Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

என்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்!

இலங்கையில் சிவசேனா வெறியர்கள், தமிழ்நாட்டில் தமிழ்க் குறுந்தேசிய லூசுகள், வெளிநாடுகளில் உளவுத்துறைகளின் கைக்கூலிகள், மட்டை விளையாட்டு மாபியாக்கள் எல்லாம் தமிழ்த் தேசிய விடுதலை பேசும் அவலம் நிலவும் சூழலில் பொருத்தம் கருதி 2012 இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.

ஒரே மேடையில் பல நாடகங்கள் என்பது போல தமிழரிற்காகவே உயிரையும், உடலையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பல அமைப்புக்கள் இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தான். "வாய் நீண்டதால் வாழ்விழந்தோர் சங்கத்தின்" தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். ஆகா! தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா! என்று பிரமிச்சுப் போன காத்திகேசு, தனது மனிசியிடம் கூட்டத்திற்கு போவதற்கு கெஞ்சிக் கொண்டு நின்றான். அவனின்ரை மனிசி எல்லாத்திற்கும் சாத்திரம் பார்க்கிற பொம்பிளை. இரண்டிலை ஒன்றைத் தொடுங்கோ என்று மனிசி சொல்ல, கார்த்திகேசு சந்தோசமாக சிரிச்சுக் கொண்டு தொட்டான். விரலை தொடச் சொன்னால் எதைத் தொடுகிறீர்கள் எண்டு எரிஞ்சு விழுந்த மனிசியை பரிதாபமாகப் பார்த்த கார்த்திகேசு, ஒன்றையும் விளக்கமாக சொல்லமாட்டாள் என்று சலித்துக் கொண்டான்.

பழைய சம்பவம் ஒன்றும் அந்த நேரம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனின்ரை நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். கார்த்திகேசரின் மூன்று வயது மகளைப் பார்த்த அவர் "இப்ப கதைக்கத் தொடங்கி விட்டாவா?" என்று கேட்டார். "இலங்கையில் இருந்து வந்ததிற்கு பரவாயில்லை" என்று கார்த்திகேசுமறுமொழி சொன்னான். நண்பர் திகைச்சுப் போனார். "உன்ரை மகள் இங்கே தானே பிறந்தாள். நீ இலங்கையில் இருந்து வந்ததிற்கு பரவாயில்லை என்று சொல்கிறாய்" என்று ஆச்சரியமாக கேட்டார். "இப்ப கதைப்பாவோ எண்டு என்ரை மனிசியை தான் கேக்கிறாய் எண்டு நான் நினைச்சேன்" என்று கார்த்திகேசு கூட்டாளிக்கு விளக்கம் சொன்னான்.

கூட்டத்திற்கு போன போது மண்டப வாசலில் பெயரை பதிவு செய்யச் சொன்னார்கள். கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள் என்று தன் பெயரைச் சொன்னான். "பேரைப் பார் வல்லைவெளி மாதிரி மைல் கணக்கிலே வச்சிருக்கிறான். இதை எழுதவே ஒரு ஒற்றை வேணும்" என்று பொடியன் மனசிற்குள் சலிச்சுக் கொண்டான். கூட்டம் தொடங்கும் வரை வாசலில் நின்ற போது, "நாடு கடந்த தமிழீழ அமைச்சர் வாறார்" என்று பரபரப்பு ஏற்ப்பட்டது. அமைச்சர் கார்த்திகேசுவின் பக்கத்தில் வந்த போது “ஜயா” என்று கத்திக் கொண்டு கார்த்திகேசு அமைச்சரின் காலில் விழுந்து கும்பிட்டான். பதறிப் போன அமைச்சர் கார்த்திகேசுவை தூக்கி விட்டார். கார்த்திகேசு அவரிடம் பணிவாக "ஜயா என்ரை மருமகன் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுறான். நீங்கள் தான் ஒரு வேலை எடுத்துத் தர வேண்டும்" என்று கேட்டான். கார்த்திகேசுவை பரிதாபமாக பார்த்த அமைச்சர், "எங்களது தாகம் தமிழீழம். எங்களது கவனம் முழுக்க அதிலே தான். இப்படியான விசயங்களிலே நாங்கள் ஈடுபடுவதில்லை" என்றார்.

