவர்களை இங்கு வரச் சொல்லுங்கள்" என்று ஒரு தாய் சொன்னதாக செய்திகள் வந்தன. தம் கண்மணிகளை விட தம் உயிர் பெரிதில்லை என்பதைத் தான் அந்தத் தாய் தளரா உறுதியுடன் சொன்னாள்.

நான்காம் நாளன்று நாளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா வந்து உண்ணாவிரதம் இருந்தவர்களைச் சந்தித்தார். உண்ணாவிரதம் இருக்கும் பதின்நான்கு பேரும் மாசி மாதம் ஒன்பதாம் திகதியன்று பிரதமரைச் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யப்படும் என்று அவர் கடிதம் ஒன்றைக் கொடுத்ததை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மக்கள் உறுதியுடன் போராட்டக் களத்தில் நின்ற போதும் காத்திரமான முடிவுகள் எதுவும் இன்றி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்ததின் பின்னணியில் ஒரு தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மக்களின் போராட்டம் எழுச்சி பெற்ற நிலையில் போராட்ட நெருப்பு பற்றிப் படர்ந்து விடுமோ என்ற பயத்திலும், தன் அரசியல் இலாபங்களிற்காகவும் அவர் ருவான் விஜயவர்த்தனாவை வர வைத்து வெற்று வாக்குறுதியை கொடுக்க வைத்து மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

மக்கள் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த போதும் அய்யா சம்பந்தனிற்கோ, அண்ணன் விக்கினேஸ்வரனிற்கோ அவர்களை வந்து பார்க்கக் கூட தோன்றவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்போம்; வாக்குப் போடுங்கள் என்று வாக்குப் பிச்சை கேட்டு பாராளுமன்றம் போனவர்களிற்கு காணமல் போனவர்களின் பிரச்சனை தமிழ் மக்களின் பிரச்சனையாகத் தெரியவில்லை. வழக்குகள் எதுவுமின்றி, காரணங்கள் எதுமின்றி கொடுஞ்சிறைகளில் தம் வாழ்வைத் தொலைக்கும் எம் மக்களிற்காக நடந்த போராட்டத்தில் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் எம் மக்களின் வாழ்வை அழித்த இனப் படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் அவனது அரச விழாக்களில் கூடிக் குலாவ நேரம் இருந்தது. "நல்லாட்சி" என்று சொல்லிக் கொண்டு "பொல்லாட்சி" செய்யும் மைத்திரி - ரணில் கூட்டுடன் கூடி மகிழ நேரம் இருக்கிறது. ஆனால் அவர்கள் வந்தாலும் என்ன செய்து கிழித்திருப்பார்கள். காலங் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றுவது தானே வலதுசாரி தமிழ்த் தலைமைகளின் அரசியலாக இருக்கிறது.

அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு நியாயம் வழங்க வேண்டும்; தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் தாம் தீர்வு பெற்றுத் தருவதாக சொல்லி போராட்டத்தை கை விடச் செய்தார்கள். ஆனால் இன்று வரை அவர்களது துயரம் தொடர்கிறது.

அப்பாவித் தமிழ் மக்களை சிறையில் அடைத்து வைத்திருக்கும் இலங்கையின் மக்கள் விரோத அரசுகள் குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் போன்ற புலிகளின் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களை எல்லாம் புலிகளை காட்டிக் கொடுத்து தம்முடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பதற்காக தம்முடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். கருணாவால் மைத்திரி - ரணில் அரசிற்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் மேடையில் பேச முடிகிறது.

நல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு கூடிய கூட்டத்தை விட குறைவானவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஜல்லிக்கட்டிற்கு முன்னிற்கு நின்று முகம் காட்டிய தீவிர முகநூல் தமிழ்த் தேசியர்களை இங்கு காணக் கிடைக்கவில்லை. "தமிழண்டா" என்று மார் தட்டியவர்கள் இப் போராட்டம் குறித்து மூச்சே விடவில்லை. பாரிஸ், லண்டன் என்று பாரெங்கும் ஜல்லிக்கட்டிற்காக வெகுண்டெழுந்தவர்களிற்கு காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளின் அவலமும், அவர்களின் குடும்பத்தினரின் துயரங்களும் கண்ணில் தெரியவில்லை.

தமிழ் மக்களை இனப் படுகொலை செய்யும் இலங்கை அரசுகளோ அவர்களை நம்பச் சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களிற்கு என்றைக்குமே தீர்வுகள் தரப் போவதில்லை. நாடு கடந்த தமிழீழம் போன்றவர்கள் சொல்வது போல் ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்காவோ நீதி பெற்றுத் தருவார்கள் என்பது அடுத்த அயோக்கியத்தனம். மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களே மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வாக அமைந்தன என்பது தான் உலக வரலாறு. உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை. எனவே இழப்பதற்கு எதுவும் இல்லாத எம் மக்களே நம் வாழ்விற்காக நாம் போராடுவோம்!!