Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எழுக தமிழரே, எழுந்து கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் தமிழரே!

யாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் "எனினும் நாம் பறப்போம்" என்னும் கலாச்சார விழா நடைபெறுகிறது. தொல் தமிழ் முரசாம் பறை முழங்கி விழா தொடங்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா என்ற இனவெறிக் கொலைகாரன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரச பயங்கரவாதிகளால் தமிழ் மக்களின் மேல் நடத்திய இனக்கலவரமான எண்பத்துமூன்று ஆடியின் இனக் கலவரம் குறித்த "கறுப்பு யூலையின் பின்" என்ற ஓவியக் கண்காட்சி உட்பட இன வாதம், மொழி வெறி, சாதி என்பவை குறித்த புகைப்படக் கண்காட்சி, கார்ட்டூன் கண்காட்சிகள் இடம் பெற்றன.

"இலங்கைத் திரைப்பட வரலாற்றில் பொன்மணி, தென்னிந்தியத் திரைப்பட அமைப்பிலிருந்து வேறுபடும் முதல் முயற்சியாகும். தொழில்நுட்ப அழகியல் அம்சங்களைக் காத்திரமான முறையில் அறிந்து உணர்த்தும் உள்ளூர்க் கலைஞர்கள், எழுத்தாளர்களின் இணைப்பு முயற்சியால் தோன்றியது இப் படம்" என்று பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பியால் பாராட்டப்பட்ட பொன்மணி திரையிடப்பட்டது. எழுத்தாளர் காவலூர் ராசதுரை கதை வசனம் எழுத; தனது சிங்கள மொழிப் படங்களிற்காக சர்வதேச விருதுகளைப் பெற்றவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தவருமான தர்மசேன பத்திராஜா நெறியாள்கை செய்த படம் பொன்மணி.

பொன்மணியுடன், கேசவராஜனின் "அம்மா நலமா", கிங் ரத்தினத்தின் "கந்துகரயே தோங்காரய" (மலையகத்தின் எதிரொலி), அசோக் ஹந்தகமகவின் "இனி அவன்", பிரசன்ன விதானகேயின் “உசாவ நிகண்டய்" (நீதிமன்றம் மெளனத்தில்) ஆகிய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இத் திரைப்படங்கள் சர்வதேச தரம் வாய்ந்தவை. இலங்கை மக்களின் எரியும் பிரச்சனைகள் குறித்த களங்களை கதைகளாகக் கொண்டவை.

சாமிநாதன் விமல், கருணாகரன், லால் காகொட, ரோகண பொதுலியத்த போன்ற கவிஞர்கள் பங்கு பற்றிய கவிதா நிகழ்வு இடம் பெற்றது. "யுத்தமும் சினிமாவும்" என்ற கலந்துரையாடலில் கேசவராஜன், கேதாரநாதன், அசோக் ஹந்தகம, பிரசன்ன விதானகே போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ், சிங்கள பாடல்களை "இசைமாலை" என்னும் நிகழ்வில் பாணர்கள் பாடினார்கள். யாழ்ப்பாணத்தின் தெருக்களில் இன ஒற்றுமையை வலியுறுத்தும் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

"எனினும் நாம் பறப்போம்" என்னும் இலங்கை மக்களிடையே இன ஒற்றுமையை வலியுறுத்தும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற சமவுரிமை இயக்கத்தின் நிகழ்விற்காக கவிஞர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், இன ஒற்றுமைக்காக குரல் எழுப்புவோர் என ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என முன்னூறு பேரிற்கும் மேற்பட்ட சிங்கள மொழி பேசும் சகோதரர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள்.

ஆனால் இன ஒற்றுமையையும், இனப் பிரச்சனைக்கு தீர்வையும் வலியுறுத்தும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்து மக்களிற்கு தேவையற்றதாக இருக்கிறது போலும்; தெற்கிலிருந்து வந்தவர்களை விட வடக்கில் வாழ்பவர்கள் வந்த தொகை குறைவானதாக இருக்கிறது. "எழுக சிங்களம்" என்று தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வவுனியாவில் வைத்து சிங்கள இனவெறியர்களால் ஊர்வலம் நடத்தப்படுகையில் "வாழ்க இன ஒற்றுமை" என்று இரு கரம் நீட்டி வரும் சிங்கள மொழி பேசும் மக்களின் தோழமையை ஆரத் தழுவவில்லை எம் தமிழ்மக்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முகப்புத்தகத்தில் புரட்சி, முற்போக்கு பேசும் வீரர்கள் எவரையும் காணக் கிடைக்கவில்லை. இலங்கையின் ஒரே தமிழ் இடதுசாரிக் கட்சி என்று தமக்கு தாமே முத்திரை குத்தும் ஒரு கட்சியின் செயல்வீரர்கள் எவரையும் காணக் கிடைக்கவில்லை. சிங்கள மொழி பேசும் இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் தமிழ் மக்களிற்காக என்ன செய்கிறார்கள் என்று வயலிற்கு வந்தாயா, நாற்று நட்டாயா போன்ற கேள்விகள் கேட்கும் "தமிழ்த் தேசியவாதிகள்" எவரையும் காணக் கிடைக்கவில்லை.

புலிகளின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராக இறுதி வரை இருந்த பேராசிரியர் மு.திருநாவுக்கரசு தற்போது இந்தியாவில் இருக்கிறார். அவர் எழுதிய "யாப்பு, டொனமூர் முதல் சிறிசேனா வரை" என்ற நூல் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டவர் இந்திய அழிவுப்படையின் கொலைக்காலங்களில் இந்திய இராணுவத்தில் புலனாய்வு அதிகாரியாக இருந்து மக்களை அழித்தவர்களில் ஒருவரான கேர்னல் கரிகரன். இத்தகைய உளவுப் பின்னணிகளை உடையவர்கள் தொடர்புடைய புத்தகத்திற்கு யாழ்ப்பாணத்தில் தலைவர்களும், தமிழர்களும் கூடி விழா நடத்துகிறார்கள். மக்கள் அரசியலைப் பேசும் விழாவிற்கு வருகிறார்களில்லை.

முகத்திற்கு அரையடிக்கு பவுடரைப் பூசிக் கொண்டு வேதாளங்களைப் போல வந்து கலையைக் கொலை செய்யும் கோடம்பாக்கத்து கோமாளிகளின் படங்களிற்கு காசையும், காலத்தையும் கரியாக்கும் எம் தமிழ் மக்களும்; முற்போக்கு, இடதுசாரியம் பேசும் போலிகளிற்குமாக ஒரு முழக்கத்தை நாம் முன் வைக்கிறோம். எழுக தமிழரே, எழுந்து கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் தமிழரே!