ஓவ்வொரு நாளும் அசல் ஆனைக்கோட்டை நல்லெண்ணைய் தேய்க்கும் கார்த்திகேசுவின் யாழ்ப்பாணத்து மண்டை உடனே வேலை செய்தது. "அய்யா வேலை எடுத்துத் தந்த பிறகு நான் உங்களை கவனிப்பேன்" என்று அமைச்சரின் காதிற்குள் மெதுவாக கிசுகிசுத்தான். "இந்தக் குறுக்காலே போவான் இண்டைக்கு என்னை விடமாட்டான் போல" என்று மனதிற்குள் திட்டிய அமைச்சர், "நான் அமைச்சர் தான் ஆனால் அமைச்சர் இல்லை" என்றார். "இதென்ன வரும் ஆனால் வராது எண்ட மாதிரி இருக்கு என்று கார்த்திகேசு சலித்துக் கொண்டான்.

கூட்டம் தொடங்கியது. முதலில் பேசிய ஒன்றியத் தலைவர், நான் சோனியா அன்னையைச் சந்தித்தேன். சோனியா அன்னை எங்களது பக்கம் தான் என்று உருகினார். இதென்ன ஞானசம்பந்தன் பாலுக்கழ சிவன் மாட்டிலே மனிசியோடை வந்து பால் கொடுக்க, பொடியன் அம்மையே! அப்பா! எண்டு உருகின மாதிரி, இவர் என்ன குடிச்சு அன்னை! அன்னை! எண்டு உளறுகிறார் என்று கார்த்திகேசு கோபப்பட்டான். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளிக் கிழவன் "நாங்கள் இந்தியாவின் பக்கம் தான், இந்திரா காந்தி அம்மா சாகேக்கை ஊர் முழுக்க கறுப்புக் கொடி கட்டினோம் என்றெல்லாம் கெஞ்சக் கெஞ்ச ராஜீவின் அழிவுப்படை ஈவிரக்கமின்றி சுட்டதை எல்லாம் எப்படி இவர்கள் மறந்து போகலாம்" என்று கோபப்பட்டான்.

அடுத்துப் பேசிய பேரவைக்காரர், "நாங்கள் லண்டனிலே ஒரு பெரிய மைதானத்திலே முருகனிற்கு கோயில் கட்டப் போகிறோம். ஒரேயடியாக ஜந்து தேர் இழுக்கலாம்; எல்லோரும் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும். கோயில் கட்டிய பிறகு வரும் காசு முழுக்க போராட்டத்திற்குத் தான்" என்றார். "தமிழ் நாட்டு அறிவு ஜீவிகளான “கீற்று” இணையத்தளம், இவர்களை சமுகப் புரட்சியாளர்கள் என்று பாராட்டுறது எவ்வளவு பொருத்தம்" என்ற கார்த்திகேசு "முருகனிற்கு அரோகரா"என்று குளிருக்குள்ளே தேர் ஓடப் போகும் குமரனை கும்பிட்டுக் கொண்டான்.

பேரவைக்காரர் பிறகு ஒரு முக்கியமான விசயத்தையும் சொன்னார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்”. "ஈழத்தாய் ஜெயலலிதாவுடன் விசயகாந்து கூட்டு வைச்சிருக்கிறார். அவரையும் நாங்கள் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று கும்பிட்டோம். ஏற்கனவே தந்தை செல்வா இருக்கிறதாலே, விசயகாந்தை ஈழத்து குஞ்சியப்பு என்று எல்லோரும் அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "ஆகா! என்ன ஒரு அரசியல் ஞானம். எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள். யாழ்ப்பாணத்து மண்வாசனையோடை குஞ்சியப்பு எண்டு கூப்பிட எவ்வளவு நல்லாயிருக்கு. அப்ப குஸ்புவை ஈழத்து குஞ்சியாச்சி என்று கூப்பிடலாம் என்று இவையளுக்கு ஒரு ஜடியா குடுத்துப் பார்ப்போம்" என்று கார்த்திகேசு சந்தோசப்பட்டுக் கொண்டான்.

‘தீர்மானமாக முரண்வெளிகளின் இடைவெளிகளில், கிளர்ந்தெழும் பல்தேசிய முரண்களிற்கான தீர்விலிருந்தே, அகவயமான விடுதலை என்பது சாத்தியமானது என்ற, புறநிலை யதார்த்தம் பரீட்சாத்தமாக கண்டறியப்பட்டது’ இப்படி ஒருவர் பேசத் தொடங்கியதும் பக்கத்திலிருந்தவர் கார்த்திகேசுவைக் பார்த்து "அண்ணே, இவர் தெலுங்கிலேயா கதைக்கிறார். இவர் கதைக்கிறதைப் பார்த்தால் இவர் எங்கட இயக்கம் மாதிரி தெரியெல்லை"என்று கேட்டார். கார்த்திகேசுவிற்கும் அவர் பேசினது ஒன்றுமே விளங்கவில்லை. "எங்கட தேசத்தின் குரல் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு படித்த மனிசன். ஆனால் அவர் எவ்வளவு யதார்த்தமாக கதைக்கிறவர். லண்டனில் நடந்த ஒரு மாவீரர் நிகழ்விலே சந்திரிக்காவை யார் வைச்சிருக்கிறது எண்ட சிக்கலான அரசியல் பிரச்சினைகளை எல்லாம் எவ்வளவு வடிவாக விளங்கப்படுத்தினார். அந்த நேரம் மண்டபத்தில் இருந்த தேசபக்தர்களின் சிரிப்பும்,ஆரவாரமும், விசிலடிப்பும் தேசபக்தர்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு அரசியல் ரீதியாக உயர்வாக வளர்த்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியதை கார்த்திகேசு பெருமிதமாக நினைத்துப் பார்த்தான்.

"நான் இலங்கை இனவெறி அரசிற்கெதிராக போராடுபவன். எல்லா இயக்கங்களின் வன்முறைகளை வெறுப்பவன். ஏகாதிபத்தியங்களின் மக்கள் விரோத அரசியலை எதிர்ப்பவன். இதை சொல்லாமல் கதைத்தால் நீஙகள் எனக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவீர்கள் என்பதால் இப்படி அறிமுகம் செய்து கொள்கிறேன்" என்று தொடங்கி கூட்டத்திற்கு வந்த ஒரு பெடியன் கதைக்கத் தொடங்கினான்.

“CIAயின் சிலந்தி வலைக்குள் நாடு கடந்த அரசு!”.

“GTF பேசிய தமிழ் தேசியம் மக்களை காட்டிக் கொடுக்கிறது!”.

“மக்களின் எதிரிகளோடு ஒரே வரிசையில் அமர்ந்திருக்கம் BTF போன்றவற்றால் மக்களிற்காக குரல் கொடுப்பவர்களை எப்படி வென்றெடுக்க முடியும்!.”

"இப்ப நான் சொன்னதெல்லாம், இந்தக் கூட்டம் நடத்துகிற அமைப்பு சார்ந்த இணையத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தலைப்புக்கள். அப்படியென்றால் நீங்கள் எப்படி இந்த மக்கள் விரோத சக்திகளோடை சேர்ந்து கூட்டம் நடத்தலாம். அதிலேயும் இவங்களோடை சேர்ந்து என்ன புடுங்கப் போகிறோம் என்று, ஒரு வேலைத் திட்டம் வேறை போடப்போகிறீர்கள். இவங்களோடை எல்லாம் கூட்டுச் சேருகிற நீங்கள், இலங்கையிலே தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தப் போகிறோம் என்ற உடனேயே, எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் “ஆடு அடிக்க முதல் புடுக்கு எனக்குத் தான்” எண்ட மாதிரி, இது அரச ஆதரவு மாநாடு எண்டு அறிக்கை விட்டீர்கள். அந்த மாநாட்டிலே இலங்கையின் கொலைகார அரசு சார்பில் எவருமே கலந்து கொள்ளவில்லை. காசு கொடுத்தவர்களின் கணக்கு வழக்குகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். மாநாடு முடிந்த பிறகு நீங்கள் ஏன் வாயே திறக்கவில்லை. இந்த மக்கள் விரோதிகளின் கோவணம் எவ்வளவு ஊத்தையாக இருந்தாலும் பரவாயில்லை, இவங்கள் ரொம்ப நல்லவங்கள் எண்டது தான் உங்களின் கொள்கையோ" என்று அந்தப் பொடியன் கேட்டான்.

"கோவணம் கோவணம் எண்டு கதைக்கிறான்". இவன் தமிழரங்கம் அடிக்கடி வாசிக்கிறான் போலே என்று தனது வாசிப்பு அறிவைக் கொண்டு கார்த்திகேசு கண்டு பிடித்துக் கொண்டான்.

வெவ்வேறு அமைப்புக்கள் வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுவோம். ஒரு தலைவரை தெரிந்தெடுத்து செயற்படுவோம். இரண்டு பேர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். மண்டபவாசலில் உங்கள் வாக்குகளை போடுங்கள் என்று கூட்டத்தில் சொன்னார்கள். வாக்குப் போடும் இடத்தில் ஒரு பெண் உட்காந்திருந்தார். "அண்ணை இரண்டிலே ஒன்று" என்று பின்னாலிருந்து யாரோ கார்த்திகேசுவிற்கு சொன்னார்கள். "இந்த வம்பிற்கே நான் வரவில்லை" என்று கார்த்திகேசு தலை தெறிக்க ஓடினான்.